செவ்வாய், ஏப்ரல் 15, 2008

தமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா? -ஞாநி

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது. கோரிக்கையைக் கைவிடுகறோம்; ஆனால் பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள அப்படியே இருக்கின்றன என்றார் அறிஞர் அண்ணா.


அவர் சொல்லி சுமார் அரை நூற்றாண்டு ஓடியபிறகும், பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன. ஆனால் திராவிட நாடு பிரிவினைக்கல்ல. தமிழ்நாடு பிரிவினைக்குத்தான். இதற்கான இன்னொரு சாட்சியம்தான் ஒகேனக்கல்.


ஐம்பதுகளிலிருந்தே பேசப்பட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொண்ணூறுகளில்தான் திட்ட வடிவம் பெற்றது. அப்போது கர்நாடக அரசு பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க, தன் பங்குக் காவிரி நீரை எடுக்கத் திட்டமிட்டபோது தமிழக அரசும் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து காவிரி நீரை ஒகேனக்கல் திட்டத்தில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சகச் செயலாளரும், இரு மாநில அரசுகளின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசியபோது ஏற்றுக் கொண்டனர்.


கர்நாடக அரசு பெங்களூரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி முடித்துவிட்டது. தமிழக அரசு பத்து வருடங்களாகியும் தன் திட்டத்தை நிறைவேற்றவில்லை. இப்போது கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலையில் கன்னட வெறியைத் தூண்டினால், ஓட்டு லாபம் கிடைக்கும் என்று பி.ஜே.பி.யின் எடியூரப்பாவும், காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜனதா தளத்தின் தேவெ கவுடாவும் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.


சுறுசுறுப்பாக 1998-ல் கருணாநிதியோ அல்லது 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. ஏன் செய்யவில்லை என்பதற்கு கருணாநிதி சார்பில் கனிமொழி ஜப்பான் மீது பழி போடுகிறார். இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கிக் கடன் தருவதாக இருந்தது. வாஜ்பாயி அரசு அணுகுண்டு சோதனை செய்ததில் ஜப்பான் கோபமடைந்து கடன் தர மறுத்து விட்டதாம். எனவே தாமதமாகிவிட்டதாம். இந்த பொய்ச்சாக்கை டாக்டர் ராமதாஸ் தன் புள்ளி விவரங்களால் உடைத்து நொறுக்கி விட்டார்.


திட்டத்துக்கு அன்று தேவைப்பட்ட தொகை வெறும் 576 கோடி ரூபாய்தான். பத்து வருட தாமதத்தினால் இப்போது செலவு மதிப்பீடு மூன்று மடங்கு உயர்ந்து 1334 கோடி தேவைப்படுகிறது! இலவச டி.வி. பெட்டி வழங்க வருடந்தோறும் 750 கோடி ரூபாய் வீதம் 2250 கோடி ஒதுக்கிய கருணாநிதிக்கு, ஏன் தர்மபுரி கிருஷ்ணகிரி வட்டாரத்து மக்கள் 40 லட்சம் பேரின் குடிநீர்த் தேவை, அதை விட முக்கியமானதாகப் படவில்லை? என்று ராமதாஸ் கேட்கிறார். இதற்கு எந்த தி.மு.க ஜால்ராவாலும் பதில் சொல்லமுடியாது.


வன்முறையைத் தவிர்ப்பதற்காக கர்நாடகத் தேர்தல் முடியும்வரை இப்போது திட்டத்தை தள்ளி வைப்பதாக கருணாநிதி அறிவித்ததும், தமிழக உரிமையையே கர்நாடகத்திடம் அடகு வைத்துவிட்டார் என்று அறிக்கை விடும் ஜெயலலிதாவுக்கு, இதைப் பற்றி வாயைத் திறக்கவே தார்மிக உரிமை இல்லை. தன் ஐந்து வருட ஆட்சியில் இந்தத் திட்டத்தை அவர் அரை அங்குலம் கூட முன் நகர்த்தவில்லை.

தமிழகத்துக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பக்கத்து மாநிலங்களுக்கும் இடையே 52 வருடங்களாகத் தண்ணீர், எல்லை இரண்டிலும் பிரச்னைகள் இருந்து வருகின்றன.


