திங்கள், ஏப்ரல் 07, 2008

கலாமின் அபாயகரமான யோசனை - நீரஜா செளத்ரி

அனைத்து எம்.பி.க்களையும் வார்ட்டன் அல்லது ஹார்வர்டில் உள்ள மேலாண்மைப் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற யோசனையைத் தெரிவித்திருக்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் ஓராண்டுக் காலம் அவர்கள் பயிற்சி பெறும் வகையில் எம்.பி.க்களின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ""கட்சி விசுவாசம் மிக்கவர்களாக''வும் மாறிவருகின்றனர் என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.

கடந்த காலங்களிலும், ஆழம்பார்க்கும் வகையில் இது போன்ற யோசனைகள் கூறப்பட்டதுண்டு. இந்திரா காந்தியின் தூண்டுதலின் பேரில், மக்களுடைய கருத்து என்ன என்பதை அறிவதற்காக, இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை அப்போது கூறினார் வசந்த் சாத்தே. எனினும், இப்போது கலாம் தெரிவித்த இந்த யோசனை, பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலே போய்விட்டது.

கலாம் கூறிய யோசனையில் மூன்று அம்சங்கள் பொதிந்திருக்கின்றன
1. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை ""படிப்பறிவில்லாதவர்''களுக்குக் கிடையாது.
2. தொழில் நிறுவனத்தை நடத்துவதைப்போல தேசத்தை நடத்திச் செல்ல வேண்டும்; எனவே மேற்கத்திய நாடுகளின் புகழ்பெற்ற மேலாண்மைப் பயிற்சிக் கல்லூரிகளில் மேலாண்மைத் திறனில் எம்.பி.க்கள் பயிற்சி பெற வேண்டியது அவசியம்.
3. எம்.பி.க்கள் கட்சியின் விசுவாசிகளாக இருக்கக் கூடாது.
கலாமின் யோசனையை மேலும் ஆழ்ந்து ஆராய்ந்தோமானால், வார்ட்டன் அல்லது ஹார்வர்டுக்குச் செல்லத் தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். எனவே, அவர்கள் எம்.ஏ. அல்லது குறைந்தபட்சம் பி.ஏ. படிப்பாவது முடித்தவர்களாக இருந்தால்தான் இது சாத்தியம்.

நமது தேசியத் தலைவர்கள் நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்த பொழுது, ""ஒருவருக்கு ஒரு வாக்கு'' என்பதை அடிப்படை உரிமையாக்கியதற்குக் காரணம் உண்டு. இப்போது இருப்பதைவிட அப்பொழுது நாட்டில் கல்வியறிவில்லாதோர் விகிதம் அதிகமாக இருந்தது. அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் என்பதால், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு, குறிப்பாக சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கு ஒரே வழி ""அனைவருக்கும் வாக்குரிமை'' அளிப்பதுதான் என்பதை உணர்ந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு கல்வியை ஒரு தகுதியாகக் கருதாததற்கு அதுதான் காரணம்.

இந்தியாவின் பெரும் தலைவர்களில் பலர் முறைப்படி கல்வி பயின்றவர்கள் அல்லர் என்பது வரலாறு. தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த காமராஜர், காங்கிரஸின் தலைவிதியை நிர்ணயித்த தலைவர். வசந்த்தாதா பாட்டீல் உயர் கல்வி கற்றவரல்லர்; ஆனால் மகாராஷ்டிரம் கண்ட மிகச் சிறந்த நிர்வாகிகளில் அவரும் ஒருவர் என்று அந்த மாநில மக்களால் நினைவுகூரப்படுபவர்.

ஹரியாணாவைச் சேர்ந்த ஜாட் சமுதாயத் தலைவரான தேவிலால் துணைப் பிரதமராக இருந்தவர். அவர், ""விஐபி'' என்பதற்கு "மிக அறியாமையில் இருக்கும் மனிதர்கள்' என்றும் நாட்டைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் என்று விளக்கம் கூறுவார்.

