வெள்ளி, மார்ச் 06, 2009

வழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள் (PART 1)

வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அவ்வப்போது நடைபெறும் மோதல்களும், இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மீடியாக்களில் வெளியாகும் செய்திகளும் பொதுமக்களுக்கு, வழக்கறிஞர்கள் மேல் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். வழக்கறிஞர்களை சண்டைக்காரர்களாகவும், சட்டத்தை மதிக்காதவர்களாகவும் உருவகப்படுத்தும் நோக்கத்தில் மீடியாக்களின் உதவியுடன் காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பத்திரிகைகளில் பரவலாக இந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் இந்த கருத்துகளை மக்கள் ஏற்கும் நிலையும் ஏற்பட்டுவிடலாம். ஆனால் வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் எதிரெதிர் நிலையில் இருப்பதே மக்களுக்கு நல்லது. இவ்விரண்டு தரப்பினரும் ஒன்றுபட்டுவிட்டால் அது பொதுமக்களை மட்டுமல்ல; மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் தலைவர்களையும், சமூகத்தலைவர்களையும், சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும்கூட பெருமளவில் பாதிக்கும்.
.
மக்களாட்சி நடைபெறுவதாக கருதப்படும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் எந்த பிரச்சினைக்காக போராடினாலும் அங்கே குண்டாந்தடிகளுடன் வந்து போராட்டக்காரர்களை எதிர்கொள்வது காவல்துறையினர்தான். அந்த போராட்டங்களின் நியாயம் குறித்தோ, போராடும் மக்களின் உரிமைகள் குறித்தோ காவல்துறையினர் கவலைப்படுவதில்லை. அதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே காவல்துறையினர் முன்னுரிமை கொடுக்கின்றனர். எனவே எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த முக்கியமான காரணமாக இருந்தாலும் போராட்டம் என்பதே நடக்கக்கூடாது; அனைத்து சமூக அநீதிகளையும் மக்கள் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதே காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.
.
தற்போது இருக்கும் நிலையிலிருந்து மேம்பட்ட நிலையை அடையப் போராடுவது, மனிதர்களுக்கு மட்டுமல்ல - அனைத்து உயிர்களின் இயல்பு. நாட்டில் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலமே மக்களின் ஆதரவையும், அவர்களுடைய வாக்குகளையும் பெற்று ஆட்சியை கைப்பற்றுகின்றனர். ஆனால் அதே கட்சிகள் ஆட்சியைப் பிடித்தவுடன், மக்களின் நியாயமான போராட்டங்களைக்கூட இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், போராட்டம் என்பது சமூக இயங்கியலின் தவிர்க்க இயலாத, முக்கியமான பகுதி என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆட்சியாளர்கள், எந்தப் போராட்டத்தையும், அவர்களுடைய ஆட்சிக் கட்டிலை கவிழ்க்கும் சதியாகவே பார்க்கின்றனர். எனவே அனைத்துப் போராட்டங்களையும் என்ன விலை கொடுத்தேனும் அடக்க முயற்சிக்கின்றனர்.
.
இந்தப் போராட்டங்களின் காரணம் குறித்தோ, அவற்றின் நியாயம் குறித்தோ எந்தவிதமான பரிசீலனையும் செய்யாமல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அடக்க முயற்சிப்பது அன்றாட நடைமுறை ஆகிவிட்டது. மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக குண்டாந்தடிகள் மூலமாகவும், பொய் வழக்குகள் மூலமாகவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை அடக்கும் காவல்துறைக்கு மூளை இல்லையா? அல்லது இதயம் இல்லையா? என்ற கேள்வி எழலாம்.
.
இதற்கான பதிலை கண்டறிய சமூகவியல், உளவியல் மற்றும் அரசியல் ரீதியான புரிதல் அவசியம்.
.
இதன் முதல் கட்டமாக காவல்துறையினரைப் பற்றி பார்க்கலாம்.
.
இந்தியாவில் உள்ள காவல்துறையினரை உத்தேசமாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் உயர் அதிகாரிகள். உயர்குலத்தோரும், இடைநிலை ஆதிக்க சாதிகளும் இடம்பெற்றுள்ள இப்பிரிவில் இருப்பவர்களுக்கு ஆட்சித் தலைமையோடும், அரசியல் கட்சித் தலைமைகளோடும் நெருங்கிய தொடர்புகள் இருக்கும். ஆட்சித்தலைமையின் கட்டளைக்கிணங்க செயல்படுவதைப்போல பாவனை செய்து கொண்டே தங்கள் சொந்த விருப்பு-வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்வதில் இவர்கள் திறமைசாலிகள். இதற்காக அரசியல் தலைமைகளின் குடும்பத்திலேயே குழப்பம் ஏற்படுத்தும் வல்லமையும் இவர்களுக்கு உண்டு.
.
