வியாழன், ஏப்ரல் 03, 2008

விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் . . . அவர்கள் நமக்குச் சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள், என மனசு கனக்கப் பேசுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.


உணவே மருந்து என்ற நிலை மாறி, இன்று உணவு விஷமாகி விட்டது. இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுக்க பயணித்து உழைப்பவர் நம்மாழ்வார். அவரை நம் "உண்மை" இதழுக்காகச் சந்தித்தோம்.


உங்களைப் பற்றி முதலில் சொல்லுங்கள்.


என் பெயர் கோ. நம்மாழ்வார். பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் இளங்காடு கிராமம். கோவிந்தசாமி - ரெங்கநாயகி என் பெற்றோர்கள். தொடக்கக் கல்வியைக் கிராமத்தில் முடித்த நான், இளங்கலை வேளாண்மைப் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பின்னர் 1963 இல் கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.


அங்கு ஒரு துண்டு நிலத்தை எடுத்து அதைக் கணக்கிட்டேன். அதற்காக உழைத்து, உழுது, விதைத்து, உரமிட்டு, அறுவடை செய்து அதனால் கிடைக்கும் பயன் குறித்துக் கணக்கிட்ட போது ஏமாற்றமும, அதிர்ச்சியுமே மிச்சமாகி இருந்தது. அதனால் அவ்வேலை எனக்கு மனநிறைவைத் தரவில்லை. எனவே விவசாய முறையில் மாற்றம் வேண்டுமென முடிவு செய்தேன். விளைவு அரசு வேலையை உதறிவிட்டேன்.


அந்த நேரத்தில் திருநெல்வேலி, களக்காடு எனும் சிற்றூரில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆர்பி டொமினிக் பியர் என்பவர் அமைதித்தீவு (Island of peace) எனும் பண்ணையைத் தொடங்கியிருந்தார். இது பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும் இந்த இடத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன்.


பொதுவாக நம் நாட்டு விவசாயம் எந்த நிலையில் உள்ளது? நம் நாட்டு விவசாயம் agriculture என்பதாக இருந்தது agribusiness - ஆக மாறிவிட்டது. 1960 வரை விவசாயம் மக்கள் சார்ந்ததாக இருந்தது. பின்னர் தொழில் சார்ந்ததாக மாறிப்போனது.


விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்கி விற்பவரே இங்கு பணக்காரராக இருக்க முடியும். 10 மாதம் பாடுபட்டு ஒரு பொருளை விளைய வைக்கும் விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.13 கிடைக்கும். அதை வாங்கும் ஒரு வியாபாரி இரண்டே நாளில் ஒரு கிலோவை ரூ.26 க்கு விற்றுவிடுவார். இங்கு விவசாயிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.


நிலம் உணவு உற்பத்திக்கு பயன்பட்ட வரை ஒரு பிரச்சினையும் இல்லை. அதே நிலத்தை வியாபாரமாகப் பார்க்கத் தொடங்கியதும் ஆபத்தும் வந்துவிட்டது.


எந்த வகையான ஆபத்து வந்தது?


நம் முன்னோர்கள் தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்து வாழ்ந்தார்கள். பின்னாளில் இந்த உற்பத்தியில் இலாபம் பார்த்த வியாபாரிகள் மீண்டும் மீண்டும் உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டினர். குறிப்பாக வெளிநாட்டு உர நிறுவனங்கள் தங்களின் உரத்தைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சலைப் பெறலாம் என ஆசை காட்டினர்.


இதன் விளைவாக நமது நிலத்தில் இரசாயனம் கலந்த யூரியா, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், டைஅமோனியம் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் போன்ற எண்ணற்ற உரங்களைப் போட்டு நிலத்தைச் சாகடித்து விட்டார்கள். இப்போது நமது நிலம் செத்துப் போய்விட்டது.இதோடு விட்டனவா வெளிநாட்டு நிறுவனங்கள்? இதுவரை இரசாயன உரங்களைத்தான் விற்பனை செய்தார்கள். இப்போது நேரடியாக விஷத்தையே விற்பனை செய்கிறார்கள். திம்மட், பியூரிடான் போன்றவைகள் கடுமையான விஷத்தன்மை உடையன. விஷத்தை மருந்து என்கிறான். ஆனால் அப்புட்டியிலேயே சிறிய எழுத்துகளில் விஷம் என எழுதியிருக்கிறான். நாமும் அதை மருந்து எனப் பயன்படுத்தி நிலத்தைப் பாழ்படுத்திவிட்டோம்.


