திங்கள், ஜூலை 07, 2008

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்!

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்.

எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது.

உங்கள் கனவு என்று சொல்லி அண்மையில் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அய்யோ! அதை நினைத்தாலே எனக்கு உடலெல்லாம் பதறுகிறது. இப்படி ஒரு விபரீதக் கனவு உங்கள் பெயரால் நனவாக்கப்படுவது பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்கத்தான் இந்தக் கடிதத்தை மதியத் தூக்கத்தையும் பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதுகிறேன்.

இயற்பியல் துறையிலே ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான சோதனைக் கூடத்தை நீலகிரி மலைத்தொடரில் முதுமலை கானுயிர் பூங்காப் பகுதியில் பைக்காரா மின் நிலையம் அருகே சிங்கார கிராமத்தில் சுமார் 900 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னமும் தமிழக அரசு இதற்கு இறுதி ஒப்புதல் தரவில்லை என்பதால்தான் இந்தக் கடிதத்தை அவசர அவசரமாக உங்களுக்கு எழுதுகிறேன். என் இதர கட்டுரைகளைப் படிப்பது போல இதையும் தமிழக முதல்வர் படித்துவிடுவார் என்ற நம்பிக்கையினால் அவருக்குத் தனியே எழுதவில்லை.

இது எதற்கான ஆராய்ச்சிக் கூடம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் சாதாரண மனிதர்களுக்கு எளிதில் புரியாது. சூரியனும் இதர நட்சத்திரங்களும் இடைவிடாமல் கோடிக்கணக்கில் உமிழ்ந்துகொண்டிருக்கும் நியூட்ரினோ எனப்படும் அணுவிலும் மெல்லிய துகளை வசப்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்குத்தான் இந்த சோதனைக்கூடம். நியூட்ரினோவைப் புரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று என்பதையும் சூரியனில் எப்படி சக்தி உருவாகிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடியலா....ம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நியூட்ரினோவை வசப்படுத்த பூமிக்கடியில்தான் சோதனைக்கூடத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்பதால், முதுமலை& நீலகிரி மலைத்தொடரில் பூமியைக் குடைந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் ஏற்படுத்தி அதிலே சோதனைக் கூடத்தை கட்ட வேண்டும்.

பிரபஞ்ச ஆராய்ச்சியில் உங்கள் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவிட்டுப் போகட்டும். அதற்கு மக்கள் வரிப்பணமான 900 கோடி என்ன ஒன்பதாயிரம் கோடியைக் கூட செலவிடட்டும். ஆராய்ச்சி முடிவுகள் மனித குலத்துக்கு என்றோ ஒரு நாள் பயன்தரும் விடைகளைத் தரக்கூடும் என்ற நம்பிக்கையில் எங்கள் கொள்ளுப் பேரன் பேத்திகள் காலத்தில் கூட இதற்காக வரி கட்டுவார்கள். அதல்ல பிரச்னை.

சோதனைக்கூடம் வைப்பதற்கு நீலகிரி மலையை, முதுமலை கானுயிர் மண்டலத்தை, சிங்கார கிராமத்தை தேர்ந்தெடுத்திருப்பதுதான் பிரச்னை. உங்கள் விஞ்ஞானிகள் இன்னும் நூறு தலைமுறைகளுக்கு உழைத்தால் கூட திரும்ப உருவாக்கமுடியாத இயற்கை விஷயங்களை வரும் நான்கே ஆண்டுகளில் அழித்துவிடுவார்கள் என்பதுதான் பிரச்னை.

சோதனைக்கூடத்துக்குத் தேவைப்படும் இரும்பு மட்டும் முதல்கட்டத்தில் 50 ஆயிரம் டன். இரண்டாம் கட்டத்தில் இன்னொரு 50 ஆயிரம் டன். இவை தவிர, சிமெண்ட், ஸ்டீல், இதர உலோகங்கள் எல்லாமாக இன்னொரு 35 ஆயிரம் டன் பொருட்கள். இவை அத்தனையும் மைசூரிலிருந்தும் ஊட்டியிலிருந்தும் காட்டுச் சாலைகள் வழியே லாரிகளில் வந்து சேரவேண்டும்.

