சனி, செப்டம்பர் 06, 2008

என்ன கொடுமை (கலைஞர்) கருணாநிதி இது?

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.
.
கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா?
.
ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா?
என்ன கொடுமை......
.
கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?
.
அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........
.
கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது.
.
அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது.
.
கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.
.
உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ?
என்ன கொடுமை.......
.
கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.
.
அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.
.
அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா.
.
அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.
.
ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை?
.
உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
.
அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......
.
கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி.
.
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா?
.
புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?
.
உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......
.
கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.
.
அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல்.
.
விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா?
என்ன கொடுமை.......
.
கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை.
.
ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை.
.
தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்?
.
ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?
.
மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை:
"இந்த ஆட்சியில் வாழ்வதை விட
சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால்,
சே.. மின்வெட்டாம்.''

.
பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.


-ஞாநி
நன்றி: குமுதம், 10-09-08

செவ்வாய், செப்டம்பர் 02, 2008

ஆட்சியில் தமிழினத் தலைவர் - சாக்கடையில் தமிழர்கள்!

மீள முடியா துயர் மிகுந்த வாழ்க்கை துப்புரவுப் பணியாளர்களுக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊதிய உயர்வும் நவீன வாழ்வும் மேல்தட்டினருக்கு வசப்பட்ட ஒன்றாக விரிந்து கொண்டிருக்கையில், துப்புரவுத் தொழிலாளருக்கு இன்றும் ஒரு மாதக்கூலி ஆயிரத்தைத் தாண்டவில்லை. கழிவுகளோடு மட்டுமே கழியும் பொழுதுகள் எப்போது முடிவுக்கு வருமென்ற ஏக்கம் கூட துப்புரவுப் பணியாளர்களுக்கு இல்லை. காரணம் அதுவொன்றுதான் அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் அதை அனுபவிக்கக்கூட துப்புரவுப் பணியாளர்களுக்குதான் எத்தனைத் தடைகள்? .
சென்னை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் 2025 தற்காலிகப் பணியாளர்களை, சூலை மாதம் பணி நிரந்தரம் செய்தது தமிழக அரசு. மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் 2ஆவது மண்டலத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி ஆணையிட்டுள்ளனர். ‘இங்கு பணியாற்றவே ஆட்கள் குறைவாக உள்ள போது, இங்கிருந்து பணியாளர்களை எப்படி மாற்றம் செய்யலாம்' என்று கவுன்சிலர்கள் மேயரிடமும், ஆணையரிடமும் கேள்வி எழுப்பியதால் தொழிலாளர்கள் தற்காலிகமாக அங்கேயே பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படாமலும் அங்கு சென்று பணியில் சேர முடியாமலும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விசாரிக்க பணியாளர்களை சந்தித்த போது, தங்கள் பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தனர்.
.
தொலைவில் வீடு இருந்தாலும் காலை 6 மணிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர் ஆய்வாளர்கள். தூய்மைப் பணிகளில் எந்த விதத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத கவுன்சிலர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்கிறது மாநகராட்சி. ஆனால் நாள்தோறும் குப்பை அள்ளி, பாதாள சாக்கடையில் மூழ்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை கூட மருத்துவம் கிடையாது, பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது. அவர்கள் நவீன உலகின் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.
.
பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் நிலை இது என்றால், 25 ஆண்டுகளாக தினக்கூலிகளாகவே இருக்கும் 1000க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னமும் கொடுமையாக உள்ளது. மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் 59 தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு உத்தரவாதமின்றி தவித்து வருகின்றனர். கல்வித் துறையில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் என்ற பெயரில் 900 பேர் பணிபுரிகின்றனர். பெயருக்குத்தான் பகுதி நேரப் பணியாளர்கள். ஆனால் காலை 7 மணியில் இருந்து நண்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டும். இவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 335 ரூபாய் மட்டும்தான். தூய்மைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தலித்துகள் தான்.
.
மிகக் குறைந்த அளவிலேயே இடைநிலைச் சாதியினர் உள்ளனர். இவர்கள் பெயருக்கு மாநகராட்சி ஊழியர்களாக இருந்து கொண்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள். தெருவிற்கு வந்து துடைப்பத்தை எடுத்து பெருக்கமாட்டார்கள், குப்பை அள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்களின் சாதிப் பெருமையை கட்டிக் காக்க ஆய்வாளருக்கு மாதம் 1500 ரூபாய் (முறைப்பணம்) கொடுத்து விடுவார்கள். ஒருவர் ஒரு கிலோ மீட்டர் வரை பெருக்கி குப்பை அள்ள வேண்டும் என்று நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வளவு வேலைகளை ஒருவர் செய்யும் போது அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் விடுப்பு எடுக்கும் நிலை உருவாகி, வருமான இழப்பு ஏற்பட்டு மேலும் சிக்கலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
.
சாலையைப் பெருக்கி தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் நிலை இதுவென்றால், கழிவு நீர் அகற்று வாரியத்தின் கீழ் உள்ள சாக்கடையில் அடைப்பு எடுக்கும் பணியாளர்களின் நிலை இதனினும் இழிவாக உள்ளது. “காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு” என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.
.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.
.
தொழிலாளிகள் இறந்து போனால் அவர்களுக்கான நிவாரணமோ, ஓய்வூதியமோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. கழிவு நீர் அகற்று வாரியம் இந்த வேலைகளை ஒப்பந்தத்திற்கு விட்டுவிட்டது. இன்றும் நாம் சாலைகளில் உள்ள சாக்கடையில் மூழ்கி கழிவுகளை அகற்றுபவரை நாள்தோறும் காண முடியும். மக்கள் தொகை குறைவாக இருந்தபோது தெருக்களில் 6 அங்குல குழாய்களும், பெரிய சாலைகளில் 9 மற்றும் 12 அங்குல குழாய்களும் புதைக்கப்பட்டன. இன்று மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகின்றன.
.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு சிந்திப்பதில்லை. கழிவுகளை உந்தி அனுப்பும் பம்பிங் நிலையங்களை அரசு தனியாருக்கு கொடுத்துவிட்டது. அரசு இதனை நடத்திய போது 24 மணி நேரமும் எந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் அடைப்புகள் குறைவாக ஏற்பட்டது. தனியாரிடம் கொடுத்த பிறகு அவர்கள் செலவு அதிகம் ஆகும் என்று கூறி எந்திரங்களை முழுமையாக இயக்குவதுமில்லை, பராமரிப்பதும் இல்லை.
.
இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு, துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடைக்குள் இறங்கும் அவலமும் ஏற்படுகிறது. தனியார் செய்யும் இந்த ஊழலை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, மக்களிடமிருந்து வரியை மட்டும் சரியாக வாங்கிவிடுகிறது.
.
ஒப்பந்தக்காரர்கள் சாக்கடையில் மூழ்குபவரை மனிதர்களாகவே கருதுவதில்லை. அவர்களை மிரட்டி வேலை வாங்குவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் வழங்குவதுமில்லை. மூழ்கும் வேலைக்கு ஆட்களை அரசு தேர்வு செய்யும் போது, 35 வினாடிகள் ஒருவர் சாக்கடையில் மூழ்கி இருந்து அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றால் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் அவ்வாறு எதையும் செய்வதில்லை. யார் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு வருகிறார்களோ, அவர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டு சுரண்டுகின்றனர்.
.
அதுமட்டுமல்ல, சாக்கடையை திறந்த உடன் சிறிது நேரம் வாயு வெளியேற அவகாசம் கொடுக்க வேண்டும்; அதன் பிறகு தான் அதில் இறங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று பணம் சம்பாதிக்கும் ஆசையில் திறந்த உடனேயே இறங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். வாயு வெளியேறும் முன்பு உள்ளே இறங்குவதால் பலரின் உயிர் பறிபோகிறது.
.
