சனி, செப்டம்பர் 27, 2008

நார்க்கோ சோதனையும்... ஆய்வுக்கூட எலிகளும்...!

உலக நாடுகளில் உண்மை, மனிதநேய, அறம், மற்றும் உடல்நல அடிப்படைகளில் நிராகரிக்கப்பட்டுவிட்ட நார்க்கோ சோதனை எனப்படும் போதைமருந்து விசாரணை முறை இந்தியாவில் நீதிமன்ற அனுமதியுடன் காட்சி ஊடகங்கள் அதைப் பற்றி திகில் திரைபடங்களுக்கு நிகராக பரபரப்பு செய்திகளை உடனடியாக வெளியிட, இதுவரை 700 பேர்கள் மீது நடத்தப்பட்டு விட்டது.

இச்சோதனையை அமெரிக்காவில் விசாரணைகளின் போது இப்போது பயன்படுத்துவதில்லை. இது உண்மையைச் சொல்லாத குற்றவாளியின் பிடிவாதத்தைத் தளர்த்தப் பயன்படலாம் எனச் சொல்லும் சி.ஐ.ஏ., குற்றவாளி வாக்குமூலங்கள் பெரும்பாலும் சித்தபிரமை பிதற்றல்கள் அல்லது கற்பனைத் தோற்றங்கள் என்கிறது. மேலும் இதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர் தரும் விலையோ பெரிது: சுழல் மன அழுத்தம், சுவாச அழுத்தம், நினைவிழப்பு இப்படிப் பல. மருந்து அளவு பிசகினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் கோமா நிலைக்குத் தள்ளப்படுவார். இத்தனை யோசிக்கும் சி.ஐ.ஏ. 11/9 விசாரணைக் கைதிகள் மேல் நார்க்கோ சோதனை செய்தது இது ஒரு விசாரணை முறை அல்ல சித்திரவதை என்பதை உறுதிப்படுத்துகிறது.

காவல் புலனாய்வு சக்திகள் அடக்குமுறை மற்றும் சித்திரவதைக்குப் பெரும்பாலும் பயன்படுப்படும் நம் இந்தியாவில் (தமிழகத்து போலீஸ் சித்திரவதை முகாம்களை சமீபத்தில் பட்டியலிட்டுள்ளது ஹிந்து நாளிதழ்; வாக்குமூலம் பெற இது போன்ற பங்களாக்கள் மற்றும் விடுதிகளில் வைத்து கைதிகள் வதைக்கப்படுவர்), பல்வேறு வழக்குகளில் வழக்கு விசாரணையை விரைவில் கொண்டு வருவதற்கு எனும் பாவனையில் இந்தக் கொடுமை மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது.

ஆருஷி தல்வார் கொலைவழக்கு விசாரணை எனும் பெயரில் ராஜேஷ் தல்வார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மீது நார்க்கோ சோதனைக்குப் பின்னும் சாட்சியமோ தடயங்களோ மாட்டவில்லை என்று கைவிரித்துள்ளது சி.பி.ஐ.

நித்தாலி வழக்கிலோ வீட்டுரிமையாளருக்குத் தெரியாமல் வேலையாள் குழந்தைகளை கசாப்பு செய்ததாய் நார்க்கோ சோதனையின் போது விபரீத வாக்குமூலம் தந்துள்ளான்.

தபால்தலை பத்திர ஊழல் தெல்கி, வீரப்பன் கூட்டாளிகள், கோத்ரா ரயில் எரிப்பு, மும்பை ரயில் வெடிகுண்டு, நித்தாலி கொலைகள், அபூ சலேம் என்று வரிசையாய் இந்தப் பிரபல வழக்குகள் ஒன்றை உறுதி செய்கின்றன.

இது போன்ற வழக்குகளை ஊதிப் பெருக்கும் ஊடகங்கள், தினசரி அதிரடி திருப்பங்களுக்காய் மாநில புலனாய்வுத் துறை அல்லது சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளைத் தீவிர அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. நம் ஊடகங்களுக்கு திகில் படங்களுக்கு இணையாக உடனடி முடிவுகள் தேவைப்படுகின்றன.

மனவியலாளர் டாக்டர். அனுருத்தின் கருத்துப்படி உண்மையை வெளியிடும் வாய்ப்புள்ள குற்றவாளிகளிடத்து மட்டுமே நார்க்கோ சோதனை பயன்படும். பொய் சொல்லும் நெஞ்சுரம் கொண்டோர் அரை உறக்க நிலையிலும் பொய் விளம்பும் வாய்ப்பு நிறைய உள்ளது.

நாக்பூர் சிறையில் உள்ள நக்சலைட்டு அருண் பெரேரா நார்க்கோ சோதனையின்போது, சிவசேனா தலைவர் பால் தாக்ரேவும் பி.ஜெ.பி.யின் மாணவர் அணியான அகில பாரதி வித்தியார்த்தி பரிஷத்தும் மும்பையில் மாவோயிச நடவடிக்கைகளுக்குப் பொருளாதரவு தருவதாய்க் கூறினார். இது பொய்யாகவோ, மயக்க மருந்தின் போதனையில் அருணின் மனம் புனைந்த பிரமையாகவோ இருக்கலாம். வலதுசாரிக் கட்சி ஒன்று இடதுசாரித் தீவிரவாதிகளை ஆதரிப்பதாய்ச் சொல்வதை வேறெப்படி விளக்க.

தமிழ் நாடு வழக்காய்வு அறிவியல் துறையில் முன்னாள் இயக்குனரான டாக்டர் சந்திரசேகரன் இந்தச் சோதனையின் வேறு சில விபரீத வாக்குமூலங்களைக் கூறுகிறார்: "ஒரு சோதனைக்குட்படுத்தப் பட்டவர் தனக்கில்லாத குழந்தையை உள்ளதாய்ச் சொன்னார், மற்றொருவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தன் இரண்டாவது தந்தையைக் கொல்லப்போவதாய்ச் சூளுரைத்தார், திருடப்பட்ட பொருளை வாங்கிய இன்னொருவர் தானே திருட்டுக் குழுவில் இருந்ததாய்க் கூறினார்".

இப்படிச் சொல்லப்போவது பொய்யாகவோ, விபரீதக்கற்பனையாகவோ இருக்கும்போது பிரபல வழக்குகளில் நம் புலன்விசாரணை நிறுவனங்கள் நார்க்கோ விசாரணைக்காய்ப் பாய்வது ஏன்?

ஆருஷி தல்வார் வழக்கில் நார்க்கோ விசாரணையில் கிருஷ்ணா குற்றம் ஒப்புகொண்டதாய் அவசரமாய் அறிவித்து, பிறகு நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப் போதியம் சாட்சியம் இல்லையென சி.பி.ஐ அபத்த நாடகமாடி தங்களைக் கோமாளிகளாய்க் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

ஊடகங்களின் பரபரப்புக்கு ஈடு கொடுத்து தங்கள் பிம்பத்தைப் பாதுகாக்கும் அழுத்தமா? அரசியல் தலையீடா?

தேவஸ்தாலி கொலை வழக்கில் காவல்துறை குற்றவாளியின் நார்க்கோ சோதனை அறிக்கையை மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கத் தயங்குகிறது. குற்றவாளிக்கு சாதமாய் இது அமையும் எனக் காவல் துறை அஞ்சுவதே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

ஆக இதுபோன்ற அறிவியல் விசாரணைகளில்கூட புலன்விசாரணைத் துறைக்கு வசதியான உணமைகளில்தான் ஈடுபாடு. முழுமையான உண்மையில் அல்ல.

நார்க்கோ சோதனையின் போதான குற்றவாளியின் வாக்குமூலம் சுயவிருப்பமானது என சென்னை உச்ச நீதிமன்றம் 2006-இல் அளித்த தீர்ப்பும், இதை ஒட்டிய கேரள, மும்பை மற்றும் குஜராத் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் காவல், விசாரணை அராஜக நிறுவனங்களின் ஆதரவுக் கரமாக நீதிமன்றங்கள் பல நேரங்களில் செயல்படுவதைக் காட்டுகிறது.

இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படும் குற்றவாளி சட்டரீதியாய்த் தன்னைப் பாதுகாக்கும் அடிப்படைக் குடியுரிமையை இழக்கிறான். தனக்கெதிராய் தானே சாட்சி சொல்லும் சட்ட அபத்தத்தை நிகழ்த்துகிறான்.

நீதிமன்றங்கள் தனிமனித அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, அறம் பற்றி யோசித்து இப்போதெல்லாம் மண்டை காய்வதில்லை. பொதுமக்கள் கவனம் குவியும் உணர்வுபூர்வமான வழக்குகளில் அரைகுறை சாட்சியம் (ராஜீவ் காந்தி கொலை வழக்கு) போதும், புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆதரவாய் அல்லது மக்களின் உணர்வுகளுக்கு சாதகமாய்த் தீர்ப்பளித்து தேசபலி கொடுப்பதில் நீதிமன்றங்கள் சளைக்காமல் செயல்படுகின்றன.

நார்க்கோ சோதனைக்கான நீதிமன்ற ஒப்புதலுக்கு குற்றவாளி நேரடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல் துறை நீதிமன்றத்திடம் சொன்னால் போதும். அனுமதி தயார். சித்திரவதை முகாமுக்கான நுழைவு வாயில் மட்டுமே நம் நீதிமன்றங்கள்.

அரசியல் தலைவர்கள் மத்தியில்கூட இது ரொம்ப பிரபலம். பா.ஜ.க. தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமர்சிங்கை பாராளுமன்ற ஊழல் தொடர்பாக இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சிறு கற்பனை: தமிழகத்தில் ஒருவேளை அடுத்த ஆட்சியின் போது சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நள்ளிரவில் அரைத்தூக்கத்தில் மயக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதுக்கப்பட்ட பொது வினியோக அரிசி மூட்டைகள் அல்லது நொறுங்கி விழக் காத்திருக்கும் மேம்பாலங்கள் பற்றிய உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்யப்படலாம். அப்போது பெண்டதோள் சோடியம் அதிகப்படியாய் வேலை செய்தால், நம் அரசியல் தலைவர்கள் விசாரணையின் போது கற்பனைவளம் தூண்டப்பட்டு தாம் அண்ணா, காமராஜ், எம்.ஜி.ஆரின் மறுபிறப்பென்றோ, நேரடி ஆசீர்வாதம் பெற்ற வழித்தோன்றல் என்றோ அறிக்கை விட்டு, பற்பல எதிர்கால நார்க்கோ அரசியல் பேட்டிகளுக்கு, அதன் மூலம் தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பர வருவாய் பெருக்கத்துக்கு வழிகாணலாம். .

துணையாதாரம்: ரேப் ஆப் தெ மைண்டு, என். பானு தேஜ், தெ வீக்,
செப்டம்பர் 21, 2008

-ஆர்.அபிலாஷ்
நன்றி: உயிர்மை

சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான்..!

"எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்."

கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிக்கார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை.

சோஷலிசத்தின் பெயரால் பொருளாதாரத்தை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்து, இந்தியாவைக் குட்டிச் சுவராக்கியவர் நேரு என்று அவரை ஓயாமல் இன்னமும் வசை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தத்துவங்களின் ஊற்றுக்கண்ணாகிய அமெரிக்காவில் இன்று புஷ் அரசாங்கம் தனியாரிடம் மார்க்கெட்டை விட்டது தப்பு; தன் மூக்கை நுழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறது. காரணம், லெஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதுதான்.

அமெரிக்க அரசாங்கம் தன் மக்கள் வரிப் பணமான சுமார் 900 பில்லியன் டாலர்களைக் (சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களை) கொடுத்து இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தேசத்தையும் உலகத்தையும் மீட்க முயற்சித்திருக்கிறது.

இராக், ஆப்கன் யுத்த செலவு மட்டும் 300 பில்லியன் டாலர் (12 ஆயிரம் கோடி ரூபாய்). வருடந்தோறும் மொத்தமாக அமெரிக்காவில் மக்களிடம் வரி வசூல் தொகை: 3600 பில்லியன் டாலர் (144 ஆயிரம் கோடி ரூபாய்கள்)

லெஹ்மன் பிரதர்ஸ் மட்டுமல்ல, இதற்கு முன்பு ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் கம்பெனிகள். அடுத்து அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி). எல்லாமே நிதி நிறுவனங்கள். பழைய தமிழில் லேவாதேவிகள். வட்டிக் கடைக்காரர்கள்.
லெஹ்மன் பிரதர்ஸ் அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனம். இதற்குத் திரும்பி வராத கடன் மட்டும் 60 பில்லியன் டாலர். (240 கோடி ரூபாய்.) மெரில் லிஞ்ச் கம்பெனியின் கடன் 40 பில்லியன் (160 கோடி ரூபாய்).

இவர்களெல்லாம் முழுகும்போது கூடவே இவற்றில் முதலீடு செய்தவர்கள், இவர்களுடன் வர்த்தகம் செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி வாங்குகிறார்கள். இந்தியாவில் சத்யம், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் முதலிய ஐ.டி கம்பெனிகளும், ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குகிறார்கள்.

ஏன் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகின்றன என்பதை விவரித்தால் பொருளாதார வகுப்பு நடத்துவது போலாகிவிடும்; ஏனென்றால் ஒரு நிறுவனம் கடன் கொடுக்கும்; அப்படி கடன் கொடுத்ததையே தன் முதலீடாகவோ சொத்தாகவோ காட்டி இன்னொரு கம்பெனியிடம் கடன் வாங்கும். இந்தக் கடன்களையே தன் பங்குகளாகக் காட்டி அவற்றை விற்க முற்படும். இப்படி இடியாப்ப சிக்கலாக நிறைய வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

எளிமைப்படுத்திச் சுருக்கமாக சொல்வதானால், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்ததால் திவாலானார்கள். இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும்போது திவால் நோட்டீஸ் கொடுத்தார்கள்.

இப்படி அடுத்தடுத்து நிதி நிறுவனங்கள் திவாலாகும்போது அதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், தொடர் சங்கிலியாக, பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாகிவிடும். எனவே அரசு தலையிட்டுக் காப்பாற்றியாகவேண்டும் என்று புஷ் அரசு அவசர அவசரமாக பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு _ இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.

ஆனால், இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால், நமது வங்கிகளுக்கு, கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான் !

இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

அமெரிக்க திவாலுக்கு அடிப்படை என்ன - கடன் வாங்கியவர்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லை என்பதுதான்.யார் இவர்கள்? ஏன் கடனைத் திருப்பிக் கட்டவில்லை? அல்லது கட்ட முடியவில்லை?

அமெரிக்காதான் பூலோக சொர்க்கமாயிற்றே. அங்கே எல்லாருமே பணக்காரர்கள்தானே. கடனே வாங்கத் தேவையில்லாதவர்கள் என்றுதானே இங்கே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? சரி. அப்படியே வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள் கூட அங்கே உண்டா என்ன? அல்லது சக்தி இருந்தும் வேண்டுமென்றே திருப்பித் தராமல் மோசடி செய்கிறார்களா? என்னதான் நடக்கிறது பூலோக சொர்க்கத்தில்?

இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று வந்தது அல்ல. ஐந்தாறு வருடங்களாகவே மெல்ல மெல்ல முற்றி வருகிறது. அடிப்படைக் காரணம் - வீடு வாங்கக் கடன் கொடுக்கும் திட்டம்தான். ஹவுசிங் லோன்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டன.

கடன் தவணையை ஒழுங்காகக் கட்டாதவர்கள், கட்டமுடியாதவர்கள் எல்லாருக்கும் கொடுத்ததால், வட்டிக்கடைக்காரர்கள் மட்டும் திவாலாகவில்லை. கடனில் வீட்டை வாங்கி அதில் குடியிருந்தவர்கள், வாடகைக்கு இருந்தவர்கள் எல்லாரும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவிலேயே அமெரிக்கர்கள் பலர் அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும், ஊருக்கு வெளியில் கூடாரக் குடியிருப்புகள் முளைக்கின்றன. சென்னையில் கூவம் ஓரமாகவும், பெரிய சாலைகளில் நடைபாதைகளில் பெரிய மதில் சுவர்களின் ஓரமாகவும் குடிசை போட்டு வசிப்பவர்களைப் போல, அமெரிக்காவிலும் ஊருக்கு வெளியே திறந்த வெளிகளில் டென்ட் போட்டு வசிப்போர் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளானவர்கள் இவர்கள்.

இரு அறை கொண்ட ஒரு வீட்டுக்கான வாடகை சுமார் 1120 டாலர். வருமானம் 45 ஆயிரம் டாலராவது இருந்தால்தான் இந்த அளவுக்கு வாடகை தரமுடியும். ஆனால், பல நகரங்களில் ஒருவரின் சராசரி வருமானம் 30, 35 ஆயிரம் டாலர்தான்.

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படி ஜகத்தினை அழிக்கும்போது, அதில் இருக்கும் அமெரிக்காவை மட்டும் பாவம் அழிக்கக்கூடாது என்றார் ஒரு நண்பர். ஏன் என்றேன். அங்கேதான் உணவில்லாத தனி ஒருவன் கூடக் கிடையாதே என்றார் நண்பர்.

குறைந்தது மூன்று கோடி 50 லட்சம் பேர் தினசரி உணவு சரியாகக் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குச் சொன்னேன். இவர்களுக்கு உணவு தருவதற்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் கணக்கின்படி வருடத்துக்கு 2 கோடி பவுண்ட் உணவுப் பொருட்களை நன்கொடையாகத் திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பணக்கார அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 96 கோடி பவுண்ட் உணவுப்பொருட்களை வீணடிக்கிறார்கள் என்றும் தொண்டு அமைப்புகள் வருத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 40 மணி நேர வேலை. மணிக்கு 10 டாலர் சம்பளம் என்ற குறைந்தபட்ச ஊதியமும் வேலையும் கிடைக்காத அமெரிக்கர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன.

அதனால்தான் இந்தியாவுக்கு ஒரு அணு உலையை விற்றால் 3 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அரசு கணக்கிடுகிறது. உலகத்தில் எங்கேயாவது யுத்தம், சண்டை நடந்துகொண்டே இருந்தால்தான், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைக்க முடியும். இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கலாம்.

சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான். இரு தரப்பினரும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளும் நேசமாகிவிட்டால், பேரிழப்பு அமெரிக்காவுக்குத்தான்.

உலகத்தில் வருடந்தோறும் விற்கப்படும் துப்பாக்கிகள், கிரெனேடுகள், ராக்கெட் ஏவுகணைகள் முதலியவற்றால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் சாகிறார்கள். விற்பனைத்தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் !

அமெரிக்க நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவே திவாலானால் கூட உலகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. உலகம் திவாலாக திவாலாக அமெரிக்காவுக்குத்தான் லாபம். அதனால்தான் உலகெங்கும் அரசியலிலும் மீடியாவிலும் தன் ஏஜெண்ட்டுகளை நட்டு வைத்திருக்கிறது.

அந்த ஏஜெண்ட்டுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரங்கள்தான்: எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.

அந்த வரிசையில் புஷ் உருவாக்கியிருக்கும் புதிய மந்திரம்: ஒவ்வொரு தொழிலிலும் லாபம் வரும்போது அது தனியாருக்கு; நஷ்டம் வரும்போது அது அரசுக்கு..!


-ஞாநி
நன்றி: குமுதம், 01.10.08

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராக நளினியைப் பார்க்க முடியாது!

கலைஞர் கருணாநிதியின் பெயரில் இருக்கும் கலை அவரிடம் இருக்கிறது; நிதி இருக்கிறது; கருணை?

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே கையெழுத்தில் 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தவர், கருணை இல்லாதவராக இருக்க முடியுமா?

`ஆயுள் கைதிக்கு அறுபது வயதாகியிருந்தால் 5 வருடம் சிறைவாசமே போதுமானது. விடுதலை செய்யுங்கள்; அறுபதுக்குக் கீழே வயதா? 7 வருடம் சிறையில் இருந்திருந்தாலே போதும். விடுவியுங்கள்' என்று ஆயிரக் கணக்கானவர்களுக்குக் காட்டிய கருணையை ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் காட்ட மறுக்கிறார்? அதுவும் 17 வருடங்களாகச் சிறையில் இருந்து வரும் நளினிக்கு?

ஆயுள் தண்டனை என்பது கொலைக் குற்றம் தொடர்பாக மட்டுமே தரப்படுவது. இந்த தண்டனை பெற்ற ஒரு கைதியை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்க வேண்டுமானால், அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டப்பிரிவுகள் இரு வகைப்பட்டவை.

அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை அளிக்கலாம். குற்றவியல் சட்டம் எனப்படும் கிரி மினல் ப்ரொசீஜர் கோடின் 432, 433-ம் பிரிவுகளின் கீழும் செய்யலாம்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிப்பதில் பல நிபந்தனைகள் உள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவரானால், அவர் குறைந்தபட்சம் 14 வருடமாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் போதைப் பொருள் தடுப்பு போன்ற சட்டங்கள் தொடர்பான குற்றம் செய்திருந்தால், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், மத்திய அரசை ஆலோசிக்காமல் விடுவிக்கக் கூடாது என்பது இன்னொரு நிபந்தனை.

இந்த நிபந்தனைகளின்படி இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் 1405 கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கவே முடியாது. அதனால்தான் குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்காமல், அதைவிட பெரிய சட்டமான அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தனக்கு இருக்கும் தடையற்ற அதிகாரத்தின் கீழ் 1405 கைதிகளையும் தமிழக அரசு விடுவித்திருக்கிறது.

ஆனால் நளினியை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஏன்? எந்த விதி அவருக்கு எதிராக இருக்கிறது? குற்றவியல் சட்டத்தின் நிபந்தனைகளின்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் குறைந்தபட்சம் 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும். நளினி 17 வருடம் இருந்துவிட்டார்.

அவர் மீது வழக்குத் தொடுத்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இருக்கும் சி.பி.ஐ என்பதால், விடுதலை பற்றி மத்திய அரசை ஆலோசிக்க வேண்டும் என்பது இன்னொரு தேவை. ஆனால் இதுவரை தமிழக அரசு நளினியை விடுவிக்கலாமா என்பது பற்றி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை. மத்திய அரசும் எந்த ஆலோசனையும் தரவும் இல்லை.

17 வருடங்கள் சிறையில் இருந்தபின்னர் இனியேனும் தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் தன்னை விடுவிக்கும்படி கோரிய நளினியின் மனுவை, பரிந்துரைக் குழு நிராகரித்தது. இந்தக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்படுவது அல்ல. கருணாநிதியின் மாநில அரசு அமைக்கும் குழுதான். சிறையில் நன்னடத்தை உடையவர்கள் என்று இந்தக் குழு ஏற்றுக் கொள்ளும் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஆயுள் கைதிகளின் விடுதலை மனுவையும் குழு நிராகரித்துவிட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இன்னமும் போர் நடந்துகொண்டிருப்பதால் நளினியையும் இவர்களையும் விடுவிக்க முடியாது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே தர்க்கப்படி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்த தி.மு.க ரவுடிகளையும் இப்போது விடுவித்திருக்கக்கூடாதே. தி.மு.க- மார்க்சிஸ்ட் கட்சிகளின் அரசியல் பகையால் அந்தக் கொலை நடந்தது என்றால், இப்போதும் இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு பகைமையுடன் இருப்பதாகச் சொல்லலாமே. இன்னும் உயிரோடு இருக்கும் லீலாவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து இருப்பதாக வாதிடமுடியுமே. இப்படிப்பட்ட வாதங்களை விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களும் முன்வைக்க முடியுமே.

நீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு சொல்லும் காரணங்களில் ஒன்று, சிறையில் நான்கு முறை நளினி செய்த `குற்றங்கள்'. என்ன குற்றம் அது? இலங்கையில் இருக்கும் தன் மகள் தன்னைக் காண வருவதற்கு விசா மறுக்கப்படுவதை எதிர்த்து இருமுறை உண்ணாவிரதம் இருந்தார். இது இரண்டு குற்றங்கள். பின்னர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று விசா பெறப்பட்டது.

விதிகளின்படி தன்னை சந்தித்துப் பேச இன்னொரு தண்டனைக் கைதியான கணவர் முருகன் ஒருமுறை வந்தபோது, அவருடன் நளினி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இது குற்றம் எண் 3!

கருணாநிதியுடன் அவர் மனைவியோ துணைவியோ இது வரை வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்களா என்ன? இதையெல்லாம் ஒரு குற்றம் என்று சொல்லுவது நளினியை விடுதலை செய்யாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்படும் சாக்குகளே தவிர வேறென்ன?

இதர சிறைக் கைதிகளை கலவரம் செய்யத் தூண்டினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எப்போது, எதற்கு, என்ன என்று எந்த சாட்சியமோ ஆதாரமோ அளிக்கப்படாத குற்றச்சாட்டு இது!

நளினியின் வழக்கைப் பொறுத்தமட்டில் அவரை ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகப் பார்க்கமுடியாது என்பதை உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச்சில் ஒருவரான நீதிபதி தாமஸ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கொலை செய்யப்போகிறார்கள், இன்னாரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் எதுவும் தெரியாமல் கொலைகார சதியாளர்களுக்கு உதவி செய்தவராகவும், கடைசி நிமிடத்தில் தெரிந்தபின்னரும் கூட கொலையைத் தடுக்கவோ, தப்பித்துச் செல்லவோ வழியற்றவராகவுமே அவரை தாமஸ் கருதுகிறார்.

இந்தச் சூழலில், இன்னாரைக் கொல்லுவது என்று முடிவு செய்து கொடூரமாக அரிவாள், குண்டுகளுடன் சென்று கொன்று குவித்த கூலிப்படையினரெல்லாம் ஏழு வருட சிறைவாசத்திலேயே அண்ணா பெயரால் மன்னிக்கப்படும்போது, நளினிக்கு மட்டும் வேறு நீதியை கருணாநிதி காட்டுவது ஏன்?

நளினியை விடுவிக்க மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்கள் எல்லாமே அர்த்தமற்றவை.

இந்த வாதங்களிலேயே உச்சமான அபத்தம் என்பது தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதுதான் - ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும் தண்டனைதான். சாகும்வரை சிறையில் இருக்க வேண்டுமாம். 10, 14 ஆண்டு என்றெல்லாம் எதுவும் கிடையாதாம். இதை நளினி வழக்கில் சொல்லிவிட்டு அடுத்த வாரமே 1405 பேரை 5, 7 வருட தண்டனையோடு விடுவித்திருக்கிறது!

தமிழக வரலாற்றிலேயே கண்டிராத ஒரு புதுமையான நிகழ்வாக, தமிழகத்தின் பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவாகும். கவிஞர் தாமரையும் கவிஞர் கிருஷாங்கினியும் பா.செயப்பிரகாசமும் நெய்வேலி பாலுவும் இந்த அதிசயத்தை சாத்தியப்படுத்தினார்கள்.

தங்களுக்குள் கடும் முரண்பாடுகள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் - அசோகமித்திரன் முதல் அ.மார்க்ஸ் வரை, புஷ்பா தங்கதுரை முதல் நாஞ்சில் நாடன் வரை, சாரு நிவேதிதா முதல் பூமணி வரை, அம்பை முதல் இந்துமதி வரை, சுஜாதா முதல் தங்கர்பச்சான் வரை, ந.முத்துசாமி முதல் பெரியார்தாசன் வரை, வசந்தி தேவி முதல் சாலமன் பாப்பையா வரை, திருமாவளவன் முதல் தமிழருவி மணியன் வரை, வாலி முதல் ஞாநி வரை ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை முக்கியமான பொது வாழ்க்கை மனிதர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டார்கள்.

நளினியை விடுவித்தால், தமிழக அரசியலில் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தி.மு.க.வின் எதிர்காலக் கனவுகளைத் தரைமட்டமாக்கிவிடுவாரா? எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்று தன் மகளுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை எஞ்சிய காலத்தில் வாழும் கனவைத் தவிர அவருக்கு வேறென்ன இனி மீதியிருக்கிறது?

அதை கருணாநிதி மறுப்பது ஏன்? முழுக்க முழுக்க அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட இந்த முடிவை எடுக்க அவர் தயங்குவது ஏன்? கனிமொழியின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற எந்த தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் பாசமுள்ள தந்தையான அவர் ஏன் கனிமொழியும் கையெழுத்திட்டிருக்கும் இந்த மனுவை மட்டும் புறக்கணிக்கிறார்?

அவரை பயப்படுத்துவது எது? யார்? நிச்சயம் சோனியா காந்தியாக இருக்க முடியாது. தன் கணவர் ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருத்த நளினியின் சட்டபூர்வமான சாவைத் தடுத்து நிறுத்தியவர் சோனியா. நேரில் சந்தித்து மன்னித்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா. 1405 பேருடன் நளினியையும் கருணாநிதி விடுவித்திருந்தால், சோனியாவும் பிரியங்கவும் நிச்சயம் எதிர்த்திருக்கப் போவதில்லை.

அப்படியானால், கருணாநிதியைத் தடுப்பது எது? யார்? ஏன்?

1405 கைதிகள் விடுதலை பற்றி ஒரு நிருபர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கிறார்: ``இந்த விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தலைமை நீதிபதியை சந்தித்து வழக்கு தொடுக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?''

கலைஞர் பதில் : ``கருணை உள்ளத்தோடு நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்? ஏழு ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களையெல்லாம் விடுவிப்பது சரியா, தவறா?''

கலைஞர் அவர்களே, கருணை உள்ளத்தோடு நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? ஏழாண்டுகள் அல்ல, 17 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுவியுங்கள் என்று தமிழகத்தின் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் உங்களிடம் மனு கொடுத்தது சரியா? தவறா?


-ஞாநி


நன்றி: குமுதம், 24-09-08

இந்திய மூலிகைகளுக்கு வந்தது ஆபத்து!

