வெள்ளி, ஜூன் 17, 2011

தயா(நிதி)யிடம் பாதி... கனி(மொழி)யிடம் மீதி!

''குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படியாக முன்னேறி, கனிமொழிவரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம் கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!

படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சி கொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.

பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம். இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!

அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சியின் ஒட்டு மொத்த இமேஜையும்தான்..!

2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது.

74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில் கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.



அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின.

அன்றைக்கு தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார்.

மகனுக்கும், பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகாபாரதம் வேகம் கண்டது!

முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி.

அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞானசம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.

தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள்.

அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத் தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2-ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!

இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!

'மீடியாவை வைத்துக் கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங்களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!

டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக் கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!

2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயனடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார்.

அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.



மோதலை முடித்துக் கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியிலும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்று கொண்டேதான் இருந்தன.

அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத்தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு.

சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபாலபுரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!

''தயாநிதி மாறன் மட்டுமல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப் போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக் கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணைவதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?

தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!

ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது.

இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக் கொண்டிருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!

அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.

''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழியும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!

கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்து போனதாகவே சொல்லலாம்...

தயாவிடம் பாதியும்... கனியிடம் மீதியும்!

- ப.திருமாவேலன்

படம்: என்.விவேக்

நன்றி : ஆனந்தவிகடன்-22-06-2011

வியாழன், ஜூன் 16, 2011

இராஜீவ் காந்தி கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ.

இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று, களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)'. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த‌ புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இராபர்ட் பயஸின் சுயசரிதைக் குறிப்புகளின் பின்னணியிலும் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சவுக்கு வெளியீடு, சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவினை லேசாக‌ கன்னத்தில் தட்டிவிட்டு, 'வெல்டன் பாய்ஸ்' என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இரண்டாவது புத்தகம், சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளின் மீது காரி உமிழ்கிறது.

ஒன்று, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் என அவர்கள் மீது, வழமையான போலீஸ் ஜோடனைக் கதைகளை மிகவும் சுவாரசியமாக (எந்த வெட்கமும் இன்றி) விவரித்துச் செல்கிறது. மற்றொன்று, ஈழத்தில் பிறந்ததையன்றி ஒரு குற்றமும் செய்யாத - அந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை மிகுந்த வலியுடன் பதிவு செய்கிறது. முதல் புத்தகத்திற்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய்கரன் முன்னுரை எழுதியிருக்கிறார். களம் வெளியீட்டிற்கு பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.

சவுக்கு வெளியீடு, இந்தியாவை வல்லரசாக்க வந்த மகத்தான தலைவனாக இராஜீவ் காந்தியை பெருமிதத்துடன் புகழ்கிறது. களம் வெளியீடு, இந்திய அமைதிப் படையை அனுப்பி, ஈழத்தில் இராஜீவ் காந்தி நடத்திய கொலைவெறியாட்டத்தைப் பதிவு செய்கிறது. 'சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை' என்பதை முதல் புத்தகமும், 'நமக்கு எல்லாம் உயிரின் வாதை' என்பதை இரண்டாவது புத்தகமும் பேசுகின்றன. ராஜீவ் சர்மா எழுதிய புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், நமக்கு அடக்கமாட்டாத எரிச்சலும், எழுதியவனின் குரல்வளையை முறிக்கத் தூண்டும் கோபமும் ஏற்படுகிறது. இராபர்ட் பயஸின் தரப்பு நியாயத்தைப் பேசும் புத்தகத்தைப் புரட்டும்போது, அடக்க முடியாத கண்ணீரும், இத்தனை ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற துயரமும் நெஞ்சை அழுத்திக் கொள்கிறது; உண்மையை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், மணி.செந்தில் இருவரது கைகளையும் நன்றியுடன் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.

முதலில் சவுக்கு புத்தகத்திலிருந்து இராபர்ட் பயஸ் பற்றிய சிபிஐ குறிப்புகள்...

