ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த ‘பாட்ஷா’ வெற்றிப்படமா? தோல்விப் படமா? என்றுயாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும், பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம். அதன் மூலம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா பிலிம்ஸுக்குப் போட்ட முதலைப் போல பல மடங்கு பணத்தை அள்ளித்தந்த ‘பாட்ஷா’, திரைத்துறையில் மட்டுமே அலைகளை உருவாக்கிய படம் அல்ல; அரசியலிலும் அலையை உருவாக்கிய படம். “ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தூக்கி எறியாவிட்டால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என ரஜினிகாந்த் குரல் கொடுக்கக் காரணமான படம். அந்தக் குரல் தமிழக அரசியலில் உருவாக்கிய அலை ஏறத்தாழ பத்தாண்டுகள் வரை இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பொது நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
‘பாட்ஷா’ என்னும் மிகப்பெரிய வெற்றிப்படம் உருவாக்கிய அலையை ‘பாபா’ (2004) என்ற மோசமான தோல்விப் படம்தான் சமநிலைக்குக் கொண்டு வந்தது. ‘பாட்ஷா’வுக்கும் ‘பாபா’வுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாக ‘முத்து’ (1995), ‘அருணாசலம்’(1997), ‘படையப்பா’(1999) என மூன்று படங்களை வெளியிட்டுச் சில நூறு நாட்களுக்குத் திரையரங்குகளை நிறைத்து லாபம் ஈட்டிக் கொண்டதோடு, தனது பொதுமனிதன் மற்றும் அரசியல் பிம்பத்தையும் உடன்நிகழ்வாகவே உருவாக்கி வந்தார் ரஜினிகாந்த். ‘பாபா’ படத்தின் தோல்வி, ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர் உருவாக்கிக் கட்டமைத்த அரசியல் பிம்பத்திற்கும், பொதுமனிதன் அடையாளத்திற்கும் கூட பங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை நமது நினைவுகள் அழித்து விட்டிருக்காது. ‘பாபா’ படத்தை வாங்கி விநியோகம் செய்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு ரஜினிகாந்தே முன்வந்து பணத்தைத் திருப்பித் தந்தார் என்பதும், அப்படத்திற்கு இடையூறு செய்தவர்களாக அறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் இரண்டாவது தடவையாகக் குரல் (வாய்ஸ்) கொடுத்தார் என்பதும் பருண்மையான உண்மைகள். இந்த உண்மைகள் நினைவுக்கு வரும்போது, ரஜினிகாந்தின் அந்தக் குரல் அந்தப் பொதுத்தேர்தலில் முற்றிலுமாக எடுபடாமல் தோற்றுப் போனது என்பதும் நினைவுக்கு வந்து விடும்.
கடந்த காலத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம். அண்மைக் காலத்துக்கு வருவோம்.
ஏவி.எம். தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘சிவாஜி’ வெற்றிப் படமா?
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ வெற்றிப் படமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் படம் வெற்றிப்படம் என்றே சொல்வார்கள். இயக்குநர் ஷங்கரும் கூட அதே பதிலைத்தான் சொல்லுவார். நடிகர் ரஜினிகாந்தும் கூட ஷங்கரின் பதிலை வழிமொழியக் கூடும். ஆனால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் அவர்களைப் போலவே பதில் சொல்வான் என எதிர்பார்க்க முடியாது.
தமிழ் சினிமாவின் தீவிர ரசிகனுக்கு -குறிப்பாக ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகனுக்கு ஒரு படம் வெற்றிப் படம் என்றால் குறைந்தது 100 நாள் ஓடவேண்டும். அதுதான் வெற்றிப் படம். திரைப்பட ரசிகன் மட்டுமல்ல; ஆண்டு இறுதியில் புள்ளி விவரங்கள் வெளியிடும் பத்திரிகைகள் கூட இந்த அடிப்படைகளைப் பின்பற்றியே வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டு வந்தன. ஒரு நடிகனின் தீவிர ரசிகனைப் பொறுத்த அளவில் தனது அபிமான நடிகனின் படம் வெளியானவுடன், தியேட்டரில் குறுக்கும் நெடுக்குமாகத் தோரணங்கள் கட்டி, பாலாபிஷேகம் செய்ய வேண்டும்; கட்-அவுட்டுகளை நிறுத்தித் தனது பெயரோடு சேர்த்து நடிகனின் பெயரையும் எழுதிப் பார்க்க வேண்டும்; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அந்தப் படத்தை நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் போய்ப் பார்க்கும் விதமாகப் பல வாரங்கள் ஓட வேண்டும்; அதுதான் வசூலில் வெற்றிப் படம். தனது மானசீகமான நாயகனின் வெற்றிப் படத்தைக் கொண்டாடி மகிழ்வதே தமிழ் சினிமா ரசிகர்களின் திரைப்படக் கலாச்சாரம். அதற்கு வாய்ப்பளிக்கும் நடிகனே வெற்றிப்பட நாயகன். அவனே எதிர்காலத் தமிழகத்திற்கு வழிகாட்டும் தலைவனாக-முதல்வனாக ஆகும் தகுதியுடையவன்.
