வியாழன், மே 07, 2009

இலங்கையில் இனப்படுகொலை: இந்தியாவில் மவுனம் ஏன்? -அருந்ததிராய்

இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரம், அதைச் சூழ்ந்துள்ள மவுனத்தால்தான் சாத்தியப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அனைத்திந்திய ஊடகங்களில் சொல்லப்படவில்லை. பன்னாட்டு ஊடகங்களிலும் சொல்லப்படவில்லை. இது ஏன் அப்படி ஆனது, என்பது ஆழ்ந்த கவலைக்குரியது. அம்மண ஓவியத்தில் பாலுறுப்பை மறைக்க அதன் மீது ஓர் இலையை வரைந்து விடுவார்கள். அது போல் இலங்கை அரசு, சனநாயகத்தின் மிச்சமீதங்களையும் அழித்து, சொல்லுந்தரமற்ற குற்றங்களைத் தமிழ் மக்களுக்கு இழைப்பதை மறைக்க “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று ஓர் “இலையை”ப் போட்டு மூடுகிறது. வடிகட்டபட்டதில் இருந்து கசிந்து வரும் செய்திகள் இதைத்தான் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதியே என்ற கோட்பாட்டை இலங்கை அரசு கடைபிடிக்கிறது. தான் பயங்கரவாதி இல்லை என்பதை அந்த ஆணோ அல்லது அந்தப் பெண்ணோ மெய்ப்பிக்க வேண்டும். இந்தக் கோட்பாட்டின்படி, குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றின் மீது வெடிகுண்டு வீசுகிறது. அவற்றைப் போர்க்கள மண்டலமாக மாற்றுகிறது. இப்படிச் சிக்கிக் கொண்டவர்கள் இரண்டு லட்சம் பேர் என்று நம்பத் தகுந்த செய்திகள் கூறுகின்றன.

டாங்கிகள் மற்றும் விமானங்களுடன் இலங்கைப் படை முன்னேறுகிறது. இடம் பெயர்ந்த தமிழர்களைத் தங்க வைப்பதற்காக, மன்னார், வவுனியா மாவட்டங்களில் ‘நலக்கிராமங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசுச் செய்திகள் கூறுகின்றன. டெய்லி டெலிகிராப் (பிப்- 14,2009) செய்தியின்படி இந்தக் கிராமங்கள் “போரிலிரந்து தப்பி வரும் மக்களைக் கட்டாயமாகப் பிடித்து அடைத்து வைக்கும் நடுவங்களாகும்”. இவை மறைமுகமான இட்லரின் வதை முகாம்களா? (Concentration camps?)

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெய்லி டெலிகிராப்பில் கூறுகிறார்:“சில மாதங்களுக்கு முன், கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் அனைவரையும் அரசாங்கம் கணக்கெடுத்தது. அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று காரணம் சொன்னது; ஆனால் இந்தக் கணக்கெடுப்பு 1930களில் நாஜிகள் செய்தது போல வேறு நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளாக மாறக் கூடியவர்கள் என்று தமிழ்க் குடிமக்கள் அனைவர்க்கும் முத்திரை குத்தினர்.”

விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழிப்பது என்பது தனது திட்டத்தை அறிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இப்பொழுது குடிமக்களுக்கும் “பங்கரவாதிகளுக்கும்” எதிராகப் பேரழிவை ஏவி, இன அழிப்பு என்ற விளிம்பில் நிற்கிறது. ஐ.நா.மன்றத்தின் ஒரு மதிப்பீட்டின்படி ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலர் சொல்வது, நரகத்திலிருந்து வரும் நடுங்க வைக்கும் கனவு போல் உள்ளது.

நாம் பார்ப்பது அல்லது இலங்கையில் நடப்பது, அல்லது மிகத்திறமையாக மக்கள் கண்ணிலிருந்து மறைப்பது எதுவாக இருந்தாலும் அது கூச்ச நாச்சமற்ற, பகிரங்கமான இனப்போர் தான். தண்டனை விலக்கு இருப்பதால் இலங்கை அரசாங்கம் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய முடிகிறது. இவை, இலங்கைத் தமிழர்களுக்கெதிராக மாற்ற முடியாததாய் இறுகியுள்ள இனப்பகையை வெளிப்படுத்திவிட்டன. இந்த இனப்பகை தான் இலங்கையில் தமிழர்களை ஓரங்கட்டி, அந்நியப்படுத்தியுள்ளது.

