வியாழன், டிசம்பர் 18, 2008

இலங்கை போர்முனையில் இந்திய ராணுவ ஆலோசகர் !

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் ராணுவ ஆலோசகர்கள் கடந்த திங்கள்கிழமை இலங்கை போர்முனைக்கு சென்று பார்வையிட்டனர். இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கை ராணுவத்தின் ஏற்பாட்டின்பேரில் வன்னி போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு நடைபெற்று வரும் சண்டை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.


சண்டையில் சரணடைந்த விடுதலைப் புலிகள், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக செயல்படுத்தப்படும் நிவாரணப் பணிகள் போன்றவற்றை அவர்கள் நேரில் பார்வையிட்டதாகவும் இலங்கை ராணுவ இணையதளம் தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

செவ்வாய், டிசம்பர் 16, 2008

கருணாநிதியின் புதிய நீதி!

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு' இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார்.

தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்செளரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்செளரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்செளரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?
பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?
"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற"

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.
இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!

-பழ. கருப்பையா
நன்றி: தினமணி

வெள்ளி, டிசம்பர் 12, 2008

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவஞ்சலிக் கூட்டம்

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் & வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன
“இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்

நினைவுகளைப் பகிர்வோர்:
*
விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்
*
நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்,
அண்ணா சாலை, சென்னை
***
நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!
*
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)

சனி, டிசம்பர் 06, 2008

தகவல் உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை!

தகவல் உரிமைச் சட்டம் 2005 அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இச்சட்டத்தின் கீழான பயன்பாடுகள் பிரமிக்கதக்க வகையில் உள்ளன. அனைத்துப் பகுதி மக்களும் இச்சட்டத்தின் பயனை உணர்ந்து அதன் கீழ் நிவாரணம் காண விழைந்துள்ளது இச்சட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். மாணவர்கள் தங்களுடைய கல்வி, தேர்வுமுறை குறித்தும், விவசாயிகள் வீட்டுமனைப் பட்டா, இலவச மின்சாரம், நீர்ப்பாசன முறை, புறம்போக்கு இடம், நில உரிமைகள் போன்ற விவரங்களையும், பெண்கள் குடிநீர்ப் பிரச்னைகள், ரேஷன் கார்டு போன்ற விவரங்களையும், தொழிலாளர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்களுடைய பணி நிலைமை குறித்தும் உரிய அதிகாரியிடம் விண்ணப்பித்து விவரங்களைப் பெற்று வருகிறார்கள். அதிகாரிகள் பல உண்மைகளை மிகவும் கஷ்டப்பட்டு பதில் சொல்லக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், செய்யத் தவறிய கடமைகளைச் செய்ய வைக்கவும் நேர்மையான முறையில் பணியாற்றவும் இச்சட்டம் பெரிதும் உதவுகிறது.

அதிகாரிகள் கோப்புகளில் எழுதும் ரகசியக் குறிப்புகள் கூட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ரகசியக் கோப்பு குறிப்புகளை அளிக்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 2(ஐ)னை அகற்ற அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்தனர். இதனை எதிர்த்து நாடு தழுவிய கிளர்ச்சிகளில் அனைத்துப் பகுதி மக்களும் ஈடுபட்டு அதனைத் தடுத்து நிறுத்தினர். அதிகார வர்க்கத்தின் இந்த சட்ட திருத்த முயற்சியை கைவிட வைத்தது ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

தகவல் உரிமைச் சட்டம் அனைத்து நிர்வாக, நீதிமன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரிவு 22ன் படி இதர சட்டங்களை விட இது மேலோங்கி நிற்கும் தன்மை வாய்ந்த, வல்லமை வாய்ந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களை நியமனம் செய்து விண்ணப்பக் கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ""தகவல் உரிமை சட்டத்திலிருந்து நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்'' என பல சந்தர்ப்பங்களில் கூறி வருவது வியப்பை அளிக்கிறது.