‘பாட்ஷா’ அத்தகைய வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்கள்தோறும் அப்படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியதோடு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் 200 நாட்களையும் தாண்டி பார்வையாளர்களைத் தன்வசம் இழுத்தது. ‘பாட்ஷா’வை தொடர்ந்து வந்த படங்களில் ‘பாபா’வைத் தவிர எல்லாப் படங்களும் அந்த வாய்ப்பை வழங்கவே செய்தன. ஷங்கரின் இயக்கத்தில் வந்த ‘சிவாஜி’யும்கூட அந்த வாய்ப்பை மறுக்கவில்லை. ஆனால் ‘எந்திரன்’?
ஏறத்தாழ அந்த வாய்ப்பை ரஜினியின் ரசிகனுக்கு ‘எந்திரன்’ மறுத்துவிட்டது. வழங்குவதற்கான வாய்ப்பை நினைத்துப் பார்க்கக்கூடத் தூண்டவில்லை என்பதே உண்மை. ரஜினியின் சினிமா என்பது ரசிகனின் சினிமா என்ற அர்த்தத்தில் இருந்த நிலையை மாற்றித் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரின் சினிமாவாக ரஜினியின் ‘எந்திரன்’ மாறிக் கொண்டதன் மூலம் ரசிகனிடமிருந்தும், அவனது கொண்டாட்ட மனநிலையிலிருந்தும் விலகிப் போனது என்பது அண்மைய நிகழ்வு. அதன் மூலம் வெற்றிப்படம் என்ற இலக்கணத்தையும் அதன் அர்த்தத்தையும் ‘எந்திரன்’ மாற்றிக் கட்டமைத்து விட்டது.
தயாரிப்பாளரும், இயக்குநரும் வெறும் வசூல் கணக்கை மட்டும் போட்டு ‘எந்திர’னை வெற்றிப் படம் என மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அவர்கள் போட்ட கணக்கு 10x100=100x10 என்ற சமன்பாட்டுக் கணக்கு. இந்தச் சமன்பாட்டுக் கணக்கு எளிமையான வியாபாரக் கணக்கு மட்டும்தான். சென்னையில் 10 தியேட்டர்களில் வெளியிட்டு 150 நாட்களில் வசூலிக்கும் தொகையை, ‘எந்திரன்’ 100 தியேட்டர்களில் 15 நாட்கள் மட்டுமே ஓடி வசூலித்துத் தந்தது. சென்னையில் இருக்கும் எல்லாத் தியேட்டர்களிலும் ‘எந்திரன்’ மட்டுமே பார்க்கக் கிடைக்கிறது என்றாகிறபோது பார்வையாளர்களின் ஒரே தேர்வு அந்தப் படம்தான் என்று ஆக்கப்பட்டது. மிகக் குறைவான நாட்களில் அதிகப்படியான வசூல் என்பது லாப வேட்டை வியாபாரம் வரவேற்கும் ஒன்று. இப்படி ஆக்கப்பட்டது சாதாரண நிகழ்வு அல்ல. தமிழ்ச் சினிமாவின் பொருளாதாரம் மற்றும் திரைப் பண்பாட்டில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு. அதனைச் சாத்தியமாக்கியது ‘எந்திரன்’ படத்தைத் தனது முதல் தயாரிப்பாக முன்வைத்த சன் பிக்சர்ஸ் என்னும் பன்னாட்டு வணிகக் குழுமத்தின் சாதனை. அந்தச் சாதனையின் தொடர்ச்சியாகவே கமல்ஹாசன் நடித்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸின் தயாரிப்பான ‘மன்மதன் அம்பு’வும் வெற்றிப்படமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் கமல்ஹாஸனின் ரசிகனுக்கும் விமரிசகர்களுக்கும் அப்படம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டாத படம் என்பதே யதார்த்தம்.