இனவாதம் நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. சமூகப் புறக்கணிப்பு, பொருளியல் முற்றுகை, சித்திரவதை போன்றவை நீண்ட காலமாகத் தொடர்கின்றன. அமைதியான மற்றும் அகிம்சை வழியில் தொடங்கிய போராட்டம் மிருகத்தனமான உள்நாட்டுப் போராக மாறிப் போனதற்கான வேர் இந்த இனப்பகைமையில் இருக்pறது. ஏன் இந்த மவுனம்? வேறொரு நேர்காணலில் மங்கள சமரவீரா சொல்கிறார்: “சுதந்திரமான ஊடகம் என்பது இலங்கையில் கிட்டத்தட்ட இல்லை”. சமரவீரா மேலும் கொலைக்குழுக்கள் பற்றியும், வௌ;ளை வேன் கடத்தல்கள் பற்றியும் பேசுகிறார். இவை சமூகத்தை அச்சத்தில் உறைய வைத்துவிட்டன என்கிறார். மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள், இதழாளர்கள் உட்பட பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதழாளர்களின் வாயை அடைப்பதற்குப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமற் போதல், கொலைகள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையைப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு என்று பன்னாட்டு இதழாளர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்திற்கெதிரான இக்குற்றங்கள் புரிவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு பொருள் வகை மற்றும் தளவாட உதவிகள் வழங்குவதாக மன உளைச்சல் தரும் ஆனால் உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளன. இது உண்மையானால் அது அதிர்ச்சி தரும் கொடுமை! மற்ற அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலைமையைத் தீவிரப்படுத்த அல்லது தீங்கிழைக்க அவை என்ன செய்கின்றன?

தமிழ்நாட்டில் பத்து பேர்க்கு மேல் தீக்குளிக்கும் அளவிற்கு இலங்கைப் போர் உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது. பொதுமக்களின் சீற்றம், துயரம் போன்றவை பெரிதும் ஞாயமானவை. அவற்றில் சில தன்னல நோக்கம், அரசியல் தந்திரம் கொண்டவையாக இருக்கின்றன. இவை தேர்தல் சிக்கல் ஆகி உள்ளன. இலங்கைப் போர் பற்றிய செய்திகள் இந்தியாவின் இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை என்பது, வழக்கத்திற்கு மாறானது. ஏன் இந்த மவுனம்? இங்கு வௌ;ளை வேன் கடத்தல்கள் இல்லை. குறைந்தது இந்தச் சிக்கலுக்காகக் கடத்தல் இருக்காது. இலங்கை நடப்பின் பரிமானத்தைப் பார்க்கும் போது இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. இந்த மோதலில் பொறுப்பற்ற வகையில் இந்திய அரசு குட்டையைக் குழப்பியது;முதலில் ஒருபக்கம் சாய்ந்தது. பிறகு மறுபக்கம் சாய்ந்தது.

நான் உட்பட நம்மில் பலர் இன்னும் முன்பாகவே பேசியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நாம் பேசவில்லை; காரணம் சாதாரணமானது; இந்தப் போர் பற்றி போதிய செய்திகள் தெரியவில்லை. கொலைகள் தொடரும் போது, பத்தாயிரக்கணக்கான மக்கள் மனித வதை முகாம்களில் அடைக்கப்படும் போது, இரண்டு லட்சம் பேர் பட்டினியில் கிடக்கும் போது, இனப்படுகொலை காத்திருக்கும் போது ஒரு மாபெரும் நாட்டில் உணர்ச்சியற்ற மவுனம் நிலவுகிறது. இது மிகப்பெரிய மனிதத் துயரமாகும். உலகம் இதில் தலையிட வேண்டும்; இப்பொழுதே! காலம் கடந்து போகுமுன்!

(நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா, 30.03.09.)

Courtesy: Tamil Thesiya Thamizar Kannottam, www.keetru.com

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

அருந்ததிராயின் கருத்தை நாங்க சூடா இருக்கும்போதே சுகமா சுட்டுட்டோம்:)

கருத்துரையிடுக