ஜெயலலிதா இறந்த பிறகான இந்த ஒரு மாத காலத்தில், அவரைப் பற்றி ஆகச் சிறப்பானதொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியினரும் போற்றிப் புகழ்பாடும் இப்படியொரு திருப்பத்தை ஜெயலலிதாவே கற்பனை செய்திருப்பாரா தெரியவில்லை!
கோடிக்கணக்கான தமிழர்களின் ஒற்றைத் தலைவியாக முப்பதாண்டு காலம் அரியணையில் வீற்றிருந்தவர்தான். அந்த அரியணையில் ஏறி அமர ஒரு பெண்ணாக நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்தான். மும்முறை அவரது பதவி முடக்கப்பட்டதில் ஆறு முறை முதல்வரானார். தமிழக மக்கள் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தனர் அல்லது அதற்கான ‘சூழலை’ அவர் உருவாக்கிக்கொண்டார். இறுதி வரையில், இறுதி ஊர்வலம் வரையில் ஜெயலலிதாவை அந்த அரியணையில் இருந்து இறக்காமலேயே வழியனுப்பிவைத்தது தமிழகம். ஆனால், அந்த நல்லுணர்வுக்குத் தகுதியான தலைவராக ஜெயலலிதா இருந்தாரா என்ற விஷயத்தை நாம் நேர்மையாக அணுக வேண்டும்.
நல்லவை எல்லாமே பேசப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பிறப்பு, அவரது படிப்புத்திறன், அவரது வாசிப்பு ஆர்வம், சுறுசுறுப்பு, கலை ஆர்வம், துணிச்சல், சாதனைகள் என அவரது ஆளுமையைக் கட்டமைக்கும் விஷயங்களை வாய் வலிக்கிற அளவு பேசியாயிற்று; ரேகை தேய்கிற அளவுக்கு எழுதியாயிற்று. ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்வித்ததைவிடவும் மேலதிகமான ஆண்டுகள் அரசியல் வாதியாகச் செயலாற்றிய ஜெயலலிதா, ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் அரியணையில் அமர்ந்து, அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக உருவெடுத்த பின்னர் நடந்தவைதான், நம் மறதிநோயில் அடித்துச் செல்லப்படும் ஆபத்தில் தத்தளிக்கின்றன.
இந்தச் சமூகம் உண்மையில் எதை மறந்திருக்கிறது எனில், ஜெயலலிதா என்ற தனிநபர் ராஜ்ஜியத்தின் இருண்ட காலத்தை… அதனால் தான் அடைந்த பெருந்துயரங்கள், இழப்புகளை. 1991-ல் தொடங்கி 2016 வரையிலும் மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றபோது, அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி இந்தச் சமூகத்தைப் பின்னோக்கி நகர்த்தியதே தவிர, முன்னோக்கி அல்ல. அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களில் பெரும்பாலானோர் அடித்தட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் அது ஏழை மக்களின் கட்சி. ஒரு தேர்ந்த நடிகையாக ஏற்கெனவே மக்களிடம் பரவியிருந்த ஈர்ப்பு, எம்.ஜி.ஆர் மீது அடித்தட்டு மக்கள் கொண்டிருந்த பாசத்தின் தொடர்ச்சி, கூடவே எதிர்த்து நிற்கும் பிடிவாதக்குணம் என, அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவை அங்கீகரித்ததன் பின்னணியில் இந்த மூன்று காரணங்களும் இருந்தன. எம்.ஜி.ஆருக்குப் பின்னர் கட்சி, ஜெயலலிதாவால் காக்கப்படும் எனத் தொண்டர்கள் நம்பினர். அவ்வாறே நடந்தது. கட்சி காப்பாற்றப்பட்டு தமிழகம் மரணப்படுக்கையில் வீழ்ந்தது.