இதுவரை தனது அபிமான நடிகனின் படவெற்றியைத் தனது வெற்றியாகக் கருதிக் கொண்டாடிய ரசிகனிடமிருந்து ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை வியாபாரம் சார்ந்த நிகழ்வாக மாற்றிக் கட்ட மைத்துள்ள இந்த மாற்றம் ஒருவிதத்தில் வரவேற்க வேண்டிய ஒன்று. ரசிகனிடமிருந்து சினிமா விடுதலையானது போலவே, சினிமா நடிகனிடமிருந்து ரசிகனும் விடுதலை அடையத் தொடங்கியிருக்கிறான். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய உடன் நிகழ்வாக நடக்கும் என்பதுதான் இயங்கியல். இதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் சூப்பர் ஸ்டார் கனவிலும், எதிர்கால முதல்வர் கனவிலும் மிதக்கும் நடிகர்கள் அரசியல் வெளியில் அலையும் பிம்பங்களாக அலைந்து கொண்டிருப்பதுதான் நடக்கும். நம் காலத்தில் நடிகர் விஜய் அவ்வாறுதான் அலைந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் அலைவுகளை விவரிப்பதற்கு முன்னால் மாற்றியமைக்கப்படும் திரைப்படப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் வெறும் பொருளாதார மாற்றங்கள் மட்டுமல்ல என்பதைக் கொஞ்சம் விளங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அரசியல் கலாச்சார நகர்வுகள் எவ்வாறு ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படலாம்.
பங்குச் சந்தையின் விதிகளோடு நுழைந்த பன்னாட்டு மூலதனக் குழுமங்களின் வருகையை இந்தியத் திரைப்படத் துறை 2000-க்குப் பின் ஏற்றுக்கொண்டு அகநிலையிலும் புற நிலையிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அம்மாற்றம் பிரமிட், சாய்மீரா போன்ற நிறுவனங்களின் மூலம் தமிழிலும் உணரப்பட்டது என்றாலும் முழுமையான மாற்றத்தை உண்டாக்கிய வணிகக் குழுமம் சன் பிக்சர்ஸ்தான். 2008 இல் ‘காதலில் விழுந்தேன்’, ‘தெனாவட்டு’, ‘திண்டுக்கல் சாரதி’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களை வாங்கி விநியோகம் செய்யும் நிறுவனமாக அறிமுகமானது. அம்மூன்று படங்களையும் சன் வணிகக் குழுமத்தின் அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தொடர்ச்சியான-திணறடிக்கும் விளம்பரங்களின் மூலம் லாபம் தந்த பொருட்களாக ஆக்கிக் காட்டின. 2009 இல் சன் பிக்சர்ஸ் ‘படிக்காதவன்’, ‘தீ’,‘ அயன்’, ‘மாசிலாமணி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கண்டேன் காதலை’, ‘வேட்டைக்காரன்’ என ஏழு படங்களை வாங்கி விநியோகம் செய்தது. ‘படிக்காதவ’னில் தனுஷும், ‘அய’னில் சூர்யாவும், ‘வேட்டைக்கார’னில் விஜய்யும் நாயகப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
2010 -இல் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சுறா’, ‘தில்லாலங்கடி’, ‘சிங்கம்’, ‘எந்திரன்’ என ஐந்து படங்களை வெளியிட்டது. ‘எந்திரன்’ மட்டும் சன் பிக்சர்ஸின் தயாரிப்பு. 2011 இல் இதுவரை ‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’ என இதுவரை இரண்டு படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் படங்களாக வந்துள்ள 17 படங்களிலும் ஒருசில பொதுத்தன்மைகள் இருப்பதை சினிமாவின் ரசிகர்களும் விமரிசகர்களும் உணர்ந்திருக்கக் கூடும்.
