ஞாயிறு, அக்டோபர் 18, 2009

போபஃர்ஸ் ஊழலும் சோனியா காந்தியும்

இந்திய அரசியலில் புயலாக வீசியது போபர்ஸ் பீரங்கி ஊழல்! 1989 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்ததும் இதே ஊழல் தான். அப்போது காங்கிரசுக்கு எதிராக ஊர் தோறும், ‘போபோர்ஸ் பீரங்கி’ உருவத்தை தோரணமாகக் கட்டி, பிரச்சாரம் செய்ததும் தி.மு.க. தான்! இப்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்து விட்டது.

ரூ.1437 கோடி ரூபாய்க்கு சுவீடன் நாட்டிடமிருந்து ராஜீவ் பிரதமராக இருந்தபோது பீரங்கிகளை வாங்கிய ஒப்பந்தத்தில் சோனியாவின் உறவினரும், இத்தாலி நாட்டுக்காரருமான குத்ரோச்சி, இடைத்தரகராக செயல்பட்டு ரூ.64 கோடியை ‘கமிஷனாக’ பெற்று (லஞ்சத்துக்கு மாற்றுப் பெயர்) அதை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இரு கற்பனைப் பெயர்களில் போட்டதாக குற்றச்சாட்டு. அந்த இருவரில் ஒருவர் ராஜீவ்காந்திதான் என்று கூறப்பட்டது.

இப்போது ‘சோனியாவின் பேரரசு’ நடந்து கொண்டிருக்கும்போது இத்தாலியின் குத்ரோச்சி காப்பாற்றப் பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உயிரோடுஇருப்பவர் இவர்தான். வழக்கு தொடரப்பட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் ஆட்சி மூடி மறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற சி.பி.அய். - ‘முதல் தகவல் அறிக்கையையே’ (எப்.அய்.ஆர்.) பதிவு செய்ய மறுத்தது. வி.பி.சிங் பிரதமரான பிறகே பதிவு செய்யப்பட்டது.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் அரசு வழக்கறிஞர் அருண்ஜெட்லி, பிரதமர் அலுவலக இணை செயலாளர் புரேலால், சி.பி.அய். இணை இயக்குனர் கே. மாதவன் ஆகியோ ரடங்கிய குழு அமைக்கப்பட்டு, இந்த மூவர் குழு தான் முழு வீச்சில் செயல்பட்டு, உண்மைகளைக் கண்டறிந்தது. வி.பி.சிங் ஆட்சியை ‘சந்திரசேகர் - சுப்ரமணியசாமி’ அணியோடு சேர்ந்து காங்கிரஸ் கவிழ்த்து, சந்திரசேகர் தலைமையில் ‘ராஜீ’வின் பினாமி ஆட்சியை நிறுவிய போது சட்ட அமைச்சரானார் சுப்ரமணியசாமி. ஆட்சியில் அமர வைத்த ‘விசுவாசத்துக்காக’ சுப்ரமணியசாமி போபோர்ஸ் விசாரணைக் குழுவை செயல்படவிடாது முடக்கிப் போட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையையே ரத்து செய்வதற்கு சுப்ரமணியசாமி, சட்ட அமைச்சர் என்ற முறையில் முயற்சித்தார். மத்திய அரசு உளவு அமைப்பான சி.பி.அய். தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையையே ரத்து செய்யுமாறு அதே மத்திய அரசு வழக்கறிஞரை வைத்தே வாதாட வைத்த அதிசயம் - சுப்ரமணியசாமி சட்ட அமைச்சராக இருந்தபோதுதான் நடந்தது.

அர்ஜென்டினா நாட்டில் குத்ரோச்சி கைது செய்யப்பட்டபோது அவரை, இந்தியாவுக்கு கொண்டு வராமல் காப்பாற்றியதும் காங்கிரஸ் ஆட்சி தான். சி.பி.அய். உரிய ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்ய வில்லை என்று, அர்ஜெண்டினா நீதிமன்றமே கூறியது. குத்ரோச்சி தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் லண்டன் வங்கியில் போட்டு வைத்திருந்த போபோர்ஸ் லஞ்சப் பணம் தொடர்பான கணக்குகளை சர்வதேச உளவு நிறுவனம் (இண்டர்போல்) அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தக் கணக்கு முடக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டில் எந்தக் காரணமும் இன்றி இந்த முடக்கத்தை காங்கிரஸ் ஆட்சிதான் நீக்கியது. காங்கிரசின் ஆதரவோடு நடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மலேசியாவில் இருந்த ஆட்சி குத்ரோச்சியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் ஆட்சிக்கு தந்த காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற்றார் சோனியா. இப்போது இத்தாலி குத்ரோச்சி சுதந்திரப் பறவையாகி விட்டார்.

போபோர்ஸ் ஊழலுக்கு எதிராக புலன் விசாரணை நடத்திய ‘இந்து’ போன்ற பார்ப்பன ஏடுகள் கூட இப்போது, மவுனம் சாதிக்கின்றன. கூட்டணி தர்மத்தால் ‘தி.மு.க.’வும் வாய் மூடிக் கொண்டது. சோனியாவை நேர்மையின் சின்னமாக இனியும் காங்கிரசார் புகழ் மாலை சூட்டப் போகிறார்களா? அதற்கான தகுதி அவருக்கு உண்டா? என்று கேட்கிறோம்.

தமிழ் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தை தமது அதிகார வலிமையால் முறைகேடாக நசுக்கிய சோனியா, இப்போது தமது இத்தாலி உறவுகளின் ஊழலை மறைப்பதற்கும் அதிகார முறைகேடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி: பெரியார் முழக்கம் அக்டோபர் 2009, கீற்று இணையதளம்

1 கருத்து:

ttpian சொன்னது…

காங்கிரசு தடை செய்யப்படவேண்டிய கட்சி:
மற்றபடி மஞ்சல் துண்டு காவடி எடுப்பதும் மாபெரும் குற்றம்!

கருத்துரையிடுக