நமது கட்டுரையின் நோக்கம் வேறு. இன்று டார்வின் பிறந்த இருநூறாவது வருடமும், உயிரிகளின் தோற்றம் _ நூல் வெளிவந்த 150 வது வருடமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த புத்தகத்தில் என்னவெல்லாம் இருந்தது, அதன் அத்தியாய அமைப்பு அறிவியல் ஆய்வு நேர்த்தி... அதன்வழி அடையப்பட்ட முடிவுகள், அது ஏற்படுத்திய பேரதிர்வு..... இதெல்லாம் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. நமது நோக்கம் டார்வின் பீகிள் பயணம் மேற்கொண்ட... பிறகு புத்தகம் எழுதிய... ‘அந்த’ வயது அனுபவங்கள்.
தாய் சுசன்னா வெட்ஜ்வுட் டார்வினுக்கு எட்டுவயதாக இருக்கும்போது 1817ல், அதாவது பத்தாண்டுகளுக்குமுன் காலமாகி இருந்தார். தனது மூத்த சகோதரி கரோலின் சாராவால் வளர்க்கப்பட்ட டார்வின், அண்ணன் எராமஸ் டார்வினால் (தாத்தா பெயர் கொண்டவர்) ஒரு பயந்தாரி என வர்ணிக்கப்பட்டார். கூழாங்கற்கள் திரட்டுவது தோட்ட வேலை தவிர மற்றபடி தனித்து விளையாடும் சிறுவனாக இயற்கையிடம் விடப்பட்ட டார்வின் விரைவில் ‘திருத்தந்தை’ ஆக்கப்படுவது தவிர வேறு ‘உருப்படியான’ வேலை எதற்குமே லாயக்கு இல்லாத ‘தருதலை’யாக தன் தந்தையால் முன்மொழியப்பட்டார்.
அதற்கு காரணம் இருந்தது. நமது சராசரி பள்ளிக்கூட மாணவர்கள் போல பள்ளி _ பள்ளி விட்டால் வீடு, வீட்டுப்பாடம் பரீட்சை, ஐஸ்பாய் விளையாட்டு (டி.வி., பேல்பூரி, பீர், ரோட்டோர நூடுல்ஸ்... குல்ஃபி இதெல்லாம் அப்போது வந்திருக்கவில்லை) கேர்ல் பிரெண்டு என்று அவர் வாழவில்லை. ஆறேழு எலிக்குஞ்சுகளை தனது படுக்கைக்கு அடியில் போட்டு வளர்ப்பது... இரண்டு மூன்று வகை நாய்குட்டிகளை பிடித்து ஒன்றை கட்டிப்போட்டு ஒன்றை அவுத்துவிட்டு ‘வளர்த்து’ பார்ப்பது... விதவிதமான வண்டுகள் (டார்வின் 12 வயதில் 60 வகை வண்டுகள் 17 வகை நண்டுகள் உயிரோடு வீட்டில் வைத்திருந்தார்!) தனது பிரார்த்தனை சிலுவைக்கு அடியில் செத்த பாம்பு இரண்டு கிடப்பதை கண்ட கரோலின் சாரா அம்மையாரை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது. தந்தை தனது ‘கருங்காலி’ மகனை அழைத்து... ‘குடும்பத்து மானத்தையே கப்பலேத்த வந்த தருதலை’ என்று வாயார வைது தள்ளிய அந்த நாளில் மேலும் குடும்ப மானத்தை சீர்குலைத்தபடி அப்பா மருத்துவம் பார்க்க மறுத்த, ஆண்டவரின் தண்டனை பிறவிகளாக இரண்டு ‘கருப்பு’ அடிமைகளுக்கு அவருக்கு தெரியாமல் மருந்து மாத்திரைகளை ‘சுட்டு’ வைத்தியம் பார்த்து தருதலை பிள்ளையான டார்வின் மேலும் விட்டு விலக வேண்டிய "மைக்ரேன் தலைவலி" ஆனார்.