“...நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்.

சென்னை போரூரில் இருந்த பலசரக்குக் கடை, கொலை நடந்த காலம் வரை இந்தக் கொலைக்குழுவிற்கு, யாழ்ப்பாணம், இத்தாலி, டென்மார்க் மற்றும் கனடாவிலிருந்து வந்த செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டது. கொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பயஸிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உள்ளூரிலிருந்து வந்த அந்த அழைப்பின்போது பயஸ் மிக மெதுவாகவே பேசினார் என அந்த பலசரக்குக் கடை முதலாளி எஸ்.ஐ.டி.யிடம் தெரிவித்தார். கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்புவரை பயஸ் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்னி வேன் நின்றதை பலநாட்கள் பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்த வாகனம் நபர்களை, குறிப்பாக பெண்களை அழைத்துச் சென்றதற்காக பயன்படுத்தப்பட்டது.

அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார். ஜெயக்குமார் ராபர்ட் பயஸின் உறவினர் எனப் பின் தெரியவந்தது...”

இப்போது களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு' புத்தகத்தில் இராபர்ட் பயஸ் கூறுவதிலிருந்து (களம் வெளியீடு 8, மருத்துமனை சாலை, செந்தில் நகர், சின்னபோரூர், சென்னை - 600 116. விலை ரூ.100) சில பகுதிகள்...

“...காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம். காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.

viduthalaikku_vilangku_450உயிர்வாழும் ஆசைதான் எத்தனை விசித்திர‌மானது!.. இந்த வேட்கைதான் காயங்கள் மீது காலம் பூசும் மருந்துக்கு மயிலிறகாக உதவுகிறது. நாங்களும் அப்படித்தான்; உயிர்வாழும் வேட்கை தந்த ஆசை. தடுக்கி விழுந்தால், தாங்கிப் பிடிப்பார்கள் என்று உறவுகள் மீது வைத்த நம்பிக்கை. இந்த இர‌ண்டும் தான் எம்மை தாயகத் தமிழகத்தை நோக்கி விர‌ட்டியது..."

"...குழந்தையை இந்திய இராணுவத்திடம் பறிகொடுத்த ஈழத் தகப்பன் ஒருவன் தான், இராசீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று யாரே‌னும் நம்புவீர்கள் என்றால், என்னைப் போன்று பல்லாயிர‌க்கணக்கான தகப்பன்கள் அச்சமயத்தில் இந்திய இராணுவத்திடம் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தார்கள். அவர்களையும் ஏன் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கவில்லை? பழிவாங்குவதற்கும் ஒரு பலம் வேண்டும். அனைத்தையும் இழந்து நிராதர‌வாக வந்து நிற்கும் அலைக்கழிக்கப்பட்ட ஓர் எளியவனிடம் பழிவாங்கும் உணர்வு என்ன?... வேறு எந்த உணர்வும் இருக்காது...”

“..10/06/1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை‌ மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் இருந்த மளிகை கடைக்கார‌ர் பாண்டியன் என்பவர், என் வீட்டிற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். இங்கு நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் நான் அக்கணமே தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இர‌வு ஒன்பதரை‌ மணிக்கு என்னையும் எனது மனைவியையும், எனக்கு இர‌ண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், எனது உடன் பிறந்த சகோதரியையும் சிபிஐ ஆய்வாளர் இர‌மேஷ், இக்பால் மற்றும் இரு காவலர்கள் விசாரித்துவிட்டு, அனுப்பிவிடுவதாக சிபிஐ அலுவலகம் அமைந்திருந்த மல்லிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்பொழுது கூட என் மனதில் பெரிதாக அச்சமில்லை. ஒரு அகதியாய் தஞ்சம் புகுந்தவனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, இதுபோன்ற காவல் கெடுபிடிகளுக்கு உட்பட்டது என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்...”

