திங்கள், அக்டோபர் 26, 2009

'இலங்கை பிரச்சினையில் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' - கனிமொழி


"போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம். மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வரே உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு மேல் இலங்கை பிரச்னையில், ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை,' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார்.

இலங்கை சென்றுவந்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு உறுப்பினரான கனிமொழி, அங்குள்ள நிலவரம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைள் பற்றியும் அளித்த சிறப்பு பேட்டி:

செம்மொழித் தமிழ் மாநாடு உட்பட, எல்லாவற்றுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடும் முதல்வர், இலங்கை பயணத்துக்கு மட்டும், கூட்டணியோடு சுருக்கிக்கொண்டது ஏன்?

இலங்கைத் தமிழர் பிரச்னையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் உட்பட, தொடர்ந்து முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும், இது முதல்வருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. அவர் நேரில் செல்ல இயலாத நிலை என்பதால், அவர் சார்பில், மத்திய அரசின் அனுமதியோடு கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் சென்றோம். இதில், அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க., இருக்கும் நிலையில், அனைவரையும் அழைத்திருந்தால், இந்த விமர்சனங்களையும் தவிர்த்திருக்கலாமே!

அரசியலில் விமர்சனம் என்பது, பல நேரங்களில் நியாயத்துக்கு அப்பாற்பட்டதாகத் தான் இருந்திருக்கிறது. தங்களையும் அழைத்திருக்க வேண்டும் எனக் கருதும் கட்சிகள், இப்படி ஒரு பேச்சு எழுந்தபோதே, தாங்களாகவே முன்வந்து இருக்கலாம் அல்லது, அவர்களாகவே போவதற்கான முயற்சி எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல், வெறுமனே விமர்சனம் செய்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களையும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

எங்கு இருந்தாலும், முகாம் என்பது முகாம் தான். இங்கு இருப்பவை, இன்னொரு நாட்டில் புகலிடம் தேடி வந்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள். ஆனால், தமது சொந்த நாட்டிலேயே, எந்த மண்ணை நம்பி வாழ்ந்தார்களோ அங்கேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்படுவது, யாராலுமே நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்.இங்கு இருப்பவர்களும், ஒரு வரையறைக்குள் தான் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. அதிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத் தான், முதல்வர் கருணாநிதி, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

வசதி வாய்ப்புகளின் அடிப்படையில், முகாம்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

முகாம்கள், மனிதர்கள் வாழும் இடம் இல்லை என்பதே என் கருத்து. ஐந்து நட்சத்திர ஓட்டலையே முகாமாக மாற்றினாலும், அது முகாம் தான். முதல்வர் சொன்னது போல, தங்கக் கூண்டாக இருந்தாலும், அடைபட்டுக் கிடப்பது வேதனை தானே!அதற்காக, முகாம்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் மாதிரி இருப்பதாகச் சொல்லவில்லை. முகாமுக்கே இருக்கக் கூடிய பிரச்னைகள் அங்கு இருக்கின்றன. அதை மறுக்கவே முடியாது. அங்கிருக்கக்கூடிய சிலர் சொல்லலாம், "உங்கள் ஊர் முகாம்களை விட எங்கள் ஊர் முகாம் சிறப்பாகத் தான் இருக்கிறது' என்று. பிரச்னை அதில்லை. சொந்த நாட்டிலேயே அவர்கள் ஏன் அகதிகளாக இருக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் கண்ட பிறகும், தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று ராஜபக்ஷே அரசை எப்படி நம்புகிறீர்கள்?



தீர்வைக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் தானே இருக்கின்றனர்? அவர்களோடு தான் நாம் பேசியாக வேண்டும். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அதைத் தவிர நம்மிடம் வேறு வழி இல்லை.இதை அரசியலாக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், அவர்கள் கையில்தான் இருக்கிறது. அது ராஜபக்ஷேவாக இருந்தாலும் சரி; ரணில் விக்கிரமசிங்கேவாக இருந்தாலும் சரி. இலங்கை அரசாங்கத்தோடு தானே நாம் பேசியாக வேண்டும்!

வெறுமனே கோரிக்கை, வேண்டுகோள் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா?

என்ன பண்ணியிருக்க முடியும்; என்ன பண்ணியிருக்க முடியாது என்பதெல்லாம் கடந்துபோன விஷயங்கள். இதை அலச வேண்டிய காலகட்டம் இது இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்த பிறகு, இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துப் பேசி, அலசலாம்.இது அவசர நிலை. உடனடித் தேவை முதலுதவி. இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசுவது சரியல்ல. மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், ஒரு நாடு இன்னொரு நாட்டு உரிமையில் குறுக்கிடுவது எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி இருக்கிறது. இன்னொரு நாட்டுக்கு நெருக்கடி கொடுப்பது, ஒரு நிமிடத்தில் நடக்கக் கூடிய விஷயமில்லை.

ஏற்கனவே, அமைதிப்படையை அனுப்பிய அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறதே...



இப்போதைய காலகட்டத்தில், அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என நினைக்கிறேன். அது சரியான தீர்வாக முடியுமா என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இலங்கைக்கு சென்றுவந்த பிறகு, "ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்' என்கிறார் உங்கள் எம்.பி.,க்கள் குழு உறுப்பினரான திருமாவளவன்...


அது அவருடைய சொந்தக் கருத்து; நான் எதுவும் சொல்வதற்கில்லை.

