ஒவ்வொரு கிராமத்திலும் பணக்கார, நடுத்தர, சிறு விவசாயிகள் பலரும் தங்கள் விளைநிலங்களை ஒட்டியுள்ள புறம்போக்குகளை, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். நிலமே இல்லாத ஏழைகள் இந்தப் புறம்போக்கு மீது உரிமை கொண்டாட, நிலவுரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு அளித்த இலவச நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள், முன்னரே புறம்போக்குகளை ஆக்கிரமித்து வைத்துள்ள சிறு விவசாயிகளில் சிலரும் நடுத்தர விவசாயிகள் பலருமே. அவர்கள் தங்கள் அனுபோக பாத்தியதை உரிமையைக் காட்டி வருவாய்த்துறை அலுவலர்களை சரிகட்டி, புதிதாக பட்டா பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இப்படி வழங்கப்பட்ட பட்டாக்களும், நிலமற்ற விவசாயிகளின் பட்டியலில்தான் சேர்ந்துள்ளது.
சில மாவட்டங்களில், சில ஆயிரம் நிலமற்ற ஏழைகளுக்குப் புதிதாக நிலம் அளிக்கப்பட்டுள்ளதையும் மறுத்து விட முடியாது. ஆனால், இதில் தலித்துகள் 80 சதவிகிதம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலித்துகளின் பஞ்சமி நிலக்கோரிக்கைகளும், இடதுசாரிகளின் நிலச்சீர்திருத்தக் கோரிக்கைகளும் வலுவடைந்ததை ஒட்டி, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முன்வந்தது உண்மைதான். ஆனால் நடந்ததும், நடப்பதும் வேறு. புஞ்சை தரிசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்தவர்களுக்கே பட்டா வழங்கும் நடைமுறை, காலங்காலமாக நடைபெறும் வருவாய்த் துறை நிர்வாகச் சடங்குகளில் ஒன்றுதான்.
குடியிருப்பு மனையே சொந்தமாக இல்லாத பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில், வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கிவிட்டு மேற்கு வங்கம், கேரளத்தோடு ஒப்பிட்டால் போதுமா? மூன்று லட்சம் குடும்பங்கள் போக எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகள் தற்போது எங்கே வசிக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும். அதற்கு நமது ஊராட்சிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கு, நீர் நிலையும் தூர்ந்து, நீர் நிலையின் ஆயக்கட்டும் தூர்ந்து போன நகர்ப்புற விரிவாக்கப் பகுதிகள், வாய்க்கால் புறம்போக்குகள் ஆகிய நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் இடங்களின் தரத்தையும் தேவையையும் மக்கள் குழுக்களின் மூலம் ஆய்வு செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்குவதே இறுதித் தீர்வாக முடியும்.
இத்தகைய தீர்வுகளுக்கு தடையாக இருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், தமிழக அரசின் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரும் ஆணைகளும் எழுப்பும் சில வினாக்களையே இங்கு விவாதத்திற்காக முன் வைக்கிறோம்:
1. ‘கோகோ கோலா’ நிறுவனம், தாமிரபரணி ஆற்றில் கங்கை கொண்டானில் உறிஞ்சும் தண்ணீர்க் கொள்ளை குறித்து அமைதி காக்கும் உயர்நீதிமன்றம், குப்பனும் சுப்பனும் குடியிருக்கும் குளத்தங்கரைக் குடிசைகளால் நீர்நிலை ஆதாரம் கெட்டுவிடும் எனத் தீர்ப்பளிப்பது என்ன நியாயம்?
