வியாழன், மார்ச் 27, 2008

உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது ( கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர்களின் வாக்குமூலம் )

கோவை நகருக்கு நடுவே இருந்தாலும் அதனோடு ஒட்டாமல் விலகி நிற்கும் நெரிசலான பகுதி அது. குறுகிய தெருக்களில் சோடியம் வேபர் விளக்குகளின் செம்மஞ்சள் வெளிச்சமும், சந்துகளில் இருளும் விரவிக் கிடக்கின்றன.

அவருக்கு சுமார் முப்பது வயதிருக்கலாம். அந்த மெல்லிய தாடியும் கண்களில் தெரிந்த இறுக்கமும் மட்டும் இல்லாமலிருந்தால் எல்லா இளைஞர்களையும் போலத்தான் அவர் தோற்றமும் இருந்திருக்கும். இவர்தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையானவர்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று எனக்குக் காட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்.

1‘குண்டு வெடித்த அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டில்தான் இருந்தேன். குண்டு வெடித்தது என்று தெரிந்ததும் எல்லோரும் வீடுகளுக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டோம். தெருவே வெறிச்சோடிப் போய் விட்டது. கொஞ்சநேரத்தில் ரேப்பிட் ஆக்ஷன் ஃபோர்ஸின் (ஆர்.பி. எஃப்) வண்டி வந்தது. உள்ளிருந்த பி.ஜே.பி. காரர்கள் முஸ்லிம் வீடுகளை அடையாளம் காட்டினார்கள். விதிவிலக்கில்லாமல் சிக்கிய அத்தனை ஆண்களையும் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினார்கள். நானும் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவன். சுமார் 20 நாட்கள் போலிஸ் ஸ்டேசனிலேயே இருந்தேன். போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் அடிப்பார்கள். பெயருக்கு உணவுப்பொட்டலம் கிடைக்கும். அந்த 20 நாட்களும் நான் குளிக்கவே இல்லை. கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது என் உடைகள் எல்லாம் தொளதொளவென்று ஆகிவிட்டன’.

‘பத்து ஆண்டுகள்... அதற்கு முன் நான் சிறையை பார்த்ததே கிடையாது. மூன்று மாதத்தில் வெளியே வந்துவிடலாம் என்றுதான் போலிஸ்காரர்கள் சொன்னார்கள். நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்வீட்டுக்காரர்கள் சொந்தக்காரர்கள் என சிறை முழுவதுமே முஸ்லிம்கள் மட்டுமே இருப்பது போல் தோன்றும். ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகத்தான் கழியும். வீட்டிலிருந்து யாராவது வந்துவிட்டால் அவ்வளவு தான் ஆறுமணிக்கு கொடி இறக்கப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டப் பின்பு பைத்தியமே பிடித்துவிட்டது போல் இருக்கும்.

என் குடும்பத்திலிருந்த எல்லாப் பெண்களும் கூலிவேலைக்குப் போகவேண்டி வந்தது. தனியாக வெளியே போகும் வழக்கமே இல்லாதவர்கள் அவர்கள். வேறுவழியே இல்லை. எப்படியோ வயிற்றுப் பாட்டையும் பார்த்துக்கொண்டு எனக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு தவறாமல் சிறைக்கு வருவார்கள். வேறென்ன, பப்ஸ்தான் வாங்கிவருவார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் வார்டர்களோடு சண்டை நடக்கும். இதையெல்லாம் பார்த்த பிறகு அடிக்கடி வரவேண்டாம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். சில நாட்களில் வெளியே போவோம் என்ற நம்பிக்கையே சுத்தமாக இல்லாமல் போய்விடும். சிலசமயம் கட்டாயம் வெளியே போவோம் என்று தோன்றும். ஆகஸ்டு 14 வேறு சிலரோடு நானும் விடுவிக்கப்பட்டேன்.’

‘வீடு திரும்பும்போது நகரம், இரைச்சல், தண்ணீர்ப்பாம்பு போல நெரிசலில் நீந்தி சென்ற ஆட்டோ... நான் திறந்த வாயை மூடவே இல்லை. ஆனால் ஏன் எனக்கு தூக்கி தூக்கிப் போடுகிறது, நெஞ்சு அடைத்துக் கொள்வதுபோல ஆகிறது என்று ஆட்டோவில் ஏறிய முதல் சில நிமிடங்களுக்கு என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்புதான் தெரிந்தது, வாகனங்கள் எதிரே வரும் என்பதும் விளக்குகள் நகர்ந்து வருவதும் எனக்கு மறந்தே போய்விட்டிருந்தது. பல ஆண்டுகளாக நான் எந்த வாகனத்திலும் பயணம் செய்யவே இல்லை. தவிர மாலை ஆறுமணிக்கே சிறைக்கதவுகள் மூடப்பட்டுவிடும் என்பதால் வாகனங்களின் விளக்குகளையும் நான் பார்க்கவே இல்லை. எனவே ஆட்டோவின் அதிர்வும் எதிரே வரும் வாகனங்களின் ஒளியும், வேகமும் எனக்கு பயத்தையும் விவரிக்க முடியாத வெவ்வேறு விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தின.’

‘வித்தியாசமாகத் தெரிந்த இன்னொன்று விளம்பர போர்டுகள். நான் போர்டு எழுதும் வேலையும் செய்திருக்கிறேன். ஸ்கீரின் பிரிண்டிங்கும் கொஞ்சம் தெரியும். எனவே இயல்பாகவே என் கவனம் புதிதாக வித்தியாசமாக தெரிந்த போர்டுகளின் மேல் சென்றது. என்ன இது என்றேன். ஃப்ளக்ஸ் போர்டு என்றார் ஆட்டோ டிரைவர். ஆயிரம் அதிசயங்களில் இது முதலாவது. என் கவனம் வேறுபுறம் திரும்பிவிட்டது.’

‘இந்த பத்தாண்டுகளில் அம்மாவைப் போலவே வீடும் நூறு ஆண்டுகள் ஆனதைப்போல கிழடு தட்டிப் போய்விட்டிருந்தது. சமீபத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை. வீட்டினுள் கட்டப்பட்டிருக்கும் கொடியில் தோரணமாக தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளையும் காணவில்லை. எல்லாம் சரியாகிவிடும்...’

‘வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்வரை எல்லாமே புதியவையாக இனிமையும் மகிழ்ச்சியும் நிரம்பியவையாக தோன்றின. இரவு வெகுநேரம் கழித்து படுத்தப் பின்புதான் முதல் அதிர்ச்சி ஏற்பட்டது. எனக்குத் தூக்கமே வரவில்லை. மூச்சு திணறுவது போலவும், நெஞ்சின் மேல் யாரோ ஏறி மிதிப்பது போலவும், கழுத்தை நெரிப்பது போலவும் தோன்றியது. என்ன இது, வேர்த்து வழிய கொஞ்சநேரம் விழித்தவன் கண்டுகொண்டேன். கொசுவர்த்தி. நிலைமையை புரிந்துகொண்ட அம்மா பக்கத்து வீட்டில் இருந்து ஒரு டேபிள் ஃபேன் கடன் வாங்கிவர அதற்கு கொசுவர்த்தியே பரவாயில்லை போலாகிவிட்டது. இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை.’

