“கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும்'' என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி.
“எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு சத்துணவு படைக்க வேண்டும். அதை இலவசமாகக் கொடுக்காமல், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, கூலியாக சத்துணவளிக்க வேண்டும்'' என்றும், இதற்கு “காந்தி மாவட்டத் திட்டம்'' என்று பெயரும் சூட்டியுள்ளார், அந்த உலகம் போற்றும் விஞ்ஞானி. இவர் சாதாரண விஞ்ஞானி அல்ல; உலகம் போற்றும் விஞ்ஞானி. மிகவும் செல்வாக்குள்ள நூறு பேராசிரியர்களில் ஒருவர். கௌரவ டாக்டர் பட்டங்கள் நாற்பதுக்கு மேல் பெற்றவர். “மகசேசே'' விருதும் உணவுக்கான உலகப் பரிசும் பெற்றவர். இந்தியாவிலும் அனைத்துலக அரங்கிலும் அதிகாரமிக்கப் பல பதவிகளை வகித்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக் குவித்தவர். இவர் பெற்ற பட்டங்களும் பதக்கங்களும், வகித்த பதவிகளும் ஏராளம். சாமக்கோடங்கி போல குறிசொல்லி, உபதேசங்களை அள்ளி வழங்கும் இவர்தான், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன்.
அரசாங்கத்தைக் கையில் போட்டுக் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்களைப் பறித்து, விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றன உள்நாட்டுவெளிநாட்டு கார்ப்பரேட் (பெருந்தொழில்) கம்பெனிகள். அந்தக் கம்பெனிகள் விட்டெறியும் எச்சில்காசில் விவசாயிகளை முன்னேற்றி, வறுமையை விரட்டப் போகிறேன் என்கிறார் எம்.எஸ். சுவாமிநாதன். இவர் விஞ்ஞானியா, அல்லது கிறுக்கனா என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். ஆனால், நாட்டின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை நட்டத்தில் தள்ளி கிறுக்குப் பிடித்து அலைய வைத்ததும், தற்கொலைக்குத் தள்ளியதும், இந்திய விவசாயத்தை நாசமாக்கி ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிறுவியதும் இந்த எம்.எஸ்.சுவாமிநாதன்தான்!
கும்பகோணத்தைச் சேர்ந்த பார்ப்பன மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்த சுவாமிநாதன், ஐ.நா.வின் துணை அமைப்பான “யுனெஸ்கோ''வின் உதவியுடன் நெதர்லாந்தில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஈராண்டுகள் பணியாற்றினார். அங்கு ஏகாதிபத்திய விவசாய நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட அவர், இந்தியாவுக்கு திரும்பி டெல்லியிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் துறைத் தலைவரானார்.
இதே காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம், அனைத்துலக உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் நோக்குடன், ராக்பெல்லர் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளைகளின் மூலம் மெக்சிகோவில் “சிமிட்'' எனப்படும் கோதுமை மக்காச்சோள ஆய்வு நிறுவனத்தையும், பிலிப்பைன்சில் அனைத்துலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தையும் உருவாக்கியது. உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க மேலாதிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம், அதிக விளைச்சலைத் தரும் புதிய ரக விதைகள் என்ற பெயரில் கோதுமை, நெல் மற்றும் பிற உணவு தானிய விதைகளை ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா விநியோகித்தது. இப்புதிய வகை நெல் ரகங்கள் உள்நாட்டு பாரம்பரிய நெல் ரகங்களை படிப்படியாக அழித்து, விதை நெல்லுக்காக அமெரிக்காவிடம் கையேந்தும் நிலையை உருவாக்கியது.
இதே நேரத்தில், தனது பார்ப்பன அதிகார வர்க்க செல்வாக்கையும் ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான நெருங்கிய உறவையும் கொண்டு 1966இல் சுவாமிநாதன் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்டு அமெரிக்காவின் திட்டப்படி புதிய ரக கோதுமை, நெல் மற்றும் உணவு தானியங்களை இந்திய விவசாயத்தில் திணித்தார். அரசின் ஆதரவோடு இந்திய விவசாயத்தில் திணிக்கப்பட்ட இந்த மாற்றங்கள்தான் “பசுமைப் புரட்சி'' என்றழைக்கப்படுகிறது.