2. பாசன ஆதாரம் இல்லாத (ஆயக்கட்டுகள்) ஊராட்சிக் குட்டைகளின் கரைகளின் தாழ்வான, சமதளங்களில் குடியிருப்போர் நீர்நிலை ஆதாரத்தின் எதிரிகள் என்றால், ஏழைகளை அவ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு, அதே இடங்களில் சில ஊராட்சி நிர்வாகங்கள் வணிக வளாகங்கள் கட்டுவதால் நீர்நிலை ஆதாரம் பாதுகாக்கப்படுவது எப்படி என்று நமது நீதிபதிகளும், ஆட்சியாளர்களும் அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிப்பார்களா? அல்லது அத்தகைய வணிக வளாகங்களையும் இடித்துத் தள்ள ஆணையிடுவார்களா? (ஆதாரம்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள இரட்டைக் குளக்கரையில் வணிக வளாகம் கட்டுவதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்).
3. சட்டத்தை வளைக்கும் ஆற்றலற்ற ஏழைகள் வகை மாற்றம் செய்யாததால், தொடர்ந்து குடியிருந்து வந்தால் ஆக்கிரமிப்பு என்று சொல்லும் அரசும், உயர்நீதிமன்றமும் அரசியல், சமூக செல்வாக்குள்ள தனி நபர்கள் தங்கள் செல்வாக்கால் ஆட்சேபகரமான புறம்போக்குகளை புஞ்சைத்தரிசாக வகை மாற்றம் செய்து பட்டா பெற்றவர்களை கெட்டிக்காரர்கள் என்று சான்றிதழ் வழங்குகிறதா? அதே போது சட்டத்தை வளைக்கும் ஆற்றலற்ற ஏழைகள் வகைமாற்றம் செய்யாததால், தொடர்ந்து குடியிருந்து வந்தால் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி அவர்களை வெளியேற்றத் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யாருடைய குரலை ஒலிக்கிறார்கள்?
4. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சிப் புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு அவரவர் வசிப்பிடத்திலேயே பட்டா கொடுக்க ஓர் அவசர சட்டத்தின் மூலமோ, சட்டமன்றத் தீர்மான வடிவிலோ சட்டமியற்றி ஆணையிட முடியாத தமிழக அரசின் அதிகாரம் தான் என்னவோ? ஊராட்சியையே கலைக்கும் அதிகாரம் கொண்ட தமிழக அரசுக்கு, ஊராட்சி புறம்போக்குகளை புஞ்சை தரிசாக வகைமாற்றம் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லாமல் போய்விட்டதா?
5. பாசன ஆதாரமற்ற ஊராட்சி நீர்நிலைப் புறம்போக்குகள் மீதான உரிமை, ஆதார வரம்புகள் ஊராட்சிகளுக்கே என்ற சட்டம் சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நமது நாட்டிற்குப் பொருத்தமுடையதாகுமா? ஒவ்வொரு ஊராட்சியிலும் வலுமிக்க சாதியினர், வலுக்குறைந்த விவசாயக் கூலிகளாக உள்ள தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சாதிகளை வஞ்சிக்கவும், அவர்களது குடியிருப்பு நிலங்களைப் பறித்துக் கொள்ளவும் அல்லது குடியிருப்பின் மீது தாங்கள் கட்டுப்பாடுகள் செலுத்தவுமே ஊராட்சிகளுக்கான அதிகாரங்கள் பயன்படுவதை தமிழக அரசும், நீதிமன்றங்களும் அறியுமா?
6. சில ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி புறம்போக்கு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பெற்று, அங்கு குடியிருந்த ஏழைகள் சிலருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதற்கும் சில ஊராட்சிகளில் வகை மாற்றம் செய்யப்படாததால் ஊராட்சிப் புறம்போக்கில் குடியிருப்போர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் சாதிய வெறியுணர்வில் பழிவாங்கும் உணர்வு தவிர வேறு எது காரணமென்று தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்குமா?
7. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பாசன ஆதாரமுள்ள (ஆயக்கட்டுகள் உள்ள) முப்பதாயிரம் ஏக்கர் பரப்புள்ள ஏரிகள், குளங்களை மூடி அல்லது தூர்த்து, தொடர்புடைய வட்டாரங்களில் உள்வசதி படைத்த நிலவுடைமைச் சாதிகள் ஆக்கிரமித்து வளமான விவசாய நிலங்களாக்கி, வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பட்டா பெற்றுள்ள நிலையில், ஊராட்சி, மந்தைவெளிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கில் வசிக்கும் குப்பனையும், சுப்பனையும் மட்டும் வெளியேற்றம் செய்வது என்ன நியாயம்?
8. நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஓர் நீர் நிலை ஏரி என்பதை அறியுமா? அறியாதா?
9. ஊராட்சிக் குளம் புறம்போக்குகள், மேய்ச்சல்கால், கோயில் புறம்போக்குகளில் பல ஆண்டுகள் குடியிருந்து வரும் தலித்துகள், பிற ஏழைகள், 5 ஆண்டுகளைத் தாண்டியும் பட்டா பெற முடியாமல் வெளியேற்றப்படுகின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் வாய்க்கால், ஆறு, ஓடைப் புறம்போக்குகளிலிருந்து மண்ணின் மைந்தர்களான தலித்துகள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி வெளியேற்றப்படுகிறார்கள். ஊராட்சி நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் மாநகராட்சி தரம், தூய்மை எனப் புதிய பரிமாணம் பெறுவதற்காகச் செய்யப்படும் இத்தகைய முயற்சிகளால் இரண்டு பக்கமும் தலித்துகளே பெருமளவு விரட்டப்படுகின்றனர். இவர்களல்லாத யாருடைய நலனுக்காக, யாருடைய தூய்மைக்காக எம்மக்கள் இப்படித் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள் என்பதை தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் மனந்திறந்து சொல்ல முன்வருமா?
10. ஏழைகளுக்கு குடியிருக்க 2 ஏக்கர் வீட்டுமனைப்பட்டாவுக்கு நிலமில்லை. உச்ச வரம்பு சட்டங்கள் உலகமயமாதல் திரையில் மறைக்கப்பட்டுவிட்டதா? எல்லாவற்றுக்கும் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி சட்டம் பேசும் தமிழக அரசே, பஞ்சமி நிலங்கள் மீட்பு பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன ஆயின?
11. தாழ்த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு, தொடர்புடைய மக்களின் நலத்துறை வழியாக அரசு நிதியில் குடிமனைக்கான நிலங்களை தனியாரிடம் விலைக்கு வாங்கி பட்டா வழங்கிட திட்டம் இருந்தும், நில உடைமையாளர்களின் விருப்பத்தை மீறி கையகப்படுத்த முடியாமல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர்கள் அல்லல்படுவதை தமிழக அரசு அறியுமா? இந்த நிலைமைக்கு ஊராட்சிப்புறம்போக்கில் குடியிருக்கும் எழைகள் காரணமா? அல்லது சொத்துடைமை சாதிகளின் மனித நேயமற்ற செயல் காரணமா?
12. சில ஊராட்சிகளில், ஊராட்சி புறம்போக்குகளில் வசிப்போருக்கு அரசே குடியிருப்பு மனையை தனி நபர்களிடம் விலைக்கு வாங்கிக் கொடுத்தாலும், தொடர்புடைய ஊராட்சிகளில் வசிக்கும் வசதி படைத்த விவசாய நிலவுடைமை சாதிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக ஏழைகளுக்கு சொந்தமாக வீட்டுமனைகள் அளிக்கக் கூடாது என அதிகாரம் செலுத்துவதை தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் அறிந்துள்ளதா? இத்தகையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
13. தலித்துகள், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு அரசு சொந்தமாக வீட்டு மனைப் பட்டா கொடுப்பதை, அவர்கள் மீதான தங்களின் கட்டுப்பாடுகள், ஆதிக்கம் தொடர்வதற்கு தடையாக இருப்பதாக வெஞ்சினம் கொள்ளும் நிலவுடைமை ஆதிக்க சாதிகளின் சிந்தனை, செயல்பாடுகள் குறித்து தமிழக அரசிடமும், உயர் நீதிமன்றத்திடமும் ஏதேனும் விவர அறிக்கைகள் உள்ளதா? அப்படிப்பட்ட அறிக்கைகள் ஏதேனும் இல்லையென்றால், தமிழக மனித உரிமைக் கழகம் போன்ற பல்வேறு மக்கள் இயக்கங்களிடம் தமிழக அரசு உரிய தகவல்களை தருமாறு கோரத் தயாராக இருக்கிறதா?
