சனி, மே 09, 2009

காங்கிரஸ் அரசின் பொருளாதாரப் பரிசு : வாடகைத் தாயாக மாறும் படித்த இளம்பெண்கள்

புதிய பொருளாதாரம் - தாராளமயம் என்ற பெயர்களில் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் கொடூர முகம் காட்டத் தொடங்கியுள்ளன. இவற்றில் ஒன்றாக மெத்தப் படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி அண்மைப் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த இளம்பெண்கள் வாடகைத்தாயாக மாறும் அவலம் தொடங்கியுள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. பல்வேறு அதிர்ச்சிகளை உள்ளடக்கிய அந்தக் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது:
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் திடீரென்று சரியத் தொடங்கிய பொருளாதார நிலைமையின் காரணமாக வேலை இழந்த பலபேரில் ஒருவரான மரியம் தற்போது தன் மகப்பேறை உறுதி செய்யும் இரத்தப் பரிசோதனையின் முடிவுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார். எதற்காக தெரியுமா? குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதிக்கு தான் ஒரு வாடகைத் தாயாகி, தனது அந்த சேவைக்காக அந்த தம்பதியர் தரப்போகும் ரூபாய் இரண்டு இலட்சத்தைக் கொண்டு, ஒரு வருடத்துக்கு முன்னால் தான் வாங்கிய தனிநபர் கடனுக்குரிய மாதத் தவணைத் தொகையைச் செலுத்துவதற்காக! கடந்த மூன்று மாதங்களாக, வாடகைத்தாய் சேவை குறித்தும், கருமுட்டை தானம் செய்தல் குறித்தும் இளம் பெண்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மகளிர் மருத்துவமனைகளுக்கும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கருமுட்டை தானத்திற்கு ரூ15,000 லிருந்து ரூ20,000 வரையிலும் வாடகைத்தாய் சேவைக்கு ரூ3.5 லட்சம் வரையிலும் இந்த மையங்கள் வழங்குகின்றன.



“பி.பி.ஓ. மற்றும் ஐ.டி. துறைகளிலிருந்து வேலை இழந்த பெண்களில் நிறைய பேர் கரு முட்டை தானம் வழங்க முன்வருகின்றனர். தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவர்களது சமூக அந்தஸ்து மாறியிருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம். இப்போதெல்லாம் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் இது தொடர்பாக எங்களை அணுகுகிறார்கள்.” என்கிறார் செயற்கைக் கருத்தறிப்பு மையத்தின் தலைவர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயராணி காமராஜ். ஊடகத்துறையில் பணிபுரிந்தவரும், ஒன்றரை வயதுக் குழந்தைக்குத் தாயாக இருப்பவருமான மரியம், “தற்போதைய பொருளாதார சரிவு மற்றும் நெருக்கடியின் ஊடாக தன் குடும்பத்தை நடத்திச் செல்ல வாடகைத் தாய் ஒன்றே மிகச் சிறந்த வாய்ப்பு. இது சட்டப்பூர்வமானது. இதில் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை” என்கிறார். “இவர் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதால் வெற்றிகரமாக இவரால் இந்தக் குழந்தையைப் பெற்றுத்தரமுடியும் என்று நம்புகிறோம்” என்கிறார் செயற்கைக் கருத்தரிப்பு நிபுணரும் ஜி.ஜி மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் கமலா செல்வராஜ். தற்போதைய இந்தப் போக்கு மருத்துவர்கள் இடையேயும் அக்கறையை உருவாக்கியுள்ளது.

மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் பிரியா செல்வராஜ், “வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்பட்டு வரும் பணமதிப்பில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட இது வழிவகுக்கும். இப்படித்தான் ஒரு பெண் ரூபாய் இரண்டு இலட்சத்தில் தொடங்கி ரூபாய் நான்கு இலட்சம் வரை தொகையை உயர்த்திச் சென்று வாடகைத்தாய் ஆகியிருக்கிறார்” என்கிறார்.

பி.பி.ஓ. மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வேலையிழந்த இளம் பெண்கள் வாடகைத் தாயாகவும், கருமுட்டை தானம் செய்பவர்களாகவும் அதிக அளவில் மாறி வருவதற்கான பொருளாதார காரணங்கள், அவர்களது ஆரோக்கியம் ஆகியவற்றுடனும் இது தொடர்பான வேறு காரணங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. கருமுட்டை தானம் செய்ய எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்றாலும், பதிவுறாத இந்தப் போக்கு டாக்டர் கீதா ஹரிப்ரியா போன்ற செயற்கைக் கருத்தரிப்பு நிபுணர்களைக் கவலையுறச் செய்துள்ளது.