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சான்டோ' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயாஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது. `இதனால் இந்தியா அதன் இயற்கை மூலிகைகளை இழந்து, மரபணு மாற்ற மூலிகையால் மண்வளத்தையும் இழந்து, இனி மருந்துக்கும், உணவுக்கும் அமெரிக்காவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்' என்று பதைக்கத் தொடங்கியுள்ளனர்' பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகநல அமைப்பினர்.

இதுபற்றி `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் செயலாளரான சித்தா டாக்டர் சிவராமனிடம் பேசினோம்.

``இந்த மூலிகைச் சுரண்டல் இந்தியாவின் இறையாண்மையையே கேள்விக்குறியாக்கும் செயல். இதைப் பற்றி இதுவரை எந்த அரசியல் கட்சியும் கவனம் செலுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பலர், இன்னொரு ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க உயிர் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தைக் கண்டுகொள்ளவில்லை. நமது இந்திய மூலிகைத் தாவரங்களை அமெரிக்க நிறுவனம் மரபணு மாற்றம் செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இது. எந்தவித பொது விவாதமும் இன்றி, நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அந்த நிறுவனத்துக்கு நம் மூலிகைகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நம்மூரில் `அமுக்கிராங் கிழங்கு' என்ற மூலிகை இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே விளையும் இது, நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக்குறைவு நோய்க்கு அருமருந்து ஆகும். இதில் `விதானலைட்ஸ்` என்ற ரசாயனம் மூன்று சதவிகிதம் இருக்கிறது. அதுதான் மருந்து. இந்த அமுக்கிராங் கிழங்கை, மான்சான்டோ நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதன் செல்லை உடைத்து, அதன் மரபணுவில் வேறொரு மரபணுவைப் புகுத்துவார்கள். அதன்மூலம் அமுக்கிராங் கிழங்கின் மூன்று சதவிகித மருத்துவக் குணத்தை முப்பது சதவிகிதமாக உயர்த்துவார்கள்.

நினைவாற்றலைப் பெருக்கும் நீர்பிரமி, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கீழாநெல்லிக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மூலிகைகளின் நோய் தீர்க்கும் மருத்துவக் குணம் கொண்ட ரசாயனத்தை இவர்கள் பலமடங்கு பெருகச் செய்து அந்தவகை மூலிகைக்குக் காப்புரிமை வாங்கி விடுவார்கள். பிறகு அதை அதிகஅளவில் பயிர்செய்து தரும்படி இந்திய விவசாயிகளுக்கு கடனுதவி தந்து நிர்ப்பந்திப்பார்கள். நமது அரசும் அதற்கு உடந்தையாக இருக்கும்.

மரபணு மாற்ற மூலிகையில் இருந்து பரவும் மகரந்தம் நம்நாட்டின் இயற்கை மூலிகைகளை முடமாக்கி விடும். அவை மலட்டுத்தன்மை அடையும். கால ஓட்டத்தில் இயற்கை மூலிகைகள் அழிந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மூலிகைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். அதற்கான விதைகளை வாங்க அமெரிக்க கம்பெனியிடம் நாம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை உருவாகும்.

நாம் ஒரு மூலிகையின் மணம், குணம், ருசி ஆகிய மொத்தத்தையும் கணக்கிட்டு மருந்தாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், மரபணு மாற்ற மூலிகையில் வெறும் மருத்துவக் குணத்தை மட்டுமே அதிகரிப்பது எந்த விதத்திலும் பயன் தராது. அதோடு மரபணு மாற்ற மூலிகைகளால் புதுவகை பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. அது நமது உடலுக்கு எந்தவகையில் கேடு செய்யும் என்பதை இப்போதே கூற முடியாது. எதிர் கால தலைமுறையைக் கூட அது நாசமாக்கி விடலாம்.

இந்த மரபணு மாற்ற மூலிகைகளால் நம் மண் வளமும் கெட்டு குட்டிச்சுவராகப் போவது உறுதி. கடைசியில் உணவுக்கும், மருந்துக்கும் வக்கில்லாமல், நாம் முழுக்க முழுக்க அமெரிக்காவையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அப்போது இந்தியாவை பரிசோதனைக் கூடமாக்கி அவர்கள் தரும் மருந்துகளால் மேலும் பல புதுப்புது நோய்கள் உண்டாகும். அதற்காக மீண்டும் மீண்டும் அவர்களிடமே நாம் சரணடைய வேண்டியிருக்கும்.

நம் பாரம்பரிய மூலிகைகளைப் பாழாக்கப் போகும் மான்சென்டா மருந்து நிறுவனம், இந்தியா உள்பட நான்கைந்து நாடுகள் போடும் பட்ஜெட்டுக்கு நிகரான பணத்தை வைத்திருக்கிறது. `உள்ளூரில் ஆராய்ச்சி செய்யாதே!' என்று அமெரிக்க அரசால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிறுவனம் இது. அதிலிருந்தே இந்த நிறுவனத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ளலாம். `அந்நிய நாட்டு உயிரியல் மரபணு எதுவும் நம்நாட்டில் நுழைகிறதா? அதனால் ஆபத்துண்டா?' என்று கண்காணிக்க வேண்டிய நம் நாட்டின் `ஜெனடிக்கல் இன்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டி (ஜி.ஈ.ஏ.சி.) கூட அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி தந்து ஒத்து ஊதுவதுதான் அதிர்ச்சி'' என்றார் சிவராமன்.

அடுத்ததாக `தென்னகம்' அமைப்பின் வழிகாட்டுக் குழு உறுப்பினரான அரச்சலூர் செல்வம் நம்மிடம் இப்படிக் கூறினார்.``மான்சான்டோ நிறுவனம் கோவை வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே பருத்தியை மரபணு மாற்ற பரிசோதனைக்கு உட்படுத்தி விளைய வைத்திருப்பது எங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது என்ன ஓர் அபத்தம் பாருங்கள்.

`தமிழகத்தில் 3500 ஏக்கரில்தான் பப்பாளி பயிராகிறது. பப்பாளியைத் தாக்கும் வைரஸ் நோயைத் தடுக்க பப்பாளியையும் மரபணு சோதனைக்கு உட்படுத்துகிறோம்' என்கிறார்கள் இவர்கள். `தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கரில் பயிராகும் தென்னையில் அடிக்கடி வைரஸ் நோய் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே. அந்தத் தென்னையைப் பற்றி ஆராயாமல் பப்பாளியை ஏன் ஆராய்கிறீர்கள்?' என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை.

விஷயம் வேறு ஒன்றுமில்லை. பப்பாளி அதிகம் பயிராகும் இந்தோனேசியா நாட்டில் மான்சென்டா நுழைய வழியில்லை. அதனால், இங்கே நுழைந்திருக்கும் அவர்கள் இதன்மூலம் `இந்தியாவிலும் ஆராய்ச்சி செய்கிறோம்' என்று கணக்குக் காட்டுகிறார்கள். இயற்கை விவசாயத்திலேயே நல்ல மகசூல் வருகிறது, பூச்சி, நோய்த் தாக்குதல் எதுவுமில்லாத நிலையில் அது உண்மையா? என்று பதில் சொல்ல வேண்டிய கடமை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறதா? இல்லையா? இதுபற்றிக் கேட்டாலும் பதிலே இல்லை.

இங்கே நம் அரசும் சரி, ஆராய்ச்சியாளர்களும் சரி, அமெரிக்கா மற்றும் அமெரிக்க மருந்து கம்பெனிகளுக்காகத்தான் இருக்கிறார்கள். இப்போது நமது மூலிகைச் செடிகளிலும் அமெரிக்க நிறுவனத்தை இவர்கள் கைவைக்க விட்டுவிட்டார்கள். இந்தியாவில் ஏற்கெனவே அஸ்வகந்தா என்ற மூலிகையை ரகசியமாக மரபணு மாற்ற ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கென மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இவர்கள் அனுமதி பெறவில்லை.

மூலிகைகளில் மரபணு மாற்றுப் பயிர் சோதனை செய்தால் அதன் பக்கவிளைவுகள் என்ன? வரும் நோய்கள் என்ன? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இந்தவகை மூலிகைகளில் இருந்து காற்று மூலமாகவோ, தேனீக்கள் மூலமாகவோ பரவும் மகரந்தம் நம் பாரம்பரிய மூலிகைகளைப் பாதித்தால் என்னவாகும்? இதற்கு யார் பதில் சொல்வது? இதனால் நாட்டின் பொருளாதாரம் கூட பாதிப்படையலாம்.

உதாரணமாக, பேயர் (Bayer) என்ற அமெரிக்க நிறுவனம், கலிபோர்னியாவில் உள்ள ஒரு வயலில் மரபணு மாற்ற நெல் ஆராய்ச்சியை நடத்தியது. ஆய்வு நடந்து ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி ஆனது. அப்போது அதில் மரபணு மாற்ற அரிசியும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து அத்தனை கோடி டன் அரிசியையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மரபணு மாற்றுப் பயிர் சோதனை அந்த அளவுக்கு உலகத்தைப் பயமுறுத்தி வைத்துள்ளது.

அவ்வளவு ஏன்? மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடைவிதித்திருக்கும் நிலையில், கேட்பாரற்ற நாடு என்று இந்தியாவை இவர்கள் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இதுபோல ஆய்வு செய்ய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், பலநூறு ஆய்வியல் பேராசிரியர்கள் தேவை என்பதால் அவ்வளவு சிரமம் நமக்கெதற்கு என்று நம் நாட்டு விவசாயப் பல்கலைக்கழகங்களை இவர்கள் வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. நம் நாட்டு மூலிகைச் செல்வங்கள் மீது அந்நியர்கள் கைவைக்க உடனே தடைவிதிக்க வேண்டும். இதற்காக நாடு தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்'' என்றார் அவர் குமுறலுடன்.

கிரீன்பீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜெய்கிருஷ்ணாவை நாம் தொடர்பு கொண்டோம். டெல்லியிலிருந்த அவர், ``மூலிகைகளில் மரபணு மாற்று ஆராய்ச்சி செய்வது ஏற்கெனவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற ஆய்வுகளை முதலில் ஆய்வுக் கூடங்களிலும், பின்னர் கண்ணாடி வீடுகளிலும் செய்து விட்டு அதன்பின்தான் விவசாய நிலத்தில் செய்ய வேண்டும். அதன்பின் வர்த்தக ரீதியான அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போதோ நேரடியாக விவசாய நிலத்தில் இவர்கள் ஆய்வு செய்வதாகத் தெரிகிறது. இது ஒரு தேசிய பிரச்னை. இதுகுறித்து பல அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறோம்.

இந்தமாதிரி ஆய்வுகள் ரசாயனப் போருக்கும் உதவும் என்பதால் மத்திய வேளாண்துறைக்கு மட்டுமல்ல, மத்திய பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறையும் இதில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் `டொரிடோஸ்' என்ற மக்காச் சோள சிப்ஸ்களை, கிரீன்பீஸ் அமைப்புக்குச் சொந்தமான ஓர் ஆய்வகத்துக்கு அனுப்பி, நாங்கள் சோதித்தபோது அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து உருவானதைக் கண்டு பிடித்தோம். மத்திய சுகாதாரத்துறைக்கு இதுபற்றி நாங்கள் புகார் அனுப்பியும் ஆறுமாத காலமாக அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்த மரபணு மாற்ற மக்காச்சோள சிப்ஸை மனிதர்கள் தின்றால், அதிலுள்ள புதிய வகை பாக்டீரியாக்கள் உடலுக்குள் புகுந்து செல், ஜீன்களோடு கலந்து புதுமாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்!'' என்றார் அவர்.

நாம் கடைசியாக சந்தித்தது, இந்த மரபணு மாற்றுப் பயிர் உற்பத்திக்கு எதிராகப் போராடி வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரை. ``இந்தக் கொடுமை பற்றிப் பேச நிறைய இருக்கிறது'' என்ற அவர், ``மூலிகைச் செடிகளின் செல்லைப் பிளந்து அதில் புதிய மரபணுவைப் புகுத்தியபின் அந்தப் புதிய செல்கள் ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நகரத் தொடங்கி விடும். அதை யாராலும் தடுக்க முடியாது. நோய் தரும் பூச்சிகளை கட்டுப்படுத்தத்தான் மரபணு மாற்றம் செய்கிறோம் என்று கூறும் இவர்களால் அனைத்து வகைப் பூச்சிகைளயும் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிஜம். அதோடு மரபணு மாற்றம் எந்தவித எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இதுவரை முழுமையான ஆய்வுகள் இல்லாத நிலையில், இவர்கள் செய்யும் வேலையால் மனிதகுலத்துக்கே ஆபத்துதான். உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு உலகுக்கே இது ஆபத்தாகக் கூட முடியலாம்.

மரபணு மாற்ற உயிரினம் (பாக்டீரியா) நம் வயிற்றுக்குள் சென்றால் குடல் அழற்சி, ஒவ்வாமை, புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். கோவைப் பகுதியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியைப் பயிர் செய்து மண்ணே கெட்டுப்போய் விட்டது என்று விவசாயிகள் கருதுகிறார்கள். அதோடு அந்த வகை பருத்தியைப் பயிர் செய்தவர்களின் கை கால்கள் தடித்து வீங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்தநிலையில்தான் இப்போது மூலிகைகளிலும் மரபணு மாற்றம் செய்ய அமெரிக்க கம்பெனி துடிக்கிறது. `நாம் எதைச் சாப்பிட வேண்டும்? என்ன மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்?' என்று முடிவு செய்ய இவர்கள் யார்? உணவுக்கும், இயற்கை மருந்துக்கும் கூட உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லையென்றால் இது என்ன சுதந்திர நாடு'' என்று ஆதங்கப்பட்ட நம்மாழ்வார்,

``தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில், `மரபணு மாற்று, பயிர் விவசாயம் எதுவும் பஞ்சத்தைப் போக்காது. மரபணு மாற்ற ஆய்வுகளை நெறிமுறைப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியா, சீனாவெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறது.

அங்கே அப்படி கையெழுத்துப் போட்டுவிட்டு இந்திய அரசு இங்கே மரபணு மாற்ற சோதனைக்கு மூலிகைகளை உட்படுத்துவது என்ன நியாயம்? இது விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை'' என்றார் அவர்.

`ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ?' என்பது நம் சித்தர் பாடல்களில் ஒன்று. ஆவாரையிலும் மரபணு மாற்ற பரிசோதனையைச் செய்து அமெரிக்க கம்பெனி சாவாரைக் காண வைத்துவிடுமோ என்ற பயம்தான் நம் நெஞ்சை நெருடுகிறது.

-பா. ஏகலைவன்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 25-09-08

வெள்ளி, செப்டம்பர் 19, 2008

சாலை விபத்துகளைக் குறைக்கவே முடியாதா?

தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் என்று சமீபத்தில் சென்னைக்கு வந்து சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் கூறியிருந்தார். இதே கருத்தை அதற்கும் சில வாரங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சரும் தெரிவித்திருந்தார்.