தமிழ்க் கடவுள் முருகனைக் கும்பிடுங்க. ஏன் ராகவேந்திரரைக் கும்பிடப்போறீங்க? என்று நடிகர் சத்யராஜ் உண்ணாவிரத நிகழ்ச்சியில் தமிழர்களிடம் எரிந்து விழுந்தார். ம.பொ.சி எனப்படும் தமிழறிஞர் ம.பொ.சிவஞானமும், அவரது தமிழரசுக் கழகமும் மட்டும் போராடாமல் இருந்திருந்தால், தமிழ்க் கடவுள் முருகன் ஆலயம் இருக்கும் திருத்தணி கூட இன்று தமிழ்நாட்டில் இராது. தமிழும் வேண்டும், இந்தியாவும் வேண்டும் என்று போராடியவர் என்பதால் பின்னாளில் அவரை தேசிய, திராவிட இயக்கங்கள் இரண்டுமே உரிய அளவுக்குக் கொண்டாடவில்லை. துக்ளக் சோ அவரை ஒரு கோமாளியாக சித்திரித்து அவமானப்படுத்தினார்.


இன்று ஆந்திராவிடம் இருக்கும் சித்தூர், திருப்பதி இரண்டுமே பழைய சென்னை ராஜதானியில் தனி மாவட்டங்களாகக் கூட இல்லை. வட ஆற்காடு ஜில்லாவுக்குள்ளேயே இருந்தவை. திருப்பதி வேங்கடவன் கோயிலில் உள்ள 38 கல்வெட்டுகளில் மூன்றில் மட்டுமே தெலுங்கு உள்ளது. தமிழில் இருப்பவை 24. தெலுங்கு மொழியில் இருக்கும் பழைய பக்தி இலக்கியங்களில் திருப்பதி பற்றி இல்லை. ஆனால் சிலப்பதிகாரமும் ஆழ்வார் பாசுரங்களும் திருப்பதி பற்றிப் பேசுகின்றன. திருப்பதி என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான்.


கேரளத்திடமிருந்து குமரி மாவட்டத்தைக் காப்பாற்ற, நேசமணி, சங்கரலிங்கனார் போன்றோர் இயக்கம் நடத்திப் போராட வேண்டியிருந்தது. தமிழக கேரள மொத்த எல்லை நீளம் 830 கிலோமீட்டர். இதில் 200 கி.மீ.தான் இதுவரை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகிக்காக என்னை மிரட்டுபவர்களுக்கு இன்னமும் கண்ணகிக் கோவில் பகுதியில் தொடர்ந்து அத்து மீறல்கள் செய்யும் கேரள அரசை மிரட்ட முடியவில்லை.


அதிக அளவில் காவிரி நீரை தங்களிடமே முடக்கிக் கொள்வதற்காக கர்நாடக அரசு பல வருடங்களாக அணைகள் கட்டி வருவது ஓரளவு நாம் அறிந்த செய்தி. நாம் அறியாதது பாலாற்றையும் அது இப்படி முடக்கியது என்பதுதான். தமிழக எல்லையிலிருந்து 23 மைல் தூரத்திலேயே 25 ஏரிகளைக் கட்டி பாலாற்று நீரை முடக்கினார்கள். இதைப் பற்றி 104 வருடங்களுக்கு முன்பே சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள் அக்கறை காட்டியதே இல்லை. நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் மட்டும்தான் கொஞ்சமாவது சத்தம் போடுகிறார்கள். அவர்களே ஈழத்துக்காக எழுப்பும் கூக்குரலில் இந்த உள்ளூர் பிரச்னைகள் எல்லாம் அமுங்கிப் போய்விடுகின்றன.


எல்லா கோளாறுகளுக்கும் அடிப்படை இந்திய அரசியல் சட்டம்தான். இந்தியாவில் இருக்கும் தமிழ், பஞ்சாபி, ஹிந்தி, மணிப்பூரி, அசாமி என்று பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக, ஒன்றியமாக இந்தியாவை உருவாக்காமல், ஒற்றை மத்திய அரசு, அதற்குக் கட்டுப்பட்ட மாநில அரசுகள் என்று உருவாக்கியதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது.


ஒகேனக்கல் பிரச்னைக்காக உச்ச நீதிமன்றம் போவேன் என்று சொல்லும் கிருஷ்ணாவும் தேவெகவுடாவும், காவிரி நீர் பிரச்னையில் இதே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காதவர்கள். ஆனால் கர்நாடகம் தனி நாடு; தமிழ்நாடு இன்னொரு தேசம் என்றிருந்தால், உலக நீதி மன்றம் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுத்தான் தீரவேண்டியிருக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் சிந்து மாநிலத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையே தீர்க்கமுடியாமலிருந்த தண்ணீர்ப் பிரச்னை, அவை பாகிஸ்தான், இந்தியா என்று இரு நாடுகளான உடன் தீர்க்கப்பட்டுவிட்டது !