நம்முடைய வேளாண்மை பாழ்பட்டுப் போனதற்கு வெளிநாட்டு உர நிறுவனங்களுக்குப் பெரும் பங்குண்டா? நிச்சயமாக உண்டு. பொதுவாகக் களைக் கொல்லி மருந்தைத் தொடர்ந்து போட்டாலே நிலம் கெட்டுவிடும். இந்நிலையில் பெஸ்டிசைடு, இன்செக்டிசைடு, பங்கிஸ் சைடு, ஹெர்பிசைடு என ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை ( முழுக்க இரசாயனம் கலந்தவை) நாம் பயன்படுத்தி வருகிறோம். “Cide” என முடிந்தால் அது கொல்வதைக் (கொலை) குறிக்கும். இன்செக்டி சைடு என்றால் பூச்சிகளைக் கொல்லும் மருந்து, பங்கிஸ் சைடு என்றால் பூஞ்சானை கொல்லும் மருந்து, இதுவே ஜினோசைடு, என்றால் மனிதனை மனிதன் கொலை செய்வது.


சூசைடு (Sucied) என்றால் மனிதன் தன்னைத் தானே கொலை ( தற்கொலை) செய்வது. ஆக இப்படி ஏராளமான இரசாயனம் மற்றும் விஷம் கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை மண்ணில் போட்டதன் விளைவை இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். மண்புழு உழவனின் நண்பன் என்கிறோம். இந்த இரசாயன உரங்களைப் போட்டு மண்புழுக்கள் அனைத்தையும் சாகடித்து விட்டோம்.


பெரும் முதலாளிகள் விற்பனைக்காகப் பல பொய்களைக் கூறுவார்கள். அவர்களின் இலாப வெறிக்காக இந்தி-யாவில் தோன்றிய அனைத்து அரசுகளுமே உதவி செய்து வருகின்றன. இந்திய உரங்கள் எரு போன்றவை. வெளிநாட்டு உரங்கள் விஷம் போன்றவை. உரம் வேறு; விஷம் வேறு!


அவனுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கிறது பார் என நம் நாட்டில் சொல்வதுண்டு. உரம் என்பது உள்ளுக்குள் உள்ள ஊக்கத்தைக் குறிப்பது. நம் நாட்டு நிலங்களில் உரம்தான் எருவாக இயற்கையாகவே அமைந்திருந்தது. ஆனால் அவற்றை நாமே அழித்தொழித்து விட்டோம். கடந்த 5000 ஆண்டுக்காலமாக நாம் விவசாயம் செய்து வருகிறோம். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை; எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.


ஆனால் இந்த 50 ஆண்டுக்காலமாக நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் உரத்தைப் போட்டு விவசாயம் செய்து வருகிறோம். 1960 வரை ஆண்டுக்கு 5000 டன் உரங்களைப் பயன்படுத்தி வந்தோம். அதன்பிறகு ஆண்டுக்கு 13 இலட்சம் டன் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.


விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்-படுவதாகத் தெரிவதில்லையே?


கடந்த 10 ஆண்டுகளில் 1,66,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசாங்கமே புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. 300 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரில் கூட நஞ்சு கலந்திருக்கிறது. உணவும் நஞ்சாகிப் போனது. மக்கள் உணவுக்கு செலவழிப்பதை விட, மருந்துக்கு அதிகம் செலவழிக்கின்றனர்.


தஞ்சாவூரை நெற்களஞ்சியம் என்கிறோம் . ஆனால் தஞ்சாவூரில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு ஆந்திராவிலிருந்து அரிசி வருகிறது. நம் தேவைக்குப் போக, பிறருக்கு அனுப்பிய காலம் போய்விட்டது. நாமே பிறரிடம் கையேந்தும் நிலையில் இருக்கிறோம்.பொதுவாகவே உணவுப் பொருள்கள் அதிக தூரம் பயணம் செய்யக் கூடாது. அந்தந்த மாவட்டத் தேவைகளை அங்கேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி செய்பவரும், நுகர்வோரும் அருகிலேயே இருந்தால்தான் விலையேற்றமும் இருக்காது.