எடின்பரோவில் அவர் மேலும் மேலும் புழுபூச்சி வண்டுகளையே தேடிச்சென்றதோடு _ (அங்கே மருத்துவ படிப்புக்காக டார்வின் அனுப்பப்பட்டிருந்தார்) தனது வகுப்புகளை அவ்வப்போது கட் அடித்தும் அடுத்த புயலை வீட்டினை நோக்கி அனுப்பி வைத்தார். தன்னிடம் மருத்துவராவதற்கான குறைந்தபட்ச ஆர்வம்கூட இல்லாததை அவர் கண்டிருக்க வேண்டும். ‘இன்று ஒரு கடல் எலி கிடைத்தது. லீனஸ் ‘அப்ரோடியா அகுலிட்டா’ என பெயர் வைத்த உயிரி. மூன்று நாலு இன்ச் நீளம். ஆனால் அதற்கு நாலு உணர்வு மீசை உள்ளது. லீனஸ் கூறியது போல மூன்றல்ல’ என்கிற ரீதியில் அவரது மருத்துவக் கல்வியாக வீட்டுப்பாட நோட்டுகளில் எழுதப்பட்டு இருப்பதை படித்து மருத்துவப் பேராசிரியர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். டார்வினின் இயல்பான பயம் வைத்திய படிப்பிலிருந்தே அவரை ஓட ஓட விரட்டி அடித்திருக்க வேண்டும். தவளை, எலி முதல் மனிதர் வரை அறுத்து உள்ளே என்ன இருக்கிறது என ரத்தம் சொட்ட சொட்ட படிப்பது அவருக்கு பெரிய சித்திரவதையாக தோன்றியது. ஒரு குழந்தைக்கு எடின்பரோவில் _ அப்போது மயக்கமருந்து கிடையாது _ கதறகதற அறுவை ‘சிகிச்சை’ நடந்த அன்று ஊருக்கு ஓடிவந்து விட்டமகனை என்ன செய்வதென்று ராபர்ட் டார்வினுக்கு தெரியவில்லை.
பிறகு சட்டம், படிக்க சேர்க்கப்பட்டு அங்கே வகுப்பில் ஆமையோடு போய்... கல்லூரியின் ‘சாவு கிராக்கி’யாகி, ஒரு வழியாய் திருத்தந்தை ஆவதற்காக கேம்பிரிட்ஜின் கிறித்துவ கல்லூரி போன டார்வின் அங்கே மதபோதகராக ஆவதற்காக படித்த முதல் பாடம்... ‘ஆண்டவர் இந்த பூவுலகை கி.மு.4004, அக்டோபர் 23 அன்று காலை 9 மணிக்கு படைத்தார்’ என்பது!
எப்படியோ வைத்தியனாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக டார்வின் அதுபோன்ற பாடங்களை பயபக்தியோடு விழுந்து விழுந்து படித்தார். ‘பிறகு ஆறே நாட்களில் உலக ஐந்துக்கள் அனைத்தையும் ஆண்டவர் படைத்து அது முதல் இந்த உலகு மாறாதிருக்கிறது’ இந்த வருடத்தை கணித்து வெளியிட்டது. ஆர்மாக் எனும் ஊரின் ஆர்க்பிஷப் ஜேம்ஸ் யுஷர் 1701 முதல் எல்லா பைபிளிலும் அப்படித்தான் குறிக்கப்பட்டிருந்தது. தான் மருத்துவர் ஆவதை தவிர வேறு ‘எது வேண்டுமானாலும்’ ஆகும் பதட்டம் இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி அவரை ஏற்கவைத்தாலும் 1830 டைரிக் குறிப்புகளின் படி கூட அவர், ‘பூச்சிகளை பலவகைகளில் திரட்டவும், பறவைகளை வளர்க்கவும்,’ தனது விடுமுறைகளை பல்கலைகழக பாதிரிகல்வி சட்ட திட்டங்களுக்கு எதிராக) அழிக்கலானார் என்பதை அறிகிறோம்.