இந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தொண்டர்கள் ஆதரவு ஒன்றே ஜெயலலிதாவைக் காப்பாற்றிவிடவில்லை. பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு, சமூகரீதியான அனைத்துப் பாதுகாப்பும் எல்லா மட்டத்திலும் அளிக்கப்பட்டது. கருணாநிதியின் ஊழல் வெறுக்கப்பட்ட அளவுக்கு ஜெயலலிதாவின் ஊழல் வெறுக்கப்படவில்லை; கருணாநிதியின் வன்முறைகள் விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ஜெயலலிதாவின் வன்முறைகள் விமர்சிக்கப்படவில்லை. கருணாநிதியின் நலத்திட்டங்கள் கண்டுகொள்ளப்படாதபோது, ஜெயலலிதாவினுடையவை கொண்டாட்டப்பட்டன. அவர் செய்த எல்லா குற்றங்கள் மற்றும் தவறுகளில் இருந்து, அவரது சமூகத் தகுதி அவரைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது. மக்கள் ஆதரவையும் சமூகத் தகுதியின் பலத்தையும் நெருப்பாற்று அனுபவங்களையும் வைத்து, அவர் ஒரு நல்லாட்சியை வழங்கியிருக்க முடியும். மாறாக, ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வந்த பின்னரும் அவர் தமிழக மக்களை நெருப்பாற்றில் நீந்தவிட்டார். ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற ஜெயலலிதாவின் முழக்கம், அவர் இருந்தபோது பகடி செய்யப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அதுவே அவரது கொள்கை முழக்கமாகப் போற்றப்படுகிறது. உண்மையில் ‘அதிகாரத்தால் நான்; அதிகாரத்துக்காகவே நான்’ என்பதே இந்த ‘இரும்புப் பெண்மணி’யின் அகக்குரல் என்பதை அகச்சான்றுள்ள சமூகம் மறுக்காது.
தமிழ்ச் சமூகம் எதையெல்லாம் மறக்க விழைந்திருக்கிறது என்ற பட்டியல் பயங்கரமானது. ஊழல், அத்துமீறல், ஆதிக்கம், அராஜகம், சீர்கேடுகள், செயலின்மை, சாதி அரசியல், மதப் பிரிவினைவாதம், வன்மம், பழிதீர்த்தல்…! அ.தி.மு.க கொடியின் கரையிடப்பட்ட வெண்புடவையில் வலம் வந்த ஜெயலலிதாவை முதல்வரான பின்னர் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் உடல் முழுவதும் நகைகளோடும் பட்டுப்புடவையிலும் பார்த்தபோது, இந்தச் சமூகமே வெறுப்புஉணர்வில் மருண்டது. வண்ணத் தொலைக்காட்சி ஊழல் வழக்குக்காக செய்யப்பட்ட ரெய்டில், அலிபாபா குகையில் கண்டதைப்போல தங்கமும் வெள்ளியும் காலணிகளும் புடவைகளும் கைக்கடிகாரங்களும் பிடிபட்டன. பேராசை மிகுந்த ஒரு பெண்ணாக, தமிழகம் அவரை நிராகரித்தது. 1991-96 ஆண்டுகள் வரையிலான காலத்தில் அவர் குவித்த சொத்துகள் மீதான வழக்குதான் மரணம் வரையிலும் அவரைத் துரத்தி வந்தது. அதற்குப் பின்னர் அவர் எவ்வளவோ சொத்துகள் குவித்திருந்தாலும் அந்த முதல் தவறின் வினை அவரை விடவில்லை. 1996-ல் தொடங்கி சுமார் 18 ஆண்டுகாலம் வழக்கை இழுஇழுவென இழுத்தடிப்பதற்கு, ஜெயலலிதா தனது பதவியையும் அதிகாரத்தையும் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தினார்; எத்தனை பேரை அதற்காகப் பழிவாங்கினார் என்பது ஒரு பெருந்துயர் வரலாறு. ஜெயலலிதா தனது குற்றங்களில் இருந்து தண்டனை பெறாமல் தப்பித்துக்கொண்டே இருந்ததைத்தான் ஃபீனிக்ஸ் பறவையின் உயிர்த்தெழுதலோடு ஒப்பிட்டு பலர் சிலாகிக்கின்றனர்.