‘முதல் பத்து பணிரெண்டு நாட்களுக்கு நான் புதிதாக உலகைப் பார்க்கும் குழந்தை போலத்தான் இருந்தேன். இருசக்கர வாகனங்களும் பஸ்களும், கார்களும், லாரிகளும் நேராக என்மீதே மோதவருபவை போலத் தோன்றின. புதிதுபுதிதாக ஏதேதோ பெயர் தெரியாத வண்டிகள். தெருவைக் கடக்க வேண்டிய இடங்களில் சாலையை கடப்பதையே மறந்துவிட்டு விரையும் வாகனங்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். சாலையை கடக்கப் பழகவே பலநாட்கள் ஆகிவிட்டன’

‘உப்பு சப்பில்லாத ஜெயில் சாப்பாட்டுக்கு பழகிபோய் என்னால் வீட்டுச் சாப்பாடு சாப்பிடவே இயலவில்லை. காரத்தால் கண்களில் தண்ணீர் வந்துவிடும். இன்னொரு இட்லி... என்றால் ஆச்சரியத்துடன் அம்மாவையே பார்த்துக்கொண்டிருப்பேன்.’

‘ஆனால் முதன்முதலாக ஏதாவது வேலைதேடக் கிளம்பியபோதுதான் இந்த பத்தாண்டுகளை இழந்ததன் வலி எனக்கு முழுமையாக தெரிந்தது. ஆட்டோ டிரைவர், ஃப்ளக்ஸ் போர்டு என்ற சொல்லை உச்சரித்தபோது அதன் முழு பரிமாணமும் எனக்குப் புரியவில்லை. புதிதாக நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த புது போர்டுகள் என்னைப் போன்றவர்களுக்கு வேலை யில்லாமல் செய்துவிட்டன. நான் வேறு வேலைதான் தேடவேண்டும்...’

‘எல்லா இடத்திலும் எல்லாருக்கும் புத்தம் புதிதாக வேலைப் பழக வரும் பையன்கள்தான் வேண்டியிருக்சகிறது. எனக்கு இப்போது முப்பது வயது. ஆனால் பார்க்க முப்பத்தைந்துபோல் தெரிகிறது. உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது. இன்னும் எனது வலது தோள் பட்டை வலிக்கிறது. பூட்ஸ் கால்களாலும், லத்திகளாலும் பத்தாண்டுகளுக்கு முன்பு துவைத்து எடுக்கப்பட்டதன் விளைவு.’

அவர் சிரித்தார். ஆனால் கண்களை மூடியிருந்த பனிப் போர்வை விலகவேயில்லை. ‘என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். வாங்க மற்றவர்களையும் பார்க்கலாம்.’

2

அது ஒரு பத்துக்கு எட்டு அறை. இப்போது, போன பிறவி போல தெரியும் அந்தக்காலத்தில் அவர் ஒரு ஒர்க்ஸ்ஷாப் தொழிலாளியாக இருந்தாராம். தாம் ஒரு முஸ்லிம் என்ற உணர்வே அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. மருதமலைக்குப் போய் மொட்டை அடித்ததுகூட உண்டாம்.

சிறையில் தன்னால் எல்லோருக்கும் தொந்தரவு என்கிறார் அவர் சிரித்துக்கொண்டே. தனக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தில் தொட்டதற்கெல்லாம் சண்டை பிடிப்பவராக ஆகிவிட்டாராம். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு சிறையில் இருப்பதை நினைத்தால் நெஞ்சே வெடித்துவிடும் போலாகிவிடுமாம். அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்... அடுத்தவேளை உணவுக்கு உடைக்கு என்ன செய்வார்கள்? என்று யோசிக்க யோசிக்க சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகம்போல் இருக்குமாம். ‘பத்துவருடம் எப்படி இருந்திருக்கும் பார்த்துக்குங்க..’. உள்ளே போகும்போது மகள் சின்னப்பெண். இப்போழுது பேத்திக்கு நாலு வயசு.

மனைவி, குழந்தைகள்... நான் சுற்றிலும் பார்த்தேன். அவர்களுக்கான எந்த அடையாளமும் இல்லை. கேட்கக்கூடாத கேள்விதான். ‘எங்கே அவர்கள்...?’ அவர் ரத்தநாளங்கள் புடைத்துத் தெரிந்த தனது கரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரேயொரு கேள்வி கேட்டுட்டேன்...

3

நாங்கள் எழத் தயாரானபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். அகன்ற தோள்கள், மூங்கில் போன்ற உரமேறிய தேகம். தாடி அடர்ந்த ஒடுங்கிய கன்னங்கள் அவரை ஒரு விளையாட்டு வீரரைப் போல் காட்டின. அவரது கரம் இடுக்கியைப்போல் என் கையைப் பற்றியது. “நோயாளிப்போல் சிறைக்குப் போய் ஆரோக்கியமாக திரும்பி வந்தவன் நான் ஒருவன்தான். கைது செய்யப்படுவதற்கு முன்பு எனக்கு குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் இருந்தது. சிறைக்குள் குடிக்க வழியில்லையே. கஞ்சா கிடைக்கும். ஆனால் கஞ்சா குடித்தால் எங்கள் ஆட்கள் ஒதுக்கிவைத்து விடுவார்கள். அது பெரிய தண்டனை. எனவே வேறுவழியில்லாமல் குடியை விட்டுவிட்டேன். பீடியும் குறைந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட புத்துணர்ச்சியில் உடற்பயிற்சியில் இறங்கினேன். படிப்பு உடற்பயிற்சி, படிப்பு உடற்பயிற்சி ... பத்தாண்டுகளில் எனது கூன் நிமிர்ந்துவிட்டது’’.

அவர் என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தார். ‘அதற்காக சிறையை ஏதோ நல்ல இடம் என்று நினைத்துவிடாதீர்கள். உயிருக்கு உயிரான காதலர்களை சிறையில் போட்டுப் பாருங்கள்... எலியும் பூனையுமாகி விடுவார்கள். அன்றாட வாழ்க்கைக்கான போராட்டம் இருக்கிறதே அது எப்பேர்ப்பட்ட மனிதனையும் சுயநலமிக்கவனாக்கிவிடும். நீங்கள் சிறையில் ஒருவரிடம் ஒருநாள் சோப்பு கடன் வாங்கினால் உங்களுக்கு கிடைக்கும்போது அதைத் திருப்பி கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவரை அது பாதித்துவிடும். உங்கள் அலுமினியத் தட்டு உடைகள் பீடி அனைத்தையும் மறுநாளுக்காக நீங்கள் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.’

‘வெளியே வந்தபோது நகரம் எப்படி இருந்தது?’