அவ்வகையில் வெறும் புழு பூச்சி சேகரிப்பதோடு டார்வினிடம் இன்னொரு விருப்பமான தேடலும் இருந்ததை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கூழாங்கற்கள்...! அதாவது இயற்கையியலோடு, புவியியலும்! ஜியாலஜியை பொருத்தவரை சார்லஸ் லைல், வில்லியம் டாலே ஆகியோரும், இயற்கையியலை பொருத்தவரை ஆடம் செட்விக் (பூச்சி நிபுணர்) மற்றும் அலெக்சாந்தர் வான் வரம்போல்ட்டுடனும் டார்வினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் கேம்பிரிட்ஜில் டார்வினுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்கள். டார்வின் புழுபூச்சி சேகரித்ததுபோல, அவர்கள் ‘டார்வின்’ மாதிரி ஆட்களை சேகரித்தார்கள்.
1831 கோடையின் போது டார்வினை போதகராக அர்ப்பணிக்கும் திருப்பணிக்கு நாள்குறிப்பதென்று ராபர்ட் டார்வின் முடிவு செய்துவிட்டிருந்தார். டார்வினுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது எதிர்காலம் குறித்து அவருக்கு எந்தத் தெளிவுமே இல்லாமல்தான் இருந்தது. அவரது இயல்பே, மிகவும் சாதுவான அதிகம் பேசாத, எந்த இடத்திலும் தன்னை முன்னிலை படுத்தி முந்திக் கொண்டு பேசாத, நடிக்கத் தெரியாத மொத்தத்தில் ‘இருக்கும் இடம் தெரியாத’ ஒரு மனிதர் என்பதாக இருந்தது. நல்லவேளை வைத்தியனாகவில்லை என்று நினைத்து மகிழ்ந்த டார்வின் ‘வேறு எதுவும்’ ஆகவும் தயாராக இருக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால் திடீரென்று வாழ்வின் அற்புதமான ஒரு வாய்ப்பு, கிராமத்திற்கே திரும்பிவிட்டிருந்த டார்வின் முன் வந்து கதவை தட்டியது. பத்து நாளில் திருப்பலி. ஆனால் இயற்கை தனது மர்ம புன்னகையோடு வேறு திட்டங்களை கொண்டதாக டார்வின் முன் காய் நகர்த்தியது. 1831ல் ஷ்ருஸ்பரியில் தனது வீட்டிற்கு பல்கலைகழகத்திலிருந்து திரும்பிய டார்வினுக்கு 22 வயது, பாதிரி ஆகப்போவதாக ஊரே பேசிக் கொண்டபோது திருட்டுத்தனமாக வாசித்தது: சர்ஜான் ஹெஷலின் “Prelimilinary Discourse on the study of Natural Philiosophy”. ஆனால் அவரிடம் தரப்படாமல் அவரது தந்தை மருத்துவ மேசை மீது அவருக்கு வந்த ஒரு வாய்ப்பு தரும் கடிதம் வழியே புதிய பாதையொன்றுக்கான வழி திறக்க இருந்தது. அக்கடிதம் ஹென்ஸ்லோவிலிருந்து வந்திருந்தது. டெரியா டெல் பியூகோ வரை சென்று மேற்கிந்திய தீவு வழியே நாடு திரும்பும் ஒரு கப்பல் பிரயாணத்தில் கலந்து கொள்ளும் அழைப்பு! கப்பலின் பெயர் எச்.எம்.எஸ். பீகிள். காப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய், ஏற்கனவே 1828ல் கனிமவளம் தேடிச்சென்று திரும்பி இருந்தார். தென் அமெரிக்காவின் கனிம வளங்களை வரையங்களுக்கு உட்படுத்துவது பீகிள் கப்பல் பிரயாணத்தின் நோக்கம்.