இந்தப் பசுமைப்புரட்சி இந்திய விவசாயத்தில் நோய் எதிர்ப்புத் திறன், மழைவெள்ளத்தில் நீடிக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் முதலான பல்வேறு அரிய பண்புகளைக் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை ஒழித்துக் கட்டியது. தமிழகத்தின் பாரம்பரிய கிச்சலி சம்பா, குதிரைவாலி, சிறுமணி, கரைமடையான், புழுதிகாரி, ராஜராஜசோழன், ஊடுமட்ட குறுவை, வாடன் சம்பா, சித்திரகார் முதலான பாரம்பரிய நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு, ஐ.ஆர். வகை நெல் ரகங்கள் ஆக்கிரமித்தன. இவை புதிய புதிரான நோய்களையும், களைகளையும் தொடர்ந்து உருவாக்கின. உரங்களும், பூச்சி மருந்துகளும் வண்டி வண்டியாகக் கொட்டினால்தான் பயிர் வளரும் என்ற நிலைக்கு இந்திய விவசாயம் தள்ளப்பட்டது. அதேநேரத்தில் ஏகாதிபத்திய உரம் மற்றும் பூச்சி மருந்துக் கம்பெனிகள் பசுமைப் புரட்சியைச் சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமீட்டின.
இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில் நீடித்து வந்த கலப்பின பயிர்முறை ஒழிக்கப்பட்டு, ஒற்றைப் பயிர் முறை திணிக்கப்பட்டது. இயற்கை உரங்கள் ஒழிக்கப்பட்டு, இரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. இந்திய விவசாயி, ஒரு ஏக்கரில் வெங்காயம் அல்லது உருளை பயிரிட்டால், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காக ஏறத்தாழ ரூ. 25,000 கொட்டியழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனாலும், உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் இலட்சக்கணக்கான விவசாயிகள் திவாலாகிப் போனார்கள்.
பசுமைப் புரட்சியின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட வீரிய ஒட்டுரக நெல் ரகங்கள் மிக அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சின. குறிப்பாக, ஐ.ஆர்.நெல் ரகங்கள் ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 5000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சின. மானாவாரி நிலங்களைப் பெருமளவில் கொண்ட இந்தியாவில் இத்தகைய நெல் ரகங்களைப் பசுமைப் புரட்சியின் பெயரால் திணித்ததன் விளைவாக, நிலத்தடி நீர் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டு, மண்ணில் இருக்கும் நீரைச் சேமித்து வைக்கும் நீர்க் காப்பான்கள் மலட்டுத் தன்மைக்குத் தள்ளப்பட்டன. இதனால் மறுஉற்பத்திக்கு வாய்ப்பே இல்லாமல் பல லட்சகணக்கான ஹெக்டேர் நிலங்கள் தரிசாகிப் போயின. விவசாயிகளோ ஓட்டாண்டிகளாகினர்.
இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் நாசமாக்கிய பசுமைப் புரட்சியானது, கடைசியில் ஏகாதிபத்திய கம்பெனிகளுக்குக் கொழுத்த ஆதாயம் தரும் இரசாயன உரம்பூச்சி மருந்துகளின் விற்பனை புரட்சியாக மாறிப் போனது. இப்படி, இந்திய விவசாயத்தை நாசமாக்கிய முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன். ஆனாலும் அவர் “உலகம் போற்றும் விஞ்ஞானி'' என்றும், “பசுமைப் புரட்சியின் தந்தை'' என்று ஏகாதிபத்தியவாதிகளால் போற்றப்பட்டார். பசுமைப் புரட்சியின் நோக்கமும் அது ஏற்படுத்திய கொடிய விளைவுகளும் நாடெங்கும் அம்பலமான பின்னரும் கூட, அவர் இதற்காக வருந்தவில்லை. “கட்டுப்பாடில்லாமல் உரம்பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியதால், பசுமைப் புரட்சியானது பேராசையின் புரட்சியாக மாறிவிட்டது'' என்று விவசாயிகள் மீதுதான் அவர் குற்றம் சாட்டினார்.