“...அந்த அறையில் இருந்த அலுவலர்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர். அதில் ஒரு அதிகாரி சிவராசன், காந்தன் இருவரை‌யும் தெரியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூறிய நொடியில், கடுமையான வேகத்தில் என் முகத்தில் ஓர் அறை விழுந்தது. முதல் அடியிலேயே பொறி கலங்கிப் போனேன். பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கத் துவங்கினர். அடி தாங்காமல் கீழே விழுந்த என் மீது ஷு காலால் உதைத்தனர். நான் வலி தாங்காமல் கத்தும் போது நான் கத்திய சத்தம் பக்கத்திலிருந்த என் மனைவிக்கும், என சகோதரிக்கும் கேட்டிருக்க வேண்டும். நான் கத்தும் போதெல்லாம் அவர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள்.."

"...என்மீது விழுந்த அடிகளும் உதைகளும் ஏற்படுத்திய வலிகளை விட, இவர்கள் ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்ற வினா ஏற்படுத்திய உறுத்தலே எனக்குக் கடுமையான வலியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கும் அடியின் வலி மெதுவாகக் குறையத் துவங்கியது. அப்போது தான் எனக்குப் புரிந்தது நான் மயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று. விழித்துப் பார்த்த போது, நான் அந்த சிமெண்ட் தளம் போடப்பட்ட தரை‌யில் சுருண்டு கிடந்தேன். நான் கிடந்த அந்த சிமெண்ட் தரை‌ முழுவதும் எனது வியர்வைத் தடம்.

எனக்கு அந்த நொடியில் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே அருகில் நின்று கொண்டிருந்த காவலரிடம் குடிக்கச் சிறிது தண்ணீர்க் கேட்டேன். ஆனால் காவலர் எனக்குத் தண்ணீர் தர‌ மறுத்துவிட்டார். கடுமையான தாகம் ஏற்படுத்தும் துயர‌ம் மிகக் கொடுமையானது. ஒரு குவளை குடிநீருக்காக என் உயிரை‌யும் நான் மாய்த்துக்கொள்ளத் தயாரானது போன்ற மனநிலை. கடுமையான தாகமும் மிகுதியான உடல் வலியும் தந்தக் களைப்பினால், நான் அப்படியே கண்ணயர‌த் துவங்கினேன். அப்போது சுளீர் என்று முகத்தில் ஒரு வலி. அயர்ந்த எனது முகத்தின் மீது அருகில் நின்று கொண்டிருந்த காவலர் குளிர்ந்த நீரை‌த் தெளித்தார். ஏற்கெனவே கலங்கி இருந்த எனது விழிகளில் இருந்து பெருகிய கண்ணீரோடு தண்ணீரும் கலந்து உலர்ந்த எனது உதடுகளின் மீது பட்டது.

நான் எனது முகத்தில் வழிந்த தண்ணீரை‌ நக்கிக் குடித்து என் தாகம் தணிக்க முயன்றேன். அப்போதுதான் ஆய்வாளர் சுந்தர்ராஜன் என்பவர் அந்த அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில் வேகமாக ஓர் அடி, என் முகத்தில் அடித்தார். என் பல்லில் பலமாக அடிபட்டு இர‌த்தம் கொட்டியது. அந்த நொடியில் இருந்து பாதிக்கப்பட்ட பல்லைச் சிறைக்கு வந்த பிறகுதான் நானே பிடுங்கி எறிந்தேன்.

