திங்கள், அக்டோபர் 06, 2008

அத்வானி-மோடி-கலாம்... வலதுசாரி அரசியலின் மூன்று முகங்கள்

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

பா.ஜ.கவின் சூலாயுதத்தின் மையத்தில் இருப்பது அத்வானியின் புதிதாக மேக்கப் போட்டு தயார் செய்யப்பட்ட சாத்வீகமான முகம். இன்னொரு வாஜ்பாயியாக தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை மக்களும் நம்ப வேண்டும் என்பதற்காக தசாவதாரம் கமல் போல என்னவோ செய்து, கமலைப் போலவே மண்ணைக் கவ்வி வருகிறார் அவர்.

தன்னை வாஜ்பாயியாக பாவிக்கும் போது அத்வானியாக இருக்க இன்னொருவர் வேண்டுமே! அதனால் தன்னையே மிஞ்சிய தனது இந்துத்துவ வாரிசான நரேந்திர மோடியை கலவர பேக்டரியின் சி.இ.ஓவாக நியமித்திருக்கிறார். சூலாயுதத்தின் இரண்டு முகங்கள் தயார்; மூன்றாவது? அதற்கான சரியான முகத்தை தேடி வந்தவர்களுக்கு இதோ இருக்கிறேன் என்று தனது பயங்கரவாத எதிர்ப்பு கருத்தை தெரிவித்தார் அப்துல் கலாம்.

இன்று இந்தியா சந்திக்கும் முக்கியமான பிரச்சனை பயங்கரவாதம் என்று கூறியிருக்கிறார் கலாம். இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் கரிசனம் எடுத்துக்கொள்ளும் கலாம் இந்தியா நியாயமாக சந்திக்கும் பிரச்சனையைப் பற்றி பேசினால் என்ன தவறு என்று கேட்காதீர்கள். என்ன சொல்கிறீர்கள் என்பதைவிட என்ன சூழலில் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். கொஞ்ச நாளாகவே பயங்கரவாதம்தான் முக்கிய பிரச்னை என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக பொது மக்களை திரட்டவும் முயன்று வருகிறது. அதை இந்தத் தேர்தலில் தனது வெற்றிக்கான துருப்புச் சீட்டாகவும் கருதுகிறது. இந்தச் சூழலில் கலாம் இவ்வாறு சொன்னது நிச்சயம் பா.ஜ.கவுக்கு சாதகமான, காங்கிரசுக்கு எதிரான விஷயம். இந்த அறிவிப்பு வந்த சில தினங்களிலேயே கலாமுக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அதை ஊடகங்களிடம் வெளியிடுகிறார் அத்வானி. "பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்த நீங்கள்தான் சரியான நபர். கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒன்று சேருங்கள்." எங்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்யுங்கள் என்றே அத்வானி நேரடியாக கேட்டிருக்கலாம். இந்தக் கடிதத்தின் அர்த்தம் அதுதான்.

பயங்கரவாத எதிர்ப்பை தாங்கள் பேசுவதைவிட ஒரு முஸ்லிமான, அரைவேக்காட்டு அறிவையும் மதிப்பீடுகளையும் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் செல்லப் பிள்ளையான அப்துல் கலாம் பேசுவது மிகவும் பொருத்தமானது என்பது அவர்களின் கணக்கு.

ஆனால் அத்வானி கேட்பதை செய்யுமளவுக்கு கலாம் அப்பாவியல்ல. தனது இஸ்ரோ நாட்களிலேயே திறமைவாய்ந்த ' நடைமுறைவாதி' என்றுதான் கலாம் விவரிக்கப்பட்டிருக்கிறார். அதனால் பா.ஜ.க ஜெயிக்கும் முன்பே தனது அரசியல் சார்பற்ற பிம்பத்தை அவர் சிதைத்துக்கொள்ள மாட்டார்.

"பயங்கரவாதம்தான் முக்கியமான பிரச்சனை என்று சொல்லி நான்தான் பந்தை உங்களுக்காக செட் செய்து கொடுத்துவிட்டேனே!" என்று அவர் சொல்லக்கூடும். ஒரு வேளை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்த உதவிக்காக கலாமுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு தரக்கூட பா.ஜ.க முன்வரலாம். தங்களது இன அழித்தொழிப்பு அரசியலை மறைக்கும் முகமூடிக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அது போன்ற பேரம் முன்வைக்கப்பட்டால் கலாம் அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி என பல பொறுப்புக்கள் அவருக்கு பா.ஜ.க மூலம்தான் கிடைத்தன. சமீபத்தில் அமெரிக்க அணு சக்தி பேரத்தை கலாம் ஆதரித்ததுகூட காங்கிரஸ் சார்பு விஷயம் என்று கருத முடியாது. அணு ஒப்பந்தத்தை தொடங்கி வைத்ததே பா.ஜ.கதானே.