திருமணம் ஆகாதவர்கள் உள்ளிட்ட நிறைய இளம் பெண்கள் கருமுட்டை தானம் செய்ய தாமாகவே முன்வருகிறார்கள். “என் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ரூபாய் 15,000 செலுத்த வேண்டியுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னால் அப்போதைய எனது சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடன் எனக்கு வழங்கப்பட்டது. இப்போது எனக்கு வேலை இல்லை. இ.எம்.ஐ. செலுத்துவதற்காக என் அலுவலகம் கொடுத்த இரண்டு மாதத் தொகையைப் பயன்படுத்தவும் எனக்கு விருப்பமில்லை. என் நண்பர்கள் எனக்கு இந்த வழியைக் கூறினார்கள் என்கிறார் ஒரு பெண். . “கருமுட்டை தானம்செய்ய விரும்புபவர்களுக்கான ஆலோசனையை நாம் எல்லோருமே தீவிரப்படுத்தவேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். ஆறு முறைகளுக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது ஒரு பெண்ணுக்கு நல்லதல்ல. அதே போல் ஒவ்வொரு முறை செய்யும் கருமுட்டை தானத்துக்கும் குறைந்தது ஆறு மாத இடைவெளி இருக்க வேண்டும். விந்தணு தானம் போல் இல்லாமல், கருமுட்டை தானத்தில் ஒரு பெண்ணுக்கு அதிக அளவிலான மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது.

கரு முட்டையை ஒரு பெண்ணிடத்திலிருந்து எடுக்கும்போது அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இப்படித் திரும்பத் திரும்ப அடிக்கடி செய்வது உடலின் பொது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பலமுறை கருமுட்டை தானம் செய்வதனால் ஓவேரியன் புற்றுநோய் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன” என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா. ஆங்கில ஏட்டிற்கு செவ்வி கொடுத்த இந்த மருத்துவர்களைத் தமிழ் ஏடுகளின் செய்தியாளர்கள் அணுகிய போது அது பற்றி பேச மறுத்து விட்டனர்.

உலக மயத்தாலும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியாலும் மக்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்று கூறினார்கள். உலகமயம், பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கே பயன்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ஒழுங்கும் எந்தக்கட்டுப்பாடுமின்றி மக்களைச் சூறையாட அனுமதிக்கப்பட்டன. அதன்விளைவு இப்போது வேலைவாய்ப்புகளை இழந்து தன் உடலை வாடகைக்கு விடும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். முதலாளியம் மனித உறவுகளை வெறும் காசு பணமாக மாற்றிவிட்டது என்று 19-ஆம் நூற்றாண்டில் காரல்மார்க்ஸ் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை!


-க.காந்திமதி

Courtesy: Tamilar Kannottam-April 2009, http://www.keetru.com/

வெள்ளி, மே 08, 2009

ஈழத்தமிழரின் இன்னல் கலைவடிவமாக - விஜய் டிவியில் ஒளிபரப்பு

விஜய் டிவி முற்றிலும் வணிக நோக்கத்தில் இயங்கும் ஒரு நிறுவனம். ஆனால் அங்குள்ளவர்களுக்கு மனசாட்சி உண்டு.


தமிழ் நாட்டில் மேலும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. இவர்களும் "மானாட மயிலாட" என்று பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு வியாபாரம் செய்வார்கள்.


அதைத்தவிர அவர்களுக்கு மனமும் கிடையாது. மனசாட்சியும் கிடையாது.


prabhudeva part 5 @ Yahoo! Video

நமக்கு மனசாட்சியும், மானமும் இருந்தால் அடையாளம் காண்போம்.

யாரை ஆதரிக்க வேண்டும், யாரை புறக்கணிக்க வேண்டும் என்று...!

தொலைக்காட்சியில் மட்டுமல்ல...

அரசியலிலும்தான்...!

