வியாழன், ஏப்ரல் 10, 2008

விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் -- சோலை

நமது மத்திய நிதியமைச்சர் சிறந்த பொருளாதார மேதை என்பது நாட்டு மக்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவர் நல்ல நகைச்சுவைப் பேச்சாளர் என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

'விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. நாட்டின் பொருளாதாரம் வளரும்போது விலைவாசியும் உயருகிறது. இதனை நாடாளுமன்றத்தில் நான் சொன்னால் அறுபது பேர் (இடதுசாரி உறுப்பினர்கள்) பிலுபிலு என்று பிடித்துக் கொள்வார்கள். அதனால்தான் மக்களிடம் சொல்கிறேன்!' என்றார்.

'ஊதியம் உயரும்போது விலைவாசியும் உயரத்தான் செய்யும்' என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதாவது, விலைவாசி உயர்விற்கு அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வும் ஒரு காரணம் என்கிறார். குப்பனுக்கும் சுப்பனுக்கும் யார் ஊதிய உயர்வு அளிப்பது? விலைவாசி அவர்களின் வயிற்றோடுதானே விளையாடுகிறது.

இந்தியாவை விட சீனத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அங்கே மட்டும் ஏன் விலைவாசி அந்த அளவிற்கு உயரவில்லை? ஒரு பொருளின் விலை நாடு முழுமையும் ஆண்டு முழுமையும் ஒரே விலையாக இருப்பதன் ரகசியம் என்ன?

விலைவாசிக்கான மத்திய அமைச்சர்கள் குழு உண்டு. அண்மையில் அந்தக் குழு டெல்லியில் கூடியது. நடுத்தர வர்க்கத்தையும் ஏழை எளிய மக்களையும் விலைவாசி உயர்வு பந்தாடுகிறது. எனவே, அதனைத் தடுத்து நிறுத்த என்ன வழி என்பதனை ஆராய்வதற்காக அந்தக் குழுக் கூட்டம் கூடியது.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய இந்தக் கூட்டத்தில் நமது நிதியமைச்சரும் கலந்து கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்துதான் விலைவாசி குதியாட்டம் போட்டு உயர்ந்து வருகிறது. இன்றைக்கு விலைவாசி உயர்வால் காங்கிரஸ் கட்சியே கதி கலங்கிப் போய் இருக்கிறது. ஆகவேதான், இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த பாமாயில், சோயா எண்ணெய் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரியை ரத்து செய்வதென்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், விலைவாசி உயர்விற்கான அடிப்படைக் காரணங்களை ஆராயவே இல்லை. ஏனெனில், அதன் ஆதிமூலங்களும் காரணகர்த்தாக்களும் நமது பிரதமரும் நிதியமைச்சரும்தான்.

ஒரு பக்கம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கம் யூகபேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

விலைவாசி உயர்வு பற்றி நமது நிதியமைச்சர் ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருப்பது அதற்கு உடன்பாடானது அல்ல என்பதனை காங்கிரஸ் தலைமையின் செய்திப் பிரிவாளர் வீரப்பமொய்லி நிருபர்களிடம் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் காரியக்குழுக் கூட்டமும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், முன்பேர யூக வணிகத்தைக் கண்ணின் மணி போல் இன்று வரை கவனித்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங் அரசுதான். உணவு தானியங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்னர் தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை. வர்த்தகச் சூதாடிகளின் பலன்களுக்காக அந்தக் கோட்பாட்டை வாஜ்பாய் அரசு சிறிது தளர்த்தியது. அந்தச் செயல், உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம். இன்னொரு பக்கம் முன்னர் ஜனசங்கம், பி.ஜே.பி.யின் கஜானாவாக வணிகப் பெருமக்கள்தான் செயல்பட்டனர்.

மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் உலக வங்கியின் சொல்லைத் தட்டாதவர்களாயிற்றே? எனவே, அந்த வங்கி மனம் மகிழும் வண்ணம் கோதுமை கொள்முதல் செய்வதற்குக் கூட வர்த்தகச் சூதாடிகளை அனுமதித்தன.

