வெள்ளி, ஆகஸ்ட் 15, 2008

இந்திய சுதந்திரத்தின் குறிக்கோள்!

ஆயிரம் ஆண்டுகளாக தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாடு, 1947 ஆகஸ்டு 15இல் சுதந்திர நாடாக வெளிப்பட்டது. ஆண்டுதோறும் அந்த நன்னாளை இந்திய வரலாற்றின் பொன்னாளாகக் கொண்டாடுகிறோம்.

விடுதலை விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களை, நாடு ஒளிபெற இருண்ட வெஞ்சிறைகளில் வீழ்ந்து கிடந்த மேலோர்களை, உருண்டு வரும் செக்கடிகளில் சுருண்டு மடிந்த நல்லோர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு தாய்நாடு திரும்பாமல், விடுதலை பெறும் நன்னாளைக் காண முடியாமலே அங்கேயே புதைகுழிகளில் அடங்கிவிட்ட தியாக சீலர்களை நாம் நினைவு கூர வேண்டும். வாழ்த்தி வணங்க வேண்டும்.

குதூகலத்துடன் கோலாகலமாக விடுதலை நாளைக் கொண்டாடும்பொழுது தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், எத்தகைய குறிக்கோள்களுக்காக சுதந்திரத்தைப் பெற தியாகிகள் பாடுபட்டார்களோ அந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தற்பொழுது நமக்கு இருக்கிறது.

அடிமைப்பட்ட நாடு விடுதலை பெறுவது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினம் விடுதலை பெற்ற நாடு மீண்டும் அடிமைப்படாது இருக்க பாடுபடுவதாகும்.

1947 ஆகஸ்டு 15ஆம் நாளன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மக்களுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்:

""எதிர்காலம் நம்மை அழைக்கிறது. நாம் எங்கு போகிறோம்; எப்படிப்பட்ட செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பவை குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை சுதந்திரம் தரும் வாய்ப்புகளை, பஞ்சத்திலும், அறியாமையிலும், நோய்நொடிகளிலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்குப் பயன்படுமாறு நாம் செயல்பட வேண்டும். வளமான, முற்போக்கான, ஜனநாயக முறையை அவர்களுக்கு நாம் தர வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் சமுதாய, பொருளாதார நீதிகள் முறையாகக் கிடைக்க நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.''

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த மாமனிதர் மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, 1948 ஜனவரி கடைசிவாரத்தில் பின்வருமாறு எழுதினார்:

""இந்தியாவின் அரசியல் விடுதலையைக் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மேற்கொண்டு பொருளாதார, சமுதாய நேர்மை உணர்வு ஆகியவற்றில் இந்திய மக்களுக்குத் தேவையான விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அரசியல் விடுதலையைவிட மேற்குறிப்பிட்டவைகளுக்காக நாம் நடத்த வேண்டிய போராட்டம் கடுமையானதாக இருக்கும். காங்கிரஸ் கட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் வீணான போராட்டங்களில் ஈடுபட்டால், திடீரென ஒரு நாள் அக்கட்சி ஒன்றுமே இல்லாமல் போய்விடும். எனக்கு போதிய நேரமும், உடல்நலமும் இருந்தால் இது குறித்து தேசத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நான் கலந்தாலோசிக்கப் போகிறேன்''.

அவர் எழுதிய இந்தக் குறிப்பு 1948 பிப்ரவரி 1 "ஹரிஜன்' இதழில் வெளிவந்தது. ஆனால் அதற்குள் காந்தியடிகள் மறைந்துவிட்டார்.

காந்தியார் மறைந்துவிட்ட பிறகு, அவர் சொல்லிய அறிவுரைகளும் மறைந்துவிட்டன. அதற்குப் பின் வந்த காங்கிரஸ் கட்சியினரும் அவற்றை மறந்துவிட்டனர்.

தற்பொழுது எழுந்துள்ள அரசியல் பிரச்னைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் முக்கிய காரணம் மகாத்மா அச்சப்பட்டபடி அதிகாரங்களைக் கைப்பற்றும் போராட்டம்தான் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. காந்தியார் வகுத்த அரசியல், தியாகத்தின் இருப்பிடமாக இருந்தது. நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்தது. தற்பொழுது அரசியல் என்றாலே சாதாரண மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

உலக அரங்கில் மற்ற பெரிய நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் முனைந்து திட்டமிடுகிறார்கள். ஆனால், இந்திய மக்களுக்கு ஒரு நல்லரசைத் தர கடந்த அறுபத்தோரு ஆண்டுகளில் தவறிவிட்டனர்.