சரி. அது என்ன பீகிள் நமது கணபதி டிராவல்ஸ், இன்சா அல்லா ரோடுவேல்ஸ் மாதிரி ஒருபெயர்தான். வேறு ஒரு விஷேசமும் கிடையாது. ஆங்கிலேய அரசு கனிமவளங்களை கண்டறிய கப்பலை மீண்டும் அனுப்ப முடிவெடுத்தபோது 1831ல் ஃபிட்ஸ்ராய்க்கு வயது 21. அந்த இளம் காப்டனுக்கு கப்பல் சிப்பந்திகளோடு சாதாரண ஒருவராக பழக முடியவில்லை. படித்த கனவான, ஜியாலஜி இயற்கைகல்வி படித்த கனவான் உணவு மேசையில் பேசிக் கொண்டிருக்க ஓர் இணையாக தேவைப்பட்டால் ஆடம் செட்விக்கும், வான்ஹம்போல்ட்டும் டார்வினை அனுப்ப சிபாரிசு செய்தார்கள். டார்வினின் தந்தையை ஒப்புக்க வைப்பது மிக கடினமாக இருந்தது. ‘இரண்டே வருடத்தில் வந்து விடுவேன்.... வந்ததும் பாதிரி ஆவதுதான் முதல் வேலை... அப்பா’ இந்த ஒரு பொய் சத்தியம் இல்லையேல் உலகின் இயற்கையியல் வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும். எப்படியோ மானத்தை கப்பலேற்றிய பிள்ளையே கப்பல் ஏறியது.
‘எப்போதும் என்னோடு கடல் பிரயாணத்திற்கு வருபவர் வராததால் உங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது’ என்றபடி மணிக்கணக்கில் வெட்டிபேச்சு காப்டனை டார்வினுக்கு பிடிக்காததற்கு இன்னொரு காரணம் இருந்தது. சின்ன கப்பல் காபினில் இருவருமாக தங்க நேர்ந்தது... ஒவ்வொரு தீவிலிருந்தும் டார்வின் பிடித்து வந்த ஹ§க்கோ, புடுக்கி, டிக்கிட்டா... டாக்குமொடா என வகைவகையான பறவைகள பாலூட்டு இன மீன்.... பெரிய குழாய் மூக்கு கொண்ட குட்டி பன்றி என வைக்க இடம் இல்லாதது மட்டுமல்ல... அந்த ஆள் காப்டன் போட்ட கூச்சல் பெரிய அவஸ்தையாக இருந்தது.
ஃபிட்ஸ்ராயின் ஒரே பொழுதுபோக்கு பைபிள் முறையிலான உலக படைப்பிற்கு ஆதாரங்கள் தேடுதல். டார்வின் பாதிரியாக ஆவதற்கு கற்ற கல்வியால் அவர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான எண்ணம் கப்பல் பிரயாணத்தின் ஊடாக ஏழு தீவுகள் கடந்து ஓர் ஆண்டு முடிந்த கையோடு ஃபிட்ஸ்ராயிடமிருந்து விடைபெற்றிருந்தது. பெரும்பாலும் டார்வின் தானாக வாயை திறக்க மாட்டார் என்பதால் ...... பிழைத்தது, இயற்கையியலும் தான்.