பசுமைப் புரட்சியின் தோல்வியாலும்அதிருப்தியாலும், ஆசிய கண்டத்தில் நெல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் தமது நோக்கம் பின்னடைவுக்குள்ளாவதைக் கண்ட ஏகாதிபத்தியங்கள், புதிய சதிகளில் இறங்கின. இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைக் கைப்பற்றி அவற்றுடன் தமது புதிய நெல் ரகங்களைக் கலப்பு செய்து, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிரான புதிய நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கின. இந்தியாவில் சட்டீஸ்கார் மாநிலத்தில் 20,000க்கும் மேற்பட்ட அரியவகை நெல் ரகங்களின் விதைகள் டாக்டர் ரிச்சார்யா என்ற விவசாய விஞ்ஞானியால் சேகரிக்கப்பட்டு, அரசு பாதுகாத்து வந்த நிலையில், அவற்றைக் கைப்பற்ற கைக்கூலி சுவாமிநாதனை அவை பயன்படுத்திக் கொண்டன.
மைய அரசின் விவசாயத் துறை முதன்மைச் செயலராகவும், பின்னர் மைய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், திட்டக் கமிசனின் துணைத் தலைவராகவும் இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன், திடீரென ஒரே நாளில் அமெரிக்காவின் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரானார். உலக அரங்கில் எந்த ஒரு நாட்டிலும் உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பு இரகசியங்களைக் கையாளும் ஓர் அரசு உயரதிகாரி, அமெரிக்க நிறுவனத்திலும் அதிகாரியாக இருக்கவே சாத்தியமில்லை. மிகப் பெரிய விவசாய நாடான இந்தியாவில்தான் இந்த அயோக்கியத்தனம் நடந்தது.
தனது அதிகாரத்தைக் கொண்டு, டாக்டர் ரிச்சார்யாவுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து அவரைப் பொறுப்பிலிருந்து விரட்டியடித்த எம்.எஸ்.சுவாமிநாதன், அவரது முயற்சியால் சேகரிக்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய நெல் நகரங்களின் விதைகளை அமெரிக்காவின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அள்ளிக் கொடுத்தார். இந்திய விவசாயிகள் தமது அனுபவத்தாலும் திறமையாலும் உருவாக்கியிருந்த அரிய வகை நெல் ரகங்களின் விதைகள் அனைத்தும் இன்று அமெரிக்காவின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன. “விதைத் திருடன்' சுவாமிநாதனின் விசுவாச சேவையைப் பாராட்டி, ஏகாதிபத்தியவாதிகள் அவருக்கு ஏராளமான பட்டங்களையும் பதக்கங்களையும் கருப்புப்பண நன்கொடைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு இந்தக் கைக்கூலி, விவசாய ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கி, தனது துரோகத்தனத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன், இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப் பயிர்களைப் பரவலாக்கும் வேலையில் இறங்கியுள்ளார். ஏற்கெனவே வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மையுடன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிடுவதன் மூலம், நெருக்கடியிலிருந்து மீண்டு அதிக லாப மீட்ட முடியும் என்று ஆதரவு திரட்டி வருகிறார்.