14. ஊராட்சிப் புறம்போக்குகள், கோயில் புறம்போக்குகள், மந்தைவெளி வாய்க்கால், மேய்ச்சல்கால் புறம்போக்குகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைகளில் பலரும், பசி, பட்டினியோடு வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி தரமான வீடுகளைக் கட்டியும் அதற்கு மின் இணைப்புகள் பெற்றும் வசித்து வருகின்றனர். அத்தகைய குடியிருப்புகளுக்கு தமிழக அரசு தனியாக பல ஆயிரம் ரூபாயில் சாலைகள் அமைத்தும், குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் ஆதார வசதிகள் செய்து கொடுத்தும் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பல ஆண்டுகள் வயதுள்ள மா, தென்னை, புளி, வேம்பு, பூவரசு போன்ற மரங்களை வளர்த்து ஊராட்சிக்குளங்களின் குட்டைகளின் கரையை வலுப்படுத்தி நீர் நிலை ஆதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். அவர்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றுவதால், புதிய இடங்களுக்குச் செல்லும் ஏழைகள் புதிதாக வீடுகள் கட்டிக்கொள்ள அரசிடம் என்ன திட்டம் உள்ளது? உரிய அடிப்படை வசதிகள் உடனடியாக கிடைக்காமல் வெளியேற்றப்பட்ட மக்கள் அவதியுறுவதை எப்போது, எப்படி சீரமைக்கப்போகிறீர்கள்?இது தவிர பழைய குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை, குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்புகள், மின்சார இணைப்புகள், சாலைகள் ஆகியவற்றுக்கு செய்யப்பட்ட நிதி செலவினங்களை வீணாக்கி, புதிய குடியிருப்புகளில் புதிய செலவினங்கள் செய்யப்படுவதால், அரசின் நிதிச்சுமை அதிகரிப்பது பற்றி தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?
15. தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமான வழிகளில் உள்ள தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களின் நிலத்திற்குரிய இழப்பீடும், நிலத்தின் மீதுள்ள வீடுகள், கடைகள் இதர வகைப்பட்ட கட்டடங்களுக்கு எவ்வளவு எவ்வாறு இழப்பீட்டு நிவாரணத்தொகை அளிக்க வேண்டுமென உலக வங்கி அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, ஊராட்சி மற்றும் மேய்ச்சல்கால் புறம்போக்குகளிலிருந்து வெளியேற்றப்படும் ஏழைகளுக்கும் பொருந்துமாறு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட முன்வருமா? உயர் நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசுக்கு வழிகாட்டி ஆணையிடுமா?
16. 31.5.2008 ஆம் நாளுக்குள் நீர்நிலை மற்றும் ஊராட்சி கோயில் புறம்போக்குகளில் குடியிருப்போரை அப்புறப்படுத்த வேண்டுமென்கிறது தமிழக அரசின் ஆணை. பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இத்தகைய ஆணைகள் நிறைவேற்றப்படுவதும், எதிர்ப்பு உள்ள சில இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யும் வரை அப்புறப்படுத்த மாட்டோம் என்ற வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களின் வாய்மொழி வாக்குறுதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்யத்தக்க அளவுக்குப் போதிய நிலம் கையகப்படுத்த முடியாத நிலைமை தொடருமெனில், 31.5.2008க்குள் அரசு ஆணை நிறைவேற்றப்படுமானால், ஊராட்சி நீர்நிலை புறம்போக்குகளில் வசிக்கும் ஏழைகளின் நிலை என்னவாகும்? வெளியேற்றப்படும் ஏழைகள் எங்கே போவார்கள் என்பது பற்றி எண்ணிப்பார்க்கும்போது, மனித நேயமுள்ளோர் நெஞ்சு பதைபதைப்பதை தமிழக அரசும் உயர் நீதி மன்றமும் அறியுமா?