1831 முதல் 1836 வரை ஐந்தாண்டுகள் மற்றும் இரண்டு நாள் சரியாக பயணித்த டார்வின் அப்போது தான் திரட்டிய பல நேரடி களப் பொருட்களை விலங்கு மாதிரிகள், தான் கண்டுநேரடி அச்செடுத்த புதை வடிவங்கள், சந்தித்த மனித இனங்கள் யாவற்றையும் கொண்டு உலகச் சிந்தனை போக்கையே மாற்றி அமைத்தார். உதாரணமாக காலபாக்கஸ் தீவில் பின்ச் பறவைகளை ஆய்வு செய்த அவர் தீவு தீவாக சென்றபோது ஒரு தீவில் அப்பறவையிடம் கடலையை கொத்திக்கொரிக்க பட்டமூக்கு அலகையும் அடுத்த தீவில் எலி தின்ன கூர்மூக்கு அலகையும் அதற்கு அடுத்த தீவில் புழுவை உண்ண வளைந்த மூக்கு அலகையும் கொண்டவையாக இருந்தன. ‘அப்பறவைகளை ஒரே மாதிரியாக இயற்கை உருவாக்கி இருந்தும் அவை தங்களது உணவு தேவைக்கு ஏற்ப உண்ணும் மூக்கை படைத்துக் கொண்டன’ எனும் சரியான முடிவுக்கு டார்வின் வந்தார். இயற்கை ஒரே நாளில் (அல்லது ஆறு நாளில்) படைக்கப்பட்டிருக்க முடியாது. அது படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனது அந்தப் பயணத்தின் போது டார்வின் பரிணாமத்தத்துவம் எதையும் முன்மொழியவில்லை. அப்போது அவர் குரங்கிலிருந்து வந்தவனே மனிதனாவான் என்று முடிவுக்கு வரவும் இல்லை. கிட்டத்தட்ட 17,000 கடல் மற்றும் நில உயிர் மாதிரிகளுடன் கல்லாவோ, இக்குவிக், சான்டியாகோ, ஹாரன்வளைகுடா, ரியோடி ஜெனரோ டேவான்போர்ட், புயூனஸ் ஏரஸ், கனரிதீவுகள், புனிதவொலனா டவுன், குட்ஹோப் வளைகுடா, மொரிஷியஸ், கோகாஸ்தீவு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என சுற்றிய ஐந்தாண்டு பயணம் டார்வின் எனும் இயற்கை விஞ்ஞானியை அங்குலம் அங்குலமாக செதுக்கியது. எந்தத் தனிமனிதனுக்கும் அப்படி ஒரு பயண வாய்ப்பு அளப்பறிய கால அவகாசமும் கிடைத்தது இல்லை. அறிவியல் தனக்கு வராது... கணிதத்தில் அட்சம் கூட புரியாத தான் ஒரு விஞ்ஞானியா என ஒருவித சுய தாழ்வு மதிப்பீடு டார்வினை மழுங்கடித்து இருந்தபோதிலும் இயற்கையை அருகே சென்று உற்றுநோக்குவதிலும் முடிவுகளுக்கு உட்படுத்துவதிலும் தேர்ந்த விஞ்ஞானியாக அவர் மிளிரவே செய்தார்.
நியூசிலாந்தின் காவிட்டி இன மனிதர்களையும் ஆஸ்திரேலியவின் அபோரிஜின் இனஆதி மனிதனையும் ஆப்பிரிக்க காடுகளின் கருப்பின புராதன மனிதனையும் ஒப்பிட்டு சமூக, கலாசார வாழ்வின் வளர்ச்சி நிலையை முதலில் விளங்கிக் கொள்ள டார்வினால் முடிந்தது என்றால் அது அந்தப் பயணத்தின் வெற்றி என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். அவர்கள் குறித்த மொத்த குறிப்புகளையும் எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிய டார்வின் என்ன செய்தார் என்பதுதான் சுவாரசியமான கட்டமாகும்.
1842 (அதாவது பீகிள் பயணம் முடிந்த ஐந்தாண்டு கழித்து) டார்வின் தன் பீகிள் குறிப்புகளை எடுத்து மறுபதிவாக பொறுமையாக ஒரு மாதிரிபடிவம் ஏற்படுத்தி உலகின் முதல் உயிரிமரத்தை (TREE OF LIFE) வரைந்து பூனை, யானை, குதிரை என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மூதாதை இன விலங்கிலிருந்து வந்ததை தனது புரிதலுக்கு உட்படுத்தி நிச்சயப்படுத்திக் கொண்டு 230 பக்க கட்டுரை ‘சுருக்கம்’ ஒன்றை எழுதினார். அதை என்ன செய்தார்? பரிணாம தத்துவமான அந்தக் கண்டுபிடிப்பு அடங்கிய அரிய பொக்கிஷயத்தை தனது எழுது மேசை டிராயரில் போட்டு மூடினார்! அடுத்த பத்தாண்டுகளுக்கு எடுக்கவில்லை. அந்தப் பத்தாண்டுகள் என்ன செய்தார்?