மலையில் குடைந்து எடுக்கப்படும் பாறையும் மண்ணும் மட்டும் மொத்தம் ஆறு லட்சத்து 25 ஆயிரம் டன் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவை லாரிகளில் அகற்றப்பட்டு இன்னொரு இடத்தில் கொண்டு போய் கொட்டப்படவேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளும் இந்த வேலைகளுக்காக பெரும் லாரிகள் காட்டுப்பாதைகள் வழியே தினசரி 50 லிருந்து 75 டிரிப் அடித்தாக வேண்டும்.
அழிந்து வருகிற புலிகளைக் காப்பதற்காக இந்த வருடம்தான் பிரதமர் மன்மோகன்சிங் 600 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார்.

புலிகள் வேகமாக அழியாமல் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டிருக்கும் பகுதி முதுமலை சரணாலயம். ஆசியாவில் இருக்கும் யானைகளில் 25 சதவிகிதம் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. கணக்கற்ற செடி, கொடி, மர வகைகளும் சின்னப் புழு பூச்சி முதல் யானை, புலி வரையான கானுயிர்களும் நிறைந்திருக்கும் இயற்கையான மலைக்காடுகள் உலகில் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று நீலகிரியும் மேற்கு, கிழக்கு மலைத்தொடர்களும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவையெல்லாம் இந்த சோதனைக்கூடம் அமைப்பதனால் கடுமையாக பாதிக்கப்படும். நியூட்ரினோ லேபை வேறு எங்கேனும் கூட அமைக்க முடியும். ஆனால் நீலகிரி முதுமலைக்காடுகளில் வாழும் உயிரினங்களை வேறு இடத்தில் குடியேற்றிக் காப்பாற்ற முடியாது. பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து முடிக்கிறபோது அவர்களுக்காக அழிந்த பிரபஞ்ச வினோதங்களை இயற்கையின் படைப்புகளை அவர்களால் ஒருபோதும் மறுபடியும் உருவாக்கவே முடியாது.

இந்த சோதனைக்கூடத்தை இங்கே அமைப்பதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பது போன்ற வழக்கமான சால்ஜாப்புகள் எதுவும் இதில் சொல்ல முடியாது என்பதை ஐ.என்.ஓ.வின் இணையதளமே ஒப்புக் கொள்கிறது. அது மட்டுமல்ல. மிக நுட்பமான, எளிதில் நொறுங்கிவிடக் கூடிய இயற்கைச் சூழலுக்கு நடுவே இதை அமைக்கப்போகிறோம் என்ற பிரக்ஞையும் தங்களுக்கு இருக்கிறது என்று வேறு சொல்கிறார்கள்.

இந்த சோதனைக்கூடத்துக்கு நிலம் தர இருக்கும் தமிழக மின் வாரியம் அடுத்திருக்கும் பைக்காராவில் புனல் மின் திட்டத்தை விரிவாக்கியபோது, சுரங்கம் தோண்டி எடுத்த மண் மொய்யாற்றில் போடப்பட்டு ஆறு மாசுபடுத்தப்பட்டது. மதகைத் திறந்து நீரையெல்லாம் அப்புறப்படுத்திதான் அப்போதைய சிக்கலைச் சமாளிக்க முடிந்தது.

சூழல் மாசுபடாமல் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதை அலட்சியப்படுத்திவிட்டு நடந்துகொள்ளும் நிர்வாக இயந்திரம்தான் நம் நாட்டில் இருக்கிறது என்பது குடியரசுத் தலைவராக இருந்த உங்களுக்குத் தெரியாதா என்ன ? இன்னும் கூட நமது அணு நிலையங்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்வளவு கதிர் வீச்சு அளவு என்பதை பகிரங்கமாக தெரிந்து கொள்ளும் உரிமை தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் கூட இல்லையே.