பொதுத்தன்மைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாக இருப்பது, திரைப்படத்தை முழுமையான கேளிக்கைச் சாதனமாகக் கணித்து அதிரடியான விளம்பரங்களின் மூலம் விற்றுத்தீர்க்கும் வியாபாரப் பார்வை. இந்தப் பார்வையின் விளைவாகத் திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின் படைப்பு என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, விநியோகஸ்தரின் சரக்கு என்பதாகத் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதைத் தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் காண்கிறோம். பத்திரிகை விளம்பரங்களிலும் அவ்வாறே முன்வைக்கப்படுகிறது. இந்த முன்வைத்தலில் இருந்து இதுவரை தப்பிய படமாக வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ மட்டுமே மந்தையிலிருந்து தப்பிய ஆடாக இருக்கிறது (அந்தப் படத்திற்குப் பொருத்தமாகிற, கூண்டிலிருந்து தப்பிய சேவலாக இருக்கிறது எனச் சொல்லலாம்).
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இப்பதினேழு படங்களில் முக்கால்வாசிப் படங்கள் அவசரப் பசிக்குக் கிடைத்த நொறுக்குத்தீனி போன்ற மசாலாப் படங்கள் . அவை அதிக லாபம் ஈட்டியதின் பின்னணியில் சன் தொலைக்காட்சிக் குழுமங்களின் விளம்பர உத்திகள் மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகளை ஒப்பந்த அடிப்படையில் கையகப்படுத்திக் கொண்ட வியாபார உத்திகளும் இருப்பதாகத் திரைப்படத்துறை சார்ந்த பலரும் சொல்கின்றனர். அப்படிச் சொல்கிறவர்களின் குரல்களில் சில இந்தப் போக்கை வரவேற்பதையும் காண முடிகிறது. சில குரல்கள் அச்சுறுத்தும் போக்கு எனச் சுட்டிக் காட்டுவதையும் கேட்க முடிகிறது.
இப்போக்கு திரைப்படத் துறைக்கு நன்மை பயக்கக்கூடியதா? தீமையை மட்டுமே உண்டாக்கக் கூடியதா என்பதை அத்துறைக்கு வெளியிலிருக்கும் ஒருவரால் கணித்துச் சொல்வது இயலாத காரியம். ஆனால் இந்தப் போக்கு அதில் ஈடுபட்டுள்ள சன் பிக்சர்ஸ் என்னும் வணிகக் குழுமத்திற்கு ஏராளமான லாபத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனைப் பின்பற்றி அவரின் உறவினர்களான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும், இன்னொரு உறவினரான துரை தயாநிதி கிளவுட் நைன் மூவிஸ் என்னும் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்க மாட்டார்கள் அல்லவா? அவர்களோடு இணைந்து வேலை செய்ய கல்பாத்தி சகோதரர்கள் போன்ற நிறுவனங்களும் தயாராகி இருக்காது அல்லவா?
தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையோடு நெருங்கிய உறவுடைய நபர்களால் நிர்வகிக்கப்படும் இவ்வணிகக் குழுமங்களின் வியாபார மற்றும் விளம்பர உத்திகளால் திணறும் அல்லது வளம்பெறும் தமிழ்த் திரைப்படத்துறை எத்தகைய போக்கைச் சந்திக்க உள்ளது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் அக்குழுமங்களின் வலைப்பின்னல் வியாபாரத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள நாயகப் பிம்பச் சிதைவை வரவேற்கத்தக்க விளைவு என்றே சொல்லத் தோன்றுகிறது. ரஜினியின் ‘எந்திரன்’ படமே அந்த விளைவின் முதன்மையான உதாரணம்.
‘எந்திரன்’ படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் பொதுமனித பிம்பத்தைச் சிதைத்துக் கட்டமைத்துள்ளதோடு, திரைப்படத் துறையிலிருந்து உருவாக நினைக்கும் அரசியல்வாதிகளின் ஆசைகளுக்கும் எதிரான போக்கை உருவாக்கி விட்டது. ஐம்பது நாட்களுக்குள் திரையரங்குகளை விட்டு எடுக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர்களோடும் விநியோகஸ்தர்களோடும் சேர்ந்து வியாபாரக் கணக்கை மட்டும் போட்டு வெற்றிப்படம் என ஒத்துக் கொண்டதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிம்பத்தைச் சிதைத்துக்கொண்டு, தான் ஒரு நடிகன் மட்டுமே என்பதை ஒத்துக் கொண்டு ஒதுங்கத் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு விழாவின் போதும் ஆட்சி அதிகாரத்தின் நெருங்கிய நிழலில் நின்று அதுவரை உருவாக்கி வந்த பிம்ப அடுக்குகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றிப் போட்டுவிட்ட ரஜினிகாந்த் இனியொரு முறை மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பாவனை செய்தால் பொதுமக்கள் கேலியாகச் சிரிப்பார்கள் என்பதை விட, அவரது தீவிர ரசிகனே உதட்டைப் பிதுக்கிவிட்டு ஒதுங்கிப் போய்விடவே செய்வான். அரசியல் ஆசையற்ற கமல்ஹாசனுக்கும், கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் இத்தகைய சிக்கல்கள் நேர சாத்தியமில்லை.