வியாழன், மே 07, 2009

இலங்கையில் இனப்படுகொலை: இந்தியாவில் மவுனம் ஏன்? -அருந்ததிராய்

இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரம், அதைச் சூழ்ந்துள்ள மவுனத்தால்தான் சாத்தியப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அனைத்திந்திய ஊடகங்களில் சொல்லப்படவில்லை. பன்னாட்டு ஊடகங்களிலும் சொல்லப்படவில்லை. இது ஏன் அப்படி ஆனது, என்பது ஆழ்ந்த கவலைக்குரியது. அம்மண ஓவியத்தில் பாலுறுப்பை மறைக்க அதன் மீது ஓர் இலையை வரைந்து விடுவார்கள். அது போல் இலங்கை அரசு, சனநாயகத்தின் மிச்சமீதங்களையும் அழித்து, சொல்லுந்தரமற்ற குற்றங்களைத் தமிழ் மக்களுக்கு இழைப்பதை மறைக்க “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று ஓர் “இலையை”ப் போட்டு மூடுகிறது. வடிகட்டபட்டதில் இருந்து கசிந்து வரும் செய்திகள் இதைத்தான் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதியே என்ற கோட்பாட்டை இலங்கை அரசு கடைபிடிக்கிறது. தான் பயங்கரவாதி இல்லை என்பதை அந்த ஆணோ அல்லது அந்தப் பெண்ணோ மெய்ப்பிக்க வேண்டும். இந்தக் கோட்பாட்டின்படி, குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றின் மீது வெடிகுண்டு வீசுகிறது. அவற்றைப் போர்க்கள மண்டலமாக மாற்றுகிறது. இப்படிச் சிக்கிக் கொண்டவர்கள் இரண்டு லட்சம் பேர் என்று நம்பத் தகுந்த செய்திகள் கூறுகின்றன.

டாங்கிகள் மற்றும் விமானங்களுடன் இலங்கைப் படை முன்னேறுகிறது. இடம் பெயர்ந்த தமிழர்களைத் தங்க வைப்பதற்காக, மன்னார், வவுனியா மாவட்டங்களில் ‘நலக்கிராமங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசுச் செய்திகள் கூறுகின்றன. டெய்லி டெலிகிராப் (பிப்- 14,2009) செய்தியின்படி இந்தக் கிராமங்கள் “போரிலிரந்து தப்பி வரும் மக்களைக் கட்டாயமாகப் பிடித்து அடைத்து வைக்கும் நடுவங்களாகும்”. இவை மறைமுகமான இட்லரின் வதை முகாம்களா? (Concentration camps?)

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெய்லி டெலிகிராப்பில் கூறுகிறார்:“சில மாதங்களுக்கு முன், கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் அனைவரையும் அரசாங்கம் கணக்கெடுத்தது. அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று காரணம் சொன்னது; ஆனால் இந்தக் கணக்கெடுப்பு 1930களில் நாஜிகள் செய்தது போல வேறு நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளாக மாறக் கூடியவர்கள் என்று தமிழ்க் குடிமக்கள் அனைவர்க்கும் முத்திரை குத்தினர்.”

விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழிப்பது என்பது தனது திட்டத்தை அறிவித்துள்ள இலங்கை அரசாங்கம், இப்பொழுது குடிமக்களுக்கும் “பங்கரவாதிகளுக்கும்” எதிராகப் பேரழிவை ஏவி, இன அழிப்பு என்ற விளிம்பில் நிற்கிறது. ஐ.நா.மன்றத்தின் ஒரு மதிப்பீட்டின்படி ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலர் சொல்வது, நரகத்திலிருந்து வரும் நடுங்க வைக்கும் கனவு போல் உள்ளது.

நாம் பார்ப்பது அல்லது இலங்கையில் நடப்பது, அல்லது மிகத்திறமையாக மக்கள் கண்ணிலிருந்து மறைப்பது எதுவாக இருந்தாலும் அது கூச்ச நாச்சமற்ற, பகிரங்கமான இனப்போர் தான். தண்டனை விலக்கு இருப்பதால் இலங்கை அரசாங்கம் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய முடிகிறது. இவை, இலங்கைத் தமிழர்களுக்கெதிராக மாற்ற முடியாததாய் இறுகியுள்ள இனப்பகையை வெளிப்படுத்திவிட்டன. இந்த இனப்பகை தான் இலங்கையில் தமிழர்களை ஓரங்கட்டி, அந்நியப்படுத்தியுள்ளது.