அந்த இர‌வின் ஒவ்வொரு நொடியும் எனக்கு நினைவிருக்கிறது. மிக நீண்ட வலி மிகுந்த கொடுமையான இர‌வுகள் என் வாழ்வில் வர‌ப்போகின்றன என எனக்கு அப்போதுத் தெரியாது. அந்த இர‌வில் தூங்கவிடாமல் செய்வதற்கு எனக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய வேலை என்னவெனில், என்னைத் தூங்கவிடாமல் துன்புறுத்துவதும், மீறித் தூங்கினால் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவதும் தான். விசார‌ணை முறைகளில் தூங்கவிடாமல் துன்புறுத்தும் விசார‌ணை முறை, மனிதனை மிகவும் வதைக்கும் கொடுமையான ஒன்றாகும். களைத்த உடல் கண்ணயரும்போது அதைத் தடுத்தால் அந்த உடல் மேலும் பலவீனமாகி தாங்கமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்படும். இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் ஒருவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவங்கள் தந்த பாடங்களைத்தான் காவல்துறையினர் நாளது தேதிவரை‌ கடைபிடித்து வருகின்றனர். இறுதியாக விடியற்காலை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்திய காவலரே‌ கண்ணயர்ந்துவிட்டார். பாவம் அவரும் மனிதன் தானே. நானும் அப்படியே கண்ணயர்ந்தேன். வெளியே கொடூர‌மான இர‌வு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது எனது அறையில் எனக்கு அறிமுகமில்லாத சுபா சுந்தர‌ம், ஓ.சுந்தர‌ம் மற்றும் சிலர் இருந்தார்கள். யார் யாரோ வந்தார்கள். சிவராசன் தெரியுமா, காந்தன் தெரியுமா எனக் கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெரியாது என நான் சொன்ன அடுத்த நொடியில், அவர்கள் அடிக்கத் துவங்கிவிடுவார்கள். அன்று பகல் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருந்தார்கள். என்னை விசாரித்த விசார‌ணை அதிகாரிகளுக்கு நேர‌ம், காலம் கிடையாது. இர‌வு பகல் என்றெல்லாம் அவர்கள் பார‌பட்சம் காட்டுவதில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்விகேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே‌ மாதிரி அடித்தால் வலி பழகிப் போய்விடும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த வித்தியாசமான நடைமுறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள்..."

"...என்னைக் கைது செய்து மூன்றாம் நாள் மதியம் என்று நினைக்கிறேன், சிவராசன் எங்கே எனக் கேட்டு என்னை அடித்துக் கொண்டிருந்த விசார‌ணை அதிகாரிகளுக்குத் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. என் இர‌ண்டு கால்களையும், சேர்த்து கட்டத் துவங்கிய அவர்களின் எண்ணம் குறித்து நான் புரிந்துக் கொண்டேன். நான் ஒத்துழைக்க மறுத்தேன். இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி தலைகீழாக என்னைத் தொங்கவிட்டார்கள். பலமற்ற கயிறு போலும், கயிறு அறுந்து நான் கீழே விழுந்தேன். எனக்கு முதுகில் பலமாக அடிபட்டது. நூறு ஊசிகளை எடுத்து நடு முதுகில் குத்தியதைப் போன்று மிகக் கொடுமையான வலி. வலியின் மிகுதி எனக்கு மயக்கத்தைத் தந்தது. மயங்கினேன். கடுமையான உடல்வலியும், கொடுமையான குடிநீர்த் தாகமும் ஒன்றுக்கொன்று உடன்பிறந்தவைப் போல் என்னை உலுக்கி எடுத்துவிட்டன.

மயங்குவதும், மயக்கம் தெளிய காவலர்கள் முகத்தில் தண்ணீர்த் தெளிப்பதும், அந்தத் தண்ணீரில் நான் நாக்கை நனைத்துக் கொள்ளுவதுமாக நேர‌ங்கள் கழிந்தன. எதன் பொருட்டும் காவலர்கள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. நேர‌ம் அதிகரிக்க என் முதுகு வலியின் தீவிர‌ம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கதறிக் கொண்டே இருந்தேன்…”