தகவல் உரிமைச் சட்டம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்ததே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான். 1975ல் உத்தரப்பிரதேச அரசுக்கும் ராஜ் நாராயணனுக்கும் இடையில் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழே கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

""பொது மக்களுக்காக பொது ஊழியர்கள் வெளிப்படையாகச் செய்யும் அனைத்துப் பணிகளையும் மக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு.''
உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் நினைத்திருக்குமேயானால் அத்தகைய விதிவிலக்கு அளித்து தகவல் உரிமைச் சட்டம் இயற்றி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை விமர்சனம் செய்து அவை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுள்ளதா என கூற வேண்டிய உச்ச நீதிமன்றம் தனது வரம்பை மீறி "விதிவிலக்கு கேட்பது' எந்த வகையிலும் சரி அல்ல. இந்த விதிவிலக்கு நிராகரிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
தகவல் உரிமைச்சட்டம் 2005ஐ இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் பயன்படுத்தலாம் என சட்டப் பிரிவு 3 கூறுகிறது. அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள், பதிவு பெற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரமுடியாத நிலை இருந்தது. இச்சட்டத்தை அனைத்துப் பகுதியினரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய தகவல் ஆணையம் ஒரு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து ""அமைப்புகள், சங்கங்கள்'' இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தீர்ப்பளித்துள்ளது வரவேற்கதக்க, முன்னேற்றகரமானதாகும்.

அதேபோல, மாநில துறைகளுக்கு விண்ணப்ப கட்டணம் நீதிமன்ற வில்லையாக ஒட்டினால் போதுமானதாகும் என்பதும் ஆவணங்களை பெறுவதற்கான கூடுதல் கட்டணம் மணியார்டர் மூலம் கட்டினால் போதுமானது என்பதும் வரவேற்கத்தக்க திருத்தங்களாகும். சென்னை உயர் நீதிமன்றம் உள்பட பல பொது நிறுவனங்களில் தகவல் பெற விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 என்று உள்ளது. இந்த கட்டணம் உடனடியாகக் குறைக்கப்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களின் நகல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.2 ஜெராக்ஸ் கட்டணம் என்று உள்ளது. தற்போது ஜெராக்ஸ் பக்கம் ஒன்றுக்கு 50 பைசாவிற்கு எடுக்கப்படும் நிலையில் இந்த கட்டணத்தை பக்கம் ஒன்றுக்கு ரூ. 1 என குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு நிறுவனங்களும் இச்சட்டத்தின் கீழ் வருவதைப்போல மத்திய தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் பணிகள் சம்பந்தமான விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்கள்' நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இது வரவேற்கத்தக்க அம்சமாகும். இதேபோல தமிழ்நாடு தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்' பதவியிடங்களை அமைக்க வேண்டும். இதற்கான உத்தரவுகளை மாநில அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களுக்குத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் பணியை தற்போது தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செய்து வருகிறது. இதேபோல மாநில அரசு நிறுவனங்களுக்கும் விண்ணப்பங்களைப் பெற்று அனுப்ப தாலுகா அளவில் ஒரு பொருத்தமான அலுவலர் அல்லது தபால் துறையினரையே ஏற்பாடு செய்தல் அவசியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் தகவல் கோரும் நடவடிக்கைக்கு உத்வேகம் கிடைக்கும்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மேல் முறையீடுகள் அல்லது புகார் மனுக்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கைக்கு உள்படாத மனுக்கள் பல ஆயிரங்கள் உள்ளன. தகவல் ஆணைய புள்ளி விவரப்படி 31.12.07 இறுதியில் 41068 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலையில் பல ஆயிரம் மனுக்கள் உள்ளன. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. முன்பு 3 ஆணையர் இருந்த இடத்தில் தற்போது 4 ஆணையர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் முன்னேற்றம் இல்லை. இதன் செயல்பாடுகளை உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான பணியாளர் நியமனம், தேவையான நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்டவற்றை உடனடியாகச் செய்தல் வேண்டும்.

மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என உணரப்படுகிறது. உடனடியாக தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து அதன் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும். மேலே கூறப்பட்ட ஆலோசனைகளை ஏற்று உரிய வழியில் உத்தரவுகள் பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
-பொ. இசக்கிமுத்து
நன்றி: தினமணி

புதன், டிசம்பர் 03, 2008

தடுமாறும் தமிழக ஊடகங்கள்

தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவு தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. பல விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவதால் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்பிலோ அல்லது அரசியல் சார்புடையதாகவோ உள்ளதால் அவை வெளியிடும் செய்திகள் ""முழுவதுமாக'' மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல் காரணமாக இவை தவிர்க்க முடியாதது என்றாலும்கூட மேற்கண்ட பட்டியலில் சேராத ஊடகங்களிலும் பொது ஜனத்தின் குரல் ஈனஸ்வரத்தில்தான் ஒலிக்கிறது. ஆனால் இவற்றிற்கு செய்தி நிறுவனங்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஊடகங்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத் தேவைக்கேற்ப அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தமிழகத்தில் தொலைக்காட்சிகள் முதன் முதலாக தொடங்கப்பட்டபோது, அவற்றில் பணியில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அச்சுப்பத்திரிகையில் இருந்து வந்தவர்கள்தான்.

அன்று இத்துறையில் கால்பதித்தவர்களின் அறிவும், பணி அனுபவமும், ஆழமான செய்தி ஆர்வமும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு அடியுரமாக பயன்பட்டது. ஆனால், இன்று செய்தித்துறைக்கு வரும் புதிய செய்தியாளர்களிடம் அத்தகைய ஆர்வத்தையும், பணி ஈடுபாட்டையும் காண்பது அரிதாக உள்ளது. மேலும், கற்றுக்கொள்வதில்கூட அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க மூத்த செய்தியாளர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. இதுவும் ஊடகச் செய்திகளின் தரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது.

மேலும், தொலைக்காட்சி செய்தி என்பதை ""பைட்'' ஜேர்னலிஸம் என்று கூறுவார்கள். உதாரணமாக ஒரு கட்சியின் தலைவர் அல்லது பிரபலமானவர் பேசுகிறார் என்றால் செய்தி நிறுவனத்தின் ""கொள்கைக்கு'' ஏற்ப அவரது பேச்சின் சில விநாடிகளை அல்லது நிமிடங்களை மட்டும் ஒளிபரப்பத் தேவையான தகவல்களை அந்த நிறுவனச் செய்தியாளர் சேகரித்தால் போதுமானது. எனவே, தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் எளிதானதாகி விடுகிறது. ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்த அரசியல் கட்சி அல்லது பிரபலமானவரின் பேச்சை அலுவலகத்திற்கு வந்து 10 வரி எழுதிக் கொடுத்தால் போதுமானது.

மேலும், இப்போது பரவலாக வரும் ""லைவ்'' என்ற நேரலை செய்தி சேகரிப்பின்போதும் கூட, சம்பவ இடத்தில் நடந்ததை ஒளிப்பதிவு கருவி முன்னால் நின்று ஒப்புவித்தால் போதும் அல்லது ஸ்டுடியோவில் இருந்து செய்தி வாசிப்பாளர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொன்னாலேகூட போதுமானது என்ற அளவில் தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் மேலோட்டமாகவே உள்ளது. ஆனால், இது மட்டுமே தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி அல்ல.

