பெரியார் சொற்களிலேயே கூற முயன்றால், இப்படியொரு பூனை என்றாவது குதித்தோடி வெளியே வரும் என்பதால்தான் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்றொரு கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் தலைவர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி மக்களுக்குப் பொதுவாக்கிப் பெருமைப்படும் தமிழக அரசு, பெரியார் விஷயத்தில் மட்டும் கண்டும் காணாமலேயே நடந்துகொண்டு வருகிறது. இத்தனைக்கும் பெரியாரின் பெயரைச் சொல்லித்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் தமிழகத்தை ஆண்டுவருகின்றன.
பெரியாரை முழுவதுமாகவும் முறையாகவும் பயிலக் கூடியதாகத் தற்போது நல்ல நூல்கள் எதுவும் இல்லை. 1970களின் தொடக்கத்தில் 2200_க்கும் அதிகமான பக்கங்களில் மூன்று தொகுதிகளாகச் சிந்தனையாளர் கழகத்தால் வெளியிடப்பட்ட `பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்' என்ற நூல் மட்டுமே குறிப்பிடத்தக்கது. தற்போது மிக அபூர்வமாகச் சிலரிடமே இருக்கும் இந்த நூலும் பார்க்கக் கிடைத்தாலே பெரிய விஷயம்.
1924 தொடக்கம் பெரியாரின் பேச்சும் எழுத்தும் அச்சில் வரத் தொடங்கியுள்ளன. நவசக்தி, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, குடி அரசு, விடுதலை, திராவிடன், ஜஸ்டிஸ், உண்மை, மாடர்ன் ரேஷனிஸ்ட், சண்டமாருதம், புதுவை முரசு, நகரதூதன், திராவிட நாடு, தனி அரசு, பொன்னி உள்பட பல இதழ்களில் அவருடைய எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன. ஏராளமான சிறுநூல்கள், சுமார் 80 ஆண்டுகளாக, அவர் இருந்தபோதும் இறந்தபிறகும் வந்திருக்கின்றன. ஆனால், இவற்றில் மிகக் குறைந்த அளவே பிறகு சிறந்த நூல்களாக உருப்பெற்றிருக்கின்றன.பெரியாருடைய கருத்துநிலைகளேகூட காலந்தோறும் புதுப்புது மாற்றம் கண்டுவந்திருக்கின்றன. ஆண்டு வரிசைப்படி இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, வாசிக்கக் கிடைத்தால் அவரை அனைவரும் செம்மையாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.
மகாத்மா காந்தியின் பேச்சுகளும் எழுத்துகளும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை நூறு தொகுதிகளாகக் குறைந்த விலையில் ஆங்கிலத்தில் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை வெளியிட்டிருக்கிறது. மராட்டிய அரசின் முயற்சியில் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் விவாதங்களும் ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் பிற மொழிகளிலும் பெயர்த்து வெளியிடப்படுகின்றன. இதன் 38 தொகுதிகள் தமிழிலேயே மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றைப் படித்தால், மகாத்மாவையும் அம்பேத்கரையும் படிக்க வேறெதையும் தேட வேண்டியதில்லை.
பெரியாருடைய பேச்சும் எழுத்தும் மட்டும் சுமார் எழுபத்தைந்தாயிரம் பக்கங்கள் இருக்கும். இவை ஏறத்தாழ நாற்பது இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் இவையெல்லாம், பெரியார் திடல் உள்பட எங்கெங்கோ விரவிக் கிடக்கின்றன என்று பகுத்தறிவாளர்கள் குறிப்பிடுகின்றனர். எழுநூற்றைம்பது பக்கங்கள் வீதம் நூறு தொகுதிகளில் முழுத் தொகுப்பையும் கொண்டுவருவதென பெரியார் மறைவுக்குப் பின், 1976_ல் தஞ்சையில் நடந்த பெரியார் சுயமரியாதை இயக்கப் பொன்விழாவின்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
1983-ல் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டது மட்டுமே பதினைந்தாயிரத்து எண்ணூறு பக்கங்கள். தொகுத்து 25 ஆண்டுகளாக `ஊறவைக்கப்பட்டிருக்கும்' இவற்றைத்தான் தற்போது முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் வெளிக்கொணரப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்துதான் திராவிடர் கழகத்தின் `விடுதலை' நாளிதழில் முதல் பாராவிலுள்ள அறிவிப்பு.