நன்கு பராமரிக்கப்படாத வாகனங்கள், சரியாகப் பயிற்சி பெறாத ஓட்டுநர்கள், மோசமான சாலைகள், சாலைப் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்தாத காவல்துறை அதிகாரிகள், சாலை விதிகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்கள், சாலையோர ஆக்கிரமிப்புகள், ""வாகனங்களுக்கு இடம் இல்லாவிட்டால் என்ன, வியாபாரம் நடந்தால் சரி'' என்று நினைக்கும் சிறு வியாபாரிகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால்தான் விபத்துகள் நடக்கின்றன.

அனுமதி இல்லாமல் ஜல்லி, மணல், செங்கல் ஏற்றிச்செல்லும் லாரிகள், கழிவுநீர், குடிநீர் லாரிகள் போன்றவை நகர்ப்புறங்களில் இரவில்தான் அதிகம் பறக்கின்றன. அதிக நடை ஓட்டினால்தான் லாபம் என்பதால் முதலாளிகளின் ""அன்புக்கட்டளை''களை ஏற்று அசுர வேகத்தில் இவை செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் ""உண்மையான'' அதிகாரம் எவருக்கும் இல்லை.

போதிய ஓய்வு, தூக்கம், நல்ல சாப்பாடு இல்லாமல் பஸ், லாரி, டூரிஸ்ட் டாக்சி ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கிறது.

வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசுவது, கிளீனரின் சம்பளத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு கிளீனர் இல்லாமலேயே கனரக வாகனங்களை ஓட்டுவது (சென்னையில் கன்டெய்னர் லாரிகள் பெரும்பாலும் கிளீனர் இல்லாமல்தான் ஓட்டப்படுகின்றன), எதிரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்தால் அந்த இடத்திலேயே வாகனத்தை நிறுத்திக்கொண்டு அவரை அழைத்துப் பேசுவது, பஸ்களாக இருந்தால் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, இறக்குவது போன்றவற்றால் விபத்துகள் நேர்கின்றன.

40 அடி அகலமுள்ள சாலையானாலும் நடுவில் 18 அடிக்கு மட்டுமே தார்ச்சாலையாக வைத்துக்கொண்டு எஞ்சிய மண் சாலையைச் சேறும் சகதியாகவோ, மேடு பள்ளமாகவோ அலட்சியமாக விட்டுவைப்பதால் இருட்டில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

குடியிருப்புகளும் மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதிகளில்கூட நல்ல வெளிச்சத்தில் தெருவிளக்குகளை எரியவிடாமல் இருட்டாக்குவதால் பாதசாரிகள் திடீரென வாகனங்களுக்கு எதிரில் வந்து அடிபடுகின்றனர்.

ரயில்வே கேட் பகுதியில் நடைபெறும் விபத்துகள் தனி ரகம். கேட்டில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருபுறமும் பார்த்துவிட்டு மெதுவாகக் கடந்து செல்லலாம் என்று எண்ணாமல் அவசரப்பட்டோ, ஏதோ சிந்தனை வயப்பட்டோ கடப்பதால் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் மோட்டார் சைக்கிளில் கணவர், குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த ஓர் இளம்பெண் மின்சார ரயில் வருவதைப் பார்த்த பிறகும், அது ரயில் நிலையத்தில் நிற்கும் என்று தவறாக நினைத்து பாதையை நடந்து கடக்க முயன்று குழந்தையுடன் விபத்தில் பலியாகிவிட்டார். இந்த விபத்தை நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சியில் உறைந்தார். அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மேலே தூக்கப்படும்வகையில் ரயில்வே கேட்டுகளை நவீனப்படுத்தியதே தவறோ என்று எண்ணும் அளவுக்கு வாகன ஓட்டிகள் அங்கு பொது ஒழுங்கைக் காற்றில் பறக்க விடுகின்றனர். நூறு வண்டிகள் ரயில்வே கேட்டில் ஓரம் கட்டி நிற்கும்போது 5 முதல் 10 வாகன ஓட்டிகள் அவற்றைக் கடந்து வெகு வேகமாக முன்னே சென்று, கேட்டைத் திறந்ததும் முண்டியடித்து கேட்டைக் கடந்து ஏதோ அரிய சாதனை செய்துவிட்டதைப் போல பறக்கின்றனர் (தள்ளித் திறக்கும் கேட்டுகளில், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சற்றே பின்னே தள்ளி வாகனத்தை நிறுத்திக்கொள்வார்கள்).

சில வேளைகளில் இவர்களுடைய இந்த அடாவடிப் போக்கு பிடிக்காமல் வரிசையில் நிற்கும் வாகனங்கள் அங்குல அங்குலமாக முன்னேறி இவர்களுக்கு இடம் தராமல் தடுக்க முற்படும்போது அந்த இடமே போர்க்களம்போல தேவையற்ற வாகன நெரிசலால் திமிலோகப்படுகிறது. ரயில்வே கேட்டுகளில் போக்குவரத்துப் போலீஸாரோ, சட்டம்ஒழுங்கு போலீஸாரோ கிடையாது.

ரயில்வே கேட் கீப்பருக்கு இந்த வாகன ஓட்டிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ அதிகாரம் கிடையாது. எனவே அங்கே ஒருவகை ""காட்டு ராஜ்யம்''தான் நடக்கிறது.

சைக்கிள் ஓட்டுகிறவர்கள் ரிஃப்ளெக்டர் எனப்படும் சிவப்பு விளக்குகளை சைக்கிளின் பின்புறத்தில் வைப்பதே இல்லை. பெல், பிரேக் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வண்டி ஓட்டுவதே இல்லை.

டூவீலர்கள், ஃபோர் வீலர்கள் இருக்கும்போது சைக்கிள்களைப் பிடித்து பெல், பிரேக், விளக்கு இருக்கிறதா என்று கேட்பதே தங்களுடைய அந்தஸ்துக்குக் குறைவு என்று போக்குவரத்துப் போலீஸார் விட்டுவிடுகின்றனர்.

மோட்டார் சைக்கிள் என்றால் 3 பேருக்குக் குறையாமல் கட்டாயம் போயாக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பதைப்போல இளைஞர்களும் சில குடும்பத் தலைவர்களும் செல்கின்றனர்.

போக்குவரத்தை முறைப்படுத்த சட்டம் இருக்கிறது. அதை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும் இல்லை. விளைவு சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயர்

-ஈயுண்ணி

நன்றி: தினமணி
-

வியாழன், செப்டம்பர் 18, 2008

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

1948இல் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாயின. குஜராத் சேட் ஒருவர் தனிப்பட்ட சொத்தாக வைத்திருந்த அதை, திரைப்பட அதிபர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் வாங்கி உரிமை பெற்றிருந்தார். தனியருவரின் சொத்தாக அந்த இலக்கியச் செல்வம் பாதுகாக்கப் படக் கூடாது என எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன், கவிஞர் திருலோக சீதாராம், ஜீவா போன்றோரைக் கொண்ட 'பாரதி விடுதலைக் கழகம்' நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை மக்களிடம் உருவாக்கியது. அதில் தோழர் ஜீவாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடெங்கணும் சென்று பரப்புரைசெய்து அப்போது தமிழக முதல்வராயிருந்த ஓமந்தூர் ராமசாமியைச் சந்தித்து நாட்டுடைமையாக்கிடும் வேண்டுகோளை முன்வைத்த பாரதி விடுதலைக் கழகம்போல் "பெரியார் விடுதலைக் கழகம்" உருவாகும் காலம் வந்துவிட்டதா? பெரியார் திடலிலிருந்து பெரியாரை விடுதலைசெய்யும் காலம், உண்மையில் உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதி கள், வழிகாட்டிகள் அனைவரும் தனது, தமது என்று சுருக்கிக்கொள்ளாது, மானுட விடுதலை நோக்கி வாழ்வதினால், அவர்களுடைய கருத்துகளும் சமூகத்தின் பொதுச்சொத்தாக மாறி, சமுதாயத்தின் அறிவுச் சேகரிப்பாகிறது.

இதுவரை நம்முடன் இருக்கும் இலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், கோட்பாடுகள், கொள்கை வெளிப்பாடுகள் அனைத்தும் மானுட குலத்தின் அறிவுச் சேமிப்பு. மார்க்ஸ், எங்கெல்ஸ், பெரியார், அம்பேத்கார் போன்றோரது கருத்துமுன்வைப்புகளை, அதற்கு முன்பிருந்த சிந்தனைகளோடு சமப்படுத்திப் பார்க்கக் கூடாது. "நிலவும் சமுதாய அமைப்பைப் பற்றிய விளக்கங்களோடு தத்துவவாதிகள் நின்றுபோன சூழலில், இருக்கிற அமைப்பை எப்படி மாற்றி அமைப்பது" என்ற விஞ்ஞானப் பார்வையில் சாதி, மத நம்பிக்கையின் பெயரால், பிரிவுபட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலைசெய்யும் கடமையைப் பெரியார் செய்தார்.

பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள், மக்களுக்குச் சென்றடைந்து அவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்பதில் பழமைவாதிகள் குறியாய் இருக்கிறார்கள். மக்கள் சிந்திக்கக் கூடாது, சிந்திக்க அனுமதித்துவிடக் கூடாது என்பதில் இராம. கோபாலன் போன்றவர்கள் தீவிரமாய் இயங்குகிறபோது, "தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துக்கள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935இல் உருவாக்கப்பட்டு, 1952இல் பதிவுசெய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடமைகளாகும்" எனப் பெரியார் திடலிலிருந்தே அறிக்கை வருவதும் இது போன்ற காரியத்தின் குரூர வடிவமே.

வேதங்களை சூத்திரர் படிக்கக் கூடாது; கேட்கக் கூடாது, கேட்டவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுரைத்த மனு தர்மக்கட்டளை போல் பெரியார் எழுத்துக்களைப் பிறர் பதிப்பிக்கக் கூடாது என்பதன் மறு அர்த்தம் பெரியாரை மற்றவர்கள் படிக்கக் கூடாது, பின்பற்றுதல் கூடாது என்று வரவில்லையா?

சைவ, சமய நூல்கள் சிலவற்றை, தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உரிமை கொண்டாடி வேறு எவரும் வெளியிடத் தடைசெய்துவந்தன. அது பற்றிக் குறிப்பிடுகையில் "அந்நூல்களை வெளியிடும் உரிமையைத் தம் கைவசம் கொண்டிருந்த வேளையில் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொண்டாடியதைவிட அதிகமான குதூகலத்தைச் சைவ மடங்கள், ஆதீனங்கள் கொண்டிருந்தன." என வேதனைப்படுகிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

பெரியாரின் உண்மையான தளபதிகளான பெரியார் திராவிடர் கழகத்தினர், ஒரு அரும்பணியை மேற்கொள்கையில், அதை முடக்கும் எத்தனிப்புகளைக்கொண்ட சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஆதீனங்கள், மடங்களைப் போன்ற ஒரு நிறுவனமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

பெரியார் திராவிடர் கழகத்தினர், முன் வெளியீட்டுத் திட்ட அடிப்படையில் சிறுகச் சிறுகத் திரட்டி வெளியிட முன்வந்துள்ளார்கள் என்கிறபோது எழுநூற்றைம்பது பக்கங்கள் வீதம் நூறு தொகுதிகளில் முழுத்தொகுப்பையும் கொண்டுவருவதென 1976இல் அறிவித்த சுயமரியாதை இயக்கப் பொன்விழா அறிவிப்பு, அறிவிப்பாகவே உள்ளது.

"நூலாகவோ, ஒளி நாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவிப்பவர்கள், பெரியாருடைய வழியில் நடவாத, அவருக்கு முற்றிலும் எதிரான ஜெயலலிதா, பெரியாருடைய படத்துடன் சுவரொட்டி வெளியிடுகிறபோது எங்கே போனார்கள். அறிவுச் சேகரிப்பினை கொள்கைப் பரப்பலைச் சட்டத்துக்குள் அடக்க வேண்டாம். ஒரு நூல் உங்களால் ஐயாயிரம் படிகள் வெளியிடப்படுகிறபோது, அதையே இன்னொருவர் ஐயாயிரம் படிகள் போடுகிறபோது, பத்தாயிரம் பேருக்குக் கருத்துக்கள் போய்ச்சேருகின்றன என்று கணக்குப்போடுவது தான் சரியாக அமையும்.

பெரியாருடைய எழுத்துக்கள் அசையாச் சொத்துகள் போன்றவையல்ல. அவை அசையும் சொத்துகள், அசைவுகொள்கிறபோது மட்டுமே கருத்தும் சிந்தனையும் மக்களிடம் போய்ச்சேர்ந்து எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிகிடைக்கும்.

பெரியாரை ஒரு மூலதனப் பொருளாக ஏற்கெனவே தி.க., தி.மு.க., அ.தி.மு.க., எனப் பலரும் ஆக்கியுள்ளார்கள். இவர்கள் பகுத்தறிவு வழியிலான வாழ்வைத் தமது குடும்பக் கலாச்சாரமாக ஆக்கவில்லை. பொது சனத்தை நோக்கிப் பிரச்சாரம் செய்யும் போதனா முறையாகவே தொடர்ந்தனர். பின் உச்சரிப்பு மந்திரமாக அது சுருங்கியது. அதிகாரத்துக்கு வந்ததும் காலப்போக்கில் தேவையற்றது என்று உச்சரிப்பதையும் கைவிட்டனர்.

பகுத்தறிவுப் பார்வையை அறவே துடைத்து, மானுடப் பண்பை உருவியெடுத்து, குப்பைக் கூளங்களும் கல், இரும்பு போன்ற திடப்பொருள்களும் நிரப்பிய குழியாக மனிதனை ஆக்கியதில் நவீனக் கல்விக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, முன் எப்போதையும்விட இந்தச் சூழலில்தான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்.

-பா. செயப்பிரகாசம்

நன்றி: காலச்சுவடு, செப்டம்பர் 2008

பாலியல் வதை களனாக சென்னை மாநகராட்சி!

எந்த ஓர் அமைப்பிலும் கூடுதலாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்கு 65 சதவிகித பெண்கள் வேலை செய்யும் சென்னை மாநகராட்சியும் விதிவிலக்கல்ல. பெண்கள் எந்த ஆய்வாளரின் கீழ் வேலை செய்கின்றனரோ, அவரின் பாலியல் தொல்லைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். ஆய்வாளர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், வேலையை விட்டு விரட்டப்படுவார்கள்; அல்லது கூடுதலாக 600 ரூபாய் ‘மாமூல்' செலுத்த வேண்டும். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அந்தப் பெண், தான் செய்யாத குற்றத்திற்காக துறை சார்ந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால், தவறு செய்யும் ஆய்வாளருக்குப் பதவி உயர்வுதான் தண்டனை.