1. திருமணம் செய்து கொண்டு பத்துபிள்ளை பெற்றார்
2. மண்புழு விவசாயியின் நண்பன் என்பதை நிரூபித்தார்.
3. மனித மனம் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதினார்.
4. விதவிதமாக உடல் உபாதைகளுக்கு ஆளாகி விதவிதமான மருந்து வைத்தியம் பார்த்துக் கொண்டார்.
5. பென்சுகா எனும் கருவண்டு கடித்தால் டெங்கு காய்ச்சல் வரும் என்று கண்டுபிடித்தார்.
6. தாவரங்கள் தன்னை தானே சேர்ந்து எப்படி அபிவிருத்தி செய்கின்றன என்பதை ஆராய்ந்தார்.
7. நண்பர்கள் உயிரியலாளர்கள் பலருக்கு தனது பீகிள் பயணத் திரட்டுகளில் சிலதை அனுப்பிக் கொண்டிருந்தார்.
8. ஏராளமான பக்கங்கள் நலம் விசாரிப்பு கடிதங்கள் பலருக்கு எழுதினார்.
9. தனது குழந்தைகள் மற்றும் மனைவியோடு தேவாலய திருப்பணிகள் செய்த கொண்டிருந்தார்.
10. தனக்கு மூதாதை வழி வந்த சொத்து அனுபவித்து ஒன்றிரண்டு வருடம் சும்மாவும் இருந்தார்.
ஆனால் தன் கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. அது வெளியானால் என்னமாதிரி புயல் கிளம்பும் என்று அவருக்கு தெரியும். பொதுவாகவே சாதுவாக இருந்துவிடும் இயல்வு அப்புயலை எதிர்கொள்ள அவரை தயங்க வைத்த படியே இருந்தது. 1858 இந்த நிலைமை முற்றிலும் மாறியது. ஆனால் இதேபோன்ற நிலைமை நியூட்டனுக்கும் இருந்தது. ஈர்ப்பு வகையிலிருந்து இயக்க விதிவரை யாவற்றையும் தான் தன் மட்டில் அறிந்து 18 வருடம் வெளியிடாத அமைதி காத்து வானவியலாளர் ஹபுல் எதேச்சையாக ஓர் உரையாடல் மூலம் அறிந்து நெருக்குதல் தந்ததால் தான் பிரின்சியா மாதமாட்டிக்காவை நியூட்டன் எழுதினார்.
டார்வின் விஷயத்தில் அதை தூண்டியது, ஆல்பிரட் ரஸல் வாலஸ். வாலஸ் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் அதே இயற்கை தேர்வு _ பரிணாம வளர்ச்சி ஆகிய விஷயங்களை அடைந்திருந்தார். டார்வினுக்கு அது குறித்து (டார்வின் அதை கண்டு பிடித்திருப்பது தெரியாமல்) 1858ல் கடிதமாக எழுதிட டார்வின் முழித்துக் கொண்டார். ஆனால் வழக்கம்போல அவருக்கு என்ன செய்வது என்பதில் மிகுந்த தயக்கம். வாலஸின் கண்டுபிடிப்பு வெறும் அனுமானம். தனது கண்டுபிடிப்போ பீகிள் பயண உழைப்பின் நேரடி ஆதாரம். டார்வினின் நெருங்கிய நண்பர்களான சார்லஸ் லையல் மற்றும் ஜோசப் ஹ§க்கர் போன்றோர் முதலில் விஷயத்தை அளிக்கிறார்கள். பிறகு டார்வின் _ வாலஸ் இருவரின் கண்டுபிடிப்பாக அதை 1858 ஜூலை 1 அன்று லீனியன் கல்வியக கூட்டத்தில் வெளியிட முடிவும் செய்தார்கள். ஆனால் அன்றைய தினம் டார்வினின் கடைகுட்டி சார்லஸ் ஸ்கார்லட் காய்ச்சலுக்கு பலியாகிட, தனது கண்டுபிடிப்பு வெளியான நாளில் டார்வின் தனது மகனின் இறுதி சடங்கில் இருந்தார்.
வாலஸ் தனது கண்டுபிடிப்பை உரிமை கோராமல் டார்வினின் நேரடி ஆதாரங்களுக்கு விட்டு கொடுத்தது போல இன்று நடக்க சாத்தியமே இல்லை. டார்வினியம் என்றே அது அழைக்கப்பட்டது. வாலஸ்ஸ§ அதை அப்படி அழைத்தது ஒற்றை அறிவியல் குரலாக அதை ஒலிக்க வைத்தது. தனது 230 பக்கக் கட்டுரை சுருக்கத்தை டார்வின் அடுத்த ஆறு மாதங்களில் முழு புத்தகமாக எழுதினார். ஆனால் அது சுவாரசியமற்ற தலைப்பாக இருந்தது. On the origin of species by, mean of Natural Selection , or the preservation of favoured races in the struggle of Life என்று ஒரு பாரா அளவு தலைப்பை பார்த்ததும் ஏழெட்டு புத்தக நிறுவனங்கள் ஜகா வாங்கின. அதற்கு பதில் புறாக்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி உடனடி விற்பனைக்கு உதவுமாறு குவார்டர்லி ரிவ்யூவின் விட்வால் எல்வின் டார்வினை வேண்டினர் (Everyone is interested in Pigeons!)
புத்தக தலைப்பை டார்வின் ஓரளவு குறைத்து On the origin of species by, mean of Natural Selection என்று வைத்தபோது அவரது பதிப்பாளர் ஜான்முர்ரே 500 பிரதி வெளியிடும் தன் திட்டத்தை 1200 பிரதி என்று விரிவாக்கி 15 சில்லிங் விலை நிர்ணயித்தார். மூன்னூறு பிரதிகள் டார்வின் நண்பர் குழுவுக்கு ஓசியில் கொடுத்து முர்ரேவின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டது வேறு விஷயம். ஆனால் இன்றுவரை ‘உயிரிகளின் தோற்றம் _ இயற்கையின் சுயத்தேர்வு’ புத்தகம் அச்சிலிருந்து விடைபெறவே இல்லை.
உலகெங்கும் வீசியது டார்வினியம் எனும் சுனாமி. அறிவியல் முதல் அரசியல் வரை, மத சம்பிரதாயங்கள் முதல் உரிமைப் போராட்டங்கள் வரை அது உலுக்காத ஒரு விஷயம் பாக்கி இல்லை. ஆனால் அந்த புத்தகத்தில் டார்வின் ‘குரங்கிலிருந்து வந்தவனே மனிதன்’ என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. அது சம்பந்தமாக அதை தவிர மீதி எல்லாம் குறிப்பிட்டிருந்தார் என்பதே உண்மை. 1871ல் வெளியான THE DESCENT OF MAN எனும் தனது நூலில் டார்வின் தனது சொந்த உயிரினத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து விவரித்தார். எந்தப் பாறை வடிவ முன் உதாரணமும் இல்லாத அந்தக் கால கட்டத்திலேயே தைரியமாக மனித குரங்கு, மனிதனாக மாறியதை மிக நேர்த்தியாக விவரித்து போகிறார்.
‘உயிரிகளின் தோற்றம்’ புத்தகம் ஐரோப்பாவை ஒரு உலுக்கு உலுக்கி மதவாதிகள் முதல் பழைய சித்தாந்த அறிவியல்வாதிகள் வரை யாவரையும் நீக்கமற அக்னி பரிட்சைக்கு உட்படுத்தியது. ‘அதில் புதிதாய் இருப்பவை எல்லாம் பொய்... உண்மையாய் இருப்பது எல்லாம் ஏற்கெனவே உள்ளது தான்’ என்று ஆடம் செட்ஜ்விக் அறிவித்தார். ஒரு படி மேலே போய் ‘குரங்கை மனிதனாக்கி காட்டுமாறு’ சவால் விட்டார், பிரான்சில் வால்டேர். மதவாதிகள் புனித மனிதன் கொள்கையில் ஆட்டம் கண்டனர். ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ், டார்வினை முழுமையாய் உள்வாங்கிக் கொண்டு தனது மூலதனத்தை டார்வினுக்கு சமர்ப்பிக்க முன் வருகிறார். பல்வேறு இடங்களில் டார்வின் எதிர்ப்பு கருத்தரங்கங்களை மதவாதிகள் நடத்தினார்கள். பல்கலைக்கழகங்கள் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு விழி பிதுங்கி நின்றன. லண்டன் மியூசியம் நிகழ்வில் சண்டை உச்சத்திற்கு போய் கைகலப்பானபோது போப்பாண்டவர், டார்வின் ஆண்டவரின் முதல் எதிரி என்று வாட்டிகான் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இப்படிதான் கிளப்பிவிட்ட சர்ச்சைப்புயல் கண்டம் கண்டமாக மையம் கொண்டபோது டார்வின் விவாதக் கூட்டங்கள் எதிலுமே கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். அப்போது என்ன செய்தார்.
1. புவியியல் வரலாற்றில் மனிதனைத் தவிர பிற உயிரிகள் செய்த முக்கியப் பங்களிப்புகள் பற்றி ஆராய்ச்சி.
1882ல் தான் இறக்கும் தருவாயில் டார்வின் தனது உயிரிகளின் தோற்றம் நூல் 12 மொழிகளில் மொழி பெயர்ப்பானதையும் சில லட்சம் பிரதி விற்றதையும் ஆராய்ந்து, எப்படி அதை தாவர இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன என்பதை கண்டறிய அவர் சுமார் ஏழு லிட்டர் பறவை மலம் சேகரித்து வைத்திருந்ததும், ஒரு 240 பக்கத்திற்கு அந்த ஆய்வு குறித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்ததும் அவரது மரண படுக்கை அடியிலிருந்து கிடைத்தது.
பின்குறிப்புகள்:
1. டார்வின் பிறந்த தினமான 1809 பிப்ரவரி 12ஐ, உலகில் பிசாசு (Devil) பிறந்தநாள் என்று கருத்து மதவாதிகள் பகிரங்கமாக அறிவித்தார்கள். அதே நாளில் பிறந்த மற்றொரு பிசாசு ஆபிரஹாம் லிங்கன்
2. பீகிள் கப்பலின் காப்டன் ஃபிட் ஸ்ராய், டார்வின் எதிர்ப்பாளராகி லண்டன் மியூசிய (1860) டார்வின் எதிர்ப்புக் கருத்தரங்குகளில் சண்டை சச்சரவில் கோதாவில் இறங்கி ‘தி புக்.... தி புக்’ என்று பைபிளை காட்டியபடி இங்கும் அங்கும் ஓடியதை சிலர் பார்த்ததாக கடைசி பதிவு. அய்ந்தாண்டு கழித்து டார்வின் புயல் உச்சத்திலிருந்தபோது காப்டன் ஃபிட்ஸ்ராய் தற்கொலை செய்துகொண்டார்.
3. ஒரே ஒரு புத்தகம் பற்றி, அதன் ஆசிரியர் பற்றி இத்தனை எழுதப்பட்டது இதுவரை வரலாற்றில் இல்லை. சிறியதும் பெரியதுமாய் பரிணாமம் டார்வின் பற்றி 10 லட்சம் வெளிவந்துள்ளதாக Evolution.com சொல்கிறது. இக்கட்டுரைகள் ஒரு மில்லியனுக்கும் மேல்... இந்த கட்டுரையையும் சேர்த்து.
2 கருத்துகள்:
ஹ்ம்ம்ம்ம்.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
இன்னும் கொஞ்சம் சிறியதாய், எளிமையாய் இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
கருத்துரையிடுக