வெள்ளி, மார்ச் 15, 2013

அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!


'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி  போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி  உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்... சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 
அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல'' என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து,  பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
  
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்'' என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?


Courtesy: Ananda Vikatan

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

நாய்க்குப் பேரு வெச்சீங்களே, சோறு வெச்சீங்களாடா?’- இது காமெடி.

'இலவசமா டி.வி. கொடுத்தீங்களே, மிக்ஸி குடுத்தீங்களே... கரன்ட் கொடுத்தீங் களா?’ - இது டிராஜெடி.

இப்போது இன்னமும் அழுத்தமாக முகத்தில் அறைகிறது, மின் கட்டணஉயர்வு. அதுவும் கொஞ்சநஞ்சம் இல்லை... 37 சதவிகித மின் கட்டண உயர்வு!

''கரன்ட் வர்றதே ரொம்பக் குறைவு. ஆனா ரேட்டைக் கூட்டி, நாம கட்டுற பணத்தை மட்டும் குறையாமப் பார்த்துக்கு றாங்க போலருக்கு!'' என்ற கடைக்கோடித் தமிழனின் வேதனை மொத்தத் தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்.

எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரிய வில்லை. ''அது வந்தாலும் ஒண்ணுதான் வராட்டின்னாலும் ஒண்ணுதாங்க. காலை யில 8 மணிக்கு டாண்ணு போகுது. அவசர அவசரமா வேலைகளை முடிச்சுட்டு நிமிர்ந்து உட்கார்ந்தா, கொஞ்ச நேரம் வருது. அப்புறம் 11 மணிக்கு மறுபடியும் போயிருது. பகல் எல்லாம் புழுக்கத்துல வெந்து சாகணும். அப்புறம் வெயில் தாழ 4 மணிக்கு வரும். அதுக்குள்ள புருஷன், புள்ளைங்கல்லாம் வீட்டுக்கு வந்திருமேனு மறுபடியும் வீட்டு வேலைகளை ஆரம்பிக் கணும். ராத்திரி தூங்கலாம்னா, அப்பவும் நாலு மணி நேரம் நிறுத்திடுறாங்க. இந்த கரன்ட் கட்டால வீட்டுல உள்ள பொம்ப ளைங்க படுற அவஸ்தை, ரொம்பக் கொடுமை!'' என்று நீங்கள் புலம்பியிருக்கக் கூடும் அல்லது அந்தப் புலம்பலை நெருக்கத்தில் கேட்டிருக்கக் கூடும். குடும்பஸ்தர்கள், தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வேட்டுவைக்கி றது மின்வெட்டு. 'இந்தப் பிரச்னை எப்ப தான் தீரும்?’ என்ற கேள்விக்குப் பதில் அறிய, இந்தப் பிரச்னை எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மின் வாரியத்தில் பணிபுரிந்தவரும் தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவருமான சா.காந்தியுடன் பேசினேன். ''தொண்ணூறுகளில் தமிழ்நாடு மின்மிகு மாநிலம். நம் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்தோம். அப்போது மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராகக்கொண்ட மத்திய அரசு, பொதுத் துறையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கான அனுமதியை முடக்கியது. தனியார் மின் உற்பத்தியை ஊக்குவித்தது.

இதனால், தனியார் மின்சாரத்தை மாநில மின்சார வாரியம் விலை கொடுத்து வாங்கத் தொடங்கியது. இதற்கு இடையே திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, நோக்கியா, செயின்ட் கோபியன், பாக்ஸான் போன்ற பிரமாண்ட நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாநிலம் முழுக்க முளைத்தன. இவை அனைத்தும் அசுரப் பசியோடு மின்சாரத்தைக் குடிக்க ஆரம்பித்தன. மறு பக்கம் பொதுமக்களின் மின் பயன்பாடும் அதிகரித்தது. இரு தரப்புகளின் தேவையையும் நிறைவு செய்ய முடியாமல் மின்சார வாரியம் தடுமாற ஆரம்பித்தது. பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கியே ஆக வேண்டும் என்பது அரசாங்கமே ஒப்புக்கொண்ட ஒப்பந்தம்.

தேவையான அளவுக்கு மின்சாரம் இருக்கிறதா, தர முடியுமா என்பதை எல்லாம் யோசிக்காமல் போடப் பட்ட இந்த ஒப்பந்தங்களால் மின்சார வாரியம் தடுமாறிப் போனது. வேறு வழியே இல்லாமல், தனியாரிடம் ஒரு யூனிட்டுக்கு 14 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி, 3.50 ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விற்றால் நஷ்டம் வருமா, வராதா? வந்தது! தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய மொத்தக் கடன் 53,300 கோடி ரூபாய். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கோ ஒப்பந்தப்படி தடையில்லா மின்சாரம் கொடுத்தாக வேண்டும். ஆகவே, இருக்கும் மின்சாரத்தில் அவர்களுக்குக் கொடுத்தது போக மீதி உள்ளதை மக்களுக்கு மின் வெட்டுடன் பகிர்ந்து தருகிறார்கள். திடீரென மின்வெட்டு அதிகரித்து வருவதன் பின்னணி இதுதான்!'' என்கிறார் காந்தி.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2 கோடி டி.வி-க்கள் இருக்கின் றன. இவை நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 மெகா வாட் மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. இப்படிப் பொருளாதார வளர்ச்சியினால் மக்க ளிடம் அதிகரித்து இருக்கும் மின்னணுப் பொருட்களின் பயன்பாடு, மின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு இவை எல்லாம் இதர காரணங்கள். மனிதர்கள் செய்துவந்த பல வேலைகளை இன்று இயந்திரங்கள்தான் செய்கின்றன. அவை அனைத்தும் அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவையே.