‘அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. கட்டடங்களைச் சொல்லவில்லை. வாழ்க்கை முறையை சொல்கிறேன். பணத்தைத் தேடி நடக்கும் இந்த ஜுர வேக ஓட்டப் பந்தயம் முன்பு இல்லை. எப்படியாவது ஒருநாளைக்கு இருநூறு முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆகவேண்டும். அடுத்தநாள் மீண்டும். முன்பும் இப்படித்தான். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாற்பது வயதானவன்- தொழிலாளி- தான் எதற்கும் உதவாதவன்- இனிமேல் பெட்டிக்கடை வைத்துவிட வேண்டியதுதான் அல்லது வாட்ச்மேன் வேலைக்கு போகவேண்டியதுதான் என்று உணரவேண்டி இருந்ததில்லை. இப்போது எல்லோருக்கும் பையன்கள்தான் வேண்டியிருக்கிறது. எண்பது ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எப்படி...?’

‘என்னோடு கடை வைத்திருந்தவர்கள் நிறையபேர் பெரிதாக வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். இந்த பத்தாண்டுகள் என்னிடம் இருந்து பறிக்கப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நானும் அந்த இடத்தை அடைந்திருக்கலாம். வெளியே வந்ததிலிருந்து நான் ஜிம்முக்கே போகவில்லை. ஒரு புத்தகத்தையும் தொடவில்லை.’

‘எதிர்காலம் பற்றி?’

அவர் நிதானமாக சுற்றிலும் பார்த்தார். ‘இதை எனக்காக மட்டும் சொல்லவில்லை. எல்லோருக்குமாகத்தான் கேட்கிறேன். எங்களுக்கு மறுவாழ்வுக்கு உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். சிலருக்கு உதவிகள் கிடைத்தும் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் முழுமையாக கடன்கள் கொடுக்கப்படவேண்டும். பலர் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வெளியுலகத் தொடர்பே இல்லாமல் 10ஆண்டுகள் கழித்தவர்களுக்கு அரசு அலுவலகங்களில் சுற்றி அலைவது எவ்வளவு சிரமமானதாக இருக்கும். எங்களில் பலருக்கு சொந்தத் தொழில் செய்வதை தவிர வேறுவழியே இல்லை. கடன் கேட்டுப் போகும் அரசு அலுவலகங்களில் ஏதேதோ விபரங்கள் கேட்கிறார்கள். இந்த மறுவாழ்வுக்கான கடன் என்பதே அரசுத் திட்டம்தான். எங்களைப்பற்றி அரசுக்கு என்னதான் தெரியாது? எங்களைவிட துல்லியமாக எங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் அரசும் காவல் துறையும் ஏன் இந்த நடைமுறைகளை எளிதாக்கக்கூடாது?

நாற்பத்தைந்து வயதுக்கு மேலானவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படமாட்டாது என்கிறார்கள். செல்போன் எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. ஃப்ளாட் ஸ்கிரீன் டிவிகளும் புதிய இரண்டு சக்கர வாகனங்களும் மின் சாதனங்களும் எங்களுக்கு ஆச்சரியமளிக்கின்றன. ஒரு எலக்ட்ரீசனோ, மின்சாதனங்களை பழுதுபார்ப்பவரோ, ஆட்டோமொபைல் மெக்கானிக்கோ இவற்றையெல்லாம் பழகிக்கொள்ள எவ்வளவு நாட்கள் பிடிக்கும்? புதிதாக பிறந்த குழந்தைகள் அல்லவா நாங்கள்.’

4.

‘தேசத்துரோகி’ ஒரு தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர். பழையத் துணிகள், பேப்பர்களும் வாங்குவார். அவருக்கு அப்போது சுமார் ஐம்பது வயதிருக்கும். அன்று காதலர் தினம் என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. சற்று முன்னதாகவே திரும்பிவிட்ட அவர் வண்டியில் குவிந்துக்கிடந்த பொருட்களை யோசனையுடன் பார்த்தபடி பீடி பிடித்துக் கொண்டிருந்தபோது கோவை நகரம் வெடித்துச் சிதறியது.

அடுத்த சிறிதுநேரத்தில் வேட்டைநாய்களைப் போல் பாய்ந்து வந்த, நீல உடையும் ஹெல்மெட்டும் அணிந்த இந்தி பேசும் காவலர்கள், மூடியிருந்த கதவுகளை உதைத்துத் திறந்து இஸ்லாமிய ஆண்களை இழுத்துச் சென்றபோது ‘தேசத்துரோகியும்’ கொண்டு செல்லப்பட்டார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது, தன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று உறுதியாக நம்பியிருந்தார் ‘தேசத் துரோகி’. சிறையில் தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் தனது வரவு செலவு நோட்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி வற்புறுத்திச் சொல்வார். குண்டு வெடிப்புக்குப் பின்பு நடந்த கலவரத்தில் அவரது தள்ளுவண்டி எரிக்கப்பட்டுவிட்டது. பரவா யில்லை. வர வேண்டிய கடன்கள் உள்ளன. சமாளித்துக் கொள்ளலாம்.

மணிகள் நாட்களாகி, வாரங்களாகி, மாதங்களாகி, ஆண்டுகளாகின. ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ‘தேசத்துரோகி’ விடுவிக்கப்பட்டார். நரைத்து தளர்ந்து போயிருந்த மனைவியையும், வளர்ந்து வாலிபமாகி வறுமையின் சுவடுகளை முகத்தில் தாங்கியிருந்த மகன்களும், அவரை ஒரு இரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துவந்தனர். பிரிந்தவர் கூடியதும் அந்த இரவு உறக்கமின்றி கழிந்தது. காலையில் பீடி பற்ற வைத்தபடி தெருவில் நடந்த ‘தேசத்துரோகி’ திரும்பும் போது வீட்டை அடையாளம் காண முடியாமல் தடுமாறிப் போனார். பின்பு ஒருவழியாக உள்ளே வந்து உட்கார்ந்தவரிடம் அந்த நோட்டு தரப்படுகிறது. அது மட்டும்தான் இப்போது மீதி இருக்கிறது. 98 பிப்ரவரி 14 வரை வரவேண்டியத் தொகை ரூ.16,000/.

‘தேசத்துரோகி’ அந்த நோட்டை எடுத்துக் கொண்டு வசூலுக்குக் கிளம்புகிறார். வீடுகள் இருந்த இடங்களில் அப்பார்ட்மெண்ட்கள்... காம்ப்ளக்ஸ்கள்...அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்த தெருக்கள், மக்கள். நட்பும் தந்திரமுமாக தன்னிடம் பேரம்பேசி மல்லுக் கட்டிய பெண்களின் முகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முயல்கிறார். ‘அம்மா பத்து வருடத்திற்கு முன்பு நீங்க ரெண்டு பக்கெட்டும் சாமானும் வாங்கியதில் 135 ரூபாய் பாக்கி...