இனவாதம் நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. சமூகப் புறக்கணிப்பு, பொருளியல் முற்றுகை, சித்திரவதை போன்றவை நீண்ட காலமாகத் தொடர்கின்றன. அமைதியான மற்றும் அகிம்சை வழியில் தொடங்கிய போராட்டம் மிருகத்தனமான உள்நாட்டுப் போராக மாறிப் போனதற்கான வேர் இந்த இனப்பகைமையில் இருக்pறது. ஏன் இந்த மவுனம்? வேறொரு நேர்காணலில் மங்கள சமரவீரா சொல்கிறார்: “சுதந்திரமான ஊடகம் என்பது இலங்கையில் கிட்டத்தட்ட இல்லை”. சமரவீரா மேலும் கொலைக்குழுக்கள் பற்றியும், வௌ;ளை வேன் கடத்தல்கள் பற்றியும் பேசுகிறார். இவை சமூகத்தை அச்சத்தில் உறைய வைத்துவிட்டன என்கிறார். மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள், இதழாளர்கள் உட்பட பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதழாளர்களின் வாயை அடைப்பதற்குப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமற் போதல், கொலைகள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையைப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு என்று பன்னாட்டு இதழாளர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மனித குலத்திற்கெதிரான இக்குற்றங்கள் புரிவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு பொருள் வகை மற்றும் தளவாட உதவிகள் வழங்குவதாக மன உளைச்சல் தரும் ஆனால் உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளன. இது உண்மையானால் அது அதிர்ச்சி தரும் கொடுமை! மற்ற அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலைமையைத் தீவிரப்படுத்த அல்லது தீங்கிழைக்க அவை என்ன செய்கின்றன?

தமிழ்நாட்டில் பத்து பேர்க்கு மேல் தீக்குளிக்கும் அளவிற்கு இலங்கைப் போர் உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது. பொதுமக்களின் சீற்றம், துயரம் போன்றவை பெரிதும் ஞாயமானவை. அவற்றில் சில தன்னல நோக்கம், அரசியல் தந்திரம் கொண்டவையாக இருக்கின்றன. இவை தேர்தல் சிக்கல் ஆகி உள்ளன. இலங்கைப் போர் பற்றிய செய்திகள் இந்தியாவின் இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை என்பது, வழக்கத்திற்கு மாறானது. ஏன் இந்த மவுனம்? இங்கு வௌ;ளை வேன் கடத்தல்கள் இல்லை. குறைந்தது இந்தச் சிக்கலுக்காகக் கடத்தல் இருக்காது. இலங்கை நடப்பின் பரிமானத்தைப் பார்க்கும் போது இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. இந்த மோதலில் பொறுப்பற்ற வகையில் இந்திய அரசு குட்டையைக் குழப்பியது;முதலில் ஒருபக்கம் சாய்ந்தது. பிறகு மறுபக்கம் சாய்ந்தது.

நான் உட்பட நம்மில் பலர் இன்னும் முன்பாகவே பேசியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நாம் பேசவில்லை; காரணம் சாதாரணமானது; இந்தப் போர் பற்றி போதிய செய்திகள் தெரியவில்லை. கொலைகள் தொடரும் போது, பத்தாயிரக்கணக்கான மக்கள் மனித வதை முகாம்களில் அடைக்கப்படும் போது, இரண்டு லட்சம் பேர் பட்டினியில் கிடக்கும் போது, இனப்படுகொலை காத்திருக்கும் போது ஒரு மாபெரும் நாட்டில் உணர்ச்சியற்ற மவுனம் நிலவுகிறது. இது மிகப்பெரிய மனிதத் துயரமாகும். உலகம் இதில் தலையிட வேண்டும்; இப்பொழுதே! காலம் கடந்து போகுமுன்!

(நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா, 30.03.09.)

Courtesy: Tamil Thesiya Thamizar Kannottam, www.keetru.com

புதன், மே 06, 2009

சங்கராச்சாரி வழக்கு கதி என்ன?

அரசு சாட்சிகள் தடம் மாறுவது ஏன்? காஞ்சி சங்கராச்சாரி மீதான வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சங்கராச்சாரிக்கு எதிராக அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட சாட்சிகளே சங்கராச்சாரிக்கு ஆதரவாக திரும்பி விட்டன. சங்கராச்சாரியை துணிவுடன் கைதுசெய்தது - ஜெயலலிதா என்ற பார்ப்பனர்தான். சங்கர் ராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரிக்கு தொடர்புண்டு என்று செய்திகள் வரத் தொடங்கிய நிலையில் சங்கராச்சாரியை கைது செய்யக் கோரி காஞ்சிபுரத்தில் தி.மு.க.தான் முதலில் போராட்டம் நடத்தியது. ஜெயலலிதா உண்மையிலே துணிவுடன் சங்கராச்சாரியை கைது செய்து விட்டார். தமிழினமே ஜெயலலிதாவின் இந்த துணிவைப் பாராட்டியது.