சென்னை மாநகராட்சியில் உள்ள தணிகாசலம் என்ற ஆய்வாளருக்கு வேலையே பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், எதிர்த்துப் பேச முடியாத பெண்களை மிரட்டி உயர் அதிகாரிகளிடம் அனுப்புவதும்தான். இவர் மண்டலம் 3இல் பணியாற்றிய போது பாலியல் குற்றம் செய்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால் மண்டலம் 2க்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் அதே குற்றத்தை செய்யத் தொடங்கினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ரமாதேவி என்ற தூய்மைப் பணியாளரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார். விளைவு அந்தப் பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்ட போதும் நடவடிக்கை ஏதுமில்லை.

இந்தப் பிரச்சனை தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், எஸ்.சி. / எஸ்.டி. ஆணையம், தேசியப் பெண்கள் ஆணையம் ஆகியவற்றிடம் இந்திய குடியரசுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த 3 ஆணையங்களும் மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. மாநில மனித உரிமை ஆணையமும், எஸ்.சி. /எஸ்.டி. ஆணையமும் இதில் ஆர்வம் காட்டாமல் புகாரை கிடப்பில் போட்டுவிட்டன. இதனால் தேசியப் பெண்கள் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதற்குப் பிறகு கொஞ்சம் அசைந்து கொடுத்த அப்போதைய மாநகராட்சி ஆணையர் விஜயகுமார், விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்.இதில் கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் தனியாக வர வேண்டுமாம். மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர், அவரது மனைவி மற்றும் சிலர் என ஒரு கூட்டமே விசாரிக்குமாம். இதனை எதிர்த்து இந்த விசாரணை நியாயமானதாக இருக்காது என்றும் புகார் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், யூனியன் மனு கொடுத்தது.

மிரட்டல்களும் அலட்சியப் போக்கும் தொடர்ந்ததால் தேசியப் பெண்கள் ஆணையத்தின் தென்மாநிலங்களுக்கான பொறுப்பாளர் நிர்மலா வெங்கடேஷ், சென்னைக்கு வந்து ஆணையரைப் பார்க்காமல் பிரச்சனைக்குரிய மண்டலத்திற்குப் பத்திரிகையாளர்களோடு நேரடியாகச் சென்று விசாரித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு தணிகாசலத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ஆணையரின் ஆலோசனையின் பேரில் பத்திரிகையாளர்கள் முன்பு மன்னிப்பு கேட்டார். இவரை பணி இடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துவிட்டு சென்றுவிட்டார் நிர்மலா. மாநகராட்சி வரலாற்றில் அலுவலர் ஒருவர் பத்திரிகையாளர்கள் முன்பு விசாரணை நடத்தி மன்னிப்பு கேட்டது இதுவே முதல் முறை. ஆனாலும் குறைந்தபட்சம் அவரை இடமாற்றம் கூட செய்யவில்லை.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 4ஆவது மண்டலத்திற்கு தணிகாசலம் மாற்றப்பட்டார். அங்கும் அவரின் வக்கிரம் தொடர்ந்தது. இதற்கிடையில் தொடர் வற்புறுத்தலால் புகார் குழு ஒன்றை ஆணையர் உருவாக்கினார். ஆறு பேர் கொண்ட அந்தக் குழு விசாரித்தது. ஆனால், ஓராண்டாகியும் அறிக்கை கொடுக்கவில்லை. ஏன் அறிக்கை கொடுக்கவில்லை என்று யூனியன் மீண்டும் ஒரு மனு கொடுத்தது. பின்னர் அறிக்கை கொடுக்கப்பட்டது. அறிக்கையில் தணிகாசலத்திற்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே இருந்தது. அவர் செய்த குற்றம் குறித்தோ, தண்டனை குறித்தோ அது வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், தற்போதுள்ள ஆணையர் ராஜேஷ் லக்கானி பதவி ஏற்றார். இவரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீதும் நடவடிக்கை இல்லை. மாறாக, தணிகாசலத்திற்கு மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, 3 ஆவது மண்டலத்திற்கு மாற்றப்பட்ட அவர், 31 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த 45 வயது சந்தோஷம்மாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாத அவர் ஆத்திரம் கொண்டு தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்த துடைப்பத்தால் சாத்தினார். வழக்கம் போல பெண்ணை பணி இடை நீக்கம் செய்தது நிர்வாகம். மேற்பார்வையாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்தப் புகார் மீதான விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன். நவீன தீண்டாமை மற்றும் பாலியல் தொல்லைகளின் வதைகளனாக இருக்கும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?

நன்றி: தலித்முரசு, ஜூலை 2008

மறக்கப்பட்ட தாமிரபரணிப் படுகொலை

ஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலையின் பத்து ஆண்டு நினைவுகளை சலசலப்புடன் சுமந்துச் செல்கிறது பொருநை நதி.

கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.

திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.

17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தலித்துகளின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தலித்துகளின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

தாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே? அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று விசையில் கட்டுரை எழுதிய ச.தமிழ்ச்செல்வன் எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.

தாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தலித் விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தலித் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா?

தாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. சிறுபத்திரிகைகளில் விசை இதழில் தமிழ்ச்செல்வன் ஒரு ஆழமான, நெஞ்சை உருக்கும் விதத்தில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தச் சம்பவத்தின் பத்தாவது ஆண்டில் தலித் முரசில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நூற்றாண்டு அவலம் குறித்த கட்டுரை கவனத்தை ஈர்த்தது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை.

ஆதிக்க சாதி உணர்வு கொண்ட தமிழக அரசியலில் த.மா.காவுடன் புதிய தமிழகம் கூட்டணி வைத்த அரசியல் திருப்பத்துடனேயே தலித் எழுச்சிக்கான எல்லைகள் வகுக்கப்பட்டன. அன்று தென்மாவட்ட த.மா.காவின் நாடார் ஓட்டுகள் கூட்டணி வைத்திருந்த புதிய தமிழகத்திற்குச் செல்லவில்லை. என்னதான் உயர்ந்தாலும் ஆதிக்க சாதி அரசியலில் தலித் எழுச்சி தீண்டாமை மனப்பான்மையுடனேயே அணுகப்படும் என உணர்த்தியது தோற்றுப் போன அந்த தலித்+ நாடார் ஓட்டுக் கணக்கு. அன்றைய தலித் சக்திகளுக்கு அவர்களின் எல்லைகள் பற்றிய கோரமான நினைவூட்டலாக ஆதிக்கசாதி அரசியல் சமூகம் நிகழ்த்தியதுதான் தாமிரபரணிப் படுகொலை.

-மாயா

நன்றி: உயிர்மை - செப்டம்பர், 2008

செவ்வாய், செப்டம்பர் 16, 2008

நடிகையின் கதையை வழங்கிய குமுதத்தின் கதை

தமிழ் மரபில் சுவை எட்டு. வட மொழியில் ரஸம் ஒன்பது. சாந்தி என்பதை ரஸமாகக் கொண்டார்கள் அவர்கள். தமிழ்ப் பத்திரிகைகள், நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் புதிதாக ஒரு ரஸத்தைக் கண்டு பிடித்தார்கள்.

'புகழ்' பெற்ற கொலை வழக்குகளைப் புனைவுடன் சேர்த்து எழுதி, வாசகர்களுக்குக் கொலை, வதந்தி, காமம், பிறர் மறைபொருள் பற்றிய தூண்டுதல் மிகுந்த ஆர்வம், புகழ்பெற்ற மனிதர்களின் அந்தரங்கம் அறிதல் முதலான தாழ்ந்த இச்சைகளால், சில பத்திரிகைகளால் வடிவமைக்கப்பட்டன.

முதலில் கொலை வழக்குகளே இந்த வகையான சுவைகளின்பால் தமிழர்களை ஈர்த்தன. இவைகளில் மிக முக்கியமான கொலை வழக்கு, மஞ்சள் பத்திரிகைக்காரர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. காரணம், குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சினிமாவில் புகழ் பெற்றவர்களாக இருந்த தியாகராஜபாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும், தயாரிப்பாளர் ஸ்ரீ ராமுலு நாயுடுவும் ஆவர். லட்சுமி காந்தன், தான் நடத்திய சினிமா தூதன் மற்றும் இந்து நேசன் என்ற பத்திரிகைகளில் சினிமா நடிக, நடிகையரின் அந்தரங்கம் என்ற பெயரில் அவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் எழுதி, பிளாக் மெயிலும் செய்து பணம் பறித்து வாழ்ந்தவன். அவன் கொலை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மிகப்பிரபலமாக வெளியிடப்பட்டு, பத்திரிகைகளின் விற்பனை பெருகியது, தொழில் லாபம் பற்றிய நுணுக்கமான மற்றுமொரு தகவலையும் பத்திரிகை முதலாளிகளுக்கு உணர்த்தியது.

புகழ் பெற்றவர்களின் அந்தரங்கங்களை எழுதுவதன் மூலம், வாசகர் கற்பனையில் இணைகோடு போல மற்றுமொரு காம நாடகம் நிகழ்த்தப்பட்டு, அதன் மூலம் வாசகர்களின் ஈர்ப்பையும் ஆதரவையும் நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாரதியும் பெரியாரும் சுப்ரமண்யசிவமும் திரு.வி.க.வும் ஆசிரியர்களாக இருந்து பத்திரிகை நடத்தியது போக, சுதந்திரத்துக்குப் பிறகு, முதலாளிகள் சம்பளத்துக்கு ஆசிரியர்களை அமர்த்திக் கொள்ளும் நிலை வந்தபிறகு, விற்பனை என்பதே வெற்றி என்றாகியது.

ஆசிரியர்கள் விபசாரம் செய்வதில்லை. ஆனால் விபசாரத்துக்குத் துணை செய்யும் செய்திகளைப் போடலாம் என்றாகியது. ஆசிரியர்கள் கொலை செய்வது இல்லை. ஆனால் கொலை, வல்லாங்கு (ரேப்) பற்றி எழுதலாம். இது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் எனலாம். ஆக, பத்திரிகைகளின் உள்ளடக்கத் தோரணைகள் மாறின.
*
'கிசு கிசு' என்ற அரிய சொல்லாக்கத்தைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்த சிறப்பு குமுதத்துக்கு உரியது என்றால், இந்தப் புகழைப் பங்கு கொள்ள யாரும் வரமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 60-களின் தொடக்கத்தில் இது தமிழுலகுக்கு வந்தது.

என் செவிக்கு வந்த, இதன் வரலாற்றுச் செய்தியின்படி முதல் கிசு கிசுவில் சிக்கியது ஏ.வி.எம். ராஜனும் புஷ்பலதாவும் என்று அறிகிறேன். குமுதத்துக்கு நெருக்கமான சிலரே இந்த வரலாற்றுக் கல்வெட்டுகளை எனக்கு அறிவித்தார்கள். கிசு கிசு, நேரிடையாகச் சொல்லாமல், சுற்றிச் சுற்றி ஆனால் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்கும்.

உதாரணத்துக்கு அரசர் எனும் சொல்லுக்கு வடமொழியில் என்ன பெயரோ அந்தப் பெயரைக் கொண்ட நடிகருக்கும், பூவுக்கு வழங்கும் வேறு பெயரைக்கொண்ட நடிகைக்கும் ஒரு இதுவாம் - என்பதுபோல அச்செய்தி வந்திருக்கும் என்று நினைக்கிறேன். செய்தி வந்த அன்று காலையே நடிகை, எஸ்.ஏ.பி. வீட்டுக்கு வந்து தன் கௌரவம் பாதிக்கப்பட்டதாக வருந்தினார் என்றும், அதன் காரணமாக கிசு கிசு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் எனக்குச் சொன்னார், அந்த சரித்திராசிரியர்.

சொற்ப காலத்துக்குள், நடிகர் நடிகையும் திருமணம் செய்து கொள்ளவே, தம் செய்தி உண்மை தான் என்ற நிரூபணம் கிடைத்ததன் பேரில், கிசு கிசு வெளியிடும் ஒரு தார்மீக உரிமையைக் குமுதம் பெற்று, அதைத் தொடர்ந்தது. அனேகமாக எல்லா ரஞ்சகப் பத்திரிகைகளும் ஒன்று கிசு கிசுவையோ, அல்லது நடிக நடிகையரின் வாழ்க்கையையோ - அல்லது அவர்களைப் பற்றிய கற்பனையையோ எழுதித் தீர்த்துக் கொண்டிருப்பதற்கு மூல முதற் காரணமாகச் சொல்லலாம். இன்றுவரை இது தொடர்கிறது.

நடிகைகள், நம் வீட்டுப் பெண்கள் இல்லை. நடிகர்கள் நம் சகோதரர்கள் இல்லை. எனவே, அவர்களைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதலாம். எழுதிவிட்டு, மரியாதைக்குரிய வாழ்க்கையைச் சகல வசதியோடு, எந்த உறுத்தலும் இன்றி வாழலாம். பல லட்சங்கள் விற்றுப் பிழைக்கலாம்.
*
சுப்ரமண்ய ராஜு, சாவியால் நிறைய பயன்படுத்தப்பட்ட எழுத்தாளர்.
சாவி, சுஜாதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தையே ஏற்படுத்திக் கொடுத்தார். சாவியே, அடுத்த தலைமுறையினராகக் கருதப்பட்ட பாலகுமாரன், மற்றும் மாலன் முதலான பலருக்கும் பல வாய்ப்புகள் வழங்கிப் பிரபலம் பெறத் துணையாக நின்றார். அவர் நடத்திய சாவியின் அட்டைப்படத்தில் ஒரு கார்ட்டூன் வந்தது. அனேகமாக இப்படி இருந்தது அது.
முதல் இரவு போன்று அலங்கரிக்கப்பட்ட ஒரு அறைக்குள் மணப்பெண் ஆடை இன்றி நுழைகிறாள். பதறிப்போகிறான் மணமகன். 'ஆடை இல்லாமல் பால் கொண்டு போகச் சொன்னார்களாம். அதனால் இப்படியாம்' என்பதுபோல் அவள் பேசுவதாகக் கார்ட்டூன் பேசியது. பெண்கள் இயக்கம் போராட்டம் செய்து சாவியைச் சிறைக்கு அனுப்பியது என்று நினைவு. சூழல், ஆபாசத்தின் உச்சிக்குக் கொண்டு போகப்படுகிறது, பத்திரிகைகளில் என்பது மட்டுமல்ல, அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பத்திரிகை வளர்ச்சி எந்தத் திக்கில் என்பதை அறியவும் இதைக் குறிப்பிடுகிறேன்.

ராஜு, சாவியில் சினிமா விமர்சனமும் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு சினிமா விமர்சனம் இப்படி இருந்தது.
படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்?

ராஜுவுக்கு நல்ல கதைகள், நல்ல சினிமா பற்றிய புரிதலும் அவை பற்றிய நிறைய தகவலும் தெரிந்திருந்தன. நல்ல ரசிகர். ஆசிரியருக்கு நெருக்கமாகவும் இருந்தார். ஆசிரியர் விரும்பிச் சந்திக்கும் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். இருவரும், புதிய தலைமுறையினர் சிற்றிதழ்களிலும் இலக்கியப் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டு வரும், பல பரீட்சார்த்த கதைகள் பற்றிப் பேசுவார்கள். ஆசிரியருக்கு, புது இலக்கியப் பரிச்சயம் சிறப்பாகவே இருந்ததை நானும் அறிவேன். எண்பதுகளில் உரைநடையில் மிகவும் சிறப்பாக வெளிப்பட்ட வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயப்பிரகாசம், ராஜேந்திர சோழன், முதலான பலரின் மேலும் மிகுந்த அபிமானம் இருந்தது.