இவர்கள் செய்யும் எந்த பாதகச் செயலையும், இவர்களுக்கு எதிரான நிரூபணம் இன்றி செய்யும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. பல அரசியல்வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் தனிப்பட்ட ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பதே இவர்களின் பலமாக இருக்கும். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் செல்வம் சேர்ப்பதில் இவர்கள் அரசியல்வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.
.
இவர்களை அடுத்து இருப்பவர்கள் இடைநிலை அதிகாரிகள். இவர்களுக்கு சட்டப்படியான அதிகாரம் சற்று குறைவாகவே இருந்தாலும் “எக்ஸ்ட்ரா வருமான”த்திற்கு எந்த குறைவும் இருக்காது. அதை மேலிடத்திற்கு எந்த அளவு உண்மையாகவும், நேர்மையாகவும் பங்கிடுகிறார் என்பதே இவர்களின் நேர்மைக்கு உரைகல். இந்த உரைகல்லின்படி நேர்மையானவர்கள் மேலும் அதிக வருமானம் வரும் இடங்களில் அமர்த்தப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவர். வருமானம் மட்டுமன்றி காவல்துறையின் பிம்பத்தைப் பாதுகாக்கும் பணியும் இவர்களிடமே இருக்கும். அதாவது பொதுமக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான பணி இவர்களுடையதே. இதற்காக, என்கவுண்டர் என்ற பெயரில் திட்டமிட்ட படுகொலைகள், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகள், காவல் நிலைய சித்ரவதைகள் போன்ற பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் நேரடியாக ஈடுபடுபவர்கள் இந்த இடைநிலை அதிகாரிகளே. நடுநிலையாக இருக்க வேண்டிய பத்திரிகையாளர்களை, அவர்களை அறியாமலே காவல்துறையின் ஆள்காட்டி(இன்ஃபார்மர்)களாகவும், பொதுத்தொடர்புக் கருவிகளாகவும் உருமாற்றும் கலை அறிந்தவர்கள் இவர்கள்.
.
காவல்துறையில் கடைநிலை ஊழியர்களை விரிவாக விளக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல காவல்துறையினரும் கடைநிலை ஊழியர்களே. கவுரவமாக குடும்பம் நடத்தத் தேவையான ஊதியம்கூட இல்லாமல் எப்போதும் செயற்கையான வறுமைக்குள்ளேயே வாழுமாறு ஆட்சியாளர்களால் நிர்பந்திக்கப்படுபவர்கள் இவர்கள். பணிநேர வரையறை, பணிப்பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படையான மனித உரிமைகள் இவர்களுக்கு சட்டபூர்வமாகவே மறுக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு மற்றவர்களின் மனித உரிமைகள் குறித்த உணர்வே இல்லாமல் மறத்துப்போகும் நிலை ஏற்படுகிறது.
.
ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், சினிமாத் துறையினர் - கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் போன்றவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பணியிலேயே இவர்களின் பெரும்பாலான வேலைநேரம் போய்விடும். அந்த நேரங்களில் சிறுநீர் கழிக்கக்கூட வாய்ப்பின்றி அவதிக்குள்ளாகும் இவர்களின் கோபம் அனைத்தும் அவ்வப்போது அப்பாவி மக்கள்மீது திரும்பும்.இடைநிலை ஆதிக்கச்சாதிகளை சேர்ந்தவர்களே இந்த கடைநிலை காவலர் பதவிகளில் அதிகம் இருக்கின்றனர். சாதிவேறுபாடுகளை பகுத்தறிவு மூலம் புறந்தள்ளக்கூடிய அளவிற்கு இவர்களுக்கு கல்வியோ, விழிப்புணர்வோ இருப்பதில்லை. தங்கள் பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறியும் பக்குவம் இல்லாமல், அவற்றைக் களையும் வழி குறித்து யோசிக்காமல் வாழும் இந்த கடைநிலை காவலர்களின் அதிகாரம் செல்லக்கூடிய ஒரே இடம் அப்பாவி பொதுமக்கள்தான். அப்பாவி பொதுமக்களிடமும், குறிப்பாக தலித் மக்களிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் யாவரும் அறிந்ததே.
.
கடைநிலை காவலர்களை இத்தகைய நிலையிலேயே வைத்திருப்பதில் அரசும், உயரதிகாரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற உண்மைகள் பெரும்பாலும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்படுவதில்லை. இந்த கடைநிலை காவலர்களும் வாய்ப்புக்கேற்ற லஞ்ச ஊழலில் அவ்வபோது ஈடுபடுவார்கள். ஆனால் நியாயமான ஊதியம் இல்லாத காரணத்தால் லஞ்ச ஊழலில் ஈடுபடும் இந்த கடைநிலை காவலர்கள் ஈட்டும் பணம் அவர்களின் அன்றாட செலவுக்குக்கூட போதாது. அதேநேரம் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் அவ்வப்போது சிக்குபவர்கள் இந்த கடைநிலை காவலர்கள் மட்டும்தான்.
.
-டார்வின் சார்வாகன்
To be continued.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Good Thoughts.

கருத்துரையிடுக