விஷத்தைப் பூமியில் போடாத அந்தக் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. இன்று உணவே விஷமாக மாறிப் போனது. மருத்துவமனை கட்டுவது பெரிய விசயமல்ல; நோயில்லாமல் வாழ்வதே சிறப்பாகும். விலைவாசி உயர்வு மற்றும் நோய்கள் வருகிற போது மட்டும் மக்கள் தற்காலிகமாகக் கொதித்துப் போகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள உழவர்களின் நிலையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உழவர்கள் சிறப்பாக இருந்தால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும்.


இப்போது நீங்கள் கூறும் பிரச்சினைகளுக்கு முற்றிலுமான மாற்று வழிதான் என்ன?


மாற்றுவழி என்று புதிதாக ஒன்றும் இல்லை. நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றிய இயற்கை விவசாய முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அது ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர்களுக்கான சேவை மையம் தொடங்கப்பட வேண்டும். முதலில் உழவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இரசாயன உரம் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெற முடியும் என்கிற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ, விளைநிலம் செத்துவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.


பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மண்புழு உற்பத்தி செய்கிறார்கள். அதுபோல ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். நம்மால் முடிந்தளவு அந்தந்தப் பகுதிகளில் இயற்கை வேளாண்மைக்கு உதவிகள் செய்ய வேண்டும்.


வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்ப்பது பெரிய விசயமல்ல. சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் கியூபா நாடு அமெரிக்காவை எதிர்த்துத் தலைநிமிர்ந்து வாழ்கிறது. கியூபா நாட்டிற்கு எந்தப் பொருளையும், யாருமே ஏற்றுமதி செய்யக் கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. ஆனாலும் கியூபா மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தாங்களே இயற்கை வழியில் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். கரும்பு மட்டுமே விளைந்த அந்த கியூபா நிலத்தில் இன்று கோதுமை, காய்கறி என அனைத்துமே விளைகின்றன. இன்னும் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட பகுதி அந்த இடத்திலேயே உற்பத்தி செய்கிறார்கள்.


உதாரணமாக திருச்சி மாவட்ட மக்களுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் திருச்சி மாவட்டத்திற்குள்ளேயே உற்பத்தியாகிறது. அதனால் பொருள்கள் விரைவாகவும், தரமாகவும், குறிப்பாக விலை மிகக் குறைவாகவும் கிடைக்கிறது. மாறாக திருச்சி மக்களுக்குக் கோதுமை பஞ்சாப் மாநிலத்திலிருந்தும், அரிசி ஆந்திராவிலிருந்தும் வந்தால் விலைவாசி உயராமல் என்ன செய்யும்? எனவே கியூபா நாட்டை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல வியட்நாம் நாடு. அமெரிக்காவால் அழிந்த நாடுகளில் அதுவும் ஒன்று. இப்போது விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, அந்நாட்டில் ஏழ்மை குறைக்கப்பட்டுள்ளது.


பணக்காரனைக் கோடீஸ்வரனாக ஆக்கும் வேலையைத்தான் நம் நாட்டில் செய்து வருகிறோம். கொஞ்சம் பணக்காரர்கள், நிறைய ஏழைகள், இதுதான் இந்தியா! எனும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்கிறது. ஆனால் அது வெள்ளமாக மாறுகிறது. அம்மழை பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக மாற வேண்டும். அந்தச் சூழலை நாம் உருவாக்க, வேண்டும்.


மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை பேருந்து நிலையம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை கூட ஏரியில்தான் உள்ளன. அதுமட்டுமின்றி மதுரையைச் சுற்றி 40 அரசுக் கட்டிடங்கள் ஏரியில் உள்ளன. சென்னையில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் காணவில்லை. இதுபோன்ற சூழல்கள் இருந்தால் விவசாயம் எப்படிச் செழிக்கும்? எனவே இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.