எனக்குப் புரியாத விஷயம், இதில் என்னைச் சிரமப்படுத்திய விஷயமும் இதுதான். மிக நல்ல எழுத்தாளர்களின் எழுத்தை ரசிக்கும் ஆசிரியர் ஏன் அவர்களின் கதைகளை வாங்கிப் போடக்கூடாது. ஒரு நேர்ப் பேச்சில் ஆதவன், நாகராஜன் முதலிய சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர்களின் கதைகளை வாங்கிப் போடலாமே என்றேன். ஆசிரியர் சிரித்தபடி 'போடலாம்' என்றார். அத்துடன் அந்த உரையாடல் வேறு பக்கம் திரும்பியது.

இந்தச் சூழலில்தான் சோமனதுடி படம் பார்க்கக் கிடைத்தது. சென்னைக் கலைவாணர் அரங்கில் இந்தப் படத்தை ஆசிரியர் பார்த்திருக்கிறார். ராஜுவிடம் படம் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசி இருக்கிறார். மாலை நேரச் சந்திப்பில் ராஜு இதை என்னிடம் சொன்னார். குறிப்பாக, இசை அந்தப் படத்தில் உணர்ச்சிக்கு இசைவாக, நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டதை அவர் பாராட்டியதையும் நான் அறிந்தேன். தமிழ் சினிமா செல்லவேண்டிய திசை, செய்ய வேண்டிய காரியம் பற்றி அவர் கொண்டிருக்கும் கருத்துகள் பற்றியும்கூடச் சொல்லி இருக்கிறார்.

சீக்கிரமே, குமுதத்தில் அரசு பதிலில் இது பற்றிய கேள்வி பதில் வெளிவந்தது. (அரசு என்பது ஆசிரியர் மட்டும்தான்.)
கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.
திடுக்கிட்டுப் போனார் ராஜு. ஒரு நாள் ஆசிரியரைச் சந்தித்து, 'என்ன இப்படி எழுதி இருக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு, ஆசிரியர் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

'என் ரசனை வேறு. என் வாசகர்கள் ரசனை வேறு. என்ன நம் ஆசிரியர் இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் போகிறாரே என்று என் வாசகர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்கு நான் பார்க்கவில்லை என்பது பதில். என் வாசகர்களுக்கு, அவர்களில் சிலர் அதைப் பார்த்திருந்தால், துடி துடித்துப் போவார்கள். அவர்கள் இந்த பதிலைக் கண்டு மகிழ்ச்சியடையலாம், நம் ஆசிரியரும் நாமும் ஒரு மாதிரிதான் சிந்திக்கிறோம், என்பது அவர்களைச் சந்தோஷப்படுத்தும்.

நான் நன்றாக இருக்கிறது என்று எழுதப்போக, பிடிக்காத வாசகர்கள், என்ன இதுமாதிரி படத்தை எல்லாம் ரசிக்கிறார் நம் ஆசிரியர் என்று என்னோடு முரண்படுவார்கள். எனக்கும் வாசகர்களுக்கும் இடையே விலகல் ஏற்பட்டுவிடும். விரிசல் ஏற்படும். நம் ரசனை வேறு, பத்திரிகை வேறு, ராஜு.'

எனக்கு நேர் அனுபவம் ஒன்றைச் சொல்ல முடியும். ஆசிரியர் மகள் திருமணத்தை முன்னிட்டு, வருகிறவர்களுக்கு வழங்க 'பை' செய்யப்பட்டது. பிளாஸ்டிக்பைகள். அதில், குமுதம் பத்திரிகைச்சின்னம் அச்சேற்றப்பட்டது. ஆசிரியர், அப்பைகளை வழங்க மறுத்துவிட்டார். 'என் குடும்ப விஷயம்வேறு. பத்திரிகை வேறு' என்றார். சின்னம் இல்லாத பைகளே வழங்கப்பட்டன.

-பிரபஞ்சன்
நன்றி உயிர்மை, செப்டம்பர் 2008

வியாழன், செப்டம்பர் 11, 2008

கலைஞருக்கும், பழ. நெடுமாறனுக்கும் அப்படி என்னத்தான் விவகாரம்..? (அ) தசரதன் முடியும்... தவுசண்ட் வாலா வெடியும்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஆளு சரியில்லேன்னு புதுவை முதல்வர் ரங்கசாமியை மாத்தின மாதிரி நம்ப சித்தனையும் பதவி நீக்கம் செய்தாதான் சரி வரும். ஆளு அலப்பறை டீமை கூட்டாம அடிக்கடி எஸ்கேப் ஆகிடறாரு..." -என்று தண்டோரா போடாத குறையாக எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம்! கடுப்பாகிப் போன சித்தன், கோட்டையில் உள்ள சர்ச் மரத்தடியில் அலப்பறை கூட்டத்தை கூட்டினார்.

முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்ட சித்தன் "நாட்டு நலன் வேண்டி கொஞ்ச நாள் மௌன விரதம் இருந்தேன். அம்புட்டுதான். அதுக்கு போய் ஆளமாத்துன்னு கோஷம் வைக்கலாமா? சரி சரி... நாட்டுல என்ன விசேஷம். என்ன நடந்துகிட்டு இருக்கு...?" என்றார் ஆர்வமாக.

ஆங்... காஷ்மீர் அமர்நாத் கலவரம் இன்னும் ஓயலே... கூடவே, பாகிஸ்தான் தீவிரவாதிங்க வேற உள்ளே நுழைஞ்சு அழிச்சாட்டியம் பண்றானுங்க. ஒரிசாவுல மதக்கலவரம். நிறைய பேரு கொல்லப்பட்டிருக்காங்க. கலவர பயத்துல ஊர் மக்கள் கூட்டம் கூட்டமா இடத்தை காலி பண்றாங்க. பீகார்ல ஒரே மழை வெள்ளம். லட்சக்கணக்கான மக்கள் ஊரை காலி செய்துக்கிட்டு வாராங்க... இது போதுமா? இன்னும் வேணுமா...? என்று நக்கலடித்தான் சுவருமுட்டி!

நீ போதை பார்ட்டி, ரொம்பத்தான் கலாய்க்கிற. உன்னை டாக்டர். ராமதாஸ்கிட்டத்தான் கொண்டு போய் விடணும். அப்பதான் அடங்குவே... என்ற சித்தன், கலைஞருக்கும், பழ. நெடுமாறனுக்கும் அப்படி என்னத்தான் விவகாரம்..? ஒரேடியா முட்டிக்குறாங்களே..." என்றார்.

அது பெரிய கதைப்பா. முன்னாடி இலங்கை தமிழர்களுக்கு மருந்து, மாத்திரை கூட இல்லியேன்று நெடுமாறன் கவலைப்பட்டாரு. ஆளுங்களை பிடிச்சு, நிதி திரட்டி அதை ஏற்பாடு செய்துட்டாரு. ஆனா அனுப்ப முடியல. சென்ட்ரல் கவர்மெண்ட் அனுமதி கிடைக்கலே... தமிழினத்துக்கு தலைவர்னு சொல்ற கலைஞர் சென்ட்ரல் கவர்மெண்ட்டுகிட்ட பிடிவாதமா சொல்லணும். ஆனா, அவரும் அப்படி ஏற்பாடு செய்யல. பதவி சுகத்துக்காக சென்ட்ரலை மிரட்டுகிற கலைஞர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் மிரட்டக்கூடாதுங்கிறது பழ. நெடுமாறன் வாதம்.

அந்த கடுப்புல ஒரே ஒரு தலை முடி நரைச்சவுடனேயே, தசரதன், மூத்தமகன் ராமனுக்கு முடிசூட்டி அவரை மன்னராக்கிட முடிவு செய்தார். ஆனா தள்ளாத வயதிலேயும், கலைஞர் பதவியிலேயே குந்திகிட்டு இருக்காரே ஏன்...? என்று குடைஞ்செடுத்துட்டாரு.

அதுல டென்ஷனான கலைஞர், "நீ காமராஜரோட முதுகுல குத்திவிட்டு கவுத்தே. அண்ணாவை கூட இருந்தே காலை வாரிவிட்டே. புலிகள் பேரை சொல்லி பணம் பார்த்து தமிழின துரோகியானே. உன் கதை இவ்வளவு இருக்கும் போது நீ, தசரதனின் நரைத்த மயிர் கதைய எடுத்துகிட்டு வந்திட்டியா"ன்னு தாக்கிப்புட்டாரு தாக்கி.

பதிலுக்கு கோபமான பழ. நெடுமாறன், "நாகர்கோவில் தொகுதி தேர்தல்ல காமராஜருக்கு எதிரான வேலை பார்த்து துரோகம் செய்தது நீங்க. நாவலர் நெடுஞ்செழியனுக்கு கிடைக்க வேண்டிய பதவிய, அவரை கவுத்துட்டு பறிச்சு அண்ணாவுக்கே துரோகம் செய்தது நீங்கன்னு வரிசையா பட்டியல் போட்டு கடைசி காலத்துலயாவது உண்மைய பேசிட்டு போங்க, பொய்யா பேசாதீங்க"ன்னு அறிக்கை வுட்டாரு.

அடடே இம்புட்டு விஷயம் வெளியே வருதேன்னு ஊர் முழுக்கவும் இதான் இப்ப பேச்சா இருக்கு என்றார்.

குறுக்கிட்ட சுவருமுட்டி "போயா ங்கொய்யால... என்ன சமாச்சாரம்னு கேட்டா கதை சொல்றியா நீ.? ஏம்பா, இலங்கை தமிழருக்கு மருந்து கொண்டுகிட்டு போகணும்னு நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்தப்போ, கலைஞருக்கு அது தர்ம சங்கடமா போச்சு. உண்ணாவிரதத்தை கைவிடச் சொன்னாரு. நெடுமாறன் ஒத்துக்கிடல. உடனே டாக்டர் ராமதாஸை அனுப்பி சமாதானம் பேச வச்சாரு. இது விஷயமா கலைஞர்கிட்ட நேர்ல பேசலாம். அதுக்கு அவரும் சம்மதிச்சிருக்காருன்னு டாக்டர் சொன்னதால விரதம் முடிவுக்கு வந்துடுச்சு.

ஆனா, சொன்னபடி பழ. நெடுமாறனை கலைஞர் சந்திக்கலை. நாளு வாரமாகி, வாரம் மாதமான பிறகும் கலைஞர் அப்பாயின்மெண்ட் கிடைக்குல. ஒரு சமயத்துல திருமாவளவனும் கலைஞரை சந்திச்சப்ப சந்திப்பு பற்றி பேசியிருக்காரு. அவரும் நேரம் ஒதுக்கினாரு. அப்போது பழ. நெடுமாறன் போகலையாம்.

சொன்ன வாக்குறுதிய காப்பாத்த முடியல. மாசக் கணக்குல இழுத்தடிச்சுட்டு, இப்போ வரச் சொன்னா எப்பிடி..? வாங்கி வச்ச மருந்து மாத்திரை எல்லாம் வீணா போயிடுச்சேன்னு இவர் கோபம். இந்த பின்னணிதான் தசரதனின் நரைத்த முடி கதை தெரியுமா..." என்று போட்டு உடைத்தார் சுவருமுட்டி.

"சரிப்பா, இப்ப இன்னொரு மேட்டரு தெரிஞ்சுக்கணும்... ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி நளினி விடுதலைக்கு எதிரா கலைஞர் அரசு மனுத்தாக்கல் பண்ணுச்சே..." -அன்வர் பாய்.

ஆமாம்பா... உலகத் தமிழருங்க எல்லாமும் இந்த விஷயத்ததான் கவனிக்குறாங்க. நளினி பதினேழு வருஷமா ஜெயில்ல இருக்காங்க. ஏன் அவங்களை விடுதலை பண்ணக் கூடாதுங்கிறதுதான் கேள்வி.

அந்த அடிப்படையிலதான் நளினி விடுதலை பண்ணுங்கன்னு கேட்குறாங்க... ஆனா, கோர்ட்டுக்கு பதில் சொன்ன கலைஞர் அரசு அப்படி விடுதலை செய்ய முடியாது. இலங்கையில இப்ப போர் நடக்குது. அவரை விடுதலை செய்தா திரும்பவும் போராளிகளுக்கு ஆதரவா வேலை செய்ய மாட்டாங்கன்னு என்ன உத்ரவாதம்.

காந்திய கொன்ன கோட்ஸேவுக்கும், இப்படித்தான் விடுதலை கேட்டாங்க. ஆனா ஒப்புக்கிடலை. அது மாதிரிதான் நளினிக்கும் பொருந்தும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லியிருக்கு. இது தமிழர் நலன் விரும்பிங்க மத்தியில பெரிய சர்ச்சையா கிளம்பியிருக்கு. தமிழர்களின் விஷயத்தில் பெரிய வரலாற்று தப்பையே கலைஞர் செய்துட்டாருன்னு புலம்புறாங்க... என்றார்.

முந்திரிக் கொட்டை மாதிரி எப்போதும் முந்திக்கொள்ளும் சுவருமுட்டி சுந்தரம். ஐயோ... ஐயோ... இப்படி மேலோட்டமா பேசினா எப்பிடி? அண்டர்கிரவுண்ட் மேட்டரை பேசுங்கப்பா...." என்று சிரித்தவர்...
இந்த நளினி விடுதலை விஷயத்துல கலைஞர் ஆதரவா இருக்குற சுப. வீரபாண்டியன், திருமாவளவன் மாதிரி ஆட்கள் என்னா சொல்லப் போறாங்கங்கிறதுதான் மேட்டரே...

இவிங்க வெளிப்படையா கலைஞர் பக்கம் நிக்குறவங்க. அதே நேரத்துல அங்க தமிழீழம் விஷயத்திலும் ரெண்டு மடங்கு பிடிவாதமா இருக்கிறவங்க... கலைஞர் அரசு இப்போ இப்படி பதில் சொன்னது, அவங்களுக்கு பெரிய்ய... தர்ம சங்கடமா போயிடுச்சு. இன்னேரம் வேற ஆளுங்க முதல்வர் பதவியில இருந்திருந்தா ஒரு ஆட்டம் காட்டி களம் இறங்கியிருபாங்க.... இப்போ என்னா பண்றதுன்னு விழிக்குறாங்க.

இந்த விஷயத்துல டாக்டர். ராமதாஸ், வைகோ, பழ. நெடுமாறன் எல்லாம் பார்த்தீங்களா அவர் தமிழ் இனத்துக்கு செய்ற வேலைய. ஆனா, நான்தான் தமிழின தலைவருன்னு சொல்வாரு தமிழீழ மக்களுக்கு வலுவா எதையும் செய்ய மாட்டாரு. மத்தவங்களையும் செய்ய விடமாட்டாரு. எப்பவும் இப்படித்தான்.... அப்பிடின்னு சவுண்ட் விட ஆரம்பிச்சுட்டாங்க. இதுல அடுத்த கட்ட அரசியல் என்னாங்கிறது இனிமேதான் தெரியும்... என உரித்துக் காட்டினார்.