‘‘தேசத்துரோகி’ அந்த கசங்கி பழுப்பேறிய நோட்டை ஆட்டிக்காட்டியபடி கேட்கிறார் ‘எல்லா விவரமும் இதுல இருக்கு. பணத்தை வாங்கித்தர அரசாங்கம் ஏதாவது உதவி பண்ணுமா?’

5.

வைக்கோல் ஏற்றிய மாட்டுவண்டிபோல பஸ் செம்மச் செம்ம நிறைந்து ஒரு பக்கமாக சாய்ந்தபடி உக்கடத்திலிருந்து கிளம்புகிறது. அந்த பயணி ஓடிவந்து தொற்றிக் கொள்கிறார். படியில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் அவர் வயதைப்பார்த்து சற்றே நெளிந்து இடம்விடுகிறார்கள். பயணி உள்ளே நுழைகிறார். கூட்ட நெரிசலில் நச்சென்று ஒருவர் பயணியின் காலை மிதிக்கிறார். தான் முதலில் கோபப்பட்டுவிட வேண்டுமென்ற தற்காப்பு உணர்வுடன் திரும்பிய அவர் பயணியின் முகத்தில் தெரிந்த விநோதமான சிரிப்பைப் பார்த்து குழம்பிப் போகிறார்.

பயணி ஒரு தொழிலாளியாக இருந்தார் - பத்தாண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பு வழக்கில் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டு சிறைக்குச் செல்லும் வரை. சிறையிலிருந்த பத்தாண்டுகளில் நான்கே நான்கு முறைதான் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 12 கி.மீ. அதுவும் கம்பிக் கவசம் பூண்ட ஜன்னல்கள் கொண்ட ச்போலீஸ் வாகனத்தில்தான். அவர் ஒவ்வொரு முறை பரோலில் வரும்போதும் உடன் இரும்புத் தொப்பி அணிந்த, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வருவார்கள். அவர்கள் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.

காவலர்கள் பரோலில் செல்லும் கைதிகளுக்கு காவலாக செல்ல விரும்புவதில்லை. பெரும்பாலும் ஒற்றை அறை கொண்ட கழிப்பிடம் அற்ற அவர்களது விடுகள். இயற்கை உபாதைகளை அடைக்கிக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் ஆயுதங்களோடு நான்கைந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமே?

டவுன்பஸ்சின் இரைச்சல், நெரிசல், உயிர்த்துடிப்பு பயணிக்கு பிடித்திருக்கிறது. சும்மா பஸ்ஸில் போய்க் கொண்டே இருக்கிறேன். இதுவரை இதற்கே ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பேன். வேலை போய்விட்டது. பிழைப்புக்கு ஏதாவது வழிசெய்யவேண்டும். ஆனாலும்...

6.

நான் விடைபெற்றுக் கொண்டபோது அவர்கள் திரும்பவும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். ‘ஏன் இதில் இவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள்? நாம் அப்படி எதுவும் பேசிவிடவில்லையே...? என்றேன்.

‘நாங்கள் மக்கள்கூட்டத்தில் கலந்து மறைந்துவிட விரும்புகிறோம். அதுவொரு காரணம். எல்லோர் கதையும் ஒன்றுதான் என்னும்போது பெயர்களால் என்ன பயன்?- இது இரண்டாவது. எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் அதோ தெரிகிறதே, அது..’

இதைப் பார்க்காமல் எப்படி விட்டேன்? தெருமுனையில் ஒரு செக்போஸ்ட். காவலர் ஒருவர் மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். எப்போதும் இங்கே நான்கு போலிஸ்காரர்கள் இருப்பார்கள் என்றனர் நண்பர்கள். ‘நாங்கள் எங்கே போகிறோம் வருகிறோம் என்பதையெல்லாம் தங்களிடம் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். பெண் பார்க்கப்போனால்கூட அதுபற்றிய முழு விவரமும் தங்களிடம் சொல்லப்பட வேண்டுமென்கிறார்கள்.

நகருக்குள் சிறைச்சாலை என்பது மாறி இந்த மக்களுக்கு நகரமே சிறைச்சாலையாகிவிட்டதோ என்று தோன்றியது.

இலக்கு தவறிய கோபம்.

அவர்கள் இந்துக்கள். பெரும்பாலான இந்துக் கோயில்கள், இந்துக்களின் வீடுகளில் வாசல்வரை செல்ல மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு. இன்றோ நாளையோ இடிந்துவிழத் தயாராக இருக்கும் அவர்களது வீடுகள் இருக்கும் தெருக்கள் சந்தைக்கடை போல் இரைச்சல் மிகுந்திருக் கும். அருகே உள்ள டவுன்ஹாலின் கண்ணைப் பறிக்கும் பளபளப்பும், ரேஸ்கோர்சின் கம்பீரமான அமைதி தவழும் மாளிகைகளும், அவர்களுக்கு முற்றிலும் அன்னியமானவை.

தொலைவில் கேட்ட பம்மென்று அமுங்கிய குண்டு வெடிக்கும் ஒலியில் ஆண்டாண்டுகாலமாக உறங்கிக் கிடந்த கோபம் விழித்துக்கொண்டது. காக்கியும், காவியும் அணிந்தவர்கள் அவர்களை வழிநடத்தினார்கள். இவர்களை முன்னிருத்தி தாங்கள் பின்னே நின்று கொண்டனர். மறுநாள் ஆர்.பி.எப். வாகனம் ஒலிபெருக்கியோடு தெருவில் சென்றது. ‘கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்று மாலைக்குள் ஆர்.பி.எப். சாவடியில் ஒப்படைக்கப்பட வேண்டும்.’ ஒளித்து வைக்க இடம் இல்லாத, கோபம் வடிந்து சுயநிலை திரும்பிய அம்மக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்தார்கள் சாவடியில். மீட்கப்பட்ட பொருட்களை அதன்பின்பு யாரும் காணவேயில்லை.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு 10.05.2005 அன்று ராம.கோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும் பகுதியான கோட்டைமேட்டை ஒட்டியுள்ள உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார். 1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்து போயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத் தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமை உண்டு என்கிறார் ராமகோபாலன்.‘அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?’ ‘இங்கிருந்து 10கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?’ இந்துக்களிடையேயான பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். ‘அப்படியானால் எல்லோரும் முதலில் காலப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோவிலுக்கு வருவோம் என்கின்றனர் இளைஞர்கள்.’ ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டு திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-5-2005 அன்று கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன். இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச்சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டு வந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

-இரா. முருகவேள்
நன்றி: புதுவிசை & www.keetru.com

செவ்வாய், மார்ச் 25, 2008

உடலுறுப்பு தானமா? திருட்டா? by செல்வ.புவியரசன்

இன்னொரு பக்கம் இதன் மூலம் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வெற்றி பெற்றதும் மிகுந்த அளவில் தேவைப்படுவதுமான ஒரு மருத்துவ சிகிச்சை முறை சட்டரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுநீரகத் திருட்டில் இந்தியத் திருநாடு முதலிடம் வகிப்பது ஆச்சரியமான _ அதிர்ச்சியான செய்தியல்ல. உலக அளவிலும்கூட அதுவொன்றும் புதுப்பிரச்னையல்ல. விருப்பத்தின் பேரில் தானம் வழங்குவதாக சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு படுஜோராக நடந்துகொண்டிருக்கும் பகல்கொள்ளைதான். அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தியாகசீலர்களில் ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பொதுமக்கள் கவனத்திற்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் நேபாள நாட்டில் கைதாகி இந்தியாவுக்குத் திரும்பியிருக்கும் அமித்குமார் அதிலொருவர். அவ்வளவுதான்.