அசோகரும் அக்பரும் உயர்கல்வி கற்றவர்கள் அல்லர். ஆனால், தீன் இலாகி சமயத்தை உருவாக்கிய அக்பரை இன்றும் நினைவுகூர்கிறோம். அசோகரின் சக்கரத்தைத் தேசியக் கொடியிலேயே பொறித்து வைத்திருக்கிறோம். கபீரைப் பற்றி தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன.

கலாமின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், பிகாரில் எலிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்துவரும், தலித்துகளில் ஒரு பிரிவான முசேஹர் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வி கற்காத பகவதி தேவி போன்றோருக்கு நாடாளுமன்றத்தில் இடமே இல்லாமல் போயிருந்திருக்கும். தனது தலித் ஆதரவுக் கொள்கையை உறுதிசெய்வதற்காக எம்.பி. தேர்தலில் போட்டியிட பகவதி தேவிக்கு, லாலு யாதவ் வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஜனநாயக உணர்வுநிலை என்பது தனக்கே உரித்தான வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருக்கிறது. மாயாவதியின் வளர்ச்சியானது இதைத்தான் நிரூபிக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார் லாலு. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான லாலு பிரசாத், மாநிலத்தின் முதல்வராகவும் ஆகி, மத்திய அமைச்சராகவும் ஆகி இருப்பதை அறிந்து வியப்படைந்தனர் பாகிஸ்தானியர். சொல்லப் போனால், வளர்ச்சியின் சூட்சுமத்தை அவரிடம் கேட்டறிந்து கொள்வதற்காக வார்ட்டன் மற்றும் ஹார்வர்டு மாணவர்களே லாலு பிரசாத்தைச் சந்திக்க வந்தனர்.

யாருக்கெல்லாம் வாக்களிக்க உரிமை இருக்கிறதோ அவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடவும் தகுதி இருக்கிறது என்பதால், சிலர் எதிர்வாதமாக, யாருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதி இருக்கிறதோ அவர்கள்தான் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறக்கூடும். வேறு வார்த்தைகளில் சொன்னால், ""படித்தவர்கள்'' மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம்; நாட்டை யார் ஆள்வது, எப்படி ஆள்வது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் கூறக்கூடும். இது நாம் அறிந்த மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை சுருக்கிக் குறுக்குவதாகவும், காலச் சக்கரத்தை பின்னோக்கித் திருப்புவதாகவும் ஆகிவிடும்.

பல்வேறு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருந்த சொத்துடையவர்களுக்கே வாக்குரிமை, படித்தவர்களுக்கே வாக்குரிமை, ஆண்களுக்கே வாக்குரிமை என்ற ""அரைகுறை'' ஜனநாயகத்தை எதிர்த்து நெடிய போராட்டத்தை நடத்தித்தான் அனைத்து மக்களும் வாக்குரிமையைப் பெற்றனர். ஆனால் இந்தியாவில் எவ்விதச் சிக்கலுமின்றி பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர்; காரணம், நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த தலைவர்களுக்கு இருந்த தொலைநோக்கு.

ஏழ்மையான, பின்தங்கிய நாடான இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா என்ற அவநம்பிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் பொய்யாக்கி, 60 ஆண்டுகளாக ஜனநாயக ஆட்சிமுறை இருந்துவரும்போதிலும், ஒலித்திருக்க வேண்டிய அளவுக்கு ஏழைகளின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.

ஒரு வகையில், மேலும் மேலும் மேட்டுக்குடியினருக்கு உரியதாக நமது ஜனநாயகம் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லாதிருந்திருந்தால், வளர்ச்சியின் பயன்கள் ""மேலிருந்து கீழாகக் கசிவதை''ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல், ""அனைவரையும் சமநிலையில்'' வைத்துப் பேசிக்கொண்டு இருந்திருப்போம்.