பெரிய அணு குண்டு முதலிய எல்லாமே வலது அரசியலின் பகுதி என்பதால் கலாம் அணு பேரத்தை ஆதரித்ததும் பா.ஜ.கவின் அணு சக்தி எதிர்ப்பு பாசாங்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. கலாம் அதை ஆதரித்த பிறகு கூடிய பா.ஜ.க கூட்டத்தில் அணு பேரத்தை நாம் எதிர்க்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பாதி பேர் கூறியது, அவர்களது நீண்ட கால திட்டத்தில் கலாமுக்கு முக்கிய இடம் ஒதுக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


கலாம் போன்றவர்களை முன்னிறுத்திவிட்டு, பா.ஜ.கவினர் திரைமறைவில் நடத்த நினைக்கும் இந்துத்துவ வேட்டைகளை ஏற்கனவே குஜராத்தில் தொடங்கி வைத்துவிட்டார் மோடி. குஜராத் இன அழித்தொழிப்புக்கு சாக்கு போக்காக பயன்படுத்தப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பற்றி எரிந்த விவகாரம் குறித்த நானாவதி கமிஷனனின் அறிக்கையை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் மோடி.

சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிந்ததற்கு திட்டமிட்ட சதிதான் காரணம் என்று சொல்கிறது அந்தக் கமிஷனின் அறிக்கை. பக்கத்தில் இருந்து பார்த்தது போல யார் ரயிலின் பெட்டிகளுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ கொளுத்தினார்கள் என்றெல்லாம் முஸ்லிம்கள் சிலரின் பெயர்களை பட்டியலிடுகிறது அந்தக் கமிஷன். இன அழித்தொழிப்பை நிகழ்த்திய அதே இந்துத்துவ அரசு நியமித்த கமிஷன்தான் இது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசு நியமித்த யு.சி.பானர்ஜி கமிஷன் அறிக்கையோ அது வெறும் விபத்து என்கிறது. இரண்டு கமிஷன்கள் இரண்டு மாறுபட்ட அறிக்கைகளை கொடுத்திருப்பது நமது கமிஷன்கள் எந்த அழகில் இருக்கின்றன என்று காட்டுகிறது. எனினும் இந்த சமயத்தில் இந்த அறிக்கையை தாக்கல் செய்வது பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியலின் தந்திரத்தைக் காட்டுகிறது.

2,000 பேரை கொன்று குவித்த தங்களது செயலை 49 பேர் இறந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பற்றி எரிந்த விவகாரத்தை வைத்து நியாயப்படுத்துகிறது. இந்துத்துவ வாக்கு வங்கியைச் சேர்ந்த மதில் மேல் பூனைகளை மீண்டும் மதவாதம் நோக்கி இழுக்கும் முயற்சி என்றும் இதைப் பார்க்கலாம்.

பா.ஜ.கவின் தேர்தல் சூலாயுதம் இதோ பட்டை தீட்டப்பட்டு தயாராகிவிட்டது. மோடியின் இந்துத்துவ சாதனைகள் அளவிட முடியாதவை. மோடி முன்னிறுத்தப்படுவதால் இந்தியாவையே குஜராத் ஆக்கிவிடலாம் என்று பா.ஜ.கவின் இந்துத்துவ அடிப்படைவாதிகள் பாபர் மசூதி இடிப்புக் காலகட்டம் போல கடும் உற்சாகத்துடன் களமிறங்குகிறார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பை வெற்றிகரமாக கலாமுடன் தொடர்புபடுத்திவிட்டதால் காங்கிரஸ் ஏற்கனவே நடுக்கத்தில் இருக்கிறது. இனி நடுத்தர வர்க்க வாக்கு வங்கியை வளைத்துவிடலாம் என பா.ஜ.க உற்சாகமாக இருக்கிறது. இந்த வாஜ்பாயியின் முகமூடிதான் அத்வானிக்கு சரியாகப் பொருந்தவில்லை. எப்படிப் பொருத்திப் பார்த்தாலும் முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் மதவாத விகாரம் தெரிந்துவிடுகிறது. ரொம்பவும் மிதமாகிவிட்டீர்கள் என்று பா.ஜ.கவினரும் இதெல்லாம் மிதவாதமே அல்ல என்று பொது மக்களும் கருதுவது அத்வானியை மிகவும் குழம்பச் செய்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் கொடுத்த மூக்கறுப்பு போல இந்த விஷயத்திலும் அத்வானி தனது பேவரைட் ஜோதிடர்களை அணுகக்கூடும். ஆனால் ஜோதிடர்களுக்கு பிம்பங்களை உடைக்கத்தான் தெரியும்; பிம்பங்களை கட்டமைக்கத் தெரியாது. பாவம் அத்வானி.