கையில் காசிருக்கு, பையில் பணமிருக்கு, கிட்னி மட்டும் மக்கர் செய்கிறது. வருத்தப்படுகிற உற்றார் உறவினர்கள் கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி தன்வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி இக்கட்டான சூழலில் தத்தளிக்கிற ஒருவருக்கு யார் பெற்ற பிள்ளையோ எங்கிருந்தோ வந்து, தன்னிடம் இருக்கும் இரண்டு கிட்னிகளில் ஒன்றை மலிவுவிலைக்கு தருவதற்குத் தயாராக இருக்கும்போது என்ன முடிவு எடுக்கப்படும் என்பதற்கு மூளையைக் கசக்கி யோசிக்க வேண்டியதில்லை.

இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் நடக்கும் அனைத்துவிதமான உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும், 1994_ம் ஆண்டின் மனித உடலுறுப்பு மாற்றுச் சட்டம் கூறியுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். இச்சட்டத்திற்குப் புறம்பான வகையில் மனித உடலுறுப்புகளை விற்பனை செய்வது குற்றச் செயலாகக் கருதப்படும். இச்சட்டத்தின்படி உடலுறுப்புகளை தானம் அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலும் இருக்கக் கூடாது.

பெற்றோர், குழந்தைகள், சகோதர _ சகோதரிகள், கணவன் அல்லது மனைவி ஆகியோரில் ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை. ஆனால், ரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதற்கு பொறுப்புக் குழுவிடமிருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். உடலுறுப்பு தானம் செய்பவர் ரத்த சம்பந்தமுள்ள உறவினராக இல்லாத பட்சத்தில் அன்பின் அடிப்படையில் தானம் செய்ய முன்வந்திருப்பதாக மாஜிஸ்ட்ரேட்டின் முன்பாக அஃபிடவிட் எனப்படும் ஆணையுறுதிப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சையின் போது சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா இல்லையா என்று கண்காணிப்பது பொறுப்புக்குழுவின் (AUTHORISATION COMMITTEE) பணியாகும்.

சட்டம் மீறப்படும்பட்சத்தில் தானம் பெறுபவர், அளிப்பவர் இருவருமே குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.

கிட்னி கொள்ளையன் அமித்குமார்

சிலநாட்களுக்கு முன்பு, நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டிய ஒரு அதி சொகுசு கானகக் குடியிருப்பில் காத்மண்டு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார் அமித்குமார். கைதுசெய்து விசாரித்தபோது நான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை. சிறுநீரகத்தைக் கொடுத்தே ஆகவேண்டு மென்று நான் யாரையும் வற்புறுத்தவே இல்லை. அப்புறம் எப்படி நான் செய்தது குற்றமாக இருக்கமுடியும்? என்று விளக்கம் அளித்திருக்கிறார் இந்த டாக்டர். (இவ ரொன்றும் எம்.பி.பி.எஸ்ஸோ அதற்கு மேலோ படித்த டாக்டர் இல்லை. ஆயுர் வேதத்தில் டிப்ளமோ, அதற்கே இப்படியா?) அன்டர்வேர்ல்டு ஆசாமிகளோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. நான் ஒரு மருத்துவர். நான் செய்தது மக்கள் தொண்டு என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் அமித்குமார் கூறியுள்ள சில தகவல்கள் முக்கியமானவை.

மனித உடலுறுப்புகள் மாற்றுச் சட்டம் இயற்றப்பட்ட அதே 1994_ம் ஆண்டில்தான் தனது தொழிலுக்கே பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் அமித். இதுவரை அவர் நடத்தியிருக்கும் உடலுறுப்பு மாற்றங்கள், அதிகமில்லை. வெறும் மூவாயிரம் மட்டும்தான்(!). அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மருத்துவச் சுற்றுலா வரு பவர்கள்தான் இவரின் வாடிக்கையாளர் கள். மூன்று மருத்துவமனைகள், ஐந்து நீரிழிவு சிகிச்சை மையங்கள், பத்து பரிசோதனைக் கூடங்கள், இட்ட பணியைச் செய்து முடிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும், இவரது ராஜ்ஜியத்தில் அடக்கம்.

சில இந்திய மாநிலங்களில் அதிக கெடுபிடிகள் இருக்கின்றன. ஹரியா னாவில் கொஞ்சம் பரவாயில்லை. அத னால்தான் அங்கு மருத்துவமனை ஆரம் பித்தேன். வறுமையிலும் வேலையில்லாம லும் கஷ்டப்படுவதால் சிறுநீரகத்தை விற்பதற்கு இந்தியாவில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விரிவான தன் னிலை விளக்கம் கொடுத்திருக்கும் அமித், இஷ்டத்திற்கு வசைபாடியிருப்பது இந்தியா வின் ஊடக உலகத்தைத்தான்.

உத்தரப் பிரதேசத்தில் என் மீது ஒரு வழக்கு பதிவு செய்தார்கள். அதிலிருந்து இவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை என்று கமெண்ட் வேறு அடித்திருக்கிறார்.

விலைப்பட்டியல்

இந்தியாவில் சிறுநீரகத்தை விற்பவர்களுக்குக் கிடைக்கும் தொகை _ இருபத்து ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை. வாங்குபவர்கள் கொடுக்கும் தொகை ஐந்து லட்சம் + அதற்கு மேலும்.

சீனாவில் சிறுநீரகம் வாங்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். அதுவே அமெரிக்கா என்றால் 30 லட்சம் ...

இந்தியாவின் விலைப்பட்டியல் ஏழைநாடுகள் (?) அனைத்துக்கும் பொருந்தும்.

ஆஸ்திரேலிய நிலவரம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் உடலுறுப்பு தானம் அளிக்க விரும்புவர்கள் உடனடியாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி இருக்கிறது. காரணம், உடலுறுப்புக்காக காத்திருப்போரின் பட்டியல் நீண்டுகொண்டே இருப்பதுதான். ஏற்கெனவே ஐம்பதாயிரம் ஆஸ்திரேலியர்கள் தானம் அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்து தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ஐந்தில் ஒருநபர், உடலுறுப்பு கிடைக்காமல் மரணமடைய நேர்கிறது.