இரு ஆண்டுகளுக்கு முன், பெரியார் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்குவதுடன் கால வரிசைப்படித் தொகுத்துப் பதிப்பிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, `அப்படியென்றால் பெரியார், யார் உடைமை?' இன்னமுமா, நாட்டுடைமையாக்கப்படவில்லை?' என்ற வியப்பே பலரிடமும் மேலோங்கியது. தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அரசோ கடைசி வரையிலும் எதுவும் தெரியாதது போலவே மௌனம் காத்தது.
பெரியாரின் பேச்சையும் எழுத்தையும் நாட்டுடைமையாக்க தமிழக அரசு முன்வருமேயானால், பெரியாரால் உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் நிச்சயம் அதற்குத் தடையாக இருக்காது; கைமாறாகப் பெரும் பணத்தைக்கூட எதிர்பார்க்காது. சென்னையில் வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் பகுத்தறிவாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதத்தில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள். (பெரியார் எழுத்துகளை அரசுப் பயன்பாட்டிலும் கல்விக்கூடங்களிலும் கொண்டுவந்தது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். என்பது இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது.)
பெரியாரின் சொத்துகளுக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். அவருடைய கருத்துகளுக்குமா?
....................
`விடுதலை' ஏட்டில் வெளியான அறிவிப்பு குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?
கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகத் தலைவர்):
``வீரமணியின் இந்த அறிவிப்புக்குக் காரணம். வரும் செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் குடி அரசு இதழைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கிவிட்டோம். இதனால் எதிர்காலத்தில் தனக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்று அஞ்சித்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டவர் பெரியார். ஆனால், அவரைப் பற்றிச் சொல்லக்கூடிய மிகப் பெரிய புத்தகங்கள் இல்லை. எனவேதான், 1925-ம் ஆண்டில் இருந்து 49-ம் ஆண்டு வரை வெளிவந்த குடி அரசு இதழில், 38-ம் ஆண்டு வரையிலான இதழ்களைத் தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்நிலையில், வீரமணியின் அறிவிப்பு வினோதமாக உள்ளது. வழி வழியாக வந்த தனது சொத்துக்களை மக்களுக்காகக் கொடுத்தவர் பெரியார்.
73-ம் ஆண்டு பெரியார் இறக்கும் தறுவாயில் அவரிடம், `உங்களின் அடுத்த வாரிசு யார்?' என்று கேட்டதற்கு, `எனது கொள்கையும், கருத்தும்தான் வாரிசு' என்றார். குடி அரசு இதழில் வெளியான கருத்துக்களுக்கு `நாங்கள்தான் வாரிசு' என்று உரிமை கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் பெரியாரின் கருத்துக்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது லாப வெறி நோக்கத்தைத்தான் காட்டுகிறது. பெரியார் ஒருபோதும் தன்னுடைய கருத்துக்களுக்கு காப்புரிமை வைத்தது கிடையாது.'''