2014-ம் ஆண்டு ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்புக் கூறப்பட்டு பரப்பன அக்ரஹாரச் சிறையில் அடைக்கப்பட்டபோது, தமிழகமே இழவு வீடாகவும், வன்முறைக் காடாகவும் மாற்றப்பட்டது. ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தும் அரசு நிர்வாகம் செயலிழக்கவைக்கப்பட்டது. அ.தி.மு.க அமைச்சர்கள் குமுறிக்குமுறி வாய்விட்டு அழுதபடி பொறுப்பேற்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தன் மூச்சை நிறுத்திக்கொள்ள நிர்பந்தப்படுத்தப்பட்டது. மக்களுக்காகவே நான் என்று சொன்ன ஜெயலலிதா, மக்களுக்காகவா இவ்வளவு சொத்துகளையும் குவித்தார்; மக்கள் நலனுக்காகவா சிறைக்குச் சென்றார்? ஆனால், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதும் அ.தி.மு.க-வினர் அவருக்கு, ‘மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள். பதவி பறிக்கப்பட்ட நிலையில்தான் அவர் மக்கள் முதல்வரெனில், பதவியில் இருக்கும்போது அவர் யாருக்கு முதல்வராக இருந்தார்..? அ.தி.மு.க-வினர் அம்மா விசுவாசத்தில் இந்த அடைமொழியை அவருக்குக் கொடுத்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பதவியை இழந்து தனக்குத் துயரம் நேரும்போது மட்டுமே ஜெயலலிதாவுக்கு மக்கள் நினைப்பு வந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு, சாதி/மத ஆதிக்க சக்திகளுக்கு, உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் மட்டுமே முதல்வராக இருந்து வழிநடத்தினார் என்பது அரசியல் நோக்கர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தேர்தல் பிரசாரங்கள் தவிர்த்து ஜெயலலிதா மக்களைச் சந்திப்பது அரிதிலும் அரிதான விஷயமாக, அவர் முதல்வரான பிறகு மாறிப்போனது. எம்.ஜி.ஆர் ஆட்சியில், சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது, கட்சியின் அனுமதியின்றித் தாமாகவே சத்துணவுக்கூடத்துக்குச் சென்று சோதனைசெய்த ‘அந்த ஜெயலலிதா’வின் ஊக்கத்தைத்தான் மக்கள் அவரிடம் எதிர்பார்த்து, ஒவ்வொரு முறையும் வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களைச் சந்திக்க விரும்பாத தலைவராக தன்னை உருவாக்கிக்கொண்டார். அரசுப் பொறுப்புகளில் இல்லாத, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக்கொண்டு நிழல் அரசாங்கத்தை நடத்தினார். அ.தி.மு.க ஆட்சி என்பது ஒருவழிப் பாதை. அந்தப் பக்கம் இருந்து மட்டுமே செய்திகள் வரும்; உத்தரவுகள் பறக்கும்.ஆனால், இந்தப் பக்கம் இடியே விழுந்தாலும் அது போய்ச் சேராது அல்லது போய்ச் சேரும் நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும்.
2015-ல் சென்னையில் உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்திற்குப் பின்னணியாக இந்த அவலமே இருந்தது. தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு உயர்ந்துகொண்டே போக, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முதல்வரைத் தொடர்புகொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்த செய்தி ஊரறிந்த ரகசியம். நிலைமை கைமீறிப் போகவே, ஏரி நீர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றித் திறந்துவிடப்பட்டது. வெள்ளத்தில் மாநகர் மூழ்கிய பின்னரும் அரசு நிர்வாகம் மிகத் தாமதமாகவே செயல்படத் தொடங்கியது. பல இடங்களில் மக்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை விரட்டி அடித்தனர். தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு வெள்ளத்தின் பாதிப்பைப் பார்வையிட வந்த ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து, ‘வாக்காளப் பெருமக்களே...’ என்று விளித்தார். இதுதான் ஜெயலலிதா. அவர் மக்களை எப்போதும் வாக்காளர்களாக மட்டுமே பார்த்தார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதுமானது. ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-தானே ஜெயித்தது என விசுவாசிகள் வாதிடுவார்கள். உண்மைதான்.
இண்டு இடுக்கெல்லாம் ஊழல் மலிந்த இந்தியா போன்றதொரு நாட்டில், பலமுறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை ஒரு சாதனை எனக் கருத முடியாது. பெரும்பணமும், பலவகையான அதிகாரமும் யாரை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்தலாம். பிரிவினை வாதங்களையும் ஊழலையும் விரும்பி அனுமதிக்கும் அறியாமை மிகுந்த சமூகத்தில், தலைமைப் பொறுப்புக்கு வருதலென்பது நேர்மையான வழிகளால் சாத்தியப்படக் கூடியது அல்ல. தேர்தல் வருகிறது, குறைந்தபட்சம் ஒரு சில ஆயிரங்களையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற அவலச்சூழலை உருவாக்கியதில் ஜெயலலிதாவுக்குப் பெரும் பங்கு உண்டு. அ.தி.மு.க பெருவெற்றி பெற்ற தேர்தல்களில் பணப் பட்டுவாடா செய்து பெற்ற வாக்குகள், நினைவில் இருந்து அழிக்கப்படுகின்றன. கடந்த தேர்தலின்போது இரண்டு கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட 500 கோடி ரூபாய் யாருடையது என்ற கேள்விக்கான பதில், ஜெயலலிதாவுக்கு முன்னரே புதைக்கப்பட்டுவிட்டது அல்லவா?