அச்சுப் பத்திரிக்கை போலவே ஒவ்வொரு தகவலையும் நுணுக்கமாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து, அந்த செய்தியின் பின்புலம் அறிந்து செய்திக்கோவையாக மாற்ற வேண்டியது தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மிகவும் அவசியம். செய்திகளைத் தேடிச் சென்று அல்லது கிடைக்கும் தகவல்களை செய்திகளாக உருவாக்கும் பணியும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நாள் ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகளை ஒளிபரப்புவதால் அதற்கேற்ப செய்திகளை ""அப்டேட்'' செய்ய செய்தியாளர்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும்கூட இத்தகைய சூழலிலும் தங்கள் திறமைகளையும், பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது. எனவே அச்சு செய்தியாளர்களை ஒப்பிடும்போது, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இதற்கு அதிகம் உழைக்க வேண்டியது மட்டுமல்லாமல் அர்ப்பணிப்போடும் செயலாற்றுவதும் அவசியமாகிறது. ஆனால், இத்தகைய தன்மையும் இப்போது அதிகம் காண முடிவதில்லை. எனவே, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொலைக்காட்சி செய்திகளில் (பொதுவாகவே ஊடகச் செய்திகளில்) ""நடுநிலை'' என்ற தன்மை காணவே முடிவதில்லை. ""நடு நிலை'' என்பது இரு தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அத்தகைய தன்மை அவசியமானதாக இருந்தாலும்கூட செய்தி நிறுவன உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகள் இதற்கு மாறாக இருப்பதால் செய்திகளின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல. அவர்களுக்காகத்தான் செய்தி நிறுவனமே செயல்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இரு தரப்பு கருத்துகளையும் முன்வைத்தால் அவர்கள் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். ஆனால், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே செய்தியின் வாயிலாக மக்களிடையே திணித்தால் நீண்டகாலம் வாசகர்களையோ, பார்வையாளர்களையோ தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை செய்தி நிறுவனங்களாட்டும் அல்லது அவற்றை நடத்தும் அரசியல் வாதிகளாகட்டும் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொலைக்காட்சி செய்தியாளர்களின் நிலை இவ்வாறு இருக்க, அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களின் நிலை சற்று வேறாக உள்ளது. மேலே குறிப்பிட்டவாறு தொலைக்காட்சிகளில், செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதால் அந்த பற்றாக்குறையைப் போக்க அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களுக்குத்தான் இப்போது வலை வீசப்படுகிறது. இதனால், அச்சுத்துறையில் அனுபவம் வாய்ந்த பல செய்தியாளர்களை அப்பத்திரிகைகள் தற்போது இழந்து வருகின்றன. எனவே, தொலைக்காட்சிகளின் அதிகரிப்பால் அச்சுப்பத்திரிகைகளிலும் செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. எனவே, அச்சுப்பத்திரிகையின் செய்தித் தரத்திலும் இது தாக்கத்தை உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.

செய்தியாளர்களின் பணி என்பது மகத்தான பணி. தவறு செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தினசரிச் செய்திகளை கண்டு அலறி தங்களை திருத்திக்கொண்ட கால கட்டம் கடந்து விட்டது. காரணம், புலனாய்வுச் செய்திகள் அப்போது அதிகம் வெளியானது. ஆனால், தற்போது புலனாய்வுச் செய்திகளை பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காண முடிவதில்லை. இதுவும் ஊடகங்களின் பலத்தை வெகுவாக பாதித்துள்ளது.

இதற்கு உதாரணமாக இலங்கைப் பிரச்னையைக் கூறலாம். இந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்னையில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அரசியல் லாபத்திற்காக ஒரு தெளிவற்ற தன்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், ஊடகங்களும் இப்பிரச்னையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இத்தனை ஊடகங்கள் இருந்தாலும்கூட எந்த பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணத்தை வெளிப்படுத்தவே இல்லை.

நமது அண்டை நாட்டில், தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில்கூட தமிழ் ஊடகங்கள் நடு நிலையோடு செயல்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலை மாறவேண்டும்.

ஏனெனில், ஊடகங்கள் நினைத்தால் இப்பிரச்னையில் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய முடியும். இதே போலத்தான் ஒவ்வொரு பிரச்னையும்.

தமிழ் ஊடகங்கள் தரமானதாக மாற, ஊடக உரிமையாளர்களின் பார்வை சமூக நலன் கொண்டதாக அமைதல் அவசியம். மேலும், ஊடகத்தில் பணியாற்றும் அல்லது கால்பதிக்கும் செய்தியாளர்களுக்கு ""தேடுதல்'' தேவை. இதற்கு விசாலமான பார்வை மிக முக்கியம். இல்லாவிடில், செய்திகளும் வருங்காலத்தில் பொழுதுபோக்காக மாறிவிடும் அபாயம் உள்ளது.


-டி. எம். விஸ்வநாத்
நன்றி: தினமணி, 03-12-2008