இந்தியாவில் பசுமைப்புரட்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சுத்தப் பொய். சென்ற வாரம் தமிழக வேளாண்துறைச் செயலாளர் சுர்ஜித் கே. சௌத்ரி அய்.ஏ.எஸ் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் பசுமைப் புரட்சி எனச் சிலர் கூறிவருகிறார்கள். அவை காலத்திற்கு சரிப்பட்டு வராத விசயங்கள். வேளாண் விஞ்ஞானி எனக் கூறப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு நாம் தவறான பாதையில் சென்று விட்டோம், என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.


இப்போது தமிழ்நாட்டில் யாரேனும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்களா?


இயற்கை வேளாண் முறையைக் கைவிட்ட காரணத்தால் இந்தியா முழுவதும் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது கியூபா நாட்டை முன்னோடியாகக் கொண்டு கேரளா மாநிலத்தில் அந்த அரசாங்கமே இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு அண்மையில் நானும் சென்று வந்தேன்.


தமிழ்நாட்டில் ஒரு சிலர் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வெற்றி பெற்று வருகிறார்கள். பட்டுக்கோட்டை அருகிலுள்ள கிளாமங்கலம் அருகில் ஆடிட்டராக இருந்த அய்யாவு என்பவர் 65 ஏக்கர் நிலத்தில் மிகச் சிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தென்னை மரங்கள், லவங்கு செடி, கோகோ செடி, சாதிக்காய், காப்பிச் செடி என அனைத்தும் அங்கு விவசாயம் செய்யப்படுகிறது. உதகையின் தட்ப வெப்பத்தில் மட்டுமே விளையக் கூடிய மிளகு போன்றவையும் பட்டுக்கோட்டையில் விளைகின்றன.


அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுகம்பட்டி கிராமத்திலும் இயற்கை விவசாயம் முன்னுதாரணமாகச் செய்யப்பட்டு வருகிறது. நான் தொடக்கத்தில் களக்காடு பகுதியில் பணியாற்றிய போது அங்குள்ள இளைஞர்களுடன், இயற்கை வேளாண்மை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி அடிக்கடி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் ப.சுப்பிரமணியன், ப.சீத்தாராமன் ஆகியோர் தவறாமல் பங்கேற்பர். அவர்களிருவரும் தற்போது பெரியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். எனது குடும்பம் பெரியார் பாரம்பரியத்தில் வந்ததுதான்!


எனப் பெருமையோடு குறிப்பிடும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி அய்ரோப்பா உள்ளிட்ட ஏராளமான வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வருகிறார்.


2004 இல் சுற்றுச்சூழல் சுடரொளி விருது, 2007 இல் காந்தி கிராமப் பல்கலைக்கழத்தின் முனைவர் பட்டம், கிராமப்பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம், ஈரோட்டில் மக்கள் சிந்தனையாளர் விருது, பாரதியார் விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளார். தமிழப் பத்திரிகைகளில் தொடர்நது எழுதி வரும் இவர் தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுசூழல் இயக்கம் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.


- சந்திப்பு: வி.சி.வில்வம்


நன்றி: உண்மை

4 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

இந்தப் பதிவு என் பதிவில் சேமிக்கிறேன். நன்றி!
http://vivasaayi.blogspot.com/2007/09/blog-post_11.html

Unknown சொன்னது…

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை வேளான் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் இன்றைய விவசாயிகளுக்கு வரபிரசாதம். இவர்களை சரியான முறையில் பயன்படுத்தி இழந்துவிட்ட இயற்கை விவசாய முறையை மீட்டெடுத்தல் அவசியம்!

பகிர்தலுக்கு நன்றி!!

பெயரில்லா சொன்னது…

//மதுரை நீதிமன்றம், புதுக்கோட்டை பேருந்து நிலையம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை கூட ஏரியில்தான் உள்ளன. அதுமட்டுமின்றி மதுரையைச் சுற்றி 40 அரசுக் கட்டிடங்கள் ஏரியில் உள்ளன. சென்னையில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் காணவில்லை. //

Its very sad news.

Senthilmurugan.G சொன்னது…

superb

கருத்துரையிடுக