ஊழல் புரியவும் பேரதிகாரத்தை நிறுவவும் மதப்பிரிவினை வாதத்தையும் சாதி அரசியலையும் ஜெயலலிதா ஊக்குவித்ததை அரசியல் விமர்சகர்கள் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளனர். சாதிய, மதவாதங்கள் இரு தடிகளாக இருந்து தமிழகத்தின் சமூகநீதியை அடிஅடியென அடித்ததை இந்த 15-20 ஆண்டுகளில் எத்தனை முறை எதிர்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் பெரும் உற்சாகம் பெற்றன. கள்ளர் அமைப்புகளும், கவுண்டர் பேரவைகளும் வலுவடைந்தன. ‘நீங்க எல்லாம் வாழணும், நாங்க மட்டும் ஆளணும்’ என முழங்கிய சாதி இந்துக்களுக்குப் பக்கபலமாக ஜெயலலிதாவின் ஆட்சி இருந்ததைத் தமிழகம் மறக்கக் கூடாது.
முஸ்லிம்களின் ஆதரவுக்காக தமது அரசியல் வாழ்வின் பின்னாட்களில் இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்ளும் வழக்கத்தைக் கற்றிருந்தாலும், இந்துத்துவவாதிகளுக்கு அவர் அளித்துவந்த பேராதரவு மிக வெளிப்படையானது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து கரசேவகர்கள் அனுப்பப் பட்டனர். பாபர் மசூதி இடிப்பு ஒரு போற்றத்தக்க செயல் எனச் சிலாகித்தார் ஜெயலலிதா.
2002-ல் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்துத்துவ அமைப்பான சங் பரிவார் போன்றவற்றுடன் ஜெயலலிதா காட்டிய இணக்கமே பா.ஜ.க தமிழக அரசியல் களத்தில் வேரூன்றக் காரணமாக அமைந்தது. அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்காக அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்தனர். இருமுறை கூட்டணி வைத்து அடிவாங்கிய அனுபவத்தில்தான் 2016 தேர்தலில் பா.ஜ.க எத்தகைய நெருக்கடி கொடுத்தும் தனித்து நிற்கும் முடிவை எடுத்தார் ஜெயலலிதா. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கு முடிவை எட்டிக் கொண்டிருக்கும் முக்கியமான காலகட்டத்தில், வெற்றியைப் பணயம் வைக்கும் எந்த அபாயத்துக்கும் துணிய அவர் தயாராக இல்லை.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பக்குவமான அஞ்சலியைச் செலுத்தியது. அ.தி.மு.க-வினர் மற்றும் தமிழக மக்களின் வேதனையை தி.மு.கவினரும் பகிர்ந்துகொண்டனர். ஆனால், வாழ்வின் கடைசி நிமிடங்கள் வரை தி.மு.க-வையும் கருணாநிதியையும் வெறுத்தார் ஜெயலலிதா. அது போட்டியாளர் என்ற அடிப்படையிலான வெறுப்பு மட்டுமல்ல; ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக தி.மு.க-வினரால் அவர் எதிர்கொண்ட அவமானங்கள் மூட்டிய நெருப்பும் ஒரு காரணம். அந்த நெருப்பு, கடைசி வரையிலும்கூடத் தணிய வில்லை. கருணாநிதி எந்தத் திட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை ஒழிப்பதையும் முடக்குவதையும் ஜெயலலிதா தனது அரசியல் கொள்கையாகக் கொண்டிருந்தார். சமச்சீர் கல்வி, ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவை பட்டபாட்டை தமிழகம் நன்றாகவே அறியும். மக்கள் வரிப்பணமான பல நூறு கோடி செலவழித்துச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்களை நாசம் செய்தார். அதிலும் ஆசியாவின் மிகப் பெரியதான அண்ணா நூலகத்துக்கு நேர்ந்த கதி, அறிவுச் சமூகத்தின் பெரும் வயிற்றெரிச்சல் வேதனை.