17. ஏழைகள், தலித்துகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட தேவையான நிலங்களை நில உடைமையாளர்களின் இசைவைப்பெற்று விலைக்கு வாங்கிட தமிழக அரசால் இயலாத நிலைமைகளில், இயலாத இடங்களில், தொடர்புடைய வட்டாரங்களில் கிராமங்களில் உள்ள பெரும் நில உடைமையாளர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து 31.5.2008க்குள் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா அளிக்க தமிழக அரசு முன்வருமா?
18. நிலத்துக்கு கீழே கிடைக்கும் கனிமங்களுக்காகவும் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனி நபர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் அவர்களது இசைவின்றியே இழப்பீட்டுடன் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு, வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட நிலவுடைமையாளர்களின் இசைவை யாசித்து நிற்பது என்ன நியாயம்?
19. பொதுப்பணித்துறை, ஊராட்சி நீர்நிலை புறம்போக்குகள் ஆக்கிரமிப்பு குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனே நிறைவேற்றத் துடிப்பதற்குக் காரணம் தமிழக அரசு நீதிமன்றங்களின்பால் கொண்டுள்ள மரியாதையினாலா? ஏழைகளின் மீதுள்ள அக்கறையற்ற போக்கினாலா? முல்லைப் பெரியாரில் 142 அடி நீரை தேக்குவதற்காகவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும் முறையே கேரள, கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் கதி என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத கேரள, கர்நாடக அரசுகளை எதுவும் செய்யமுடியாத உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் – தமிழக அரசை மட்டும் என்ன செய்துவிட முடியும்? தமிழகம் மட்டுமே எப்போதும் உச்ச, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை என்ன?
20. சமூக வனக்காடுகள் என்ற பெயரில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் அரசின் வனத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது. குடியிருப்பு மனை இல்லாத லட்சக்கணக்கானவர்களின் குடியிருப்பு மனைக்கும், புதிரைவண்ணார்கள் போன்ற மிகச் சிறுபான்மையாக உள்ள சமூகங்களின் தனி கிராம அமைப்புக்கும், சமூகக் காடுகளிலிருந்து பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுத்து வழங்குவதன் மூலம், நிலப்பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். தமிழக அரசு, சமூகக் காடுகளுக்கும் சாதியமைப்புக்கும் உள்ள உறவை சரியாகப் பரிசீலனை செய்தால், சமூகக் காடுகளைக் கூட குடியிருப்பு மனைகளாகவும், நிலமற்ற ஏழைகளுக்குத் தேவையான பயிரிடும் நிலங்களாகவும் வழங்கிட முடியும். ஆனால், தமிழக அரசு இத்தகைய வழியில் சிந்திக்காதது ஏன்?
குடியிருப்பு மனையே இல்லாத பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில், வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கினால் போதுமா? எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும்.
நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி, நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஒரு நீர் நிலை ஏரி என்பதை அறியுமா?
-அரங்க. குணசேகரன்
நன்றி: தலித்முரசு (பிப்ரவரி 2008)
2 கருத்துகள்:
//நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி, நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஒரு நீர் நிலை ஏரி என்பதை அறியுமா?//
Is it? If it is so, then it should be corrected.
Thanks for the information.
அருமையான பதிவு.
ஒவ்வொரு கேள்வியும் நல்ல செறுப்படி, இதையெல்லாம் ஆனந்த விகடன் குட் பிளாக் ஆக ஏன் தெர்ந்தெடுக்கவில்லை.சாதீய வெறி காரணமா?
கருத்துரையிடுக