திங்கள், ஜூன் 06, 2011

'ஏய்... பொணந்தூக்கி!’

'சுந்தரு...’ என்று ஊரே செல்லமாக அழைக்கிறது. சில 'நாட்டாமை’கள் மட்டும் 'ஏய்... பொணந்தூக்கி!’ என்று அதட்டுவார்கள்.

''என்னை ஏன் பொணந்தூக்கின்னு சொல்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு, 'டி.வி-யில எல்லாம் உன் மூஞ்சியைக் காட்டுறியாமே?’னு சொல்லி, வெறகுக் கட்டையால என் மண்டையில அடிச்சுட்டாங்கண்ணா'' என்று தன் உச்சந்தலையைக் காட்டுகிறார். விரல் நீளத்துக்குத் தையல் போடப்பட்ட தழும்பு.

சென்னை, ஜலடம்பேட்டையில் வசிக்கும் சுந்தர்ராஜனுக்கு, பிறவியில் இருந்தே பார்வை இல்லை. ஆனால், அவர் ஒரு மகத்தான சேவகர்!

''பொறந்தது, வளர்ந்தது எல்லாமே ஜலடம்பேட்டைதான். அஞ்சு அண்ணனுங்க, நாலு அக்கா தங்கச்சிங்களோட நான் ஏழாவதாப் பொறந்தேன். பிறவியில இருந்தே கண் தெரியாதுண்ணா. அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். பார்வை இல்லையே... அப்புறம் எங்க போய் என்னத்தப் படிக்க?

தலையை லெஃப்ட், ரைட்டுனு ஆட்டிக்கிட்டே நடந்து போவேன். நடுவுல எங்கனாச்சும் தடங்கல் இருந்தா, எனக்குள்ளாற மணி அடிக்கும். ஜாக்கிரதையா நகருவேன். ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய்ப் பார்த்தோம். கண்ணைச் சரி பண்ண முடியாதுன்னுட்டாங்க. 11 வயசுல அண்ணன் தேவநாதன் எனக்கு நீச்சல் கத்துக் கொடுத்தாரு. 16 வயசா இருக்கும்போது, கிணத்துல கொலுசு விழுந்துருச்சுன்னு சொன்னாங்க. அது இருக்கும் 20 அடி ஆழம். கீழே இறங்க எல்லோரும் பயந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்குத்தான் பகலும் தெரியாது, ராவும் தெரியாதுல்ல. அதனால, ஆனது ஆகட்டும்னு சொல்லி, நான் கிணத்துக்குள்ளே முங்கி கொலுசைத் தேடிப் பார்த்தேன். என் காலை ஒவ்வொரு அடியா மெள்ள மெள்ளவெச்சு அங்கயும் இங்கயும் தடவிப் பார்த்தேன். திடீர்னு ஏதோ ஒண்ணு கனமாத் தட்டுப்பட்டுச்சு. அதை மேலே இழுத்துக்கிட்டு வந்தேன். வெளியே இழுத்துப் போட்டதும் எல்லோரும் அலற ஆரம்பிச்சாங்க. என்ன, ஏதுன்னு நான் தடவிப் பார்த்தேன். ஐயோ அண்ணா... பொணம்ணா! அங்கே இருந்த எல்லாரையும் திட்டிட்டு வந்துட்டேன். பொணத்தைத் தூக்கத்தான் என்னைய பொய் சொல்லிக் கூட்டிக்கினு போயிருக்காங்கண்ணா.

அன்னிக்கு முழுசாத் தூங்கவே இல்லை. ஏன்டா இப்படிப் பொறந்துட்டோம்னு மனசு வலிச்சுதுண்ணா. சரி, நாம இதுக்கோசரமாவது 'ஹெல்ப்பா’ இருந்துக்கினோமேனு சந்தோசப்பட்டுக்கிட்டேண்ணா.

அன்னிக்கு ஆரம்பிச்சது நம்ம வேலை. இன்னிய தேதிக்கு நான் 132 பொணங்களை மேலே தூக்கியாந்து இருக்கேன். ஃபயர் சர்வீஸ் ஆளுங்கோ இறங்க முடியாத ஆழத்துலகூட நான் முங்கி, பொணத்தை மேலே கொண்டாந்துருக்கேன். 60 அடி ஆழம்னாக்கூட நான் இறங்கிப்புடுவேன். மேக்ஸிமம் மூணு நிமிஷம்தான். அதுக்குள்ளாற நான் பொணத்தை எடுத்துருவேன்.