எனவே பிரிவினைக்கான மன நிலையை இன்றைய அரசியல் அமைப்புச் சட்டமும், பல்வேறு மாநில அரசியல்வாதிகளும் ஆங்காங்கு உள்ள அந்தந்த மொழி வெறியர்களும்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பல தேசங்களை ஒன்றாகத் தைத்து அமைத்த தேசம் இந்தியா. அதன் தையல்கள் இப்போது பலவீனமாகிக் கொண்டிருக்கின்றன என்று உண்ணாவிரத நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து எச்சரித்தார். இந்தக் கவலை சுதந்திரத்துக்கு முன்பே தமிழக அறிஞர்களுக்கும், அன்றைய அரசியல் தலைவர்களுக்கும் இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சியாக சுதந்திர இந்தியா உருவாக்கப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.


யார் யார் தெரியுமா? தமிழறிஞர், தொழிற்சங்கத்தலைவர் திரு.வி.க, அரசியல் தலைவர்கள் காமராஜர், டாக்டர் சுப்பராயன், ஜீவானந்தம், செங்கல்வராயன், படைப்பாளிகளான பாரதிதாசன், வ.ரா, கல்கி, தமிழறிஞர் தெ.பொ.மீ, ம.பொ.சி முதலானோர்தான்.


இந்தப் பார்வையை காங்கிரஸ், திராவிட இயக்கம், பொது உடைமை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களுமே 1947-க்குப் பின் கைவிட்டுவிடாமல் இருந்திருந்தால், சோவியத் யூனியனுக்கு நிகரான இந்திய யூனியன் உருவாகியிருக்கும். ஜனநாயகத்துடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி என்பதால், அரசியல் வடிவத்தில் அது சோவியத் யூனியனை விட சிறப்பானதாகக் கூட இருந்திருக்கும். தேர்தல் முறையும் இப்போதைய சிம்பிள் மெஜாரிட்டி என்ற அபத்தம் இல்லாமல், விகிதாசாரப் பிரதிநிதித்துவமாகிற வாய்ப்பும் அதில் இருந்தது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. அந்தத் தவறை ஓரளவேனும் சரி செய்யத்தான் மொழிவாரி மாநிலங்கள் என்ற கொஞ்சம் கெட்டித் தையலை 1956_ல் போட்டார்கள். இப்போது அந்தத் தையல் நெகிழ்ந்துகொண்டிருக்கிறது. மறுக்கப்பட்ட தேசிய இனங்களின் கூட்டாட்சி என்ற தத்துவம்தான் இப்போது புது வடிவநீதில் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் மத்தியில் ஆட்சி அமைந்தாக வேண்டும் என்ற அரசியல் கட்டாயம் ஏற்பட்டிருப்பது அந்த அடையாளம்தான்.


கூட்டணி வழியாகக் கூட்டமைப்பை நோக்கிப் போகிறது இந்தியா. இந்த வாய்ப்பையும் தவறவிட்டால், பக்கத்தில் இருக்கிற குட்டி நாடான இலங்கையிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும்.


தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியின் 40 லட்சம் மக்கள்தான் உடனடியான நம் பரிதாபத்துக்குரியவர்கள். ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் இப்போது தொடங்கினால் கூட அவர்களுக்கு தினசரி 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்பது 2012ல்தான் கிடைக்குமாம். தினசரி 160 மில்லியன் லிட்டர் நீர் என்பது 2016ல்தான் கிடைக்குமாம். வாய்க்கும் கைக்கும் இடையில் எத்தனை தடுமாற்றம். Many a slip between the cup and the lip என்பது இதுதானா?.
-ஞாநி
நன்றி: குமுதம்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஜப்பான் ஒருவேளை இந்தியாவின் ஒரு மானிலமாக இருந்திருந்தால் அது இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியுமா?

பெயரில்லா சொன்னது…

1956ம் ஆண்டு இலங்கை நிலை இன்று தமிழகத்தில். அவ்வளவுதான்.

ஒரு ஈழத் தமிழன்

கருத்துரையிடுக