பாரதிய ஜனதா கட்சி - ஜெயலலிதா ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டபோது, பெரியார் திராவிடர் கழகம் - அதற்கு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி, இப்பிரச்சினையில் ஜெயலலிதா ஆட்சி நடவடிக்கைகளை உறுதியோடு ஆதரிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. கலைஞர் கருணாநிதியால் இப்படிப்பட்ட துணிவான முடிவை எடுத்திருக்கவே முடியாது என்பதே - அப்போது தமிழின உணர்வாளர்களின் பொதுவான கருத்தாக இருந்தது. ஜெயலலிதா - சங்கராச்சாரியை கைது செய்யவே மாட்டார் என்று உறுதியாக நம்பிய கலைஞர் கருணாநிதி - சங்கராச்சாரியை கைது செய்யக் கோரி போராடினார்.

ஆனால் ஜெயலலிதா கைது செய்தவுடன், வழக்கம் போல் குரலை மாற்றிக் கொண்டு விட்டார். “இந்தக் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று அப்போதும் துரோகக் கருத்தை முன் வைத்தார். ஜெயலலிதா ஆட்சிப் போய் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வழக்கின் நிலையும் மாறிவிட்டது. அரசு சாட்சிகள் தடம்புரளத் தொடங்கிவிட்டன. பார்ப்பன வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. சங்கராச்சாரி வழக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.க. தலைவர் கி.வீரமணி, அரசு சாட்சிகள் தடம் புரளுவதை சுட்டிக்காட்டி, எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. - இதுதான் “பெரியார் ஆட்சி”யா? 

Courtesy: Puratchi Periyar Muzhakkam, April 2009

தோல்வியில் முடிந்த வழக்கறிஞர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த வழக்கறிஞர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றியடைந்துள்ளதா? அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதா? ஒரு இணை ஆணையர் மற்றும் ஒரு துணை ஆணையர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் உயர்நீதிமன்ற உத்தரவு அவர்களுக்கு வெற்றிதானா? போன்றவற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்தப் போராட்டம் நமக்குச் சொல்லும் செய்தியைப் பார்ப்பதற்கு முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்ப்போம்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டம் இரண்டு மையப் புள்ளிகளின் சந்திப்பின் துவக்கமாக கொள்ளலாம். ஒன்று காலம் காலமாக தங்களின் எதேச்சதிகார போக்கிற்கு ஏதேனும் ஒரு வகையில் இடையூறாக இருந்த வழக்கறிஞர்களின் மீது காவல் துறையினருக்கு ஏற்பட்டிருந்த தீராத வன்மம். இன்னொன்று மத்திய, மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு சமீப காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது ஏற்பட்டிருந்த தீராத ஆத்திரம். ஈழத்தில் உள்ள தமிழர்களை பூண்டோடு அழிப்பதையே தனது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையாகவும், தனது தனிப்பட்ட குறிக்கோளாகவும் வைத்திருக்கும் சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், அதன் இணைபிரியாத பங்காள¤ தி.மு.க.விற்கும், தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டங்கள் தீராத தலைவலியாக இருந்து வந்தது.

ஆரம்பம் முதல் ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, நடைபெறும் போராட்டங்களின் உடன் இருந்து பல்வேறு நாடகங்களையும், திசைதிருப்பல்களையும் செய்து இறுதியில் தற்பொழுது போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய முடியாது என்று கருதி, சற்று ஒதுங்கியிருந்தார். ஆனாலும், தானாக இந்தப் போராட்டங்கள் சிறிது சிறிதாக ஓயும் என்று எதிர்பார்த்து ஆட்சியாளர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் விரும்பும் வேளையும் கொஞ்சம் கொஞ்சமாக கனிந்து வந்தது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்களின் எழுச்சி அனைத்தும் சரியான தலைமை இல்லாத காரணத்தினாலோ, தலைவர்களின் துரோகத்தாலோ, அடக்குமுறைக்கு அஞ்சியோ ஏறத்தாழ ஊற்றி மூடப்பட்ட நிலையில் ஆட்சியாளர்கள் தங்கள் எண்ணம் நிறைவேறியது என்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நிறைவேற பெரும் இடையூறாக இருந்தது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தொடர்ச்சியான போராட்டங்கள். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம், ரயில் மறியல் போராட்டம், இராணுவத் தலைமையக முற்றுகைப் போராட்டம் போன்றவை ஏறத்தாழ தமிழக மக்கள் மனதிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருந்த ஈழத் தமிழர் பிரச்சினையை ஏதாவது ஒரு ரூபத்தில் மக்களிடம் நினைவு படுத்திக் கொண்டிருந்தது. இது ஆளும் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் விரும்பிய ‘அமைதியான’ தமிழகத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. அதிலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சோனியாவின் கொடும்பாவி, மத்தியில் உள்ள ஆட்சியாளர்களையும் தனது தள்ளாத 85 வயதிலும் சோனியாவை ‘வாஞ்சை’யுடன் ‘சொக்கத் தங்கம்’ என அழைக்கும் கலைஞரை ஏகத்துக்கும் சினம் கொள்ள வைத்திருக்க வேண்டும். இதற்கான பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக ஆட்சியாளர்கள் காத்திருந்தனர்.

