செவ்வாய், அக்டோபர் 27, 2009

ஆலய அரசியலில் நுழைவு அவசியமா! (விவாதிப்போம் வாங்க)


எந்த ஓர் ஆலயத்திற்குள்ளும் தலித்துகள் நுழையக்கூடாது என்று சொல்வதைப்போன்ற காட்டுமிராண்டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. "ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எல்லாம் அதன் வடிவம்' என்ற மெஞ்ஞானத்தை அது பொய்யாக்கிவிடும்.

மதுரையில் வைத்தியநாத ஐயர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்துக்கும், 70 ஆண்டுகள் கழித்து தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும் ஆலய நுழைவுப் போராட்டத்துக்கும் நோக்கம் ஒன்றுதான் என்றாலும், மெல்லிய வேறுபாடு இருக்கிறது.

அப்போது இக்கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நமக்கான சுதந்திர அரசும் அன்று இல்லை. ஆனால் இப்போது அரசு நம்முடையது. கோயில்களைப் பொறுப்பேற்க இந்து அறநிலையத் துறை உள்ளது.

தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஆலயங்கள் எந்தவொன்றிலாவது தலித்துகள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று யாரும் புகார் சொல்ல முடியாது. சொல்லப்போனால், இக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் தலித்துகள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் தெருவுக்குத் தெரு இருக்கின்றன. ஊருக்கு ஊர் புதிய கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தும், கூழ்வார்த்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இக்கோயில்களிலும் எல்லாரும் வழிபடுகிறார்கள், யாரும் யாரையும் தடுத்துவிடுவதில்லை.

இந்நிலையில், ஏதோ ஒரு தனியார் அல்லது ஒரு சமூகத்தாருக்குச் சொந்தம் என்று சொல்லப்படும் கோயிலில் தலித்துகளை அனுமதிக்கவில்லை என்பதற்காக, ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, ஊடகங்கள் ஆதரவுடன், ஏதோ தமிழ்நாட்டில் எல்லா கோயில்களிலும் தலித்துகள் நுழைய முடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது கம்யூனிஸ்டுகள் நடத்தும் இப்போராட்டம்.

தனியாருக்குச் சொந்தமான அல்லது ஒரு சமூகத்துக்குச் சொந்தமான கோயில்களில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால், அத்தகைய கோயில்களை தமிழக இந்து அறநிலையத் துறை தன்பொறுப்பில் ஏற்று நடத்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைப்பதும் அதற்காக அரசை நிர்பந்திப்பதும் வேண்டுமானால் சரியான, நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும்.

வழிவழியாகத் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறிக்கொள்கிற சிலருடைய கோயில்களில் தலித்துகள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தால், அது பொது இடம் என்றில்லாத நிலையில் அரசு சட்டப்படியான முடிவுகள் எடுப்பதில் சிரமம் இருந்தாலும், ஒரு தலித் அங்கே வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் இருந்தால் அவரைக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை எடுக்கக் கோருவதும் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

அதைவிடுத்து, ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரில், அதிலும் கம்யூனிஸ்டுகள் ஈடுபடும்போது, இது அரசியல் நிறம் பெற்று, மாற்று சமூகத்தாரின் அரசியல் நிறங்களுடன் உரசுகிறது. இது வெறும் உள்ளூர் கோயில் பிரச்னை என்பதைவிட, இதை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வெற்றியாகப் பார்க்கும் நிலை உருவாவதால், எதிர்ப்புக் கிளம்புகிறது.

தற்போது அமைதி குலைந்திருக்கும் செட்டிபுலம், காங்கேயனூர் ஆகிய கிராமங்களில் , இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் அமைப்பினர் கையில் எடுத்ததாலேயே, அரசு அதிகாரிகளுடன் சமரசப் பேச்சில் உடன்பட்ட சமூகத்தவர், பிறகு எதிர்ப்புக்கொடியைத் தூக்கி நிற்கிறார்கள்.

வைத்தியநாத ஐயர் நடத்திய ஆலயநுழைவுப் போராட்டத்துக்கும் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதற்கும் உள்ள வேறுபாடு- இப்போராட்டம் அரசியல் சாயம் பெற்றுவிட்டது என்பதுதான்.

உடல்முழுதும் காணப்பட்ட புண்ணுக்காக மருத்துவரிடம் போய் மருந்து வாங்கி, முற்றிலும் குணமாகிவிட்ட நேரத்தில், ஏதோ ஓர் இடத்தில் இன்னும் ஆறாமல் சிறு புண் இருக்கும் என்றால், அதையும் மருத்துவரிடம் மீண்டும் காட்டுவதற்குப் பதிலாக, ஆவேசமாகச் சொறிந்து புண்ணாக்கி, மருந்தே வேலை செய்யவில்லை என்பதைப்போல தோற்றம் காட்டுதல் தேவைதானா?

போராட்டங்கள் நடத்த தமிழகத்தில் பிரச்னைகளா இல்லை!

தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடைபெறும் அநியாயக் கல்விக் கட்டணங்களுக்காக அதிரடிப் போராட்டம் நடத்தி, தனியார் கல்லூரிகளை முற்றுகையிட்டு தடியடி வாங்கி, ரத்தம் சிந்தி, கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு நிர்பந்தம் தருவார்கள் என்றால், தமிழ்நாடு முழுதும் கம்யூனிஸ்டுகளை ஒவ்வொரு குடும்பமும் கைதொழும்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, "மக்கள் உதவியாளர்'களாக அறிவித்து, மக்களுக்குச் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், ரத்துசெய்யப்பட்ட குடும்ப அட்டையை மீட்டுத்தருதல் ஆகிய பணிகளை லஞ்சமில்லாது கிடைக்கச் சமுதாய உதவி செய்தாலும் தமிழக மக்கள் எல்லாரும் கம்யூனிஸ்டுகளை கைதொழுவார்கள்.

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று புறப்பட்டாலும் கம்யூனிஸ்டுகளை தமிழகம் கைதொழும்.

வாழ்வாதாரத்துக்குப் போராட வேண்டிய கம்யூனிஸ்டுகள், வழிபாட்டுக்காகப் போராடுவது....

தலித் வாக்குகளுக்காக இப்போராட்டம் என்றால், அந்த வாக்குகளைத் தட்டிச் செல்ல தலித் அமைப்புகள் உள்ளன; நிச்சயம் கம்யூனிஸ்டுகளுக்கு அவை கிடைக்காது. இது மனித உரிமைப் போராட்டம் என்றால், இந்த ஆலய நுழைவுப் போராட்டம் காலாவதியான உத்தி. காலத்தோடு மட்டுமல்ல, கட்சிக்கும் பொருத்தமற்றது!

மதம் ஒரு அபின் அல்லவா!

"ஆலய' அரசியலில் நுழைவது அவசியமா?


நன்றி: தினமணி, 27-10-09

1 கருத்து:

சுடுவது சுகம் சொன்னது…

இந்த கட்டுரையின் கருத்தோடு "சுடுவது சுகம்" குழுவினர் உடன்படவில்லை.

ஆலய அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் ஈடுபடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

வாருங்கள் விவாதிப்போம்.

கருத்துரையிடுக