"...சிபிஐ யின் விசார‌ணை முறை என்பது மிகத் தனித்துவமானது. பல்வேறு குழுக்கள், பல்வேறு விசார‌ணை முறைகள், குறிப்பாக டி.ஐ.ஜி. ராஜூ தலைமையில் இருந்த டி.எஸ்.பி.சிவாஜி, ஆய்வாளர் இர‌மேஷ், ஆய்வாளர் மாதவன், ஆய்வாளர் இக்பால் மற்றும் சிலர் இருந்த அந்தக் குழுவினரை‌ என்னால் எப்போதும் மறக்க இயலாது. ஏனெனில், விதவிதமாக அடிப்பதற்கும், வகைவகையாக துன்புறுத்துவதற்கும் பெயர் போன குழு அது. இர‌ண்டு கை விர‌ல்களுக்கு இடையே பேனாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு பேனாவைத் திருப்புவது. இர‌ண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு நாற்காலியில் உட்காருவதைப் போன்று நிற்கச் சொல்லி, சிறிது நேர‌ம் நின்றதும் தசை பிடித்து வலிக்கும்போது, பின்புறம் லத்தியால் அடிப்பது போன்ற பலவிதமான சித்திர‌வதைகள்..."

"...உண்மையைக் கேட்பதற்கு உலகிற்குச் செவிகள் இல்லை. அதே உலகிற்கு பொய்களைப் பர‌ப்ப ஆயிர‌ம் உதடுகள் உண்டு என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர‌த் துவங்கி இருந்தேன். எங்களை அழைத்து வருவது தெரிந்து நிறைய பத்திரிகைக்கார‌ர்களும், புகைப்படக்கார‌ர்களும் அங்கே குழுமியிருந்தார்கள். உண்மை எதுவென அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் யாருக்குமே அங்கு விருப்பமில்லை. மாறாக, மறைந்த இராசீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் யாöர‌ன கண்டுபிடிக்கப்படாமல் இருந்த வெற்றிடத்தை எதைக்கொண்டேனும், எவரை‌க் கொண்டேனும் நிர‌ப்பிவிட வேண்டும். இல்லையேல், மாபெரும் வல்லாதிக்க நாடாக, வளரும் நாடுகளின் தலைவனாக விளங்கும் இந்தியாவின் புலனாய்வுத் துறைக்கு அது மிகப்பெரிய களங்கமாக விளங்கும் என்பதற்காகவே இந்த அவசர‌மும், மூர்க்கமும் நிறைந்த தவறான முடிவு..."

"...ஈழத்திலிருந்து அகதிகளாக என்னுடன் வந்த ஜெயக்குமார், அவர‌து மனைவி சாந்தி, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை‌, நான் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் கைது செய்திருந்தார்கள். என் கண் எதிரே‌ பல முறை ஜெயக்குமார் குடும்பத்தினரை‌ச் சித்ர‌வதை செய்யும் போது நான் மிகவும் துயருற்றுக் கண்ணீர் சிந்தினேன். ஜெயக்குமார் மனைவியும் , என் சகோதரி முறையிலான சாந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த ஆறுதலை அளித்தது.

என்னால் என்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத மிகத் துயர‌மான சூழலில் நான் என்னோடு வந்த உறவினர் குடும்பமான ஜெயக்குமார் குடும்பம் படும் பாடுகளைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது..."

"...தாங்கள் சொல்வதை உண்மையென என்னை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மூர்க்கத்தில் டிஐஜி.சிறிக்குமாரும், அவருடைய ஆட்களும் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைக்கு இழுத்துப் போனார்கள். இருட்டாக இருந்த அந்த அறையில் கூர்மையான பனிக்கட்டி மீது என்னை நிற்க வைத்து விட்டு குளிர்சாதனத்தின் குளிரூட்டும் சக்தியை அதிகப்படுத்தினார்கள். நான் அந்த பனிக்கட்டி மீது நிற்கும் போது உடலெல்லாம் எனக்கு கடும் வலி. உயிரே‌ என்னை விட்டு பிரிவது போன்ற அவஸ்தை. நேர‌ம் கழியக்கழிய என் உடல் குளிரால் விறைக்கத் துவங்கிவிட்டது. குளிரால் விறைத்துப் போன என்னை அடித்துக் கொடுமை செய்தார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை ஒப்புக்கொண்டால் வழக்கு முடிந்தவுடன் அந்த வீடு எனக்கே கிடைத்து விடும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். நான் உறுதியாக மறுக்கவே, என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த இர‌வும் என்னை தூங்க விடவில்லை..."