இவர்களுக்கான வாய்ப்பை உருவாக¢கிக் கொடுத்தார் சு.சாமி. சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் ஆஜராவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்நீதிமன்றத்திற்கு, ஈழத் தமிழர்களின் போராட்டங்களைக் கேவலமாகப் பேசுவதையே தொழிலாக வைத்திருக்கும் சு.சாமியின் வருகையின் போது, அழுகிய முட்டை வீச்சு அன்பளிப்பாகக் கிடைத்தது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் வேறு வழியின்றி கசப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பன ஊடகங்களும், ஆட்சியாளர்களும் தங்கள் கோர முகத்தை அம்பலப்படுத்திக் கொள்ள நல்வாய்ப்பாக அமைந்தது.

தமிழர்கள் மீது வீசப்படும் கிளஸ்டர் குண்டுகளுக்கு இறங்காத ஆட்சியாளர்கள் மனம், வானிலிருந்து கொத்துக் கொத்தாக வீசப்படும் கொத்துக் குண்டுகளுக்கு இரங்காத ஆட்சியாளர்கள் மனம் சாமி மீது வீசப்பட்ட அழுகிய முட்டை வீச்சுக்கு இரங்கியது. மருத்துவ மனையிலிருந்து உத்தரவுகள் பறந்தன. சென்னை உயர்நீதி மன்றம், காவலர்களின் வேட்டைக்காடாக மாறியது.

ஏறத்தாழ நான்கு மணி நேரம் உயர்நீதிமன்றம் முழுவதும் காவல் துறையினரின் காட்டு தர்பாரின்கீழ் இருந்தது. உயர்நீதிமன்றத்தில் அப்போது பாதுகாப்பு இருந்தது தலைமை நீதிபதியின் அறை மட்டுமே. மீதமுள்ள பகுதி முழுவதும் காவல் துறையினரின் தலைமையில் ‘சட்டத்தின் ஆட்சி’ நடந்தது.

அதன் பின்பு நடைபெற்றவை எல்லாம் கண்துடைப்பு அறிக்கைகள், கண்துடைப்பு விசாரணைகள், அழுகை நாடகங்கள், பெயரளவு கண்டனங்கள் மட்டுமே. தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மையப் பகுதியில், உயர்நீதிமன்றத்திலும், அதன் வளாகத்திலும் நாட்டின் அனைத்து ஊடகங்களும் குழுமியிருக்க, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்றப் பணிக்கு வந்தவர்கள் ஆகியோர் மீது ஏறத்தாழ நான்கு மணி நேரம் காவல்துறை நடத்திய கோர தாண்டவத்தை வெளிப்படையாக எந்த ஆட்சியாளர்களும் கண்டிக்கவில்லை. வெளிப்படையாக எந்த ஊடகங்களும் அம்பலப்படுத்தவில்லை.

காவல் துறையினரின் அராஜகத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கற்களை வீசித் திருப்பித் தாக்கிய வழக்கறிஞர்களின் தாக்குதலைப் படம் பிடித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட ஊடகங்கள் காவல் துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பணியாளர்கள் என அனைவரையும் வேட்டை நாய்களைப் போல குதறிய செய்திகளையும், படங்களையும் கண்துடைப்பாக வெளியிட்டன.