இந்த விவகாரம்பற்றிப் பேசிய தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், ''வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் வேலைவாய்ப்பு. ஆனால், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களை விட, இங்கு உள்ள சிறு, குறு தொழில்களின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள்தான் அதிகம். இத்தனைக்கும் பெருநிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தருவதாக சொல்லி வாட்ச்மேன் களாகவும் கூலித் தொழிலாளிகளாகவும்தான் நம் ஆட்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், எங்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம் பவர் கட். அவர்களுக்குத் தடையில்லா மின்சாரம். கோவையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிறு, குறு தொழில்களைவிட்டு வெளியேறிவிட்டனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இழந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்!'' என்று எச்சரிக்கிறார்.

இந்த மின்வெட்டு பல்வேறு எதிர்பாராத திசைகளில் மக்களுக்குப் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. கோவை மின் மயானத்தில் பிணங்கள் எரிந்துகொண்டு இருக்கும்போதே பாதியில் மின்சாரம் போய்விடுவதால், கேஸில் இயங்கும் வகையில் மயானத்தை மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக இன்குபேட்டரில் வைத்து இருக்க வேண்டும். மின் தடையால் அதிலும் சிக்கல். ''அன்னைக்கு ஒரு கல்யாணம். கரெக்ட்டா தாலி கட்டுற நேரத்துல கரன்ட் போச்சு. உடனே, ஜெனரேட்டர் போட்டாச்சுனு வைங்க. இருந்தாலும், எல்லாரும் அதை ஒருகெட்ட சகுனமா நினைச்சு முகம் சுருங்கிப்போயிட்டாங்க!'' என்றார் நண்பர் ஒருவர். இப்போதெல்லாம் பெண் பார்க்க/மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்பவர்கள் மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்துதான் செல்கின்றனர்.

கோவை பஞ்சாலைகள் சிலவற்றில் நடப்பதாகச் சொல்லப்படும் செய்தி அதிர்ச்சியானது. ஒரு ஷிஃப்ட்டில் மின்வெட்டு ஆகும் நேரத்தின் பணியை அடுத்த ஷிஃப்ட்டில் சேர்த்துப் பார்த்துக் கழிக்க வேண்டும். இதனால் ஒரு தொழிலாளி 12 மணி நேரம், 15 மணி நேரம் தொழிற் சாலையில் இருக்க வேண்டி இருக்கிறது. இப்படி யூகிக்க முடியாத திசைகளில் இருந்தெல்லாம் மின்வெட்டு பிரச்னை களை ஏற்படுத்திவருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுக்கப் பல்லாயிரம் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் ஷாப்பிங் மால்களும் முளைத்து உள்ளன. மக்களின் மின்உபயோ கமும் ஏ.சி. பயன்பாடும் அதிகரித்து உள்ளது. ஆனால், பொதுத் துறை மின் உற்பத்தி மட்டும் அப்படியே இருக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் முதல்வர் ஜெயலலிதா சில மின் உற்பத்தித் திட்டங்களை அறிவித்துஇருக்கிறார். அவை எல்லாம்செயல்பாட் டுக்கு வர மேலும் சில மாதங்களோ, வருடங்களோ பிடிக்கும். கோடை காலம் நெருங்கிவருகிறது. ஏ.சி. மெஷின்கள் முழு வீச்சில் திறக்கப்பட்டால், இந்த மின்வெட்டு இன்னும் கூடுதலாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

இந்திய மின்சாரச் சட்டத்தை 1948-ல் கொண்டுவந்த அம்பேத்கர், 'மின்சாரம் ஓர் அத்தியாவசியத் தேவை. அதை லாப நோக்கின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றார். ஆனால், 2003-ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு அந்த சட்டத்தை மாற்றி, 'கல்வி, மருத்துவம்போலவே மின்சாரமும் ஒரு விற்பனைப் பொருளே. அதை மக்களுக்கு மானிய விலையில் தரத் தேவை இல்லை. மின்சாரத்தின் விலை சர்வதேசச் சந்தை விலையுடன் அமைந்திருக்க வேண்டும்!’ என்று புதிய மின் சட்டத்தை இயற்றியது.

மின்சாரத்தை ஓர் இயற்கை வளமாக, அடிப்படைத் தேவையாகப் பார்க்காமல், பணம் உள்ளவன் பயன்படுத்தும் பண்ட மாகப் பார்ப்பதன் விளைவுதான், நிறுவனங் களுக்குத் தடையில்லா மின்சாரமும் மக்களுக்குத் தாள முடியாத மின் வெட்டும்!

=பாரதிதம்பி

நன்றி: ஆனந்தவிகடன், 11.04.2012