தனது வசனத்தில் உருவான ‘பராசக்தி’ தொடங்கிப் பல்வேறு படங்களின் வழியாகத் தமிழக மக்களுக்குத் தேவையான கருத்துக்களையும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் முன்மொழிந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் வாரிசுகள் நடத்தும் நிறுவனங்கள், திராவிட இயக்கத்தின் கலை இலக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் படங்களைத் தயாரிக்காமலும், தீவிரமான சமூக யதார்த்தப் படங்களை எடுப்பவர்களுக்கு உதவாமலும், வெறும் லாபத்தையும் கேளிக்கையையும் மட்டுமே முதன்மையாகக் கருதும் நிலையை மேற்கொள்வது எத்தகைய நியாயம் எனக் கேள்விகள் கேட்கக் கூடும். அவ்வாறு கேள்வி கேட்கும் நபர்களை நோக்கி ‘அரசியல் வேறு; வியாபாரம் வேறு’ என வெளிப் படையான பதில்களைக் கூறினாலும், மறைமுகமாக ஒரு அரசியல் நோக்கம் இருப்பதை இங்கே சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. அதை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்களா? தன்னிகழ்வாக நடக்கிறதா எனக் கேட்டால் தன்னிகழ்வாக எதுவும் நடப்பதில்லை என்றே இயங்கியல் பதில் சொல்லும்.
அவர்களது திரைப்பட வியாபார வலைப்பின்னல் வழியாக நாங்கள், “திரைப்படங்கள் வழியாகக் கட்டியெழுப்பப்படும் பிம்பங்களைச் சிதைக்கும் மாபெரும் பணியில் இருக்கிறோம்” என்று பதில் சொன்னால் அதை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது. ‘எங்கள் செயல்பாடுகளில் லாபம் ஈட்டுவது என்ற வணிக நோக்கம் மட்டுமே இருக்கிறது என்று கருதுபவர்கள், அதன் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தை ஆய்வு செய்து அறியும் ஆற்றல் அற்றவர்கள்’ என்று அவர்கள் சொல்லவும் கூடும்.
தொடர்ந்து நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படப் பிம்பத்தின் வழியாக உருவான எம்.ஜி.ராமச்சந்திரன்தான், விஜயகாந்த் என்னும் இன்னொரு திரைப்பட பிம்பத்திற்கு முன்மாதிரியாக ஆகியிருக்கிறார். சட்டத்தை விளக்கி, அரசைக் காக்கும் தனிநபராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் விஜயகாந்தின் அரசியல் பிம்பம் கிராமம் சார்ந்த அப்பாவிகளிடம் மட்டுமே எடுபடும் பிம்பம் என்பதால் அதை அதன் வெளியில் அலைய விடுவதைத் தவிர வேறு வழியில்லை. எம்.ஜி.ராமச்சந்திரனைப் போலவே பல படங்களை நூறு நாள் படங்களாக வலம்வர வைத்த ரஜினிகாந்தின் அரசியல் பிம்பமும் பொதுமனித பிம்பமும் ஒரேயொரு ‘எந்திரன்’ படத்தின் மூலம் சிதைக்க முடிந்திருக்கிறது. ஆனால் அவரது நடிப்புப் பாணியையும் நடனப் பாணியையும் தனதாக்கிக் கொண்டுள்ள நடிகர் விஜய் மட்டும் இந்த நிலையை ஏற்க மறுத்து முரண்பட்டு நிற்கிறார். அம்முரண்பாட்டின் நோக்கம் வெறும் திரைப்பட வெற்றி சார்ந்த முரண்பாடு மட்டுமல்ல என்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்தவே செய்கின்றன.
இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான படங்களில் அதிகமான தடைகளைத் தாண்டி வெளியான படம் நடிகர் விஜய் நடித்த ‘காவலன்’. படம் பொங்கலுக்கு வருமா? வராதா? என்ற பலவிதமான ஊகங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பிறகு ஒரு நாள் தாமதமாகத் திரையரங்குகளுக்கு வந்து விட்டது. திரைக்கு வந்த ‘காவலன்’ ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் படத்தின் நாயகனான விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் தொடர்ந்து அச்சு ஊடகங்களுக்கான செய்தி மையமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகை படிப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும். அதன் உச்சகட்டமாக ‘தினமணி’ நெல்லைப் பதிப்பில் (18-02-2011)
மீனவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறார் நடிகர் விஜய்.
நாகையில் பிப்ரவரி 22-ல் கண்டனப் பொதுக்கூட்டம்.
எனத் தலைப்பிட்ட செய்தி வெளியாகியிருந்தது. அதையும் வாசித்தேன். அடுத்த நாள் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் மூன்றாவது முறையாக அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இதையும் வாசித்தேன். வெவ்வேறு தினசரிகளை வாசிப்பவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் இந்தச் செய்திகளை வாசித்திருக்கக் கூடும்.
பொங்கலுக்கு ‘காவலன்’ படம் வருவதற்குத் தடைகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதாவை விஜய் சந்திக்கப் போவதாகவும், அவரது தந்தையுடன் சேர்ந்து போயஸ் தோட்டம் போய் வந்ததாகவும் செய்திகள் வந்தன. அதன் பிறகும் கூடத் தொடர்ந்து அஇஅதிமுகவுடன் விஜய் நெருக்கமாகிறார் என்பதாகச் செய்திகள் பரப்பப்பட்டன. ‘காவலன’ படத்தின் பரப்பல் நேர்காணல்கள் மற்றும் செய்திகளில் கூட ‘காவலன்’ படத்தைப் பற்றிப் பேசுவதை விடவும் படத்தை வெளியிட முடியாமல் தடுக்கும் ரகசிய சக்திகள் மற்றும் சதிகள் பற்றியே அதிகம் பேசினார் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘காவலன்’ படத்தோடு நேரடியாகத் தயாரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த தொடர்புகளில் இல்லாதபோதும், அப்படத்தை வெளியிடுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தனது மகனின் எதிர்கால அரசியலுக்குப் போடப்படும் தடையாகவே முன்நிறுத்த முயன்றார். தன் மகனின் எதிர்கால லட்சியங்களை வடிவமைத்துத் தரும் -நல் வழிகாட்டும்-தந்தையின் கடமையாகக் கூட அவர் அதைக் கருதியிருக்கலாம்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்ற திருக்குறளின் பொழிப்புரையாக இருக்க முயலும் எஸ்.ஏ. சந்திரசேகரனின் முயற்சிகள் இப்போதுதான் வெளிப்படுகின்றன என்றில்லை.‘கில்லி’, ‘போக்கிரி’, ‘திருப்பாச்சி’ போன்ற சூப்பர்ஹிட் படங்கள் வெளியான காலத்திலேயே தொடங்கிவிட்டன. ‘சிவகாசி’ படம் வந்தபோது சிவகாசிக்கருகில் இருந்த கிராமம் ஒன்றில் தீபாவளி கொண்டாடியது, இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக திருநெல்வேலியில் நடந்த உண்ணாவிரதம் போன்றன திரைப்படங்களுக்கு வெளியே நடக்கும் புற வெளிப்பாடுகள் என்றால், ‘அழகிய தமிழ்மகன்’, ‘வேட்டைக்காரன்’ எனப் பெயர் சூட்டுவதும், வில்லன்களை நோக்கிப் பேசும் பஞ்ச் வசனங்களை சமகால அரசியல் நிகழ்வுகளோடு பொருந்தும் விதமான வசனங்களாக வைத்ததும், பாடல் வரிகளில் தமிழ்நாட்டுப் புயல், மன்மதன் எனவும் எழுதிக் காட்டிப் பிம்பங்களை அடுக்கியதும் படத்திற்குள் நிகழும் அக வெளிப்பாடுகளின் சில உதாரணங்கள்.