-மாயா


நன்றி: உயிர்மை.காம்

ஞாயிறு, அக்டோபர் 05, 2008

மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள்

இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.

பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"

அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

கேரளாவில் சகீனா எனும் 16 வயது பெண், ஒரு விபச்சார விடுதியில் அடைத்து வைத்து, மிரட்டி பணியவைக்கப்பட்டு 18 மாதங்கள் வெவ்வேறு அரசியல்வாதிகள், அரசு உயர்அதிகாரிகளால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். காவல்துறையால் காப்பாற்றப்பட்ட சகீனா பெற்றோர் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போது, மாட்சிமை பொருந்திய ஒரு நீதிபதி இவ்வாறு அவதானித்து வழக்கை ரத்து செய்தார்: "புணர்ச்சிக்காக பணம் செலுத்தும் ஒரு ஆண் விருப்பமற்ற பெண்ணை நெருங்குவான் என்பதை நம்பமுடியாது; இத்தகைய நடத்தை கொண்ட (அதாவது வன்முறையால் பாலியல் தொழில் நடத்த வற்புறுத்தப்பட்ட) பெண்ணின் வாதம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுபடியான புனிதத்தன்மை படைத்ததல்ல".

இங்கே மனித உரிமை அடிப்படையில் இரண்டு அபத்தங்கள் உள்ளன. (1) பாலியல் தொழிலாளிக்கும் வன்புணர்ச்சியிலிருந்து தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதை ஒரு நீதிமன்றம் மறுப்பதே மிகப்பெரிய அநீதி. (2) பாலியல் ஒழுக்கத்திலிருந்து விலகியவர்களின் வாக்குமூலம் புனிதமற்றது என்று மறுப்பதன் மூலம் நீதிமன்றம் அவர்களை பொருட்படுத்த வேண்டாதவர்களாய் ஒதுக்கி வைக்கிறது. இவை மேரி மெக்தலின் மீது அன்று வீசப்பட்டவற்றில் இன்றும் மீதமுள்ள 2 கற்களே.

1972-இல் மகாராஷ்டிரா சந்திரபூர் மாவட்டத்தில் மாதுரா எனும் இளம்பெண் கன்பத் மற்றும் துகாராம் எனும் காவல்துறையினர் இருவரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். 1974-ஆம் ஆண்டு இவ்வழக்கில், ஒரு செஷன்ஸ் நீதின்மன்றம் மாதுரா "நடத்தை கெட்டவள்" என்றும், "பொய் சொல்கிறாள்" என்றும் கூறி, வன்புணர்ச்சியாளர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. அடுத்து மும்பை நீதிமன்றம் இந்த காட்டுமிராண்டித் தீர்பை தள்ளி வைத்து இரண்டு காக்கிக் குற்றவாளிகளுக்கும் தலா 5 மற்றும் 1 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்தது. பொறுங்கள், 'சபாஷ்' சொல்வதற்கு கதை இங்கும் முடியவில்லை. உச்ச நீதிமன்றம் கோதாவில் இறங்கி இரண்டு காக்கிகளையும் விடுவித்தது. வன்புணர்ச்சியின் போது மாதுரா கூக்குரல் எழுப்பவில்லை என்பதும், அவளுடலில் வெளிக்காயங்கள் இல்லை என்பதுமே நீதிபதி சொன்ன காரணங்கள்.

குழப்பமாக உள்ளதா? நீங்கள் இந்தியனாய் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்.