"...அந்த காலக்கட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை‌ இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் மாதவனும், ரமேசும் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்..."

"...இந்திய நாட்டின் முன்னாள் பிர‌தமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலை சார்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என அறிய யாருக்குமே விருப்பமில்லை. இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாப்பாத்திர‌ங்கள் தேடினர். அந்தக் கதாப்பாத்திர‌ங்களாக சிக்கிக் கொண்டவர்கள்தாம் நாங்கள். உண்மையில் எனக்கு அமர‌ர் இராசீவ் காந்தியின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிர‌தமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை, என்பதுதான் எத்தனைத் துயர‌மான விடயம்..."

"...தடா சட்டத்தின் கீழ் நான் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பது காவல்துறையினர் என்னை சித்திர‌வதைகள் செய்து, பலாத்கார‌மாகப் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் பெற்றது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தாங்களாகவே தயாரித்தனர்' என்று என் போலிசு காவல் முடிந்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்ட போது நீதிமன்றத்தில் மனுகொடுத்தேன். நீதிபதி, வழக்கு விசார‌ணையின் போது விசாரிப்பதாகக் கூறினார். ஆனால் வழக்கு விசார‌ணை நடைபெற்ற தடா நீதிமன்றத்தில் இந்த மனு விசார‌ணைக்கு வர‌வே இல்லை..."

"...இராசீவ் காந்தி கொலை என்பது பலவிதமான இர‌கசியங்களைக் கொண்ட ஒரு குற்ற நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் முன்னாள் பிர‌தமரின் கொலையில் தொடர்புடைய, சந்தேகிக்க வேண்டிய பலவித கார‌ணிகளை இந்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே நிராகரித்தது. தாங்கள் முடிவு செய்திருக்கும் இந்த வழக்கின் பாதையில் இருந்து சற்றே விலகி உண்மையைக் கண்டெடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியப் புலனாய்வுத்துறை மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பலரும் என்னைப் போலவே சிக்கிக் கொண்டவர்கள்தாம்…”

இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருப்பது புத்தகத்திலிருந்து ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும்தான். முழு புத்தகமும் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.

வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.

விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்களுக்குக் கடத்துவதில் மணி செந்திலின் மொழியாளுமை பெரிதும் துணை நின்றிருக்கிறது.

இராஜீவ் சர்மா எழுதிய புத்தகம் பலத்த எதிர்பார்ப்புடனும், பெரும் ஆராவரத்துடனும் வெளியாகி விட்டது. உண்மை எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை; அடங்கியே இருக்கிறது. மணி செந்தில் எழுதிய புத்தகமும் அதுபோலத்தான்.

மக்களிடம் நாம் எதை கொண்டு செல்லப் போகிறோம்?

- கீற்று நந்தன் ( editor@keetru.com)

திங்கள், ஜூன் 06, 2011

'ஏய்... பொணந்தூக்கி!’

'சுந்தரு...’ என்று ஊரே செல்லமாக அழைக்கிறது. சில 'நாட்டாமை’கள் மட்டும் 'ஏய்... பொணந்தூக்கி!’ என்று அதட்டுவார்கள்.

''என்னை ஏன் பொணந்தூக்கின்னு சொல்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு, 'டி.வி-யில எல்லாம் உன் மூஞ்சியைக் காட்டுறியாமே?’னு சொல்லி, வெறகுக் கட்டையால என் மண்டையில அடிச்சுட்டாங்கண்ணா'' என்று தன் உச்சந்தலையைக் காட்டுகிறார். விரல் நீளத்துக்குத் தையல் போடப்பட்ட தழும்பு.