இப்போதைய நிலையில், நாட்டு மக்களில் வெறும் 3 சதவீதம் பேரை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மேட்டுக்குடியினர், இந்தியாவில் உள்ள மக்களைவிட, வெளிநாடுகளில் உள்ள தம்மைப் போன்ற மேட்டுக்குடியினருடன்தான் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த நிலையில், வார்ட்டனிலும் ஹார்வர்டிலும் கல்வி கற்றுக்கொண்டு வந்தால், நம் எம்.பி.க்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துக்கொண்டுதான் செல்லும்.
உண்மையில், ஏழைகளை மேலும் மேலும் ஓரங்கட்டுபவர்களே படித்தவர்கள்தான். மக்களை முட்டாள்களாக்கி, சட்ட விதிகளைத் தமக்குச் சாதகமாக வளைத்து, செல்வ வளங்களை அபகரிக்கும் கலையில் வல்லவர்கள் அவர்கள்.

இவ்வாறு கூறுவதால், கல்வியறிவின்மைக்கு வக்காலத்து வாங்குவதாகவோ, திறமைகளை வளர்ப்பதைக் குறைகூறுவதாகவோ கருதிவிடக் கூடாது. நமது ஜனநாயகத்தில் சீரமைக்கப்பட வேண்டியிருக்கும் குறைபாடுகளைப் பூசிமெழுகுவதும் நோக்கமல்ல. ஆனால், நிறுவன மேலாண்மைத் திறன்கள், நிச்சயமாக எம்.பி. ஆவதற்கான அடிப்படைத் தகுதியாக முடியாது.

தேசத்திலிருந்து வேறுபட்டது தொழில் நிறுவனம். தொழில் நிறுவனத்தை தனியொருவர் நிர்வகிக்கலாம். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து மக்களின் குரல்களும் சேர்ந்தால்தான் அது ஒரு தேசமாக ஜீவித்திருக்க முடியும்.

இந்தியாவைப் பற்றிய புரிதலை மேம்படுத்தவும், சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவர்களது விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உறுதியை அதிகரிக்கவும் உரிய பயிற்சியை எம்.பி.க்களுக்கு அளித்தாலே போதும். இதர திறன்களையெல்லாம் காலப்போக்கில் பெற்றுக்கொண்டுவிட முடியும்.
முடிவாக, மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில், மொத்த சமுதாயத்தையும் பிரதிபலிப்பதாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும்.
பல எம்.பி.க்களின் குறுகிய கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டே, அவர்கள் ""கட்சிக்கு விசுவாசமாக'' இருப்பதை கலாம் குறைகூறியிருக்கக்கூடும். கட்சி அடிப்படையிலான ஜனநாயக அமைப்பில் கட்சியின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கட்சி உறுப்பினர் விசுவாசமாக இருந்துதான் ஆக வேண்டும். சொல்லப் போனால், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பல்வேறு கட்சிகளும் மக்களிடம் தமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வதால் ஏற்படும் இரைச்சலை ஒருசிலர் விரும்பாமல் இருக்கக்கூடும். ஆனால், நல்ல வேளையாக கட்சிகள் இல்லாத ஜனநாயகத்தை நாம் தேர்ந்தெடுக்கவில்லை.

நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை விரிவுபடுத்தி, மேலும் அதிக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆக்கும் முயற்சியாக டாக்டர் கலாமின் யோசனை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், உலகம் முழுவதுமே இப்போது ஜனநாயகத்தின் மீது நாட்டம் அதிகரித்து வருகிறது; ஜனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதற்காகவே இந்தியாவும் பாராட்டப்படுகிறது.

""மக்களின் குடியரசுத் தலைவர்'' என்று போற்றப்பட்ட டாக்டர் கலாமிடமிருந்து இப்படி ஒரு யோசனை வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இது அபாயகரமானது!
-நீரஜா செளத்ரி
நன்றி: தினமணி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//""மக்களின் குடியரசுத் தலைவர்'' என்று போற்றப்பட்ட டாக்டர் கலாமிடமிருந்து இப்படி ஒரு யோசனை வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இது அபாயகரமானது!//

Well said.

கருத்துரையிடுக