ஆனாலும் சில பாமர சந்தேகங்கள்: துப்பாக்கி முனையில் வன்புணர்ச்சி செய்யப்படும் பெண்ணுக்கு கூச்சலிடும் தைரியம் எங்கிருந்து வரும்?

துப்பாக்கி முனையில் கற்பழிக்கும் காக்கிச் சீமான்கள் என்ன பிளேடு பக்கிரிகளா வெளிக்காயங்கள் ஏற்படுத்த?

மேலும், நம்மூரில் காவல் வன்புணர்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடக சாகசங்கள் இன்னும் நிகழவில்லை. வன்புணர்ச்சிகள் பொதுமேடைகளிலல்ல தனியறைகளிலும், காவல் நிலையங்களிலுமே பெரும்பாலும் நடக்கின்றன (சட்டசபை மானபங்க முயற்சி குற்றசாட்டு வேறு தினுசு!). வன்முறை, மிரட்டல் மூலம் பணிய வைக்கப்பட்டு நடத்தப்படும் வன்புணர்ச்சியை நம் நீதிமன்றங்கள் ஒருபக்க சாய்வுடன் ஆணாத்திக்க சார்போடுதான் அணுகுகின்றன.

(1) கொலை வழக்குகளில் நிகழ்வது போல், கற்பழிப்பு வழக்குகளில் சூழ்நிலை சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறது? குற்றம் நடக்கும்போது பெண் கூச்சலிட வேண்டும், காயங்கள் பெற வேண்டும், நேரடி சாட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அடுக்கிக் கொண்டே போகும் நம் சட்டம் ஆணைப் பாதுகாப்பதில் குறியாய் உள்ளதை கவனிக்கலாம்.

(2) சட்டத்தின் நம்பிக்கையைப் பெற பாலியல் ஒழுக்கம் இத்தனை முக்கியமாய் உள்ளது ஏன்? ஒரு பாலியல் தொழிலாளி கற்பழிக்கப்படும் போது அது அவள் விருப்பப்படி நடப்பதாய் நீதிமன்றம் நாடகம் ஆடுவது ஏன்? பாலியல் ஒழுக்கம் = மதக்கட்டுப்பாடு என்பது தாண்டி உயிரியல் பின்னணியைப் பார்ப்பது மற்றொன்றைப் புரியவைக்கும். பழப்பூச்சி, சில பட்டாம்பூச்சி வகைகள் போன்று மனிதனும் தன் ரத்தவழியை கலப்பின்றி வைத்திருக்க ஒரு ஏமாற்று வித்தை வைத்திருக்கிறான்: கற்பொழுக்கம். பழப்பூச்சி புணர்ச்சிக்குப் பின் தனக்கான சின்ன அளவில் பெண்துணையின் புழையை புரதபொருள் கொண்டு அடைக்கும், அடுத்து வரும் ஆண்பூச்சியை தடுக்க. மனிதனோ பாலியல் ஒழுக்கம் பற்றிய கற்பிதங்கள் கொண்டு, கோடிக்கணக்கான ஆண் பெண்களை கட்டிப் போட்டிருக்கிறான். பாலியல் சட்டங்களை மீறுபவர்களுக்கு சமூகம் அடிப்படை மனித உரிமைகளை மறுத்து தள்ளி வைக்கும். இவர்கள் குப்பைத்தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைப் பொருட்கள் போன்று. யார் வேண்டுமானாலும் மிதிக்கலாம்.

ரத்தவழி சுத்திகரிப்பு பற்றிய ஆணின் நிரந்தர பதற்றம் தான் கற்பழிப்புச் சட்டங்களை ஒருதலை சார்பாய் இப்படி திருகி வைத்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநில மதுர்க்கர் vs. மர்திக்கர் வழக்கில் , நீதிமன்றங்களின் இந்த மனித உரிமை மீறல் போக்கை உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்துள்ளது.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூல உண்மையை வருணாசிரம முறைப்படி மறுத்த கொடுமையும் நடந்தது. பன்வாரி தேவி வழக்கில் நீதிபதி ஒருவர் பன்வாரி தேவி ஒரு தலித் என்பதால் அவரை ஒரு உயர்சாதி நபர் வன்புணர்ச்சி செய்திருக்க முடியாது என்று அபத்தமானதொரு தீர்ப்பு வழங்கினார்.