சுதந்திர இந்தியாவில் போடப்பட்ட பல்வேறு சட்டங்கள், திட்டங்கள், தீர்மானங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவில் நின்றனவே தவிர, நாட்டு மக்களுக்கு நிலையான வளர்ச்சியைத் தரவில்லை. நாட்டின் வருமானமாகப் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பட்டியல்கள் தரப்படுகின்றன. அத்தகைய வளர்ச்சி லட்சாதிபதிகளை கோடிசுவரர்களாக, கோடிசுவரர்களை உலகக் கணிப்பில் பில்லியனர்களாக ஆக்கவே பயன்பட்டது. ஆனால் ஏழைகள் பரம ஏழைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். கிடைத்த வளர்ச்சி சரியான முறையில், நீதியான வகையில் பங்கிடப்படவில்லை.

இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக கிராம சுதந்திரம் இருக்க வேண்டும் என்று காந்தியார் வலியுறுத்தினார். கிராமப்புறத்தின் அடிப்படையாக இருப்பது விவசாயம். கடந்த 61 ஆண்டு இந்திய வளர்ச்சியைப் பார்த்தால் பயிர்த்தொழில் தான் மிகவும் பரிதாபகரமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைந்தபொழுது விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 70 சதவிகிதமாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத் துறைக்கான பங்கு 60 சதவிகிதமாகவும் இருந்தன. மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள 2007 08ஆம் ஆண்டு பொருளாதாரக் கணிப்பின்படி தற்பொழுது 52 சதவிகிதம் உள்ள விவசாய உழைப்பாளிகளுக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 18.5 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இந்த நிலைமையில் கடன்படாமல், தூக்குக்கயிற்றைத் தேடாமல் விவசாயி எப்படி இருப்பான்? கடன்படாத நிலைமைக்கு விவசாயத்தை வளர்த்துவிட, அரசாங்கம் கடந்த அறுபது ஆண்டுகளில் தவறிவிட்டது.

சுதந்திர இந்தியாவின் அடிப்படைச் சட்டத்தில் பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முழுமையான கட்டாய இலவசக் கல்வி தருவதாகக் கூறப்பட்டது. 61 ஆண்டுகள் கழித்தும் இன்றளவில்கூட அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தின் பற்று வரவுக் கணக்கு நன்றாக இல்லை. நாட்டின் வரவுக்கணக்கு ஆண்டுதோறும் அதிகமானால்கூட, எழுதிவைத்த "பத்து ஆண்டு'க் கணக்கை ஆளவந்தவர்கள் மறந்துவிட்டனர். கிராமப்புற மக்களைப் பற்றி பற்றற்ற கணக்குத்தான் இப்பொழுது இருக்கிறது.

2004இல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 6 சதவிகிதமும், சுகாதாரத் துறைக்கு 2 3 சதவிகிதமும் தரப்படும் என்று வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் கடந்த நான்காண்டு காலத்தில், மத்திய மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டங்களை மொத்தமாகப் பார்த்தால், நாட்டின் மொத்த வருமானத்தில் கல்வித்துறைக்கு 2.88 சதவிகிதத்துக்கு மேற்பட்டு எந்த ஆண்டிலும் செலவிடப்படவில்லை.

அதேபோல், சுகாதாரத் துறைக்கு 1.39 சதவிகிதத்துக்கு உட்பட்டுத்தான் செலவு விகிதம் வந்திருக்கிறது.

கல்வி அறிவு தரப்படாமல், உடல் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல், உழுபவனுக்கு உண்ண உணவில்லாமல், உழைப்பவனுக்கு வாழ்வு இல்லாமல், உலகில் பலவகைகளில் வளம் மிக்க நாடான இந்தியாவில் வறுமை மிக்க மக்கள் பெரும்பாலாக இருப்பதுதான் இன்றைய நிலைமை.

ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் சமுதாய நீதியையும் காப்பாற்ற, அதிகாரம் மிக்க நிர்வாகம் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கிய அரசியல் அமைப்பு மட்டும் போதாது. மக்களின் தொடர்ந்த கண்காணிப்புதான் நாட்டில் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நிலைபெறச் செய்யும். தனிப்பட்டு ஒவ்வொரு குடிமகனையும் வளர்த்திடப் போடப்படும் மனிதவள முதலீடுதான் நாட்டின் மிக முக்கிய முதலீடாக இருக்க வேண்டும்.

நாட்டின் மண் வளத்தை மக்களின் வாழ்க்கை வளமாக மாற்றிட ஏற்றப்பட்ட சுதந்திர தீபம் என்றும் அணையாது ஒளிவிட, சுதந்திர நன்னாளில் மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் குரலுக்கு நாடாளும் மகேசர்கள் அடிபணியும் காலம் பிறக்கும்!

-இரா. செழியன்
நன்றி: தினமணி, 14-08-08

1 கருத்து:

அகராதி சொன்னது…

மனதைத் தொடும் பதிவு.

61 ஆண்டு சுதந்திரத்தை மிகச்சரியாக தணிக்கை செய்துள்ளது.

கருத்துரையிடுக