ஆனால், சுவாமிநாதனின் பரிந்துரைப்படி அரசின் ஆதரவோடு திணிக்கப்பட்ட, மான்சாண்டோ நிறுவனத்தின் பி.டி. ரக பருத்தி, மண்ணை நஞ்சாக்கி நோய்கள் பெருகி இந்திய விவசாயிகளை பெருத்த நட்டத்திற்கும் தற்கொலைக்கும் தள்ளியது. ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் மட்டும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இக்கொடுஞ்செயலுக்குக் காரணமான சுவாமிநாதனோ, இதற்காக வருந்தாமல், பன்னாட்டு விவசாயக் கம்பெனிகளின் கொள்ளைக்காக, பன்னாட்டு விவசாய உயிரி தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அடுத்த கட்டமாக அரிசி, கோதுமை, தக்காளி, கத்தரி, கடலை, உருளை, வாழை மற்றும் பல்வேறு சாகுபடிகளில் மரபணு மாற்றப் பயிர்களை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காகத் தனது அறக்கட்டளை மூலம் நாடெங்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி, பல்வேறு கிராமங்களில் இணையதள வசதி கொண்ட கிராம தகவல் மையங்களை உருவாக்கி, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு கிராமச் சந்தையின் தன்மை, தேவைகள், விநியோகச் சங்கிலி, கொள்முதல், ஒப்பந்த விவசாயம், நுகர்வு முதலானவற்றைப் பற்றிய தகவல்களை அனுப்பும் மையமாக மாற்றியுள்ளார். கிராம மக்கள் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவே இம்மையங்களை உருவாக்கியுள்ளதாக சுவாமிநாதன் பசப்பினாலும், ஒட்டு மொத்த கிராமச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் மையங்களாகவே இவை அமைந்துள்ளன. இதற்காகவே “காந்தி மாவட்டம்'', “சத்துணவு பாதுகாப்பு வளையம்'' என்றெல்லாம் புதுப்புது திட்டங்களை அவிழ்த்து விடுகிறார்.
சுவாமிநாதனின் திட்டங்களை பைத்தியக்காரத்தனமான உளறல் என்று ஒதுக்கிவிட முடியாது. அத்திட்டங்களுக்குப் பின்னே, ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனஅதிகார வர்க்க செல்வாக்கும், பார்ப்பன தேசிய பத்திரிகைகளின் ஆதரவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஏகாதிபத்தியங்களின் அருளும் கொண்டிருப்பதால் அவரது திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவரது ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் மூடிமறைக்கப்பட்டு, மாபெரும் விஞ்ஞானியாக போற்றப்படுகிறார்.
பசுமைப் புரட்சியின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கியது போதாதென்று, இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் மரபணு மாற்றப் பயிர்களைத் திணித்து இந்திய விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கக் கிளம்பிட்ட இத்துரோகியை, இந்திய விவசாயிகள் அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும். நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தத் துடிக்கும் ஏகாதிபத்திய சதிகளுக்கு விலைபோகும் இக்கைக்கூலியின் தகிடுதத்தங்களை, நாட்டுப்பற்றாளர்களும் அறிவியலாளர்களும் திரைகிழித்துக் காட்ட வேண்டும். சுவாமிநாதன் தலைமையிலான துரோகக் கும்பலை வீழ்த்தாவிட்டால், இரண்டாவது பசுமைப்புரட்சியின் வாயிலாக இந்திய விவசாயிகள் நாடோடிகளாக மாற்றப்படும் பேரபாயத்தைத் தடுக்கவே முடியாது.
அறிவியல் மேதையா? மோசடிப் பேர்வழியா?
“இது நம்ம ஆளு!'' என்ற கொள்கையுடன், பார்ப்பனரான எம்.எஸ்.சுவாமிநாதனை ‘உலகம் போற்றும் விஞ்ஞானி' என்று ஒளிவட்டம் தீட்டி பார்ப்பன தேசிய பத்திரிகைகள் ஊதிப் பெருக்குகின்றன. ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும், மோசடிகளும் பித்தலாட்டங்களும் நிறைந்தவை என்று ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது.
1967ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடந்த அறிவியலாளர் கருத்தரங்கு ஒன்றில், பாலுக்கு இணையான அளவில் புரதம் மற்றும் “லைசின்'' எனப்படும் அமினோ அமிலம் கொண்ட புதிய இரக கோதுமையை தான் உருவாக்கியுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் பெருமையோடு அறிவித்தார். இந்தப் புதிய இரக கோதுமைக்கு “சர்பதி சோனாரா'' என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் இயங்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த உயிர்ம வேதியல் விஞ்ஞானியான டாக்டர் ஒய்.பி.குப்தா என்பவர், இப்புதிய இரக கோதுமை பற்றிக் கூறப்படும் தகவல்கள் பொய்யானவை; மோசடித்தனமானவை என்று அப்போதே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இதுதவிர, “சிமிட்'' (CIMMYT) என்றழைக்கப்படும் மெக்சிகோவில் உள்ள கோதுமை மற்றும் மக்காச்சோள ஆய்வு நிறுவனம், சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு மோசடித்தனமானது என்று தனது ஆய்வுகளின் மூலம் 1969ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியது. இருப்பினும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் புதிய இரக கோதுமையைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு 1971இல் மகசேசே விருது வழங்கப்பட்டது.
மீண்டும் 1974இல் “நியூ சயன்டிஸ்ட்'' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், “ஸ்டேட்ஸ்மேன்'' நாளேடு 1977 மே 17ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகள் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. அவரது மோசடிகள் நாடெங்கும் நாறத் தொடங்கியதும் வேறுவழியின்றி, தான் தவறிழைத்து விட்டதாக சுவாமிநாதன் ஒப்புக் கொண்டார்.
இவரது புதிய கண்டுபிடிப்பு “கப்சா''களும் “ரீல்'' சுற்றலும் கோதுமையுடன் நின்றுவிடவில்லை. உருளைக்கிழங்கு, பருப்பு, மக்காச்சோளம் என்று எல்லா தானியங்கள் கிழங்குகளிலும் தான் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதாக அவ்வப்போது அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டிய குற்றத்திற்காக டாக்டர் ஒய்.பி.குப்தாவுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. அவர் அவமானப்படுத்தப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார். எம்.எஸ். சுவாமிநாதனின் மோசடிகளையும் அதிகார முறைகேடுகளையும் எதிர்த்து டாக்டர் ஒய்.பி.குப்தா, வழக்கு தொடர்ந்தார். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், சுவாமிநாதனின் செயல்பாடுகளை, “நீதிக்குப் புறம்பானது, இதயமற்றது, அதிர்ச்சியளிக்கக் கூடியது'' என்று சாடியுள்ளது.
இருப்பினும், இந்தப் பார்ப்பன நரி அதற்காக வருந்தவில்லை; தன்னுடைய மோசடிகள் முறைகேடுகளையோ, ஏகாதிபத்தியங்களுக்கு மாமா வேலை செய்வதையோ நிறுத்திவிடவுமில்லை. இப்போது அவர் மரபணு மாற்றப் புரட்சி என்ற பெயரில், பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு இந்திய விவசாயத்தைப் பலியிடும் திருப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
(நன்றி: புதிய ஜனநாயகம்)
2 கருத்துகள்:
விவசாயம் பற்றி ஏட்டுச் சுரைக்காயாய்
இந்த மாமாவை உயர வைத்த அத்தனை அம்பிகளும் இவருக்கு விருதுக்குமேல் விருது வாரி வளங்க உதவினர்.
அடுத்தவர் உழைப்பிலும்,பொய்களிலுமே வாழ்ந்த,வாழும் இந்த ஆள் உலக மகாத் திருடன் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும்.
இந்த ஆள் விஞ்ஞான உலகக் காஞ்சி சுப்புணி போன்ற அயோக்கியன்.
எவ்வளவு பணம் இந்த ஆள் கையில் இருக்கிறது திட்டங்களுக்காக என்று பார்த்தால் தெரியும்.
இன்னும் உண்மைகளைச் சொல்லித் தோலுரிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
அதிர்ச்சியான தகவல்கள்.. பத்திரிக்கைகள் கட்டமைக்கும் தகவல்களைக்கொண்டே தன்னைச்சுற்றியிருக்கும் உலகத்தை பார்க்கும் சாமானியர்களுக்கு தெரியவேண்டிய தகவல்கள்....
கருத்துரையிடுக