சொத்துக் குவிப்பு, சமூக அரசியல் தளத்தில் பிடிக்காதவர்களைப் பதம் பார்த்த பொடா, அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கிய எஸ்மா, டெஸ்மா, தர்மபுரி பேருந்து எரிப்பு எனத் தொடங்கி கருணாநிதியின் நள்ளிரவுக் கைது, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல், மாற்றுத்திறனாளிகள்மீது தாக்குதல், வீரப்பன் தேடுதல் வேட்டை, ஈழ இனப்படுகொலை குறித்த அலட்சியம் என வளர்ந்து, மின்வெட்டு, மக்கள் போராட்டம் வலுத்த போதும் டாஸ்மாக் கடைகளை மூடாதது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்தக் கவலையுமின்றி, காவல்துறையை மக்களுக்கு அல்லாமல் தன் சேவைக்கு மட்டுமே பயன்படுத்தியது; இயற்கை வளங்களைச் சூறையாட மாஃபியாக்களை அனுமதித்தது; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள்; செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பு; செயலற்ற நிர்வாகம் என இத்தனைக்கும் மத்தியில் வளர்ந்ததுதான் ஜெயலலிதா என்பவரின் அடையாளம்.
இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டால், அது ஜெயலலிதாவையே புறந்தள்ளுவதற்குச் சமம். அவர் தனது பொறுப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் எப்போதும் விலகியே நின்றிருந்தார் என்றாலும் ஒரு வித்தையால் அவர் மக்களைச் சுலபமாகக் கையாண்டார். அடித்தட்டு மக்களுக்குக் நலத்திட்டங்களையும், நடுத்தர மக்களுக்கு ஊழலையும் உயர் வகுப்பினருக்குக் கூடுதலாக அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தார். அந்தந்தப் பிரிவினர் அதனதனோடு சமரசமடைந்தனர். இந்த மூன்றிலும் வலுத்தது மட்டுமே வாழும் என்பதால், எல்லோருமே வலுத்தவர்களாகப் போராட வேண்டியிருந்தது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அரசு என ஒன்று இருக்கிறதா, இல்லையா என அறியும் துடிப்பு நீக்கப்பட்டது.
உரிமைகளுக்கும் சலுகைகளுக்குமான வேறுபாட்டை அறியாத சமூகம் தாலிக்குத் தங்கம், லேப்டாப், சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் போன்ற சலுகைகளில் மயங்கி நின்றது. அந்த மயக்கத்தை ஜெயலலிதா சரியாக அறுவடை செய்தார்; செய்து கொண்டே இருந்தார். ‘ஏன் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன? ஏன் எங்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது? ஏன் அரசு மருத்துவ மனைகளில் தரமான சுகாதாரம் வழங்கப் படவில்லை? ஏன் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை? ஏன் என் ஊருக்கு சாலை வசதியே இல்லை?’ என்றெல்லாம் மக்கள் கேட்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் என்ன பொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக தனக்கான ஒரு நற்பெயரை அவர் தக்கவைத்துக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெறவே கட்சிகள் கண்கவர் இலவசப் பொருட்களை வழங்குகின்றன. நியாயப்படி கட்சி நிதியிலிருந்தே இலவசங்கள் வழங்கப்பட வேண்டும்; மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் வசதிகளும் செய்துதரப்பட வேண்டும். ஜெயலலிதா, மக்கள் வரிப்பணத்தை சில ஆண்டுகளே பயன்படும் பொருட்களுக்கு வாரி இறைத்ததோடு, விலையில்லாப் பொருட்கள் வழங்குவதற்காக மதுச்சீரழிவை நியாயப்படுத்தவும் செய்தார். ஆண்டுதோறும் டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் சுமார் 25 ஆயிரம் கோடிகள் இல்லாவிட்டால், இந்த நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் என அ.தி.மு.க அரசு, மக்கள் போராட்டங்களுக்கு மத்தியிலும் சசிபெருமாள் போன்றவர்களின் உயிர்த் தியாகத்துக்கு இடையிலும் மது விற்பனையை அதிகரித்தது.