சென்னை, ஜலடம்பேட்டையில் வசிக்கும் சுந்தர்ராஜனுக்கு, பிறவியில் இருந்தே பார்வை இல்லை. ஆனால், அவர் ஒரு மகத்தான சேவகர்!

''பொறந்தது, வளர்ந்தது எல்லாமே ஜலடம்பேட்டைதான். அஞ்சு அண்ணனுங்க, நாலு அக்கா தங்கச்சிங்களோட நான் ஏழாவதாப் பொறந்தேன். பிறவியில இருந்தே கண் தெரியாதுண்ணா. அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். பார்வை இல்லையே... அப்புறம் எங்க போய் என்னத்தப் படிக்க?

தலையை லெஃப்ட், ரைட்டுனு ஆட்டிக்கிட்டே நடந்து போவேன். நடுவுல எங்கனாச்சும் தடங்கல் இருந்தா, எனக்குள்ளாற மணி அடிக்கும். ஜாக்கிரதையா நகருவேன். ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய்ப் பார்த்தோம். கண்ணைச் சரி பண்ண முடியாதுன்னுட்டாங்க. 11 வயசுல அண்ணன் தேவநாதன் எனக்கு நீச்சல் கத்துக் கொடுத்தாரு. 16 வயசா இருக்கும்போது, கிணத்துல கொலுசு விழுந்துருச்சுன்னு சொன்னாங்க. அது இருக்கும் 20 அடி ஆழம். கீழே இறங்க எல்லோரும் பயந்துக்கிட்டு இருந்தாங்க. நமக்குத்தான் பகலும் தெரியாது, ராவும் தெரியாதுல்ல. அதனால, ஆனது ஆகட்டும்னு சொல்லி, நான் கிணத்துக்குள்ளே முங்கி கொலுசைத் தேடிப் பார்த்தேன். என் காலை ஒவ்வொரு அடியா மெள்ள மெள்ளவெச்சு அங்கயும் இங்கயும் தடவிப் பார்த்தேன். திடீர்னு ஏதோ ஒண்ணு கனமாத் தட்டுப்பட்டுச்சு. அதை மேலே இழுத்துக்கிட்டு வந்தேன். வெளியே இழுத்துப் போட்டதும் எல்லோரும் அலற ஆரம்பிச்சாங்க. என்ன, ஏதுன்னு நான் தடவிப் பார்த்தேன். ஐயோ அண்ணா... பொணம்ணா! அங்கே இருந்த எல்லாரையும் திட்டிட்டு வந்துட்டேன். பொணத்தைத் தூக்கத்தான் என்னைய பொய் சொல்லிக் கூட்டிக்கினு போயிருக்காங்கண்ணா.

அன்னிக்கு முழுசாத் தூங்கவே இல்லை. ஏன்டா இப்படிப் பொறந்துட்டோம்னு மனசு வலிச்சுதுண்ணா. சரி, நாம இதுக்கோசரமாவது 'ஹெல்ப்பா’ இருந்துக்கினோமேனு சந்தோசப்பட்டுக்கிட்டேண்ணா.

அன்னிக்கு ஆரம்பிச்சது நம்ம வேலை. இன்னிய தேதிக்கு நான் 132 பொணங்களை மேலே தூக்கியாந்து இருக்கேன். ஃபயர் சர்வீஸ் ஆளுங்கோ இறங்க முடியாத ஆழத்துலகூட நான் முங்கி, பொணத்தை மேலே கொண்டாந்துருக்கேன். 60 அடி ஆழம்னாக்கூட நான் இறங்கிப்புடுவேன். மேக்ஸிமம் மூணு நிமிஷம்தான். அதுக்குள்ளாற நான் பொணத்தை எடுத்துருவேன்.