மருத்துவ வசதிகளை ஒப்பந்ததாரர்கள் முழுமையாக செய்வதில்லை. தொழிலாளர்களுக்கு தொடர் உடல் பரிசோதனையும் இல்லை. மூழ்கி இறந்து போனவர்கள் அத்தனை பேருமே 19 வயதில் இருந்து 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான வேலை செய்யும் இவர்களுக்கு, மருத்துவ செலவாக ஒப்பந்ததாரர் ஆண்டுக்கு வெறும் 100 ரூபாய் செலவிடுகிறார். அதாவது ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஜனதா திட்டத்தில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க ஆண்டுக்கு 100 ரூபாய். இதனை ஒப்பந்ததாரர்கள் எடுத்துவிடுவார்கள். அத்தோடு அவர்களின் கடமை முடிந்தது. தொழிலாளி இறந்தால் ரூபாய் 1 லட்சமும், அடிபட்டால் ரூபாய் 25 ஆயிரமும் இதன் மூலம் கிடைக்கும். போனஸ் போன்ற கூடுதல் பயன்களைப் பெற முடியாது. இதனால் தொழிலாளிக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு எதுவுமில்லை.
.
செய்த வேலைக்கு கூலியாவது ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை. “பீ தண்ணியில இறங்கி காலைல 8 மணியில இருந்து சாயங்காலம் 7 மணி வரைக்கும் வேலை செய்றோம். கூலி கேட்டா வூட்டாண்ட வான்னு சொல்லுவாங்க. அங்க போயி அவுங்க வாசல்ல நிக்கணும். என்னான்னே கேக்க மாட்டாங்க. நாலஞ்சி முறை நடக்க உட்டு தான் தருவாங்க. அதையும் முழுசா குடுக்க மாட்டாங்க. வேல இருக்கு அப்புறம் வான்னு சொல்லுவாங்க. போனா இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிடுவாங்க. போய்ட்டு வந்த செலவு தான் மிச்சம்” என்கிறார் முருகன்.
.
தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறையோடு தொடர்ந்து செயல்படும் இந்தியக் குடியரசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன், “கையால் மலம் அள்ளுபவர்களுக்கு பொதுமக்களிடம் எந்த மரியாதையும் இல்லை. இந்த மக்களுக்கு துரோகம் மட்டுமே இழைக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு யாரும் வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை. அரசு கட்டும் தொகுப்பு வீடுகளில் 25 சதவிகிதம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.
.
தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளதால், அவர்களை கலந்தாலோசித்த பின்னரே விதிமுறைகளை வகுக்க வேண்டும். தொழிலாளர்கள் மேலதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று முன்பு விதி இருந்தது. ஆனால் இப்போது துன்புறுத்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக விதியை மாற்றியுள்ளனர். இது எப்படி சாத்தியம்? இது மாற்றப்பட்டாக வேண்டும்” என்கிறார்.
.
கையால் மலம் அள்ளுவதற்கு தடைச் சட்டம் உள்ளது. ஆனால்,தினமும் சாக்கடையில் தலை வரை மூழ்கி, வாயில் மலம் சென்றுவிடும் கொடுமைக்கு தடை விதிக்க சட்டம் உள்ளதா? ‘சபாய் கரம்சாரி அந்தோலன்' அமைப்பின் தேசிய அமைப்பாளர் பெசவாடா வில்சனிடம் இது குறித்து கேட்டோம். “உலர் கழிப்பறைகள் கட்டுவதற்கு மட்டுமே 1993ஆம் ஆண்டு சட்டம். எனவே அந்த விஷயத்திலேயே அதிக கவனம் குவிக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலை மற்றும் பணிநிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
.
அதன்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்தப் பணிக்கு மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறியது. இதனை குஜராத் அரசும் ஏற்றுக் கொண்டது. இக்குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாடு முழுக்க நடைமுறைப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கையால் மலம் அள்ளுவதே இழிவான செயல் எனில், மலத்திலே மூழ்கி எழுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதனை ஒழிக்க சட்டமே தேவையில்லை. சக மனிதர்கள் இதனை உணர்ந்தாலே போதும். ஆனால் யாரும் உணராமல் இருப்பதுதான் பிரச்சனை.
.
எந்த காரணத்தைக் கொண்டும் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கக்கூடாது. புதிய நவீன கருவிகள் அடைப்பு எடுக்க வந்துவிட்டன. அதனை போதிய அளவு வாங்க வேண்டும். அரசின் ஒவ்வொரு துறைக்குள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பிரிவு இருக்கும். இந்தப்பிரிவு துறையின் வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகளையும், ஆய்வுகளையும் செய்யும். இதுபோன்ற ஓர் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தூய்மைப் பணியாளர்கள் துறையில் இல்லை. அந்தத் தொழிலில் நவீன வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், இந்தப் பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய திட்டக்குழுவிடம் சபாய் கரம்சாரி அந்தோலன் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
.
தொடக்க காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதினோம். பின்னர் பேனாவில் எழுதினோம். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தட்டச்சு எந்திரத்தைப் பயன்படுத்தினோம். இப்போது இன்னும் நவீனமாக கணினி வந்துவிட்டது. ஆனால் சாக்கடை அள்ளுவதில் மட்டும் எந்த நவீன மாற்றமும் ஏற்படாமல் இருக்க என்ன காரணம்?” என்ற அவரின் கேள்வியைத் தான் நேர்மையற்ற அரசின் முன்பும் மக்கள் சமூகத்தின் முன்பும் நாம் வைக்க விரும்புகிறோம்.

-அநாத்மா

நன்றி: தலித்முரசு, ஜூலை 2008