"தமிழர்கள் ஒருகாலத்திலும் போலீசாக முடியாது' என ராஜபக்ஷே கூறியதாக சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கிறாரே...

ஒரு மாநிலம் என்ற அடிப்படையில், போலீஸ் அதிகாரத்தை தமிழர்கள் கையில் இப்போதைக்கு வழங்கத் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுவதாகத் தான் நானும் நினைக்கிறேன். ஆனால், அதுவும் காலம் செல்லச் செல்ல மாறும் என்பது என் நம்பிக்கை. அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றால், அதிகாரப் பகிர்வு என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

ஒரே கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என மூன்று கட்சிகளுக்கும், இந்த பிரச்னையின் அடிப்படையிலேயே முரண்பாடு இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

மூன்றுமே வெவ்வேறு கட்சிகள்; வெவ்வேறு கொள்கைகளைச் சார்ந்தவர்கள்; ஒரு விஷயத்தை மூன்று விதமாக அணுகக் கூடியவர்கள். கூட்டணி என்பதால், எல்லா விஷயத்திலும் ஒரே பார்வை இருக்க வேண்டும் என்பது சாத்தியமே இல்லை. மூன்று கட்சிகளுக்குள்ளும் உடன்பாடும் இருக்கிறது; முரண்பாடும் இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு தானே, கூட்டணி என்பதே அமைகிறது.

பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க.,வும் மத்திய அரசும் மிதமான போக்கைக் கைக்கொள்வதாக குற்றச்சாட்டு இருக்கிறதே...

இதற்கு மேல் ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. சர்வதேச பிரச்னையில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும்.போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம். மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வர் உட்பட அனைவரும் மாறி மாறி மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம்.முதல்வரே உண்ணாவிரதம் இருந்தார். அதன் பிறகு தானே, அப்பாவிகளைக் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தனர். இதற்கு மேல் என்ன பண்ண முடியும்? அமெரிக்கா போன்ற நாடுகளே, ஓரளவுக்கு மேல் என்ன நெருக்கடி கொடுக்க முடிந்தது?

எந்தப் பக்கம் சாய்வது என்ற தெளிவு இந்தியாவுக்கே இல்லாததால், உலக நாடுகளும் அடக்கி வாசித்தன என்ற கருத்து உள்ளதே!

தமிழர்களாக நாம் இப்போது செய்ய வேண்டிய விஷயம், இலங்கைத் தமிழர்கள் வாழ்வை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது தான். எது சரி, எது தவறு என ஆராய வேண்டியது அவசியம். அதற்கான காலகட்டம் வரும்போது தான் அதைச் செய்ய வேண்டும். அதற்கான காலம் இது இல்லை. "இது தான் இதன் பதில்' என தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

ஒட்டுமொத்தமாய், உங்கள் இலங்கைப் பயணத்தால் கண்ட பலன் என்ன?

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்பது தான் எங்கள் முதல் கோரிக்கை. அதை ஏற்று தான், முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதியளித்தனர். தற்போது வரை 50 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலான விஷயம். இதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் விடுவிக்கப்பட்டுவிடுவர் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்துள்ளது.இதோடு முடிந்துபோகிற விஷயமும் இது இல்லை. ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்பது தான் நம் முக்கியமான குறிக்கோள்.

தமிழர்கள் விடுவிக்கப்படுவதற்கு காலக்கெடு எதுவும் இருக்கிறதா?

இதுவரை 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளனர். மீதமுள்ளோரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

இதை எப்படி கண்காணிக்கிறீர்கள்?

அங்குள்ள தூதரகம் மூலமாகவும், செய்தியாளர்கள் மூலமாகவும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இலங்கைத் தமிழரின் மறுவாழ்வுப் பணிக்காக தி.மு.க., சார்பில் நிதிப் பங்களிக்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

முதல்வரின் வற்புறுத்தலின் அடிப்படையில் தான் மத்திய அரசு 500 கோடி ரூபாய் அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிறகு, இது செலவிடப்படும். அதையும் தாண்டி நிதித் தேவை இருக்குமானால், மாநில அரசு சார்பிலோ, கட்சி சார்பிலோ வழங்குவதில் முதல்வருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.இவ்வாறு கனிமொழி பதிலளித்தார்.

- நமது சிறப்பு நிருபர்
நன்றி: தினமலர், 25-10-09

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அதானே அம்மணி சொல்வது சரிதானே.
சுமங்கலி கேபிளை அரசுடைமை ஆக்க மத்திய அரசு முயற்சித்ததா?
அழகிரிக்கு எதிரான கருத்து கணிப்பை தினகரன் பிரசுரித்ததா?
மத்திய அமைச்சரவையில் கேட்ட அமைச்சரவையை தருவதற்கு பிரதமர் மறுத்தாரா?
இதுபோன்ற முக்கியமான வேலைகள் என்றால் முதலமைச்சர் நேரடியாக தலையிடுவார். இதிலிலெல்லாம் அவர் என்னதான் செய்யமுடியும். பாவம்!

Tamilan சொன்னது…

மிகவும் பொருள் பொதிந்த நிதர்சனமான உண்மை. இலங்கை பிரச்சினையை வைத்து பிழைப்பு நடத்தும் சில அறிவாளிகள் சிந்தித்து பார்க்க வேண்டிய வாதங்கள். நன்றி கனிமொழி அவர்களே.

கருத்துரையிடுக