இந்தியாவில் பெண்களுக்கான நீதி ஆணாதிக்கவாதிகளால் செய்யப்பட்டு, ஆணாதிக்கவாதிகளாலே வழங்கப்படுகிறது. குரங்கு அப்பம் பங்கிட்டது போல்!

இங்கிலாந்து சட்டம் 'துளைப்பு வழி தாக்குதல்' எனும் குற்றமுறையை அடையாளம் காண்கிறது. இதன்படி குற்றவாளி ஒருவரது அனுமதி இன்றி அவரது புழை, வாய் அல்லது ஆசன வாயை உடலின் ஏதாவது பகுதி அல்லது பொருள் கொண்டோ துளைக்கும்பட்சத்தில் இக்குற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் குடுமி கலையாத நம் இந்திய பிற்போக்கு சட்டமோ நடைமுறை பாலியல் குற்றமுறைகளை கருத்தில் கொள்ளாமல், பெண்ணின் குறியைத் துளைப்பதை மட்டுமே வன்புணர்ச்சி என்று முரண்டு பிடிக்கிறது. 1997-இல் ஒரு 8-வயது பெண்குழந்தையை (பெயர், பிற விபரங்களை தவிர்ப்போம்) அவள் தந்தை புழை, ஆசனவாய், வாய் என மூன்று வழிகளில் வன்புணர்ச்சி செய்தார். சி.எஸ்.ஓ சாக்ஷி எனப்படும் பெண்கள் அமைப்பு இக்குழந்தையின் நீதிக்காக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தந்தை அக்குழந்தையை ஆண்குறியால் துளைப்பு செய்யவில்லை, ஆண்குறி நுழைப்பு மட்டுமே சட்டப்படி கற்பழிப்பு எனச் சொல்லி, வழக்கை தள்ளுபடி செய்தது.

கொஞ்சம் விலகி, மற்றொரு முக்கியமான கேள்வி. ஒருபால் உறவுகள் சட்டரீதியாய் அங்கீகரிக்கப்படாத நிலையில், ஒருபாலுறவாளர் மற்றொரு ஒருபாலுறவாளரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால் நீதிக்கு யாரிடம் செல்ல வேண்டும்?


சில ஒப்புமைகள்:

இங்கிலாந்து சட்டப்படி ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தது கணவனே என்றாலும் தண்டனை உண்டு. நம்மூரில் மனைவியை மண்ணெணெய் ஊற்றிக் கொளுத்தும் உரிமையே உள்ளபோது, கணவனது கற்பழிப்பு பொருட்படுத்தத் தகுந்த ஒன்றல்ல.

இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் பெண்ணின் வன்புணர்ச்சிக்கு துணை நிற்கும் மற்றொரு பெண்ணை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து சட்டம் இவர்களை குற்றவாளிகளாக கருதி விசாரிக்கும்.

பெண்கள் இந்தியாவில் ஒரு ஆணை கற்பழிக்கலாம். சட்டப்படி இத்தகைய கற்பழிப்பு செல்லுபடியாகாது. ஆண்களில் உடல் பலவீனர்கள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரது பாதுகாப்பின்மையை கருத்திற் கொள்கையில், கனடாவில் உள்ளது போல், இங்கும் கற்பழிப்புக் குற்றம் இருபாலாருக்குமானதாய் மாற்றப்படுவதில் தவறில்லை.

பாகிஸ்தானில் கற்பழிப்பு சட்டம் மேலும் பிற்போக்கானதுதான். கற்பழிக்கப்பட்ட பெண் நீதியைப் பெற, கற்பழித்தவர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது கற்பழிப்பை பார்த்த நான்கு ஆண்கள் சாட்சி சொல்ல வேண்டும். மான், முயலுக்கெல்லாம் சிங்கம் நீதி வழங்கிய கதைதான்.

ஒப்பிடுவதில் பயனில்லை. நமது ஆணாதிக்கவாத, பிற்போக்குச் சட்டங்கள் திருத்தப்படுமா? தர்மம் எப்படியும் வெல்லும் என்கிறது கீதை. அதை விடுங்கள், அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட நாம் இந்தியர்களுக்கு இல்லை. ஆனால் ஓட்டப்பந்தயத்தில் ஆமை எப்படியும் ஜெயித்து விடும் என்பதைத் தவிர.


-ஆர்.அபிலாஷ்


நன்றி: உயிர்மை.காம்