"சரிப்பா. மதுரையில என்னா சவுண்ட் கேட்குது. நிலவரம் இன்னும் கலவரமாகத்தான் இருக்கா? சென்னை வரைக்கும் வந்து குரல் கொடுக்கிறாங்களே... முதல்வர் காதுக்கு எட்டாதா?"
எட்டினாலும் என்ன பண்ணுவாரு. கேபிள் டி.வி. யுத்தம் இன்னும் வேகமா நடக்குது.

அழகிரி தரப்பு சன் டி.வி. கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டி அவிங்க பக்கம் சேர சொல்றாங்கன்னு புகார். மதுரை போலீஸ்கிட்டயிருந்து நடவடிக்கை இல்லே. அதனால சென்னைக்கே வந்து மீடியாவை சந்திச்சிருக்காங்க. இது பற்றி நம்ப ஆளுங்ககிட்ட விசாரிச்சேன். சகோதரர்கள் பக்கம் இப்போ வாய்ப்பு கூடிகிட்டு வருதாம். அத வச்சு மதுரைக்காரர் மேல ஏதாவது பிரச்னை கிளப்பி அவரை உண்டு இல்லேன்னு ஆக்கிடறதுன்னு கங்கனம் கட்டி கிட்டு நிக்குதாம். முடிஞ்சு போன விஷயத்தை திரும்பவும் ஊர் பெருதாக்கி பாக்குதாம் சகோ தரப்பு. கூடவே மீடியா பலம் வேற இருக்கு இல்லே. இப்போ கொஞ்ச நாளா பார்த்தா, அவிங்க மீடியாவுல அரசுக்கு எதிரான களேபர டைட்டில் நியூஸ்தான். குடும்ப சண்டை உச்சத்தை எட்டியிருக்குன்னு பேசிக்குறாங்க... என்றார் கோட்டை கோபாலு.

"ஏன்யா... இது பெரிய இடத்து மேட்டர். ரொம்ப கிளற வேணாம். விளைஞ்சா கடைக்கு வந்துதான் ஆகணும். அப்போ வச்சுக்கிடலாம் கச்சேரிய..." என்ற சித்தன்...

நான் அவாள் -சவால் மேட்டருக்கு வர்றேன். அதான்பா கலைஞர் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜனை மனசுல வச்சு நன்றி கெட்டவர்கள் நிலை கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யான்னு கவிதை எழுதினாரே அது பற்றி..."
குறுக்கிட்ட அன்வர்பாய் யோவ் அதுதான் முடிஞ்சுபோன விஷயமாச்சே. ஏற்கனவே பேசி முடிச்சுட்டமே. இன்னும் என்னா...? என்றார்.

நீ ஆட்டோ மீட்டர் மாதிரி எரியாதப்பா. பொறுமையா கேளு. இப்போ சொல்லப் போறதுதான் மேட்டரு. அதாவது நாடாளுமன்ற நியமன எம்.பி. தேர்தல் அப்போ, அ.தி.மு.க. தனக்கு கூடுதலா இருக்குற எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்களை மனசுல வச்சு, கூடுதலா ஒரு எம்.பி.ய நியமிக்கறதா இருந்துச்சு. அதுக்கு ரெண்டு எம்.எல்.ஏ. ஓட்டு வேணும். சீறிப்பாயும் கட்சியில சலசலப்பை கொடுத்துக்கிட்டு இருக்கும் அந்த வசதியான எம்.எல்.ஏ.வையும், தி,மு.க.வுலேயே அதிருப்தியா இருக்குற இன்னொருத்தரையும் சாதகமா பேசி முடிச்சுட்டு அந்த ஒரு எம்.பி. சீட்டை வைகோவுக்குன்னு சொன்னாங்க. ஆனா அவரு, யாராவது ஒருத்தர் காலை வாரி விட்டாலும் கவுந்துடுவோம். குறிப்பா நான் எம்.பி. ஆகறது கலைஞருக்குப் பிடிக்காது. எப்படியாவது உள்ளடி வேலை பார்த்து கவுத்துடுவாருன்னு அந்த சீட் வேண்டாம்னாரு.

அப்போதான் இப்போ கரண்ட விஷயத்துல தலை உருள்ற ஒளி மயமான அந்த அமைச்சர், அ.தி.மு.க.வுல தோழிகிட்ட பேசியிருக்காரு. எங்க கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதை ஒதுக்குறோம். கண்டுக்காம இருக்கச் சொல்லிடுங்க அப்படின்னாராம். அங்கு மீடியேட்டரா இருந்தவரு, அமைச்சர் உறவினரான பாலு பிரமுகர்தானாம். அதாவது கம்யூனிஸ்ட்டுக்கு அதுவும் டி.கே. ரங்கராஜனுக்கு சீட்ன்னு ஏற்பாடு பண்ணியது அந்த ஒளி மந்திரிதானாம்.


தன் ஏற்பாட்டுல நிக்குற வேட்பாளர் தோற்றுவிடக் கூடாதேன்னு அம்மா தரப்புக்கிட்டே பேசினதும் அவருதான்...ஆக, கம்யூனிஸ்ட்களுக்கு வாய்ப்பு கொடுத்தது அம்மா தானே ஒழிய அய்யா இல்லே... அப்படின்னு அந்த மந்திரிகிட்டயே இருக்குற ஆளு உண்மைய போட்டு உடைக்குது. சரி நான் வேற விஷயத்துக்கு வாரன். கலைஞரோட இளைய மகன் மு.க.தமிழரசு மகளுக்கு கல்யாண ஏற்பாடு. கோவையிலதான் மாப்பிள்ளை. அது விஷயமா பேசிட்டு வர ஸ்டாலின், தயாளு அம்மாள், சகோதரர்களின் சித்தியாக இருக்கும் செல்வி எல்லாம் போயிருக்காங்க. அப்போ, கவிதாயினி கனிமொழியும் போய் சேர்ந்திருக்காங்க.... ஆக, இந்த நல்ல விஷயத்துக்கு மதுரைக்காரர் குடும்பத்திலிருந்து ஒருத்தர் கூட வந்து சேர்ல. அவர் மட்டும் அப்படியே நிக்குறாரு. புரியுதா? என்ன நடக்கிறதுன்னு தெரியுமா?...?" என்று சூசகமாக சிரித்தபடியே எழுந்தார் சித்தன்.

ஒட்டுக்கேட்டவர்: பா. ஏகலைவன்
நன்றி: குமுதம் இணையம்

ஞாயிறு, செப்டம்பர் 07, 2008

பகவத் கீதை பாடமும், பலான படங்களும்...!

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை மாலை. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள், கொத்துக் கொத்தாக. அவர்கள் தெருவைக் கடந்து போகச் சௌகர்யமாக வண்டியை நிறுத்தினார் பால்யூ. ஸ்கூட்டரின் பின்னால் நான் உட்கார்ந்திருந்தேன். தெருவின் இரண்டு பக்கமும் முருங்கை மரங்கள். அவரவர் வீடுகளுக்கு முன்னால் வளர்ந்திருந்த முருங்கை மரங்கள். கே.கே.நகர் என்று சுருக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகருக்குள் மூன்று நகர்கள் இருந்தன. மூன்று பொருளாதாரத்தரத்தினர் வாழ்ந்த நகர்கள். தனித்தனியாக வீடுகள் கட்டிக்கொண்டு வாழும் அல்லது கடன் அடைத்துக்கொண்டு சிரமப்படும் உயர் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் நகர். அரசுக் குடியிருப்புகளாலான நகர். குடிசைகள் மற்றும் சின்னஞ்சிறிய கல்வீடுகள் கொண்ட ஒண்டுக் குடித்தனங்களால் ஆன, தொழிலாளர்களின் நகர். மூன்றாம் நகரின் ஒரு வீட்டு மாடியில் குடி இருந்த என்னை உறக்கத்திலிருந்து எழுப்பிக் குமுதம் ஆபீசுக்கு அழைத்துப் போகிறார் சர்வ வல்லமை பொருந்திய குமுதம் பத்திரிகையாளரான பால்யூ.
ஆக, நான் குமுதம் பத்திரிகையில் இணையப் போய்க்கொண்டிருக்கிறேன். என் விதிக்கப்பட்ட வாழ்க்கை. திணித்து வைக்கப்பட்ட ஆயிரம் அனுபவங்களால் ஆன ரகசியப் பெட்டியிலிருந்து சிலவற்றை உருவி என்முன் வீச இருக்கிறது. நிறைய மண்டை ஓடுகள், நிறைய அறுந்த செருப்புகள், நிறைய பழைய கிழிந்த சட்டைகள், நிறைய நடை வண்டிகள், நிறைய மரப்பாச்சி பொம்மைகள், நிறைய காதல் கடிதங்கள், பழிகள், பகைகள், கொலைவெறிகள், கூடிக் குசுகுசுத்துக் குருட்டறையில் இட்ட கருக்கள் என்று நீண்டுகொண்டே போகும் உன்னதமும் சின்னத்தனமும் கொண்ட ஜாபிதாக்களின் கொள்கலன் அந்த ரகசியப் பெட்டி.

வண்டி போய்க்கொண்டிருந்தது. 'அதிர்ஷ்டசாலி ஐயா, நீர்' என்றார் பால்யூ. இதை அவர் எட்டாவது தடவையாகச் சொன்னார் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கதவைத் தட்டிய சப்தம் கேட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தபோது இதே வார்த்தையைத்தான் சொல்லி அப்புறம் விஷயத்தைச் சொன்னார். 'ஆசிரியர் எஸ்.ஏ.பி. என்னைக் கையோடு அழைத்து வரச் சொன்னார். குமுதத்தில் உமக்கு ஆசிரியர் குழுவில் வேலை' என்று சொல்லி முடிக்கும் முன், சரியான அதிர்ஷ்டசாலி ஐயா, நீர்' என்றார். நான் குளியல் அறையில் சிறுநீர் கழிக்கும் போதும் அந்த வார்த்தைகள் என் பிடறியில் வந்து தாக்கின. முகம் கழுவி வந்துதுடைத்துப் பவுடர் போட்டுக்கொள்ளும் போதும் பேண்ட் போட்டுக் கொள்ளும்போதும், புறப்படும் போதும், ஸ்கூட்டர் பத்து உதைகளைக் கோரி அதன் பிறகு ஸ்டார்ட் ஆனது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது நாங்கள் புரசைவாக்கத்துக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு காலத்தில் புரசை மரங்களால் நிறைந்த பகுதி இது. கடற்கரையை ஒட்டிய ஊர்கள் பாக்கம் என்ற பெயரைப் பெறுகிற நியதியை ஒட்டி இது புரசைப் பாக்கம் ஆகி புரசைவாக்கம் ஆயிற்று. ஊர்ப் பெயர்களில் எனக்குக் கவர்ச்சி உண்டு. பழைய தமிழ் மரபில், ஊர்களின் பெயர்கள், நிலம் சார்ந்து, நிலத்தின் முக்கியத்துவம் சார்ந்து ஏற்பட்டன. ஆளுமைகள் சார்ந்து நேரு நகர், அண்ணா நகர், காந்தி நகர் என்பது அண்மை மரபு. அதிகாரம், ஆதிக்கத்தைக் கட்டமைத்த மன்னர்கள் பழைய ஊர்ப் பெயர்களை மாற்றித் தங்கள் பெயர்களை ஊருக்கு வைத்தார்கள். குறிப்பாகச் சோழ, பாண்டியர்கள். இது இடைக்கால மரபு. புரசைவாக்கம், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இடைப்பகுதியில், அதாவது நானும் பால்யூவும் பிரவேசிக்கும் அந்தக் காலத்திலும், இப்போது மாதிரியே தான் அப்போதும் இருந்தது. மேலே எழுந்துவரும் புழுதி, தெருவோரம் மேடிட்ட குப்பைகள், ஜனக்கூட்டம் எல்லாம். அபிராமி தியேட்டரில் இருந்து ஒரு கூட்டம் வழிந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அபிராமிக்குப் பக்கத்துக் கட்டிடம்தான் குமுதம் அலுவலகம். குமுதத்துக்குப் பக்கத்துக் கட்டிடம்தான் அபிராமி என்று சொல்ல வேண்டுமோ? இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

அழகற்ற வலிந்த தகரத்தால் ஆன வாயிலின் ஓரம், திட்டிக் கதவின் வழி நான் குமுதம் அலுவலகத்துள் பிரவேசிக்க, பால்யூ, திறக்கப்பட்ட வாயில் வழி உள்ளே வந்து, அங்கிருந்த பெரிய மாமரத்து நிழலில் தன் ஸ்கூட்டரை நிறுத்தினார். மரங்கள் வயசானவை. இவைகளின் எதிரில்தான், கோவலனும் கண்ணகியும் மாதவியும் காதலித்திருக்கிறார்கள். பி.யூ.சின்னப்பாவும், கண்ணம்பாவும் நடித்த கண்ணகி திரைப்படம் உருவான ஸ்டுடியோ வைத்தான் குமுதம் வாங்கியதாகப் பால்யூ சொன்னார். ஆசிரியர், பூஜையில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் வந்திருக்கும் செய்தியை ஆசிரியருக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள். எங்களை மேலே வரச்சொன்னார். உலகத்தில் இருக்கும் எல்லா ஆண் மற்றும் பெண் சாமிகளின் பெரிய சைஸ் படங்கள் மாலை சூட்டப்பட்டு இருந்தன. அவைகளின் எதிரே குமுதம் பத்திரிகை (அடுத்த நாள் வெளியாக இருக்கும் இதழ்) இருந்தது. இந்தப் பூஜை புனஸ்காரங்கள் பற்றித் தனியே பிறகு எழுதுவேன்.

எஸ்.ஏ.பி.க்கு முன் நான் நிறுத்தப்பட்டேன். நாங்கள் இருவரும் வணங்கிக் கொண்டோம். முதல்முறை நாங்கள் சந்திக்கிறோம். சராசரிக்கும் கொஞ்சம் குள்ளமான உயரம். கதர் சட்டை, கதர் வேட்டியில் இருந்தார். எப்போதும் இந்த ஆடைதான். 'வாருங்கள்' என்றபடி தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அலங்காரமற்ற அறை. சாதாரணமான மேசை, நாற்காலிகள். எதிரில் உட்காரச் சொன்னார். அதற்கு முன் வந்திருந்த என் கதைகள் பற்றிச் சிலாகித்துப் பேசினார். அவைகள் அக்காலத்து இலக்கியப் பத்திரிகைகளில் வந்தவை. கணையாழி, கண்ணதாசன், தாமரை, மற்றும் தினமணி கதிரில் வந்தவை. மிகுந்த நுட்பத்தோடு கூடிய பார்வை இலக்கியத்தில் அவருக்கு இருந்தது கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் பற்றியெல்லாம் பேசினார். எதுவும் மேலோட்டமான விமர்சனமோ, படித்ததை மீண்டும் ஒப்பித்தலோ இல்லை. சுயமாக உருவாக்கிக் கொண்ட விமர்சனங்கள். தெருப்புறம் பார்த்த ஜன்னல்வழி காற்று வந்துகொண்டிருந்தது. இடையில் ஒரு முறை, ஒரு சின்ன டம்ளரில் இளநீர் வந்தது. குமுதம் அலுவலகத்துக்குள் தேநீர், காபி போன்ற அன்னிய பதார்த்தங்கள் பகிஷ்கரிக்கப்பட்டவை. மிக முக்கியமான விருந்தினரிடம்கூட ஐந்து நிமிஷங்கள் மேல் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பேசுவதில்லை. பத்து நிமிஷம் பேச நேர்ந்தால், இளநீர் வரும். எனக்குத் தெரிந்து லால்குடி ஜெயராமன் இந்த உபசாரத்தை ஒருமுறை பெற்றார்.