கு.ராமகிருட்டிணன்(பெரியார் தி.க பொதுச் செயலாளர்) :
"குடி அரசு இதழைத் தொகுத்து வெளியிட கடந்த 26 வருடங்களாக வீரமணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்த தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து ஒரு பிரதியைப் பெற்று நாங்கள் வெளியிடுகிறோம். வே.ஆனைமுத்து தொகுத்ததைத் தவிர, இதுவரை பெரியாரைப் பற்றி வெளிவந்தது எல்லாமே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்கள்தான். பெரியார் தன்னுடைய கருத்தை எப்பொழுதுமே பெட்டிக்குள் வைத்துப் பூட்டியது இல்லை. பெரியாரின் கருத்துக்கள் மக்களிடம் பரவலாகப் போய்விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் வீரமணி. எல்லாத் தலைவர்களின் நூல்களும் அரசுடைமையாக்கப்படும்போது, பெரியாரின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுவதைத் தடுத்தவர்தான் வீரமணி. தற்போது இவர் கொடுத்த அறிவிப்பால், நாளை பெரியாரின் சிறு புகைப்படத்தைக் கூட யாரும் வெளியிட முடியாத சூழல்தான் நிலவும். இவர் நீதிமன்றத்தில் தொடுக்கப் போகும் வழக்குக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.''
வழக்கறிஞர் குமாரதேவன்(பெரியார் தி.க ஆட்சிமன்ற உறுப்பினர்):
``25-ம் ஆண்டு குடி அரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகளுக்கு இவர்கள் காப்புரிமை எதையும் வாங்கவில்லை. 52_ம் ஆண்டு அறக்கட்டளையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில், 2001-ம் ஆண்டு சட்டப்படியாக வந்த அறிவுசார் சொத்துடைமைக்குள் இவை அடங்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? பெரியாரின் கொள்கையைப் பரப்ப இவருக்கு மட்டும் லைசென்ஸ் கொடுத்தது யார்? இவர்தான் ஒரே வரிசா? நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை.'''
பேராசிரியர் நெடுஞ்செழியன் (குடி அரசு இதழைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர்):
``தஞ்சை தோழர் ரத்தினகிரி தலைமையில் நாற்பது பேர் 1982-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் திருச்சி காஜாமலை பெரியார் மணியம்மை பள்ளி வளாகத்தில் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம் உழைத்து அவற்றைப் பிரதியெடுத்தோம். எழுதியவர்களுக்கான உணவுச் செலவை அந்தக் கல்வி வளாகத்தின் செயலாளரான புலவர் இமயவரம்பன் ஏற்றுக் கொண்டார். எழுதுபொருள், மை, கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாள் ஆகியவற்றுக்கான செலவை ரத்தினகிரி ஏற்றுக் கொண்டார். இதற்காகத் தனது பொதுவைப்பு நிதியில் இருந்து அவர் செலவு செய்தார். ஏறத்தாழ 15,835 பக்கங்கள் அப்படி எழுதப் பெற்றன. நண்பர் ரத்தினகிரியும், தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் என்ன நோக்கத்திற்காக இவ்வளவு பெரிய இழப்புகளை ஏற்றுக் கொண்டார்களோ, என்னைப் போன்றவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பாடுபட்டோமோ அந்த நோக்கங்கள் தடைபட்டுப் போய்விடக் கூடாது.''
தஞ்சை ரத்தினகிரி (குடி அரசைத் தொகுத்தவர்களில் ஒருவர்):
``பெரியாரின் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்த நூற்றாண்டுக்கு, உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான கருத்து. இன்றைக்கு நிலவும் அமைதியற்ற சூழலில் இந்தக் கருத்துக்கள் தேவை. சுதந்திரம் என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் அச்சத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும். அந்த அச்சத்தை நீக்கிய வாழ்வு என்பதுதான் பெரியாரியல். அதைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பதால்தான் எழுதினோம். அதற்கு வாய்ப்பு அமையவில்லை. இப்போது (கொளத்தூர்) மணி அதைச் செய்கிறார். அதற்குத்தான் வீரமணி அப்படிச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், மணி அதைக் கொண்டு வந்துவிடுவார் என்று நினைக்கிறேன், விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன். இது ஓர் அறிவுசார் இயக்கம். அறிவுசார் இயக்கத்தில் அறிவுக்குத் தடை இருக்கக்கூடாது. ஆனால், என்ன செய்வது? அந்த மாதிரி ஆகிவிட்டது. பெரியார் இயக்கத்திலேயே எத்தனை விதமான பிளவுகள்? உலக மனித சமூகம் ஒருமைப்பட வேண்டும் என நினைத்தவர் பெரியார். அதனால் அந்தப் பிளவுகள் நீங்கி, பெரியார் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.''