குடும்பம் இல்லாமல், வாரிசு இல்லாமல் தனியாக ஒரு பெண், கருணாநிதி போன்ற பலம்மிக்க, அரசியல் சாணக்கியத்தில் தேர்ந்தவரோடு ஒற்றைக்கு ஒற்றை எதிர்த்து நிற்பது, ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் துவண்டு கொண்டிருந்த தமிழகத்துப் பெண்களிடையே ஜெயலலிதா ஆதரவு உளவியலை ஓரளவுக்குக் கட்டமைத்திருக்கலாம். அதற்காகவெல்லாம் ஜெயலலிதா பெண்ணுரிமைப் போராளியாகிவிட மாட்டார். ஜெயலலிதாவின் ஆதிக்கப்பண்பை, பெண்ணியம் எனக் குறிப்பிடும் அவலம்கூட அண்மையில் நடந்தது. ஒரு பெண்ணாக பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்ட ஜெயலலிதா, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பழங்குடியினப் பெண்களைக் கொடூரமான முறையில் பலாத்கார வதை செய்த காவலர்களுக்குப் பெரும் பரிசுப் பொருள்கள் அளித்து கௌரவித்தார். சிறப்பு அதிரடிப்படையின் வதைகூடங்களில் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, சித்திரவதைக்கு ஆளான பழங்குடிப் பெண்களின் கதறலும் மனித உரிமைப் போராளிகளின் கூப்பாடுகளும், ஜெயலலிதாவின் சர்வாதிகாரச் செவிகளில் விழவே இல்லை. 1992-ல் ஜெயலலிதா ஆட்சியில் காவல் துறை மற்றும் வனத் துறையினரால் 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வாச்சாத்திக் கொடுமை, அவர் ஒரு பெண்ணாக எவ்வளவு ஓர்மையுடன் இருந்தார் என்பதற்கான ஆதாரம். சுமார் 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதி துடைத்தெறியப்பட்டது.
ஆதிக்கம் என்ற உணர்வுக்குப் பால் பேதம் இல்லை. அது ஆணுக்கும் வரும், வாய்ப்புகள் கிடைக்கும்போது பெண்ணுக்கும் வரும். ஆணுக்கு வந்தால் சர்வாதிகாரமாக, பெண்ணுக்கு வந்தால் கம்பீரம் அல்லது தலைமைப் பண்பாகக் கருத முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரசின் உயர் பொறுப்புகளில் இருப்போரையும் காலில் விழவைத்ததும் வாகனத்தின் டயரைப் பார்த்து கும்பிடவைத்ததும், ஹெலிகாப்டரில் பறக்கும்போதும் கீழே வணங்கி நிற்கவைத்ததும் ஜெயலலிதா என்ற ஆதிக்கவாதியின் அதிகாரப் பக்கங்கள். நினைத்தால் யாரையும் பொறுப்பில் அமர்த்துவது, யாரையும் பதவியில் இருந்து தூக்கியடிப்பது என்றிருந்த சர்வாதிகாரத் தலைமையின் கீழ், அரசு உயரதிகாரிகளும் அமைச்சர்களும் அஞ்சி அஞ்சியே காலத்தைத் தள்ளினர்.
ஒற்றை நபராக நடத்திய ராஜ்ஜியத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்களைப் பற்றி ஜெயலலிதா துளி அக்கறையும் கொண்டிருக்கவில்லை. அ.தி.மு.க என்ற திராவிட இயக்கம் தனக்குப் பின்னரும் நீடிக்க வேண்டுமென அவர் நினைத்திருந்தால், இணை, துணை அளவுகளில் தலைவர்களை கட்சிக்குள் வளர்த்தெடுத்திருக்க முடியும். தனது உடல்நிலை பற்றி அறியாதவர் அல்ல அவர். தனக்குப் பின்னர் எப்படியும் போகட்டும் என்ற மனநிலையில்தான் ஜெயலலிதா எப்போதும் இருந்தார்.