கருணாநிதியின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் ஜெயலலிதா காவல்துறையின் அராஜகத்தை வெளிப்படையாக கண்டிக்காமல் வார்த்தைகளில் விளையாடினார். காவல்துறையினரின் செயல்களுக்கு பெயரளவுக்குக் கண்டனம் தெரிவித்த மூன்று சீட்டு மார்க்சிஸ்டுகள் இலவச இணைப்பாக அதை விட மேலாக வழக்கறிஞர்களுக்கு கண்டனத்தை அளித்தனர். இந்திய நாட்டின் உச்ச நீதி மன்றமோ இறுதிவரை கள்ள மவுனம் சாதித்தது. பெயரளவுக்குக் கூட கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களை இன்றுவரை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

வழக்கறிஞர்களின் வழக்கு உயர்நீதிமன்றம் வந்தது, உச்சநீதிமன்றம் போனது, கிருஷ்ணா கமிஷன் வந்தது. ஆனால் எங்குமே நீதி கிடைக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் உள்ளே நுழைய உத்தரவிட்டது யார்? என்று ‘ஆக்ரோச’ வினா எழுப்பியும் மாநில அரசு மறுநாள் பதில் தெரிவிக்காத சூழ்நிலையிலும் கண்டுகொள்ளவில்லை. ஓரிரவில் நீதிபதிகள் மனம் மாறிய மர்மம் தெரியவில்லை. சீறிய வேகத்தில் அடங்கினர். நமக்கோ அரசுப் பணியாளர்கள் பல்லாயிரம் பேரை எஸ்மா சட்டம் மூலம் வீட்டுக்கு அனுப்பிய அப்போதைய தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, ஆட்சியாளர்களைப் பற்றி சீறியதும், இரண்டு நாள் விடுமுறைக்குப்பின்பு அடங்கியதும் நினைவுக்கு வந்தது.

இறுதியாக, சுவற்றில் அடித்த பந்து போல உயர்நீதிமன்றத்தில் வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. ஒரு மாத¢திற்கும் மேலாக வழக்கறிஞர்களின் போராட்டம் நீடித்த நிலையில் அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாத நிலையில், வேறு வழியின்றி கண்துடைப்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர்களின் மீது ஏவப்பட்ட கொடூர வன்முறையும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் போராடிப் பெற்றதாக கூறப்படும் இந்த வெற்றியும் சொல்லும் செய்தி என்னவென்று பார்த்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தாக்குதலைக் கண்டித்து ஏறத்தாழ ஒரு லட்சம் வழக்கறிஞர்கள், தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக இரண்டே இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். இது ஒரு மிகச் சாதாரண வெற்றி. ஆனால், உத்தரவு பிறப்பித்து பத்து நாட்கள் ஆகியும் இன்னும் தமிழக அரசு அவர்களை பணிநீக்கம் செய்யவில்லை. இந்தத் தீர்ப்பு இன்னும் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ உச்ச நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்படலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினாலும், அவர்களால் அதிகபட்சமாக இவ்வளவு மட்டுமே சாதிக்க முடிந்துள்ளது. அரசு இவர்கள் கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்துவில் தலையங்கம் எழுதினால், அலறியடித்து நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்சினையில் கண்துடைப்பு நடவடிக்கை கூட மேற்கொள்ளவில்லை. தன் ஏவலுக்காக எதையும் செய்யத் துணிந்த காவலர்களுக்காக எதையும் தாங்கும் இதயம் கொண்டிருந்தார்.

தடியடியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும், முன்னின்று நடத்திய உயர் அதிகாரிகளுக்கும், இனி வீரப்பனை பிடித்த காவலர்களுக்கு பதவி உயர்வும், பனிமனையும் கிட்டியது போல கிடைக்கக்கூடும்.

ஆனால், வழக்கறிஞர்கள் பட்ட அடிக்கும் வழிந்தோடிய ரத்தத்திற்கும் என்றும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. அதிகபட்சமாக பெயரளவு இழப்பீடும் என்றாவது ஒருநாள் காவல்துறை மீது நீதி அரசர்களால் பெயரளவு கண்டனம் மட்டும் தெரிவிக்கப்படும். மேலும் இந்தப் போராட்டத்தினால் அடித்து நொறுக்கப்பட்ட வழக்கறிஞர்களின் கௌரவமும் மதிப்பும் என்றும் திரும்பி வராது.

ஆனால் இந்தப் போராட்டத்தின் மூலம் அரசின் அடக்குமுறைக்கு முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதற்கு எந்த வழிமுறையையும் கையாளுவார்கள் என்பது வழக்கறிஞர்கள் போராட்ட விஷயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அது ‘புரட்சி’த் தலைவி அரசாக இருந்தாலும் சரி, தமிழினத் தலைவராக இருந்தாலும் சரி.