தென் ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் ஜான் ஹில் வயதானவர்கள் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களின் உறுப்புகளைப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை என்று வலியுறுத்திப் பேசி வருகிறார். எண்பது வயதைக் கடக்காதவர்கள் அனைவரிடமிருந்தும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானம் பெறலாம். அதுபோல புகை பிடிப்போரின் நுரையீரலைக்கூட பரிசோதித்தபின் பொருத்திக்கொள்ளலாம் என்று ஜான் ஹில் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தும் யாரும் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை.

இப்போது தென் ஆஸ்திரேலியாவில் உடலுறுப்பு தானம் பெறவேண்டிய கடைசித் தருணத்தில் 68 பேர்கள் காத்திருக்கிறார்கள். அதில் 52 பேர்களின் தேவை சிறுநீரகம் மட்டுமே.

இல்லையில்லை... இப்படித்தான்

நம்பிக்கை:1

ஏதோ முக்கியமான வேலையாக வெளியூருக்குக் கிளம்பியவர் எங்கோ அசந்து தூங்கி விட்டார். கண்விழித்துப் பார்த்தால் அடி வயிற்றில் தையல்காயம். அதாவது கிட்னி களவாடப்பட்டுவிட்டது. உண்மை:

உண்மை:

இப்படியெல்லாம் இதுவரையிலும் நடந்ததே இல்லை. இனிமேலும் நடக்காது. உடலுறுப்பு மாற்று சிகிச்சை செய்வது ஏதோ வெட்டி ஒட்டுகிற தையல் வேலையல்ல. பலதடவை படிப்படியாக பலவிதமான பரிசோதனைகளைச் செய்து, பொருத்தப்பட்ட உடலுறுப்பு ஒழுங்காக வேலைசெய்யுமென்று நம்பிக்கை வந்த பிறகு, திறமையான மருத்துவர்கள் அதிநவீன உபகரணங்களை உபயோகப்படுத்திதான் அறுவைசிகிச்சை செய்வார்கள்.

நம்பிக்கை:2

பிரபலமும் பணவசதியும் இருப்பவர்கள் தான் காத்திருப்போர் பட்டியலில் முதன்மை வகிப்பார்கள். சராசரிகள் எப்போதும் கடைசி வரிசையில்தான்.

உண்மை:

காத்திருப்போர் பட்டியல் ஒருவரின் சமூகமதிப்பையோ அவரது பொருளாதார வசதிகளையோ நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது. இரத்தவகை, உடலின் தன்மை, காத்திருக்கும் காலம் ஆகியவை மட்டும்தான் கணக்கில் எடுக்கப்படும். சாதி, மத, இன, பால், வயது பேதமெல்லாம் மனிதருக்கு உண்டு. மருத்துவத்திற்கு இல்லை.

நம்பிக்கை: 3

எந்த மதமும் உடலுறுப்புகளை தானம் செய்வதை அங்கீகரிக்கவில்லை.

உண்மை:

ஒருங்கிணைக்கப்பட்ட மதங்கள் அனைத்துமே உடலுறுப்பு தானத்திற்கு ஆதரவாகவே உள்ளன. எனினும் தானம் செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தையே சார்ந்தது.

நம்பிக்கை : 4

வயதானவர்கள் உடலுறுப்புகளை தானம் செய்ய முடியாது.

உண்மை:

பொதுவாக எழுபது வயது வரையில் திசுக்களை தானம் செய்யலாம். குறைந்த பட்ச வயது இல்லவே இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உடலுறுப்பு மாற்றுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார். சட்ட நடைமுறைகள் எளிமையாகப் பின்பற்றப்படும் வகையிலும் சட்டத்திற்கு எதிரான உடலுறுப்பு மாற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையிலும் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இன்னொரு பக்கம் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ணீவீவீனீ) நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இருக்கிற சட்டமே போதுமானது. அதிலிருக்கும் விதிகளை முறையாகச் செயல்படுத்தினாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அதேசமயத்தில் மருத்துவ விஷயங்களில் தமக்கு துறைசார்ந்த அறிவின்மையையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்திய உடலுறுப்பு மாற்றுச் சட்டம் அறமதிப்பீடுகளில் ஆழமாக வேர்கொண் டிருக்கிறது. கொடையாக அல்லாமல் வேறெந்தவகையிலும் அது உடலுறுப்பு மாற்றத்தை அனுமதிக்கவில்லை. எனவே அறம்காக்கும் பொறுப்பிலிருக்கும் நீதியரசர் தன் கருத்தில் உறுதியாக இருப்பதில் வியப் பில்லை. ஆனால் நிலைமை எல்லைமீறி நெடுநாட்கள் ஆகிவிட்டது. இப்போது நம் முன்னால் இருப்பது இரண்டே தீர்வுகள் தான். ஒன்று, மருத்துவ நிபுணர்கள் பரிந் துரைப்பது, மற்றொன்று பாதிக்கப்பட்ட வர்களின் (VICTIMS) அடிவயிற்று கேவல்....

மருத்துவத் தீர்வு

BRAIN DEAD என்று சொல்லப்படுகிற, மூளை முற்றிலுமாக செயலிழந்த மரணநிலையில் இருப்போரிடமிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தோடு உறுப்புகளைப் பெற்று, அதற்காக காத்திருப்பவர்களுக்கு வழங்கிட சட்டம் அனுமதிக்க வேண்டும்.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறையை ஊக்குவிக்கும் விதத் திலேயே சட்டவிதிகள் இயற்றப்பட்டுள் ளன. அதன் விளைவாக அந்த நாடுகளி லெல்லாம் இவ்வகையான உடலுறுப்பு தானங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் 1994_ம் ஆண்டு மனித உடலுறுப்புகள் மாற்றுச் சட்டம் மூளை செயலிழந்து மரணநிலையிலிருக்கும் நபர்களிடமிருந்து சிறுநீரகங்களைப் பெறுவதற்குத் தடைசெய்துவிட்டது. நெருங்கிய உறவினரிடமிருந்து மட்டுமே சிறுநீரகம் தானமாகப் பெறப்பட வேண்டுமென்றும் இல்லாதபட்சத்தில் அது அன்பின் அடிப்படையில் அளிக்கப்பட வேண்டுமென்றும் சட்டம் சொல்கிறது.

உடனடித் தீர்வு

வறுமையிலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க வக்கற்றுப் போன அரசாங்கத்திற்கு அதைப்பற்றிய கவலையோ, வருத்தமோ எப்போதும் ஏற்படப்போவதில்லை.

சட்டம் போட்டு தடுத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் திட்டம்போட்டு திருடுவதைத் தடுத்து நிறுத்த ஒருபோதும் முடியாது. ஒரே வழி, அதற்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதுதான். இதன் மூலம் தன் உடலுறுப்புகளை மலிவான விலைக்கு விற்பதோடு வெகுவிரைவில் தன் வாழ்நாளையும் முடித்துக்கொள்கிற பாவப்பட்ட பிறவிகளுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தானம் கொடுப்பவரின் அடிப்படைச் செலவுகளையும், வாழ்நாள் முழுவதற்குமான மருத்துவச் செலவுகளையும் தானம் பெறுபவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையாவது உறுதிசெய்யலாம்.