மக்களோடு கலக்காமல், மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காமல், மக்களிடமிருந்து வெகு தொலைவுக்கு விலகி, தன்னை மிக மிகத் தனிமைப்படுத்திக்கொண்டார். பொது வாழ்க்கையில் இருப்போர் ஓரளவுக்கேனும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். அதிலும் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் தலைவர், தனது எல்லா விஷயங்களையும் ரகசியமாக வைத்துக் கொள்வது எப்போதுமே ஆபத்தானது. ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்ல வேண்டுமெனில், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை மிக வெளிப்படையானது. அவரது குடும்பச் சண்டைகளும் வெளிப்படையானவை. அவரது நண்பர் யார், பகைவர் யார், துரோகி யார் போன்றவை ஏறக்குறைய இந்தச் சமூகம் அறிந்ததே. அவரது உடல் ஆரோக்கியத்திலும் ரகசியங்கள் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கை மர்மமும் ரகசியங்களும் நிறைந்தவை. முதல்வரான பிறகு, அவர் தன்னை ரொம்பவே முடக்கிக்கொண்டார். வீட்டில் அவர் எப்படி இருப்பார்; அவருடைய அன்பிற்குரியவர்கள் யார்; அவரது பொழுதுபோக்குகள் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. போயஸ் கார்டன் நட்சத்திர வசதிகொண்ட சொகுசு சிறையாக இருந்திருக்குமோ என்றுகூட இப்போது பேசப்படுகிறது. அந்த அளவு ரகசியங்கள். மர்மமாக வாழ்வோரின் மரணமும் பெரும்பாலும் மர்மமாகவே முடியும். ஜெயலலிதாவுக்கு அதுதான் நடந்திருக்கிறது.
பொதுவாக, மர்மங்கள் மக்களைப் பெரிதும் ஈர்க்கின்றன. அதனால்தான் ஊடகங்கள் மர்மம் நிறைந்ததாகச் செய்திகளைக் கட்டமைக்கின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதிவரையிலான கண்ணாமூச்சியில் எல்லோருக்குள்ளும் ஒருவித ஆர்வக் கிளர்ச்சி தோன்றியிருந்தது. முடிச்சுகளை அவிழ்க்கும் சுவாரஸ்யத்தை தன்னளவில் தேடிக்கொண்டிருந்தவர்கள், மரணம் அறிவிக்கப்பட்டதும் மர்மத்தை அருகே பார்க்கும் ஆர்வத்தோடு கிளம்பிவந்தனர். கேமராக்கள் இருந்த திசை தவிர்த்து எல்லா பக்கங்களும் மர்மத்தைப் பற்றித்தான் பேச்சிருந்தது. ஆனால், யாரும் கேள்வி கேட்கவில்லை. இதுதான் இன்றைய சமூக எதார்த்தம். அடுத்தடுத்த பரபரப்புகளில் எல்லாவற்றையும் செரித்து, ‘அடுத்து என்ன’ என்று கேட்கும் காலச் சூழலில், ஜெயலலிதாவும் கடந்துபோய்விடுவார்.
ஜெயலலிதா ரசிக்கப்பட்டவர். அவரது தனிப்பட்ட திறமைகளுக்காக, முக மதிப்பீட்டுக்காக, எதிர்த்து நிற்கும் பண்புகளுக்காக! ஆனால், மக்களால் நேசிக்கப்பட்டவரா, மதிக்கப்பட்டவரா என்றால், அந்தக் கேள்விக்கு நேர்மையான பதிலைத் தமிழகம் கண்டறிய வேண்டும். இரண்டுக்குமே கூட்டம் திரளும், ஆனால், ரசிப்புக்கும் நேசிப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜெயலலிதாவின் இழப்புக்காக வருந்திய ஒட்டுமொத்த சமூகமும் அவரை ஏதொவொரு வகையில் அவரை ரசிக்கிறது என்பது நிச்சயம். ஆனால், நேசிக்கிறதா? ‘அதிகாரத்தால் நான், அதிகாரத்திற்காகவே நான்’ என வாழ்ந்து முடித்திருக்கும் ஜெயலலிதாவின் அரசியலை நேர்மையாக விவாதிக்க வேண்டியது தமிழகத்தின் கடமை. குற்றமும் குறைகளும் நிறைந்த ஒருவரை, அப்பழுக்கற்றவராகப் புனிதப்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியத்துக்கும் எதிர்காலத்துக்கும் செய்யும் துரோகம். ஜெயலலிதாவின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட அரசியல் பெருவாழ்க்கையே பேசப்பட வேண்டும். தமிழக அரசியலை தூய்மைப்படுத்த அதுவே பயனளிக்கும்.
உண்மைகள் வலிக்கும்தான் என்றாலும் வரலாறு திரிக்கப்படக் கூடாது, அதுவும் சமகாலத்திலேயே!
-ஜெயராணி
நன்றி: விகடன் தடம், ஜனவரி 2017