இன்னொரு பக்கம், யூக வணிக பேரம் செழித்துக் கொழித்து வளர தடைகளைத் தகர்த்தெறிந்தனர். ஒரு பெரிய வர்த்தகர், விவசாயிகளிடம் _ உற்பத்தியாளர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு முழுத் தொகையையும் கொடுக்க வேண்டியதில்லை. வங்கிகளே அதற்கு உதவும். எனவே, விளைகின்ற இடங்களிலேயே உணவு தானியங்களை வாங்கிக் குவித்தனர். உதாரணமாக பரோடா வியாபாரியிடம் சென்னை வியாபாரி இத்தனை டன் சரக்கு வேண்டும் என்கிறார். பரோடா வியாபாரி பத்து சதவிகிதம் லாபம் வைத்து விலை சொல்கிறார்.

சென்னை வியாபாரி இன்னொரு பத்து சதவிகிதம் விலை வைத்து விருதுநகர் வியாபாரிக்கு விற்கிறார். இப்படிச் சரக்கைக் கண்களில் பார்க்காமலே விலையை உயர்த்துகிறார்கள்.

கடைசியாக விருதுநகர் வியாபாரி மக்களுக்கு விற்கும் போது ஐம்பது சதவிகிதம் விலை உயருகிறது. இப்படி யூகத்தின் அடிப்படையில் வியாபாரிகள் விலையை உயர்த்துகிறார்கள். அதனால் வர்த்தகச் சூதாடிகள் வளம் கொழிக்கிறார்கள். நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்குகிறார்கள்.

எனவே, வர்த்தகச் சூதாடிகளின் யூக வணிக பேரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகள்தான் போராடின. நாடாளுமன்றத்திலும் போராடின.

விவசாய உற்பத்தி விலைவாசியைக் கண்காணிக்கும் ஆணையம், யூக வணிக பேரத்தின் அபாயத்தை உணர்ந்தது. '24 அத்தியாவசிய உணவுப் பொருள்களை யூக வணிக பேரப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்' என்று மத்திய அரசிற்குப் பரிந்துரை செய்தது. மன்மோகன் சிங் அரசு அந்தப் பரிந்துரையைக் கண்டு கொள்ளவேயில்லை.

விவசாய உற்பத்தி விலைகளைக் கவனிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைக்குழு, '25 விவசாயப் பொருட்களை யூக வணிக பேரக் கொள்ளையிலிருந்து நீக்க வேண்டும்' என்றது. அந்த வேண்டுகோளும் மன்மோகன் சிங் அரசின் காதுகளில் விழவில்லை.

சமுதாயத்தில் மிகப் பெரும் சலனத்தை ஏற்படுத்தும் முறையில் இன்றைக்கு விலைவாசி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் ஆவேசம் கொள்ளச் செய்திருக்கிறது. அந்த ஆவேசம் சுனாமியாகச் சுழன்றடிக்குமா, புயலாய் சீறிப் பாயுமா என்பதனை மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்.

விலைவாசி உயர்வை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துவது என்று இடது சாரிக் கட்சிகள் முடிவெடுத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வை எதிர்த்து 'போர் போர்' என்று பி.ஜே.பி. பிரகடனம் செய்திருக்கிறது.

உணவுப் பொருள் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கடைசியாக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்து விட்டது. ஆனால், ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் பதுங்கியது மாதிரி மன்மோகன் சிங் இல்லத்தில் கூடிய அமைச்சரவைக் குழு, இந்தக் கோரிக்கை பற்றி மூச்சே விடவில்லை.

யூக முன் பேர வணிக முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் குரல் கொடுத்து விட்டன. ஆனால், அதனை அமைச்சரவைக் கூட்டம் அடியோடு புறக்கணித்து விட்டது.

பின்னர் எதற்காகக் கூடினார்கள்? குரோட்டன்ஸ் செடியை ட்ரிம் செய்வது போல சில முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். பாமாயில் இறக்குமதிக்கு வரி ரத்து, பாசுமதி அரிசியைத் தவிர இதர அரிசிகளை ஏற்றுமதி செய்யத் தடை என்று தெரிவித்திருக்கிறார்கள். யூக பேர வணிகம்தான் விலைவாசி உயர்விற்குப் பிரதான காரணம் என்பதனை நாடே அறிவிக்கிறது. ஆனால், அதனை ஏற்க மறுக்கிறார்கள். கடிக்க வரும் கரடியைப் பிடிக்கச் சொன்னால் காடையைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கொடுமை!

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//சுடுவது சுகம்
பொதுநலனுக்காக அறிவைச் சுடுவதன்றி வேறொன்றறியேன் தமிழ்மனமே! :~) //

நல்லது. நல்லது.

கருத்துரையிடுக