தண்ணிக்குள்ளாற, சாக்கடைக்குள்ளாற, ஏரியில இப்படி எங்கனா, யாராச்சும் விழுந்துட்டாங்கன்னா, சுத்துப்பட்டு ஏரியாவுல என்னையத்தான் கூப்பிடுவாங்க. தண்ணிக்குள்ள யாராவது விழுந்து செத்துப்போனாங்கன்னா, அவங்களோட உடம்பு ஊதிப்போயிடும். தண்ணியில பொணத்தின் கனம் கம்மியாதான் இருக்கும். காலால தடவிப் பார்ப்பேன். பொணத்தோட எந்தப் பகுதி தட்டுப்படுதோ, அதப் புடிச்சுக்கினு இழுத்துக்கிட்டு வந்துருவேன்.

நான் தூக்குனதுல அதிகமானவங்க வயசானவங்க. அவங்களப்பத்தி பெருசா அலட்டிக்க மாட்டேன். ஆனா, இள வயசுப் பசங்க யாராச்சும் விழுந்து அவங்கள எடுத்தாரும்போது, மனசு ரொம்ப வலிக்கும்ணா.

இதோ போன மாசம்கூட, பள்ளிக்கரணை ஏரியில 26 வயசுப் பையன் விழுந்துட்டான். நான்தான் எடுத்தாந் தேன். தெரியாம விழுந்துட்டானா, யாராச்சும் தள்ளிவுட்டு விழுந்தா னான்னு தெரியலை. பாவம், வாழ வேண்டிய வயசு!

மரண பயமே எனக்கு இல்லாமப் போச்சுண்ணா. நான் பொணத்தத் தூக்கிக்கினு வரும்போது யாரும் அழக் கூடாதுன்னு சொல்லிருவேன். நான் அந்த இடத்தவிட்டுப் போற வரைக்கும் யாரும் அழக் கூடாது. அவங்க அழுதாங்கன்னா, மனசு கஷ்டமாப்பூடும். பொணத்த எடுத்துட்டு வந்த பொறவு, அவங்க இஷ்டப்பட்டு ஏதாச்சும் பணம், காசு கொடுத்தா வாங்கிப்பேன். நானா யாருட்டயும் கேக்க மாட்டேன். அவங்க கொடுத்த பணத்தை அப்படியே வீட்ல கொடுத்துருவேன். வீட்ல இந்தப் பொழப்பு வேணாம்டான்னு சொல்லு வாங்கண்ணா. ஆனா, இது ஒரு மாரி சோசல் சர்வீஸுங்கிறதால நான் பண்ணுறேன்.

என்னோட நெலமையப் பார்த்து 2006-ம் வருஷம் புரட்சித் தலைவி அம்மா எனக்கு ஒரு லட்சம் ரூவா கொடுத்தாங்க. அப்புறம் கவுருமென்ட்டுல இருந்து மாசா மாசம் 500 ரூவா கெடைக்குது. இதுகள வெச்சுத்தான் இப்ப நம்ம பொழப்பு கொஞ்சம் கவல இல்லாம ஓடுது. பொணத்தைத் தூக்குறதுக்கு முன்னாடி ஒரு கோட்டரு அடிப்பேன். நமக்கு வீக்குனசுன்னா, அது இதுதாண்ணா.

இப்படி இருக்குற என்னைய 'பொணந்தூக்கி’ன்னு சொல்லலாமாண்ணா. நான் தனியாத்தான் பொணத்தை மேலே தூக்கிக் கொண்டார்றேன். ஒரு கை யாரும் ஒதவுறதில்ல. ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி ஏதோ டி.வி-யில வந்து படம் புடிச்சுக்கினு போனாங்க. அதப் பார்த்துட்டு வந்து, என்னைய சில பேரு அடிக்கிறாங்க. நான் என்னண்ணா தப்பு பண்ணுனேன்?

நாளைக்கு என்ன நடக்கும்கிறதைப்பத்தி எனக்குக் கவலை இல்லண்ணா. ஆனா ஒண்ணு, கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். பிச்சை எடுக்க மாட்டேன்!''

-ந.வினோத்குமார்
படங்கள் : ஜெ.தான்யராஜு

நன்றி: ஆனந்தவிகடன் 08-ஜூன்-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக