சனி, செப்டம்பர் 27, 2008

நார்க்கோ சோதனையும்... ஆய்வுக்கூட எலிகளும்...!

உலக நாடுகளில் உண்மை, மனிதநேய, அறம், மற்றும் உடல்நல அடிப்படைகளில் நிராகரிக்கப்பட்டுவிட்ட நார்க்கோ சோதனை எனப்படும் போதைமருந்து விசாரணை முறை இந்தியாவில் நீதிமன்ற அனுமதியுடன் காட்சி ஊடகங்கள் அதைப் பற்றி திகில் திரைபடங்களுக்கு நிகராக பரபரப்பு செய்திகளை உடனடியாக வெளியிட, இதுவரை 700 பேர்கள் மீது நடத்தப்பட்டு விட்டது.

இச்சோதனையை அமெரிக்காவில் விசாரணைகளின் போது இப்போது பயன்படுத்துவதில்லை. இது உண்மையைச் சொல்லாத குற்றவாளியின் பிடிவாதத்தைத் தளர்த்தப் பயன்படலாம் எனச் சொல்லும் சி.ஐ.ஏ., குற்றவாளி வாக்குமூலங்கள் பெரும்பாலும் சித்தபிரமை பிதற்றல்கள் அல்லது கற்பனைத் தோற்றங்கள் என்கிறது. மேலும் இதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர் தரும் விலையோ பெரிது: சுழல் மன அழுத்தம், சுவாச அழுத்தம், நினைவிழப்பு இப்படிப் பல. மருந்து அளவு பிசகினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் கோமா நிலைக்குத் தள்ளப்படுவார். இத்தனை யோசிக்கும் சி.ஐ.ஏ. 11/9 விசாரணைக் கைதிகள் மேல் நார்க்கோ சோதனை செய்தது இது ஒரு விசாரணை முறை அல்ல சித்திரவதை என்பதை உறுதிப்படுத்துகிறது.

காவல் புலனாய்வு சக்திகள் அடக்குமுறை மற்றும் சித்திரவதைக்குப் பெரும்பாலும் பயன்படுப்படும் நம் இந்தியாவில் (தமிழகத்து போலீஸ் சித்திரவதை முகாம்களை சமீபத்தில் பட்டியலிட்டுள்ளது ஹிந்து நாளிதழ்; வாக்குமூலம் பெற இது போன்ற பங்களாக்கள் மற்றும் விடுதிகளில் வைத்து கைதிகள் வதைக்கப்படுவர்), பல்வேறு வழக்குகளில் வழக்கு விசாரணையை விரைவில் கொண்டு வருவதற்கு எனும் பாவனையில் இந்தக் கொடுமை மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது.

ஆருஷி தல்வார் கொலைவழக்கு விசாரணை எனும் பெயரில் ராஜேஷ் தல்வார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மீது நார்க்கோ சோதனைக்குப் பின்னும் சாட்சியமோ தடயங்களோ மாட்டவில்லை என்று கைவிரித்துள்ளது சி.பி.ஐ.

நித்தாலி வழக்கிலோ வீட்டுரிமையாளருக்குத் தெரியாமல் வேலையாள் குழந்தைகளை கசாப்பு செய்ததாய் நார்க்கோ சோதனையின் போது விபரீத வாக்குமூலம் தந்துள்ளான்.

தபால்தலை பத்திர ஊழல் தெல்கி, வீரப்பன் கூட்டாளிகள், கோத்ரா ரயில் எரிப்பு, மும்பை ரயில் வெடிகுண்டு, நித்தாலி கொலைகள், அபூ சலேம் என்று வரிசையாய் இந்தப் பிரபல வழக்குகள் ஒன்றை உறுதி செய்கின்றன.

இது போன்ற வழக்குகளை ஊதிப் பெருக்கும் ஊடகங்கள், தினசரி அதிரடி திருப்பங்களுக்காய் மாநில புலனாய்வுத் துறை அல்லது சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளைத் தீவிர அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. நம் ஊடகங்களுக்கு திகில் படங்களுக்கு இணையாக உடனடி முடிவுகள் தேவைப்படுகின்றன.

மனவியலாளர் டாக்டர். அனுருத்தின் கருத்துப்படி உண்மையை வெளியிடும் வாய்ப்புள்ள குற்றவாளிகளிடத்து மட்டுமே நார்க்கோ சோதனை பயன்படும். பொய் சொல்லும் நெஞ்சுரம் கொண்டோர் அரை உறக்க நிலையிலும் பொய் விளம்பும் வாய்ப்பு நிறைய உள்ளது.

நாக்பூர் சிறையில் உள்ள நக்சலைட்டு அருண் பெரேரா நார்க்கோ சோதனையின்போது, சிவசேனா தலைவர் பால் தாக்ரேவும் பி.ஜெ.பி.யின் மாணவர் அணியான அகில பாரதி வித்தியார்த்தி பரிஷத்தும் மும்பையில் மாவோயிச நடவடிக்கைகளுக்குப் பொருளாதரவு தருவதாய்க் கூறினார். இது பொய்யாகவோ, மயக்க மருந்தின் போதனையில் அருணின் மனம் புனைந்த பிரமையாகவோ இருக்கலாம். வலதுசாரிக் கட்சி ஒன்று இடதுசாரித் தீவிரவாதிகளை ஆதரிப்பதாய்ச் சொல்வதை வேறெப்படி விளக்க.

தமிழ் நாடு வழக்காய்வு அறிவியல் துறையில் முன்னாள் இயக்குனரான டாக்டர் சந்திரசேகரன் இந்தச் சோதனையின் வேறு சில விபரீத வாக்குமூலங்களைக் கூறுகிறார்: "ஒரு சோதனைக்குட்படுத்தப் பட்டவர் தனக்கில்லாத குழந்தையை உள்ளதாய்ச் சொன்னார், மற்றொருவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் இரண்டாவது தந்தையைக் கொல்லப்போவதாய்ச் சூளுரைத்தார், திருடப்பட்ட பொருளை வாங்கிய இன்னொருவர் தானே திருட்டுக் குழுவில் இருந்ததாய்க் கூறினார்".

இப்படிச் சொல்லப்போவது பொய்யாகவோ, விபரீதக்கற்பனையாகவோ இருக்கும்போது பிரபல வழக்குகளில் நம் புலன்விசாரணை நிறுவனங்கள் நார்க்கோ விசாரணைக்காய்ப் பாய்வது ஏன்?

ஆருஷி தல்வார் வழக்கில் நார்க்கோ விசாரணையில் கிருஷ்ணா குற்றம் ஒப்புகொண்டதாய் அவசரமாய் அறிவித்து, பிறகு நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப் போதியம் சாட்சியம் இல்லையென சி.பி.ஐ அபத்த நாடகமாடி தங்களைக் கோமாளிகளாய்க் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

ஊடகங்களின் பரபரப்புக்கு ஈடு கொடுத்து தங்கள் பிம்பத்தைப் பாதுகாக்கும் அழுத்தமா? அரசியல் தலையீடா?

தேவஸ்தாலி கொலை வழக்கில் காவல்துறை குற்றவாளியின் நார்க்கோ சோதனை அறிக்கையை மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கத் தயங்குகிறது. குற்றவாளிக்கு சாதமாய் இது அமையும் எனக் காவல் துறை அஞ்சுவதே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஆக இதுபோன்ற அறிவியல் விசாரணைகளில்கூட புலன்விசாரணைத் துறைக்கு வசதியான உணமைகளில்தான் ஈடுபாடு. முழுமையான உண்மையில் அல்ல.

நார்க்கோ சோதனையின் போதான குற்றவாளியின் வாக்குமூலம் சுயவிருப்பமானது என சென்னை உச்ச நீதிமன்றம் 2006-இல் அளித்த தீர்ப்பும், இதை ஒட்டிய கேரள, மும்பை மற்றும் குஜராத் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் காவல், விசாரணை அராஜக நிறுவனங்களின் ஆதரவுக் கரமாக நீதிமன்றங்கள் பல நேரங்களில் செயல்படுவதைக் காட்டுகிறது.

இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளி சட்டரீதியாய்த் தன்னைப் பாதுகாக்கும் அடிப்படைக் குடியுரிமையை இழக்கிறான். தனக்கெதிராய் தானே சாட்சி சொல்லும் சட்ட அபத்தத்தை நிகழ்த்துகிறான்.

நீதிமன்றங்கள் தனிமனித அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, அறம் பற்றி யோசித்து இப்போதெல்லாம் மண்டை காய்வதில்லை. பொதுமக்கள் கவனம் குவியும் உணர்வுபூர்வமான வழக்குகளில் அரைகுறை சாட்சியம் (ராஜீவ் காந்தி கொலை வழக்கு) போதும், புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆதரவாய் அல்லது மக்களின் உணர்வுகளுக்கு சாதகமாய்த் தீர்ப்பளித்து தேசபலி கொடுப்பதில் நீதிமன்றங்கள் சளைக்காமல் செயல்படுகின்றன.

நார்க்கோ சோதனைக்கான நீதிமன்ற ஒப்புதலுக்கு குற்றவாளி நேரடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல் துறை நீதிமன்றத்திடம் சொன்னால் போதும். அனுமதி தயார். சித்திரவதை முகாமுக்கான நுழைவு வாயில் மட்டுமே நம் நீதிமன்றங்கள்.

அரசியல் தலைவர்கள் மத்தியில்கூட இது ரொம்ப பிரபலம். பா.ஜ.க. தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமர்சிங்கை பாராளுமன்ற ஊழல் தொடர்பாக இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சிறு கற்பனை: தமிழகத்தில் ஒருவேளை அடுத்த ஆட்சியின் போது சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நள்ளிரவில் அரைத்தூக்கத்தில் மயக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதுக்கப்பட்ட பொது வினியோக அரிசி மூட்டைகள் அல்லது நொறுங்கி விழக் காத்திருக்கும் மேம்பாலங்கள் பற்றிய உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்யப்படலாம். அப்போது பெண்டதோள் சோடியம் அதிகப்படியாய் வேலை செய்தால், நம் அரசியல் தலைவர்கள் விசாரணையின் போது கற்பனைவளம் தூண்டப்பட்டு தாம் அண்ணா, காமராஜ், எம்.ஜி.ஆரின் மறுபிறப்பென்றோ, நேரடி ஆசீர்வாதம் பெற்ற வழித்தோன்றல் என்றோ அறிக்கை விட்டு, பற்பல எதிர்கால நார்க்கோ அரசியல் பேட்டிகளுக்கு, அதன் மூலம் தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர வருவாய் பெருக்கத்துக்கு வழிகாணலாம். .

துணையாதாரம்: ரேப் ஆப் தெ மைண்டு, என். பானு தேஜ், தெ வீக்,
செப்டம்பர் 21, 2008

-ஆர்.அபிலாஷ்
நன்றி: உயிர்மை

சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான்..!

"எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்."

கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிக்கார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை.

சோஷலிசத்தின் பெயரால் பொருளாதாரத்தை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்து, இந்தியாவைக் குட்டிச் சுவராக்கியவர் நேரு என்று அவரை ஓயாமல் இன்னமும் வசை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தத்துவங்களின் ஊற்றுக்கண்ணாகிய அமெரிக்காவில் இன்று புஷ் அரசாங்கம் தனியாரிடம் மார்க்கெட்டை விட்டது தப்பு; தன் மூக்கை நுழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறது. காரணம், லெஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதுதான்.

அமெரிக்க அரசாங்கம் தன் மக்கள் வரிப் பணமான சுமார் 900 பில்லியன் டாலர்களைக் (சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களை) கொடுத்து இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தேசத்தையும் உலகத்தையும் மீட்க முயற்சித்திருக்கிறது.

இராக், ஆப்கன் யுத்த செலவு மட்டும் 300 பில்லியன் டாலர் (12 ஆயிரம் கோடி ரூபாய்). வருடந்தோறும் மொத்தமாக அமெரிக்காவில் மக்களிடம் வரி வசூல் தொகை: 3600 பில்லியன் டாலர் (144 ஆயிரம் கோடி ரூபாய்கள்)

லெஹ்மன் பிரதர்ஸ் மட்டுமல்ல, இதற்கு முன்பு ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் கம்பெனிகள். அடுத்து அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி). எல்லாமே நிதி நிறுவனங்கள். பழைய தமிழில் லேவாதேவிகள். வட்டிக் கடைக்காரர்கள்.
லெஹ்மன் பிரதர்ஸ் அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனம். இதற்குத் திரும்பி வராத கடன் மட்டும் 60 பில்லியன் டாலர். (240 கோடி ரூபாய்.) மெரில் லிஞ்ச் கம்பெனியின் கடன் 40 பில்லியன் (160 கோடி ரூபாய்).

இவர்களெல்லாம் முழுகும்போது கூடவே இவற்றில் முதலீடு செய்தவர்கள், இவர்களுடன் வர்த்தகம் செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி வாங்குகிறார்கள். இந்தியாவில் சத்யம், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் முதலிய ஐ.டி கம்பெனிகளும், ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குகிறார்கள்.

ஏன் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகின்றன என்பதை விவரித்தால் பொருளாதார வகுப்பு நடத்துவது போலாகிவிடும்; ஏனென்றால் ஒரு நிறுவனம் கடன் கொடுக்கும்; அப்படி கடன் கொடுத்ததையே தன் முதலீடாகவோ சொத்தாகவோ காட்டி இன்னொரு கம்பெனியிடம் கடன் வாங்கும். இந்தக் கடன்களையே தன் பங்குகளாகக் காட்டி அவற்றை விற்க முற்படும். இப்படி இடியாப்ப சிக்கலாக நிறைய வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எளிமைப்படுத்திச் சுருக்கமாக சொல்வதானால், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்ததால் திவாலானார்கள். இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும்போது திவால் நோட்டீஸ் கொடுத்தார்கள்.

இப்படி அடுத்தடுத்து நிதி நிறுவனங்கள் திவாலாகும்போது அதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், தொடர் சங்கிலியாக, பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாகிவிடும். எனவே அரசு தலையிட்டுக் காப்பாற்றியாகவேண்டும் என்று புஷ் அரசு அவசர அவசரமாக பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு _ இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.

ஆனால், இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால், நமது வங்கிகளுக்கு, கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான் !

இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

அமெரிக்க திவாலுக்கு அடிப்படை என்ன - கடன் வாங்கியவர்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லை என்பதுதான்.யார் இவர்கள்? ஏன் கடனைத் திருப்பிக் கட்டவில்லை? அல்லது கட்ட முடியவில்லை?

அமெரிக்காதான் பூலோக சொர்க்கமாயிற்றே. அங்கே எல்லாருமே பணக்காரர்கள்தானே. கடனே வாங்கத் தேவையில்லாதவர்கள் என்றுதானே இங்கே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? சரி. அப்படியே வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள் கூட அங்கே உண்டா என்ன? அல்லது சக்தி இருந்தும் வேண்டுமென்றே திருப்பித் தராமல் மோசடி செய்கிறார்களா? என்னதான் நடக்கிறது பூலோக சொர்க்கத்தில்?

இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று வந்தது அல்ல. ஐந்தாறு வருடங்களாகவே மெல்ல மெல்ல முற்றி வருகிறது. அடிப்படைக் காரணம் - வீடு வாங்கக் கடன் கொடுக்கும் திட்டம்தான். ஹவுசிங் லோன்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டன.

கடன் தவணையை ஒழுங்காகக் கட்டாதவர்கள், கட்டமுடியாதவர்கள் எல்லாருக்கும் கொடுத்ததால், வட்டிக்கடைக்காரர்கள் மட்டும் திவாலாகவில்லை. கடனில் வீட்டை வாங்கி அதில் குடியிருந்தவர்கள், வாடகைக்கு இருந்தவர்கள் எல்லாரும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவிலேயே அமெரிக்கர்கள் பலர் அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும், ஊருக்கு வெளியில் கூடாரக் குடியிருப்புகள் முளைக்கின்றன. சென்னையில் கூவம் ஓரமாகவும், பெரிய சாலைகளில் நடைபாதைகளில் பெரிய மதில் சுவர்களின் ஓரமாகவும் குடிசை போட்டு வசிப்பவர்களைப் போல, அமெரிக்காவிலும் ஊருக்கு வெளியே திறந்த வெளிகளில் டென்ட் போட்டு வசிப்போர் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளானவர்கள் இவர்கள்.

இரு அறை கொண்ட ஒரு வீட்டுக்கான வாடகை சுமார் 1120 டாலர். வருமானம் 45 ஆயிரம் டாலராவது இருந்தால்தான் இந்த அளவுக்கு வாடகை தரமுடியும். ஆனால், பல நகரங்களில் ஒருவரின் சராசரி வருமானம் 30, 35 ஆயிரம் டாலர்தான்.

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படி ஜகத்தினை அழிக்கும்போது, அதில் இருக்கும் அமெரிக்காவை மட்டும் பாவம் அழிக்கக்கூடாது என்றார் ஒரு நண்பர். ஏன் என்றேன். அங்கேதான் உணவில்லாத தனி ஒருவன் கூடக் கிடையாதே என்றார் நண்பர்.

குறைந்தது மூன்று கோடி 50 லட்சம் பேர் தினசரி உணவு சரியாகக் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குச் சொன்னேன். இவர்களுக்கு உணவு தருவதற்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் கணக்கின்படி வருடத்துக்கு 2 கோடி பவுண்ட் உணவுப் பொருட்களை நன்கொடையாகத் திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பணக்கார அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 96 கோடி பவுண்ட் உணவுப்பொருட்களை வீணடிக்கிறார்கள் என்றும் தொண்டு அமைப்புகள் வருத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 40 மணி நேர வேலை. மணிக்கு 10 டாலர் சம்பளம் என்ற குறைந்தபட்ச ஊதியமும் வேலையும் கிடைக்காத அமெரிக்கர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன.

அதனால்தான் இந்தியாவுக்கு ஒரு அணு உலையை விற்றால் 3 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அரசு கணக்கிடுகிறது. உலகத்தில் எங்கேயாவது யுத்தம், சண்டை நடந்துகொண்டே இருந்தால்தான், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைக்க முடியும். இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கலாம்.

சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான். இரு தரப்பினரும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளும் நேசமாகிவிட்டால், பேரிழப்பு அமெரிக்காவுக்குத்தான்.

உலகத்தில் வருடந்தோறும் விற்கப்படும் துப்பாக்கிகள், கிரெனேடுகள், ராக்கெட் ஏவுகணைகள் முதலியவற்றால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் சாகிறார்கள். விற்பனைத்தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் !

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவே திவாலானால் கூட உலகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. உலகம் திவாலாக திவாலாக அமெரிக்காவுக்குத்தான் லாபம். அதனால்தான் உலகெங்கும் அரசியலிலும் மீடியாவிலும் தன் ஏஜெண்ட்டுகளை நட்டு வைத்திருக்கிறது.

அந்த ஏஜெண்ட்டுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரங்கள்தான்: எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.

அந்த வரிசையில் புஷ் உருவாக்கியிருக்கும் புதிய மந்திரம்: ஒவ்வொரு தொழிலிலும் லாபம் வரும்போது அது தனியாருக்கு; நஷ்டம் வரும்போது அது அரசுக்கு..!


-ஞாநி
நன்றி: குமுதம், 01.10.08