விடுதலையில் வெளியான அறிவிப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விடை தேடி பெரியார் திடலுக்குச் சென்றோம். நாம் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை நேரடியாகச் சந்தித்தோம். நமது கேள்விகளை முன் வைப்பதற்குள்ளாகவே, "பத்திரிகையில் கொடுத்த அறிவிப்பிலேயே எல்லாம் இருக்கிறது. நான் யாரையுமே அப்பாயின்மெண்ட் கொடுத்துவிட்டுத்தான் சந்திப்பது வழக்கம். இந்த அறிவிப்பைப் பொறுத்தவரையில் நான் எதையும் சொல்ல முடியாது. சட்டப்படியாகவே எல்லாம் நடக்கும். நீங்கள் கிளம்பலாம். வேறு எதுவும் பேச முடியாது'' என்றதோடு வழியனுப்பி வைத்தார்.
அங்கிருந்து கிளம்ப எத்தனிக்கையில் நமக்குத் தோன்றியது பெரியாரின் வாசகம் ஒன்று. `இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ? இந்தப் பணியை யாரும் செய்ய முன்வராததால், நான் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்'.
இதை பெரியார் தொண்டர்களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
-பாண்டியராஜன்
நன்றி: குமுதம் ரிப்போர்டர், 21-08-08
9 கருத்துகள்:
கீ.வீரமணியின் இச்செயல்கள் மிகவும் கண்டனத்துக்கு உறியது. பெரியாருக்கு இழைக்கும் வெட்கம் மற்றும் அவமானம். இந்த பிணம் தின்னி கழுகு வியாபார சூதாட்டத்தில் கலைஞரின் தி.மு.க வின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ! இவங்க எல்லாம் பகுத்தறிவை பற்றி நமக்கு பறை சாற்ற வந்துட்டாங்க! கிழிஞ்சுது போங்க! தமிழ் சமுதாயம் உருப்பட்ட மாதிரிதான்!
கடவுளே! கடவுளே!!
பெரியாரின் சொத்தை அனுபவிக்கும் வீரமணி, பெரியாரின் கருத்துகளை வேறுயாரும் பிரசுரிக்கக்கூடாது என்று தடுப்பது அயோக்கியத்தனமானது.
பெரியாரின் எழுத்துகளை தமிழர்கள் படித்துவிட்டால் தனது வேடம் கலைந்துவிடும் என்று செயல்படும் வீரமணியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
பெரியாரை அவமதிக்கும் செயலாகவே இதை காண்கிறேன்.
பார்ப்பனர்கள் எப்படி தங்களுடைய சாக்கடை வேதங்களையும் கூமுட்டை மந்திரங்களையும் அவைகளின் குட்டு வெளிப்பட்டுவிட கூடாது என்கிற காரணத்தினாலும், அதை வைத்து மற்றவர்கள் ஏதும் தொழில் செய்து தங்களுடன் போட்டி போட வந்துவிடக் கூடாது என்கிற வெட்டி வியாபர தந்திரத்திற்காகவும் இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் மூடி மறைத்து மக்களை ஏமாற்றி வந்தானரோ அதே வழியில்தான் இந்த வீரமணியும் செல்கிறார். பார்ப்பான்களுக்கும் வீரமணிக்கும் இப்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விட்டது. ஐய்யோ பாவம், பெரியாரும், அவரது சிந்தனைகளும் உழைப்பும் மீதமிருக்கும் உண்மையான பகுத்தறிவு சீடர்களும்.
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/
சில தரங்கெட்ட நாய்களை தவிர்ப்பதற்காக வேறு வழியின்றி மறுமொழி மட்டுறுத்தல் அமல்படுத்தப் படுகிறது.
கருத்துரையிடுக