அன்று ஜெயலலிதா கல்விக் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்துப் போராடிய சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் அவர்களின் விடுதிக்குச் சென்று காவல்துறையினரை அனுப்பி வேட்டையாடினார். இன்று ஈழத் தமிழர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களை ‘தமிழினத் தலைவர்’ ஊரைக் கூட்டி, ஊடகங்களைக் கூட்டி காவல்துறையினரை வைத்து கோரதாண்டவம் ஆடியுள்ளார். காவல்துறையினருக்கு அவர்களே நினைத்துப்பாராத உச்சபட்ச சுதந்திரத்தை அளித்துள்ளார். இனிமேல் பொதுமக்கள் யாராவது காவல்துறையினரை எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, வக்கீல்களை அழைத்து வருவதாகக் கூறினாலோ, ‘ஜட்ஜுக்கே என்ன கதி தெரியும்ல’ என்று காவல்துறையினரின் பார்வை ஏளனம் செய்யும். காவல்துறையினரின் எதேச்சதிகார வளையத்தில் இதுவரை கட்டுப்படாமல் இருந்த வழக்கறிஞர்கள் இப்பொழுது உள்ளே கொண்டுவரப்பட்டுவிட்டனர்.

அரசு சொல்வது இதுதான். எதற்கும் போராடாதே. நாங்கள் நாட்டை தாரைவார்த்தாலும் சரி, ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தாலும் சரி. அப்படிப் போராடவேண்டும் என்றால் அரசுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுங்கள். தீக்குளித்து உயிரிழக்கும்போராட்டங்கள் நடத்தினாலும் சரி எத்தனை பேர் தீக்குளித்து இறந்தாலும் அரசுக்குக் கவலையில்லை. மீறி போராடினால் அரசு அதை ஒடுக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறது. அது போராடுபவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி, நீதிபதிகளாக இருந்தாலும் சரி.

இதுதான் வழக்கறிஞர்களின் போராட்டத்தின் தோல்வி நமக்குச் சொல்லும் செய்தி.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால் வழக்கறிஞர்களின் போராட்டம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் இழப்பு என்னவோ வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும்தான்.

-காமராஜ்


சமூக விழிப்புணர்வு,
74, 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018.
தொலைபேசி எண்: 94434 23638
awareness012@yahoo.co.in

ஆண்டுக்கட்டணம்: ரூ.150
ஆயுள் கட்டணம்: ரூ.1000

செவ்வாய், மே 05, 2009

இந்தியா போர் நிறுத்தம் கோரவில்லை - கோத்தபய ராஜபட்ச

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 24-ம் தேதி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.

அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் "சண்டே அப்சர்வர்' பத்திரிகைக்கு கோத்தபய ராஜபட்ச அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. அதில் சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தியதாக கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான திமுக.வின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் அளித்துவருவதாக செய்தி வெளியானது குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போரில் அப்பாவி தமிழர்கள் உயிரிழப்பது குறித்து இந்திய அரசு சார்பில் அவர்கள் அப்போது கவலை தெரிவித்தனர். மனிதாபிமான உதவிகளை இந்திய அரசு எப்படி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர் என்றார்.

தேர்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் தமிழக அரசு இலங்கைப் பிரச்னையை எழுப்பிவருகிறது. அதனால் இந்திய அரசும் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவ்வப்போது இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது.

தேர்தலுக்காக நெருக்குதல்: இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக்கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோத்தபய.
Courtesy: Dinamani

வெள்ளி, மே 01, 2009

கலைமாமணி விருதைத் திருப்பி அனுப்புகிறேன் - கவிஞர் இன்குலாப்

தரல்

இன்குலாப்
269,மதுரை மீனாட்சிபுரம்,
ஐயஞ்சேரி சாலை,
ஊரப்பாக்கம் - 603210
காஞ்சி மாவட்டம்


பெறல்


செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம்,
சென்னை.


அன்புடையீர்,

வணக்கம்.

எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகிறேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும். ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கிறது. வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற் கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான். 1965-இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான். இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ்மண்ணில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர்நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணா நோன்பைமேற் கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும். தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன. இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த்தியாகங்களைப் பொருட்படுத்தாதபோது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிஸ அரசு, கலைஞரின் உண்ணா நோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும். இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது, இந்த வகையில் 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது. அதனால் இம்மடலுடன் எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புகிறேன்.

இங்ஙனம்,


இன்குலாப்


கைபேசி: 9444284281
Courtesy: www.keetru.com