‘காவலன்’ படத்திற்குப் பிறகான செய்திகள் அவரை அஇஅதிமுகவின் பக்கம் சாய்கிறார் என்பதாகக் காட்டுவது போலவே, வெவ்வேறு திரைப்பட நிறுவனங்கள் தயாரித்த ‘வேட்டைக்காரன்’ மற்றும் ‘சுறா’ படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தபோதும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த ‘குருவி’ படம் வெளிவந்தபோதும் நடிகர் விஜய், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவார் என்றும், திமுகவின் பிரசாரத்திற்குப் பயன்படப் போகிறார் என்பதாகவும் முன்நிறுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் ஒருமுறை டெல்லி சென்று இளைஞர் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரசில் சேர்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாகப் பரப்பப்பட்ட செய்திகளின் போதெல்லாம் அவரது திரைப்படம் ஒன்று வெளிவருவதும், சில படங்கள் வசூலில் வெற்றி அடைவதும், அதற்குச் சம அளவில் வசூலில் தோல்வி அடைந்ததும் நடந்துகொண்டே இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ரஜினிகாந்தின் மோசமான தோல்விப் படம் ‘பாபா’ வெளியான அதே ஆண்டில்தான் இளைய தளபதி எனப் பட்டம் சூட்டப்பட்ட விஜய்யின் ‘கில்லி’ படம் வெளியானது. இயக்குநர் தரணியின் மசாலாக் கலவை சரியாகக் கலக்கப்பட்ட அப்படம்தான் நடிகர் விஜய்யின் சூப்பர் ஸ்டார் கனவை உசுப்பிவிட்ட படம். அதற்கு முன்பே நடிகர் ரஜினியின் நடிப்புப் பாணியைத் தனது நடிப்புப் பாணியாக மாற்றிக் கொண்டு வந்த விஜய் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் குரலையும் கொடுக்க ஆரம்பித்தார். மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் ‘காவலன்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களை அடுத்துக் கொஞ்சம் வன்மையாக ஒலிப்பதுபோலத் தோற்றமளிக்கிறது. அப்படித் தோன்றுவதற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ‘அழகிய தமிழ்மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘குருவி‘, ‘வில்லு’ எனத் தொடர்ந்து வசூல் தோல்விப் படங்களைத் தந்துள்ள விஜய்யின் குரல் திரைப்படத் துறை சார்ந்தும், அரசியல் தளம் சார்ந்தும் முக்கியமான தாக்கத்தை உண்டாக்கி விடும் எனச் சொல்ல முடியாது.
தமிழகத்தின் நவீனமான திரையரங்குகளையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வலைப்பின்னலாக ஆக்கிக் கொண்டதோடு, வகைவகையான திடீர்ப் பண்டங்களை விற்பனைக்களத்தில் இறக்கும் வியாபார நுட்பங்களுடன் புதிய புதிய இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றன தமிழக முதல்வரின் பேரன்கள் நடத்தும் திரைப்பட நிறுவனங்கள். படங்களின் வழியாகவும், அவைகளின் உதிரிப்பாகங்களான காமெடிக் காட்சிகள், பாடல்கள், திரைத் துணுக்குகள், திரைவரிசைகள் மூலம் தங்களது தொலைக்காட்சி அலை வரிசைகளின் சர்வதேசச் சந்தையையும் வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள் தெரிந்தவர்கள் அந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள். உலகமயச் சூழலில் நவீன வியாபாரத்தை எவ்வாறு நடத்த வேண்டும் எனக் கண்டறிந்துள்ள அந்நிறுவனங்களுக்கு, மனிதர்களின் மூர்க்கக் குணத்தையும் மென் உணர்வுகளையும் சேவல் சண்டையின் பின்னணியில் சொல்லும் ‘ஆடுகள’த்திற்கும், வேலைக்காக வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் குவார்ட்டர் கட்டிங் அடித்துவிட்டுச் செல்ல ஆளாய்ப் பறக்கும் ‘வ’ படத்திற்கும் வேறுபாடுகள் கிடையாது. வண்ணநிலவனின் ஒரு கவிதைத் தலைப்பு போல எல்லாம் விலைகுறித்தனவே. ஆம், திரைப்படம் வெறும் வியாபாரச் சரக்கு மட்டுமே.
-அ.ராமசாமி
Courtesy: உயிர்மை.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக