சனி, மே 09, 2009

காங்கிரஸ் அரசின் பொருளாதாரப் பரிசு : வாடகைத் தாயாக மாறும் படித்த இளம்பெண்கள்

புதிய பொருளாதாரம் - தாராளமயம் என்ற பெயர்களில் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் கொடூர முகம் காட்டத் தொடங்கியுள்ளன. இவற்றில் ஒன்றாக மெத்தப் படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி அண்மைப் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த இளம்பெண்கள் வாடகைத்தாயாக மாறும் அவலம் தொடங்கியுள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. பல்வேறு அதிர்ச்சிகளை உள்ளடக்கிய அந்தக் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது:
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் திடீரென்று சரியத் தொடங்கிய பொருளாதார நிலைமையின் காரணமாக வேலை இழந்த பலபேரில் ஒருவரான மரியம் தற்போது தன் மகப்பேறை உறுதி செய்யும் இரத்தப் பரிசோதனையின் முடிவுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார். எதற்காக தெரியுமா? குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதிக்கு தான் ஒரு வாடகைத் தாயாகி, தனது அந்த சேவைக்காக அந்த தம்பதியர் தரப்போகும் ரூபாய் இரண்டு இலட்சத்தைக் கொண்டு, ஒரு வருடத்துக்கு முன்னால் தான் வாங்கிய தனிநபர் கடனுக்குரிய மாதத் தவணைத் தொகையைச் செலுத்துவதற்காக! கடந்த மூன்று மாதங்களாக, வாடகைத்தாய் சேவை குறித்தும், கருமுட்டை தானம் செய்தல் குறித்தும் இளம் பெண்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மகளிர் மருத்துவமனைகளுக்கும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கருமுட்டை தானத்திற்கு ரூ15,000 லிருந்து ரூ20,000 வரையிலும் வாடகைத்தாய் சேவைக்கு ரூ3.5 லட்சம் வரையிலும் இந்த மையங்கள் வழங்குகின்றன.



“பி.பி.ஓ. மற்றும் ஐ.டி. துறைகளிலிருந்து வேலை இழந்த பெண்களில் நிறைய பேர் கரு முட்டை தானம் வழங்க முன்வருகின்றனர். தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவர்களது சமூக அந்தஸ்து மாறியிருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம். இப்போதெல்லாம் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் இது தொடர்பாக எங்களை அணுகுகிறார்கள்.” என்கிறார் செயற்கைக் கருத்தறிப்பு மையத்தின் தலைவர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ். ஊடகத்துறையில் பணிபுரிந்தவரும், ஒன்றரை வயதுக் குழந்தைக்குத் தாயாக இருப்பவருமான மரியம், “தற்போதைய பொருளாதார சரிவு மற்றும் நெருக்கடியின் ஊடாக தன் குடும்பத்தை நடத்திச் செல்ல வாடகைத் தாய் ஒன்றே மிகச் சிறந்த வாய்ப்பு. இது சட்டப்பூர்வமானது. இதில் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை” என்கிறார். “இவர் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதால் வெற்றிகரமாக இவரால் இந்தக் குழந்தையைப் பெற்றுத்தரமுடியும் என்று நம்புகிறோம்” என்கிறார் செயற்கைக் கருத்தரிப்பு நிபுணரும் ஜி.ஜி மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் கமலா செல்வராஜ். தற்போதைய இந்தப் போக்கு மருத்துவர்கள் இடையேயும் அக்கறையை உருவாக்கியுள்ளது.

மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் பிரியா செல்வராஜ், “வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்பட்டு வரும் பணமதிப்பில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட இது வழிவகுக்கும். இப்படித்தான் ஒரு பெண் ரூபாய் இரண்டு இலட்சத்தில் தொடங்கி ரூபாய் நான்கு இலட்சம் வரை தொகையை உயர்த்திச் சென்று வாடகைத்தாய் ஆகியிருக்கிறார்” என்கிறார்.

பி.பி.ஓ. மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வேலையிழந்த இளம் பெண்கள் வாடகைத் தாயாகவும், கருமுட்டை தானம் செய்பவர்களாகவும் அதிக அளவில் மாறி வருவதற்கான பொருளாதார காரணங்கள், அவர்களது ஆரோக்கியம் ஆகியவற்றுடனும் இது தொடர்பான வேறு காரணங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. கருமுட்டை தானம் செய்ய எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்றாலும், பதிவுறாத இந்தப் போக்கு டாக்டர் கீதா ஹரிப்ரியா போன்ற செயற்கைக் கருத்தரிப்பு நிபுணர்களைக் கவலையுறச் செய்துள்ளது.

திருமணம் ஆகாதவர்கள் உள்ளிட்ட நிறைய இளம் பெண்கள் கருமுட்டை தானம் செய்ய தாமாகவே முன்வருகிறார்கள். “என் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ரூபாய் 15,000 செலுத்த வேண்டியுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னால் அப்போதைய எனது சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடன் எனக்கு வழங்கப்பட்டது. இப்போது எனக்கு வேலை இல்லை. இ.எம்.ஐ. செலுத்துவதற்காக என் அலுவலகம் கொடுத்த இரண்டு மாதத் தொகையைப் பயன்படுத்தவும் எனக்கு விருப்பமில்லை. என் நண்பர்கள் எனக்கு இந்த வழியைக் கூறினார்கள் என்கிறார் ஒரு பெண். . “கருமுட்டை தானம்செய்ய விரும்புபவர்களுக்கான ஆலோசனையை நாம் எல்லோருமே தீவிரப்படுத்தவேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். ஆறு முறைகளுக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது ஒரு பெண்ணுக்கு நல்லதல்ல. அதே போல் ஒவ்வொரு முறை செய்யும் கருமுட்டை தானத்துக்கும் குறைந்தது ஆறு மாத இடைவெளி இருக்க வேண்டும். விந்தணு தானம் போல் இல்லாமல், கருமுட்டை தானத்தில் ஒரு பெண்ணுக்கு அதிக அளவிலான மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது.

கரு முட்டையை ஒரு பெண்ணிடத்திலிருந்து எடுக்கும்போது அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இப்படித் திரும்பத் திரும்ப அடிக்கடி செய்வது உடலின் பொது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பலமுறை கருமுட்டை தானம் செய்வதனால் ஓவேரியன் புற்றுநோய் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன” என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா. ஆங்கில ஏட்டிற்கு செவ்வி கொடுத்த இந்த மருத்துவர்களைத் தமிழ் ஏடுகளின் செய்தியாளர்கள் அணுகிய போது அது பற்றி பேச மறுத்து விட்டனர்.

உலக மயத்தாலும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியாலும் மக்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்று கூறினார்கள். உலகமயம், பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கே பயன்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ஒழுங்கும் எந்தக்கட்டுப்பாடுமின்றி மக்களைச் சூறையாட அனுமதிக்கப்பட்டன. அதன்விளைவு இப்போது வேலைவாய்ப்புகளை இழந்து தன் உடலை வாடகைக்கு விடும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். முதலாளியம் மனித உறவுகளை வெறும் காசு பணமாக மாற்றிவிட்டது என்று 19-ஆம் நூற்றாண்டில் காரல்மார்க்ஸ் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை!


-க.காந்திமதி

Courtesy: Tamilar Kannottam-April 2009, http://www.keetru.com/

2 கருத்துகள்:

முகமூடி சொன்னது…

சுடுவதிலும் சமூக அக்கறையையும், கலைநயத்தையும் காண்பிக்கும் நீங்கள் யார் நண்பா?

முகம் காட்ட ஏன் தயக்கம்?

பெயரில்லா சொன்னது…

காங்கிரஸ் கட்சி மட்டுமே புதிய பொருளாதார கொள்கையை திணித்தது போன்ற தவறான கருத்தை பரப்புவதை நிறுத்தவும்.

பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட், மாயாவதி, முலாயம் சிங், கருணாநிதி. ஜெயலலிதா, திருமாவளவன் உட்பட இந்த பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் யாரும் இல்லை, தமிழீழத்தின் பிரபாகரன் உட்பட.

கருத்துரையிடுக