குமுதம், தன் ஆசிரியர்குழுவில் இளைய தலைமுறை எழுத்தாளர்களைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளனாகிய நான், ஆசிரியர் குழுவில் இணைவது அவருக்கு மகிழ்ச்சி என்றார். மறுநாள், என்னைப் பணியில் சேரச் சொன்னார்.

நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பால்யூ காத்திருந்தார். நான் சமாச்சாரத்தைச் சொன்னேன். 'எனக்குத் தெரியும்' என்றார். 'எப்படி' என்றேன். 'முதலில் இன்று வெள்ளிக்கிழமை. அதோடு முதன் முதலில் ஆசிரியரைப் பூஜையில் வைத்து, அத்தனை தெய்வ சான்னித்யங்களுக்கு முன்னால் பார்க்கும்படியாக நேர்ந்த போதே என் மனசுக்குள் பட்டுடுத்து, இது ஜெயம்னு' என்றார். தெய்வ சான்னித்யங்களுக்கு முன், குமுதம் இருந்தது என் நினைவுக்கு வந்தது. தெருவுக்கு வந்தோம். 'டீ சாப்பிடலாமா' என்று பால்யூவைக் கேட்டேன். அவர் வேணாம் என்றார். என்னைச் சாப்பிட அனுமதி தந்தார். தெருவோரக் கடைகளில் டீ சாப்பிட்டுக் கொண்டு நிற்பது கௌரவமான பழக்கமல்ல என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். எனக்கு எந்தக் காலத்திலும் கௌரவபுத்தி இருந்தது இல்லை. அபிராமி தியேட்டர் வாசலில் இருந்த பெட்டிக்கடையில் டீ சொல்லிவிட்டு, ஒரு சிகரட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டேன். 'சிகரட் பிடியுங்கோ. . . தப்பு இல்லை. . . அது உங்க ஹாபிட். ஆனா, ஆசிரியர் பார்க்கும்படியாகப் பண்ணிடப்படாது' என்றார். ஆசிரியர் பார்க்காத படிக்கு நிறைய காரியங்களை நான் செய்ய வேண்டி இருக்கிறது என்றபடி என் எண்ணம் ஓடியது.

இந்த முதல் நாள், பால்யூ என் மேல் செலுத்திய அக்கறையை நான் குமுதத்தில் இருந்த இரண்டாண்டுக் காலமுழுதும் காண்பித்தார் என்பதை மனம் நிறைவோடு நான் இங்கு குறிப்பிடவேண்டும். எத்தனையோ பிரச்சினைகளில் நான் சிக்குண்டு மனம் நொந்த போதெல்லாம், எனக்கு ஆறுதலாக இருந்தவர் பால்யூ. குமுதம் தொடங்கப்பெற்று (1947-ம் ஆண்டாக இருக்கும்) இரண்டாம் இதழில் அவர் கதை வந்தது. ராகி படம் வரைந்திருந்தார். அட்டைப்படக் கதை அது. அதன் பின் எஞ்சிய சுமார் 50 ஆண்டுக்காலம், குமுதத்துடன் தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். தன் வாழ்க்கையைக் குமுதத்துக்கு அர்ப்பணித்த அவர் பெற்றது குறைவு. மிகவும் குறைவு. 'இந்த விசுவாசம், வைக்கக்கூடிய பாத்திரமா ஒரு ஸ்தாபனம்' என்று நான் ஒரு முறை கேட்டேன். அவர் வழக்கமாகச் சிரித்தபடி, ‘ராம, ராம என்பவனுக்கும் மோட்சம். மரா மரா என்பவனுக்கும் மோட்சம்’ என்றார். தொடர்ந்து உவமையில் இருந்த அதிகப்படி அவருக்கே புரிந்து தொடர்ந்தார். 'ராமனிடத்தில் நான் ஆசிரியரை வைத்திருக்கிறேன்' என்றார். ஆசிரியர் இவரை எவ்விடம் வைத்திருந்தார்?

குமுதத்தில் நடந்தது பற்றி என் மனைவியிடம் சொன்னேன். அவர் நிம்மதி அடைந்தது தெரிந்தது. மாதாந்திரப் பிரச்சினைகளின் பயங்கரம் எங்களுக்குத் தெரியும். அந்த நிம்மதி எனக்கு வருத்தத்தைத் தந்தது.

அன்று இரவுக்கு முந்தைய மாலையில் சுப்ரமண்ய ராஜுவைச் சந்திக்கப் போனேன். வழக்கமான சந்திப்பு அது. வாரத்தில் நாலைந்து நாட்களாவது நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்த காலமது. அவர் பணி ஏழு அல்லது ஏழரை மணிக்கு முடியும். அதன் பிறகு, டி.டி.கே.வுக்குப் பக்கத்திலும், சோழாவுக்கு முன்னும் இருக்கும் ஓட்டலுக்குச் செல்வோம். முதன் மாடி 'பாரில்' தான் எங்கள் மாலைகள் இனிய போதையோடு மெல்ல நடக்கும். வழக்கம்போல முதல் லார்ஜ் விஸ்கி வந்தது, துணைப் பதார்த்தங்களோடு முதல் விழுங்கலைச் செய்து முடித்து, நான் விஷயங்களைச் சொல்லத் தொடங்கினேன். ராஜுவுக்கு நான் குமுதத்தில் வேலைக்கு முயற்சித்தது தெரியும். எனக்கு அங்கு வேலை கிடைக்காது என்று அவர் நிச்சயமாக இருந்தார். என்னிடமும் சொன்னார். கடுமையான என் விமர்சனங்கள், மறைவும் நாசுக்குமற்ற பேச்சும் எனக்கு எதிரானவை என்று அவர் கருதினார். என்மேல் மிகுந்த அக்கறைகொண்ட சென்னை நண்பர்களில் முதல்வராக ராஜு இருந்தார். எனக்கு மட்டுமல்ல, சென்னையில் இன்றுள்ள முக்கியமான மூத்த மற்றும் என் சமகாலத்து எழுத்தாளர் பலர்க்கும் அவர் பெரும் உதவிகள் செய்து கொண்டிருந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், வழக்கத்துக்கு மாறாக இரண்டு கூடுதலான லார்ஜுகளில் அவர் மிதந்தார். உடனடியாக அவருக்குக் கவலையும் ஏற்பட்டுவிட்டது. சென்னையில் வாழ மனிதர்கள் கடைப் பிடிக்க வேண்டிய சில தர்ம சூத்திரங்களை அவர் சொல்லத் தொடங்கினார். 1. எதைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்லாதிருத்தல். 2. சொல்ல நேர்ந்தால் ஆகா, பேஷ், பிரமாதம் போன்ற விஷயங்களாகவே சொல்லுதல். 3. பாராட்டுக்கு அல்லாமல் வேறு எதற்கும் வாயைத் திறவாமல் இருத்தல். 4. பிரமுகர்கள் என்கிற மூடர்களுக்கு அவர்கள் மூடமையை இனம் காட்டாமல் விலகிச் செல்லுதல். 5. இரத்தத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டு எந்தச் சமூக இழிவுக்கும் மனம் பொங்காமல் இருத்தல். 6. சண்டைக்கார இலக்கியக்காரர்களுடன் பொது இடங்களில் காணப்படாதிருத்தல் போன்றவைகளை எனக்கு ஓதினார். 'இதெல்லாம் இல்லாமல் இருப்பதால் தானே என்னை நீங்கள் மதிக்க நேர்ந்தது' என்று நான் கேட்டேன்.

மறுநாள் காலை பத்து மணிக்கு முன் அலுவலகம் வந்து சேர்ந்தேன். ஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது. ஆசிரியரை முதன் முதலில் பார்க்கும்போது, 'ஹரி ஓம்' என்று சொல்லி வணங்குவதே குமுத மரபு. வணக்கம் என்பதுக்குப் பதில் ஹரி ஓம். நாங்கள் ஹரி ஓம் என்றதும் அவரும் ஹரி ஓம் என்று வணங்குவார். முதல் நாள் ஆகையால், ஆசிரியர் எனக்கு பகவத் கீதை-திருச்சி திருப்பராய்த்துறைப் பதிப்பு-ஒரு பிரதியும், ஒரு ரைட்டர் பேனாவும் அன்பளிப்பு தந்தார்.

குமுதத்தில் ஒரு நாள் இப்படித் தொடங்கும். எனக்கும் முதல் நாள் இப்படித் தொடங்கியது.

முதலில் ஆசிரியர், பகவத் கீதையின், முதல் தொடக்கப் பாடல்களில் ஒன்றான 'ஓம் பார்த்தாயா பிரதி யோதிதா, பகவதாம்.. நாராயணேனஸ்வயம்' என்று தொடங்கும் பிரார்த்தனைப் பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு பக்தி பாவத்தோடு பாடுவார். ஆசிரியர் குழு தாமும் சேர்ந்து பாடும். பாட வேண்டும். நானும் சில நாட்களில் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பிறகு, முந்தைய இடத்தில் நிறுத்தி இருந்த பகவத் கீதை பாடல் வரியிலிருந்து தொடங்கி ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்குவார். ஆசிரியர் கீதைமேல் மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு சுலோகமாக, முதலில் சமஸ்கிருதம், அதன் பிறகு தமிழ்ப் பொருள் முதலானவற்றைச் சொல்லி விளக்க உரை ஆற்றத் தொடங்குவார் ஆசிரியர். நாலைந்து சுலோகத்தைப் படித்துப் பொருள் சொல்லிக்கொண்டு வரும் போது ஆசிரியர் குழுவினர் இடையிட்டு ஐயங்களைக் கேட்டுக் கொள்ளலாம். ஐயம் கேட்பவனே சிறந்த சாதகன். பெரியவர்களில் யாரேனும் ஒருவர், கர்மத்தைப் பண்ணிப்பிட்டு பலனை எதிர்பாராமல் இருக்கிறது பெரியவாளுக்கு சரி. சின்னவாளுக்கு எப்படிப் பொருந்தும் என்பதுபோல் கேள்வி எழுப்புவாரெனில், ஆசிரியர் நிஜமாகவே சாட்சாத் பரமாத்மா ஆகவே மாறிவிடுவாரென எனக்குத் தோன்றும்படி, ஒரு பரவசத்துடனும், மந்தகாசப் புன்னகையுமாக அழகான விளக்கங்களைச் சொல்லத் தொடங்குவார். நாங்கள் அர்ஜுனர்கள் இல்லை. அவர் கிருஷ்ணராக இருக்க என்ன தடை?

இடையில் பதிப்பாளர் பார்த்த சாரதியும் வந்து சதசில் கலந்து கொள்வார்.

பகவத் கீதை முடிந்த பிறகு திருக்குறள் வாசிப்பு தொடங்கும். திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ் உரைப்பதிப்பு ஆகியவைகளுடன் திருக்குறள் படிக்கத் தொடங்குவார் ஆசிரியர். முதலில் ஒரு குறள். அதன் சுருக்கமான, அகன்ற பொருள். மொழி பெயர்ப்பில் அதன் அர்த்தம், ஆராய்ச்சி என்று வகுப்பு தமிழ முதம் சொட்டச் சொட்ட நடைபெறும். இதில் ஐயம், சந்தேகம் உள்ளவர்கள் ஆசிரியரிடம் தெளிவு பெறலாம். ஐயம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்.

திருக்குறள்களில் சில படித்து முடித்தபின், சில வேளைகளில் ஒரு பிரார்த்தனை இப்படி இடம்பெறும்.

தொல்காப்பியர், சங்கப்புலவர், திருவள்ளுவர் முதலாகப் பாரதி வரையிலான புலவர்கள் ஆசிர்வாதம் காரணமாகக் குமுதம் சர்க்குலேஷன் அடுத்த ஆண்டுக்குள் . . . லட்சம் கூட வேண்டும் . . .

ஒரு வழியாகப் பத்தரை மணியளவில் இறை வணக்கம், பக்தி வியன்யாசம் முடியும். அதன் பின் நித்திய அலுவல். குமுதம் புகைப்படக் கலைஞர் கொண்டுவந்த சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மேசைமேல் பரப்பப்படும். ஒரு மாதிரியான படங்கள். அட்டைக்கும், 36-ம் பக்கத்து மூலைக்குமான படங்கள். அந்தப் படங்களில் பெரும்பாலும் பெண்கள் பக்கவாட்டில் காணப்படுவார்கள். குறைந்தபட்ச ஆடைகளுடன் இருப்பார்கள். குனிந்தபடி, அப்படி இப்படித்தான். ஆசிரியர், பகவத் கீதை படித்த அதே 'ஒருமை' உணர்வோடு படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்.

அந்த நேரம் பல முறை அவர் முகத்தை நான் கவனித்து இருக்கிறேன். எங்கேயாவது, கேலி, கிண்டல், விகடம், நகை ஆகியவற்றின் ஒரு ரேகையாவது தென்படுகிறதா என்று கூர்மையாக நான் கவனித்து இருக்கிறேன். இல்லை.


நிஷ்காம்ய கர்மம் என்பது இது தானோ?


-பிரபஞ்சன்

நன்றி: உயிர்மை, ஆகஸ்ட் 2008

சனி, செப்டம்பர் 06, 2008

என்ன கொடுமை (கலைஞர்) கருணாநிதி இது?

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.
.
கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா?
.
ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா?
என்ன கொடுமை......
.
கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?
.
அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........
.
கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது.
.
அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது.
.
கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.
.
உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ?
என்ன கொடுமை.......
.
கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.
.
அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.
.
அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா.
.
அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.
.
ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை?
.
உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
.
அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......
.
கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி.
.
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா?
.
புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?
.
உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......
.
கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.
.
அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல்.
.
விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா?
என்ன கொடுமை.......
.
கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை.
.
ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை.
.
தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்?
.
ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?
.
மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை:
"இந்த ஆட்சியில் வாழ்வதை விட
சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால்,
சே.. மின்வெட்டாம்.''

.
பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.


-ஞாநி
நன்றி: குமுதம், 10-09-08