தண்ணிக்குள்ளாற, சாக்கடைக்குள்ளாற, ஏரியில இப்படி எங்கனா, யாராச்சும் விழுந்துட்டாங்கன்னா, சுத்துப்பட்டு ஏரியாவுல என்னையத்தான் கூப்பிடுவாங்க. தண்ணிக்குள்ள யாராவது விழுந்து செத்துப்போனாங்கன்னா, அவங்களோட உடம்பு ஊதிப்போயிடும். தண்ணியில பொணத்தின் கனம் கம்மியாதான் இருக்கும். காலால தடவிப் பார்ப்பேன். பொணத்தோட எந்தப் பகுதி தட்டுப்படுதோ, அதப் புடிச்சுக்கினு இழுத்துக்கிட்டு வந்துருவேன்.

நான் தூக்குனதுல அதிகமானவங்க வயசானவங்க. அவங்களப்பத்தி பெருசா அலட்டிக்க மாட்டேன். ஆனா, இள வயசுப் பசங்க யாராச்சும் விழுந்து அவங்கள எடுத்தாரும்போது, மனசு ரொம்ப வலிக்கும்ணா.

இதோ போன மாசம்கூட, பள்ளிக்கரணை ஏரியில 26 வயசுப் பையன் விழுந்துட்டான். நான்தான் எடுத்தாந் தேன். தெரியாம விழுந்துட்டானா, யாராச்சும் தள்ளிவுட்டு விழுந்தா னான்னு தெரியலை. பாவம், வாழ வேண்டிய வயசு!

மரண பயமே எனக்கு இல்லாமப் போச்சுண்ணா. நான் பொணத்தத் தூக்கிக்கினு வரும்போது யாரும் அழக் கூடாதுன்னு சொல்லிருவேன். நான் அந்த இடத்தவிட்டுப் போற வரைக்கும் யாரும் அழக் கூடாது. அவங்க அழுதாங்கன்னா, மனசு கஷ்டமாப்பூடும். பொணத்த எடுத்துட்டு வந்த பொறவு, அவங்க இஷ்டப்பட்டு ஏதாச்சும் பணம், காசு கொடுத்தா வாங்கிப்பேன். நானா யாருட்டயும் கேக்க மாட்டேன். அவங்க கொடுத்த பணத்தை அப்படியே வீட்ல கொடுத்துருவேன். வீட்ல இந்தப் பொழப்பு வேணாம்டான்னு சொல்லு வாங்கண்ணா. ஆனா, இது ஒரு மாரி சோசல் சர்வீஸுங்கிறதால நான் பண்ணுறேன்.

என்னோட நெலமையப் பார்த்து 2006-ம் வருஷம் புரட்சித் தலைவி அம்மா எனக்கு ஒரு லட்சம் ரூவா கொடுத்தாங்க. அப்புறம் கவுருமென்ட்டுல இருந்து மாசா மாசம் 500 ரூவா கெடைக்குது. இதுகள வெச்சுத்தான் இப்ப நம்ம பொழப்பு கொஞ்சம் கவல இல்லாம ஓடுது. பொணத்தைத் தூக்குறதுக்கு முன்னாடி ஒரு கோட்டரு அடிப்பேன். நமக்கு வீக்குனசுன்னா, அது இதுதாண்ணா.

இப்படி இருக்குற என்னைய 'பொணந்தூக்கி’ன்னு சொல்லலாமாண்ணா. நான் தனியாத்தான் பொணத்தை மேலே தூக்கிக் கொண்டார்றேன். ஒரு கை யாரும் ஒதவுறதில்ல. ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி ஏதோ டி.வி-யில வந்து படம் புடிச்சுக்கினு போனாங்க. அதப் பார்த்துட்டு வந்து, என்னைய சில பேரு அடிக்கிறாங்க. நான் என்னண்ணா தப்பு பண்ணுனேன்?

நாளைக்கு என்ன நடக்கும்கிறதைப்பத்தி எனக்குக் கவலை இல்லண்ணா. ஆனா ஒண்ணு, கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். பிச்சை எடுக்க மாட்டேன்!''

-ந.வினோத்குமார்
படங்கள் : ஜெ.தான்யராஜு

நன்றி: ஆனந்தவிகடன் 08-ஜூன்-2011