நீலகிரி மலையில் முதுமலைக் காடுகளில் ஏற்கெனவே மனிதனுக்கும் காட்டு உயிர்களுக்கும் இடையே சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. தங்கள் பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடத்தொடங்கியதால், யானைக் கூட்டங்கள் பெரும் அல்லலுக்குள்ளாகியிருக்கின்றன. இதன் விளைவாக வழக்கமாக வராத கிராமங்களுக்குச் சென்று அழிவை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இங்கே 38 பேர் யானைகளின் பாதையில் குறுக்கிட்டு செத்திருக்கிறார்கள். அத்தனை பேரும் அப்பாவி கிராம மக்கள். பிரபஞ்ச ரகசியம் தேடும் விஞ்ஞானிகளும் அந்தப் பட்டியலில் சேரவேண்டுமென்பது உங்கள் கனவா?

உலகத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இன்னும் நான்கு உள்ளன. அவை எதுவும் இப்படி இயற்கையை அழிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களில் இல்லை. ஜப்பானில் காமியோகா, கனடாவில் சூட்பரி, அமெரிக்காவில் மின்னசோட்டாவில் சௌடான் ஆகிய மூன்று இடங்களிலும் அவை நிக்கல் போன்ற தாதுச் சுரங்கங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தாலியில் கிரான் சாசோ மலைகளில் அமைக்கப்பட்டிருப்பது ஆல்ப்ஸ் பனிமலையின் ஒரு பகுதியும், நீலகிரி போல பெரும் இயற்கை உயிர் வளம் இல்லாத மலையுமாகும்.அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே முதல் நியூட்ரினோ சோதனைக்கூடம் கோலார் தங்க வயல் சுரங்கத்தில்தான் 1965-ல் அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தங்கம் எடுப்பதை நிறுத்தி சுரங்கத்தை மூடியதும் லேபை மூடிவிட்டீர்கள். அதனால்தான் இப்போது முதுமலையை அழிக்கும் ஆபத்தான கனவு உங்கள் விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது.

இதை உங்கள் கனவு என்கிறார்கள்.

அப்படி இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். நியூட்ரினோ துகள்களை வசப்படுத்த வேறு இடம் தேடலாம். கோலாரில் தங்கம் இல்லாவிட்டால் என்ன ? அந்த சுரங்கங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தலாமே. இந்தியாவில் ஏற்கெனவே சுரங்கங்கள் உள்ள பகுதிகள் பல இடங்களில் உள்ளன. அவற்றையொட்டி நியூட்ரினோ லேபை அமைப்பது பற்றி ஆராயலாமே.

இந்த வாரம் கூட ஒரு பத்திரிகையில் விஷன் 2020 பற்றி உங்கள் பத்து அம்சக் கனவை பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதிலே `சஸ்ட்டெயினபிள் க்ரோத்' ( நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி) என்பதும் ஒரு கனவு. ஆயிரக்கணக்கான வருடங்களாக உருவாகியிருக்கும் இயற்கையை சக உயிரினங்களை அழித்துவிட்டு எப்படி நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி சாத்தியம் ?

பஞ்சாபிலே மாசுபடுத்தப்பட்ட காளி பெய்ன் ஆற்றை ஐந்து வருடங்களில் 3000 தொண்டர்கள் மூலம் மறுபடியும் தூய்மையாக்கிய பாபா பல்பீர் சிங்கை, இளைஞர்களுக்கான ரோல்மாடலாக சொல்லியிருக்கிறீர்கள். நீலகிரியை நியூட்ரினோ லேபிலிருந்து காப்பாற்றி உங்களை ஒரு ரோல் மாடலாக முதலில் நிரூபியுங்கள். இயற்கையை அழித்து பிரபஞ்ச ரகசியத்தைத் தேடுவது என் கனவு அல்ல என்று தயவு செய்து அறிவியுங்கள்.

உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மதித்து தயவுசெய்து இந்தத் திட்டத்தை வேறு இடத்துக்கு அனுப்பி உங்கள் தாய்த் தமிழகத்தின் முதுபெரும் சொத்தைக் காப்பாற்றித் தாருங்கள்.

இதைப் படித்ததற்கு நன்றி. படித்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்பது என் இப்போதைய கனவு.

இதில் நீங்கள் மௌனம் காட்டினால், அது நீங்கள் யாரென்பதைக் காட்டிவிடும் என்று மட்டும் அன்புடன் அறிவுறுத்த விரும்புகிறேன்.

அன்புடன்

-ஞாநி.

நன்றி: குமுதம் 09-07-08

4 கருத்துகள்:

leema mohemmed சொன்னது…

ROMBA AVASARAMANA, AVASIYAMANA KATTURAI. ITHAI NAM KANAVU THATHA(NALLA PER!) KAVANATHUKKU EPPADIYAVATHU KONDU POGANUM. ATHULA THAAN VETRIYIN RAGASIYAME ADANGI IRUKKIRATHU, PLEASE SEEKIRAM.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இது ஞாநியின் அரைவேக்காட்டு கட்டுரை.
இதை கண்டித்து நான் எழுதிய பதிவையும் (http://maraneri.blogspot.com/2008/07/blog-post_05.html)
நண்பர் சீனிவாசன் அவர்கள் எழுதிய பதிவையும் (http://vetripadigal.blogspot.com/2008/07/blog-post.html )
பாருங்கள்.

அகராதி சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...

இது ஞாநியின் அரைவேக்காட்டு கட்டுரை.
இதை கண்டித்து நான் எழுதிய பதிவையும் (http://maraneri.blogspot.com/2008/07/blog-post_05.html)
நண்பர் சீனிவாசன் அவர்கள் எழுதிய பதிவையும் (http://vetripadigal.blogspot.com/2008/07/blog-post.html )
பாருங்கள்.//

ஞாநியின் கலாமை விமர்சனம் செய்வது குறித்து மாற்றுக்கருத்து இருக்கலாம்.

ஆனால் அணுசக்தி உடன்பாடு முதல் இக்கட்டுரையின் கருப்பொருள்வரை கலாமின் கருத்து மக்களுக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மை.

மேலும் மேலே குறிப்பிடப்பட்ட இரு பதிவுகளும் ஞாநியை விமர்சனம் செய்பவைதானே தவிர ஞாநி எழுப்பும் கேள்விகளுக்கு எந்த பதிலையும் தரவில்லை.

கையேடு சொன்னது…

நண்பர் பால்ராசின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கும் (சிறு மாற்றத்துடன்)பதியவைக்கிறேன்,

கட்டுரையின் சாராம்சம் போலித்தனமான விளம்பரத்திற்காக எழுதப்பட்டது போல் தெரியவில்லையே. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தானே எழுதப்பட்டிருக்கிறது.

கலாமின் கனவுகள் மீதுள்ள நம்பிக்கையின்மையால் ஆங்காங்கே இடித்துரைத்திருக்கிறார். அதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுமிருக்கிறார்.

மேலும், நியாயமான வாதங்களைத் தானே எடுத்துவைத்திருக்கிறார். மேலும், அவ்வாய்வு மையத்தை நிறுவுதல் என்கின்ற கனவை அவர் கலைக்கச் சொல்லவில்லையே, அக்கனவு நினைவாகப்போகும் இடத்தைத் தானே மாற்றச்சொல்லிக் கேட்டிருக்கிறார்.

எனது இப்பீன்னூட்டம் ஞாநி அவர்களின் முந்தய பிந்தய கருத்துக்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காகவல்ல. மேலும் அவர் கையேடு என்ற ஒற்றை நபரின் சார்புப் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கிடப்பவருமல்ல, என்ற புரிதலிலேயே எழுதுகிறேன்.

மற்றபடி ஞாநி அவர்களின் முந்தய கருத்துக்கள் பற்றிப் பேசுவது பிறிதொரு உரையாடல்.

கருத்துரையிடுக