அறம்சார்ந்த மதிப்பீடுகளின்படி உடலுறுப்புகளை வாங்குவதும் விற்பதும் பச்சை அயோக்கியத்தனம். ஆனால் ஒருவன் உடலுறுப்பு கிடைக்காமல் இறப்பதும், மற்றொருவன் உண்ண உணவின்றி இறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கிறபோது, கண்முன்னால் இருக்கிற தீர்வு இதுதான்.
-செல்வ. புவியரசன்
நன்றி: குமுதம் ஹெல்த்

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச நிலங்கள் யாருக்கு? by அரங்க. குணசேகரன்

தமிழகத்தின் மக்கள் தொகை ஆறரைக்கோடி. இதில் சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. இந்த 30 லட்சம் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். சொந்த விவசாய நிலமில்லாத, குடியிருப்பு மனையுமில்லாத ஏழைகளுக்கு விவசாய நிலம் வழங்கப்பட்டிருந்தால், அதில் ஒரு அய்ந்து சென்ட் நிலத்தை தனது வீட்டுமனையாக மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களல்ல தமிழக விவசாயக் கூலிகள். அப்படியானால் ஏழைகளுக்கு இலவச நிலம் அளிக்கும் திட்டத்தில் நடந்தது என்ன? இலவச விவசாய நிலம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

ஒவ்வொரு கிராமத்திலும் பணக்கார, நடுத்தர, சிறு விவசாயிகள் பலரும் தங்கள் விளைநிலங்களை ஒட்டியுள்ள புறம்போக்குகளை, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். நிலமே இல்லாத ஏழைகள் இந்தப் புறம்போக்கு மீது உரிமை கொண்டாட, நிலவுரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு அளித்த இலவச நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள், முன்னரே புறம்போக்குகளை ஆக்கிரமித்து வைத்துள்ள சிறு விவசாயிகளில் சிலரும் நடுத்தர விவசாயிகள் பலருமே. அவர்கள் தங்கள் அனுபோக பாத்தியதை உரிமையைக் காட்டி வருவாய்த்துறை அலுவலர்களை சரிகட்டி, புதிதாக பட்டா பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இப்படி வழங்கப்பட்ட பட்டாக்களும், நிலமற்ற விவசாயிகளின் பட்டியலில்தான் சேர்ந்துள்ளது.

சில மாவட்டங்களில், சில ஆயிரம் நிலமற்ற ஏழைகளுக்குப் புதிதாக நிலம் அளிக்கப்பட்டுள்ளதையும் மறுத்து விட முடியாது. ஆனால், இதில் தலித்துகள் 80 சதவிகிதம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலித்துகளின் பஞ்சமி நிலக்கோரிக்கைகளும், இடதுசாரிகளின் நிலச்சீர்திருத்தக் கோரிக்கைகளும் வலுவடைந்ததை ஒட்டி, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முன்வந்தது உண்மைதான். ஆனால் நடந்ததும், நடப்பதும் வேறு. புஞ்சை தரிசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்தவர்களுக்கே பட்டா வழங்கும் நடைமுறை, காலங்காலமாக நடைபெறும் வருவாய்த் துறை நிர்வாகச் சடங்குகளில் ஒன்றுதான்.

குடியிருப்பு மனையே சொந்தமாக இல்லாத பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில், வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கிவிட்டு மேற்கு வங்கம், கேரளத்தோடு ஒப்பிட்டால் போதுமா? மூன்று லட்சம் குடும்பங்கள் போக எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகள் தற்போது எங்கே வசிக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும். அதற்கு நமது ஊராட்சிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கு, நீர் நிலையும் தூர்ந்து, நீர் நிலையின் ஆயக்கட்டும் தூர்ந்து போன நகர்ப்புற விரிவாக்கப் பகுதிகள், வாய்க்கால் புறம்போக்குகள் ஆகிய நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் இடங்களின் தரத்தையும் தேவையையும் மக்கள் குழுக்களின் மூலம் ஆய்வு செய்து, வீட்டுமனைப் பட்டா வழங்குவதே இறுதித் தீர்வாக முடியும்.

இத்தகைய தீர்வுகளுக்கு தடையாக இருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், தமிழக அரசின் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரும் ஆணைகளும் எழுப்பும் சில வினாக்களையே இங்கு விவாதத்திற்காக முன் வைக்கிறோம்:

1. ‘கோகோ கோலா’ நிறுவனம், தாமிரபரணி ஆற்றில் கங்கை கொண்டானில் உறிஞ்சும் தண்ணீர்க் கொள்ளை குறித்து அமைதி காக்கும் உயர்நீதிமன்றம், குப்பனும் சுப்பனும் குடியிருக்கும் குளத்தங்கரைக் குடிசைகளால் நீர்நிலை ஆதாரம் கெட்டுவிடும் எனத் தீர்ப்பளிப்பது என்ன நியாயம்?

2. பாசன ஆதாரம் இல்லாத (ஆயக்கட்டுகள்) ஊராட்சிக் குட்டைகளின் கரைகளின் தாழ்வான, சமதளங்களில் குடியிருப்போர் நீர்நிலை ஆதாரத்தின் எதிரிகள் என்றால், ஏழைகளை அவ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு, அதே இடங்களில் சில ஊராட்சி நிர்வாகங்கள் வணிக வளாகங்கள் கட்டுவதால் நீர்நிலை ஆதாரம் பாதுகாக்கப்படுவது எப்படி என்று நமது நீதிபதிகளும், ஆட்சியாளர்களும் அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிப்பார்களா? அல்லது அத்தகைய வணிக வளாகங்களையும் இடித்துத் தள்ள ஆணையிடுவார்களா? (ஆதாரம்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள இரட்டைக் குளக்கரையில் வணிக வளாகம் கட்டுவதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்).

3. சட்டத்தை வளைக்கும் ஆற்றலற்ற ஏழைகள் வகை மாற்றம் செய்யாததால், தொடர்ந்து குடியிருந்து வந்தால் ஆக்கிரமிப்பு என்று சொல்லும் அரசும், உயர்நீதிமன்றமும் அரசியல், சமூக செல்வாக்குள்ள தனி நபர்கள் தங்கள் செல்வாக்கால் ஆட்சேபகரமான புறம்போக்குகளை புஞ்சைத்தரிசாக வகை மாற்றம் செய்து பட்டா பெற்றவர்களை கெட்டிக்காரர்கள் என்று சான்றிதழ் வழங்குகிறதா? அதே போது சட்டத்தை வளைக்கும் ஆற்றலற்ற ஏழைகள் வகைமாற்றம் செய்யாததால், தொடர்ந்து குடியிருந்து வந்தால் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி அவர்களை வெளியேற்றத் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யாருடைய குரலை ஒலிக்கிறார்கள்?

4. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சிப் புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு அவரவர் வசிப்பிடத்திலேயே பட்டா கொடுக்க ஓர் அவசர சட்டத்தின் மூலமோ, சட்டமன்றத் தீர்மான வடிவிலோ சட்டமியற்றி ஆணையிட முடியாத தமிழக அரசின் அதிகாரம் தான் என்னவோ? ஊராட்சியையே கலைக்கும் அதிகாரம் கொண்ட தமிழக அரசுக்கு, ஊராட்சி புறம்போக்குகளை புஞ்சை தரிசாக வகைமாற்றம் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லாமல் போய்விட்டதா?

5. பாசன ஆதாரமற்ற ஊராட்சி நீர்நிலைப் புறம்போக்குகள் மீதான உரிமை, ஆதார வரம்புகள் ஊராட்சிகளுக்கே என்ற சட்டம் சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நமது நாட்டிற்குப் பொருத்தமுடையதாகுமா? ஒவ்வொரு ஊராட்சியிலும் வலுமிக்க சாதியினர், வலுக்குறைந்த விவசாயக் கூலிகளாக உள்ள தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சாதிகளை வஞ்சிக்கவும், அவர்களது குடியிருப்பு நிலங்களைப் பறித்துக் கொள்ளவும் அல்லது குடியிருப்பின் மீது தாங்கள் கட்டுப்பாடுகள் செலுத்தவுமே ஊராட்சிகளுக்கான அதிகாரங்கள் பயன்படுவதை தமிழக அரசும், நீதிமன்றங்களும் அறியுமா?

6. சில ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி புறம்போக்கு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பெற்று, அங்கு குடியிருந்த ஏழைகள் சிலருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதற்கும் சில ஊராட்சிகளில் வகை மாற்றம் செய்யப்படாததால் ஊராட்சிப் புறம்போக்கில் குடியிருப்போர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் சாதிய வெறியுணர்வில் பழிவாங்கும் உணர்வு தவிர வேறு எது காரணமென்று தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்குமா?

7. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பாசன ஆதாரமுள்ள (ஆயக்கட்டுகள் உள்ள) முப்பதாயிரம் ஏக்கர் பரப்புள்ள ஏரிகள், குளங்களை மூடி அல்லது தூர்த்து, தொடர்புடைய வட்டாரங்களில் உள்வசதி படைத்த நிலவுடைமைச் சாதிகள் ஆக்கிரமித்து வளமான விவசாய நிலங்களாக்கி, வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பட்டா பெற்றுள்ள நிலையில், ஊராட்சி, மந்தைவெளிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கில் வசிக்கும் குப்பனையும், சுப்பனையும் மட்டும் வெளியேற்றம் செய்வது என்ன நியாயம்?

8. நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஓர் நீர் நிலை ஏரி என்பதை அறியுமா? அறியாதா?

9. ஊராட்சிக் குளம் புறம்போக்குகள், மேய்ச்சல்கால், கோயில் புறம்போக்குகளில் பல ஆண்டுகள் குடியிருந்து வரும் தலித்துகள், பிற ஏழைகள், 5 ஆண்டுகளைத் தாண்டியும் பட்டா பெற முடியாமல் வெளியேற்றப்படுகின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் வாய்க்கால், ஆறு, ஓடைப் புறம்போக்குகளிலிருந்து மண்ணின் மைந்தர்களான தலித்துகள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி வெளியேற்றப்படுகிறார்கள். ஊராட்சி நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் மாநகராட்சி தரம், தூய்மை எனப் புதிய பரிமாணம் பெறுவதற்காகச் செய்யப்படும் இத்தகைய முயற்சிகளால் இரண்டு பக்கமும் தலித்துகளே பெருமளவு விரட்டப்படுகின்றனர். இவர்களல்லாத யாருடைய நலனுக்காக, யாருடைய தூய்மைக்காக எம்மக்கள் இப்படித் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள் என்பதை தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் மனந்திறந்து சொல்ல முன்வருமா?

10. ஏழைகளுக்கு குடியிருக்க 2 ஏக்கர் வீட்டுமனைப்பட்டாவுக்கு நிலமில்லை. உச்ச வரம்பு சட்டங்கள் உலகமயமாதல் திரையில் மறைக்கப்பட்டுவிட்டதா? எல்லாவற்றுக்கும் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி சட்டம் பேசும் தமிழக அரசே, பஞ்சமி நிலங்கள் மீட்பு பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன ஆயின?

11. தாழ்த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு, தொடர்புடைய மக்களின் நலத்துறை வழியாக அரசு நிதியில் குடிமனைக்கான நிலங்களை தனியாரிடம் விலைக்கு வாங்கி பட்டா வழங்கிட திட்டம் இருந்தும், நில உடைமையாளர்களின் விருப்பத்தை மீறி கையகப்படுத்த முடியாமல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர்கள் அல்லல்படுவதை தமிழக அரசு அறியுமா? இந்த நிலைமைக்கு ஊராட்சிப்புறம்போக்கில் குடியிருக்கும் எழைகள் காரணமா? அல்லது சொத்துடைமை சாதிகளின் மனித நேயமற்ற செயல் காரணமா?

12. சில ஊராட்சிகளில், ஊராட்சி புறம்போக்குகளில் வசிப்போருக்கு அரசே குடியிருப்பு மனையை தனி நபர்களிடம் விலைக்கு வாங்கிக் கொடுத்தாலும், தொடர்புடைய ஊராட்சிகளில் வசிக்கும் வசதி படைத்த விவசாய நிலவுடைமை சாதிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக ஏழைகளுக்கு சொந்தமாக வீட்டுமனைகள் அளிக்கக் கூடாது என அதிகாரம் செலுத்துவதை தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் அறிந்துள்ளதா? இத்தகையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

13. தலித்துகள், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த விவசாயக் கூலிகளுக்கு அரசு சொந்தமாக வீட்டு மனைப் பட்டா கொடுப்பதை, அவர்கள் மீதான தங்களின் கட்டுப்பாடுகள், ஆதிக்கம் தொடர்வதற்கு தடையாக இருப்பதாக வெஞ்சினம் கொள்ளும் நிலவுடைமை ஆதிக்க சாதிகளின் சிந்தனை, செயல்பாடுகள் குறித்து தமிழக அரசிடமும், உயர் நீதிமன்றத்திடமும் ஏதேனும் விவர அறிக்கைகள் உள்ளதா? அப்படிப்பட்ட அறிக்கைகள் ஏதேனும் இல்லையென்றால், தமிழக மனித உரிமைக் கழகம் போன்ற பல்வேறு மக்கள் இயக்கங்களிடம் தமிழக அரசு உரிய தகவல்களை தருமாறு கோரத் தயாராக இருக்கிறதா?

14. ஊராட்சிப் புறம்போக்குகள், கோயில் புறம்போக்குகள், மந்தைவெளி வாய்க்கால், மேய்ச்சல்கால் புறம்போக்குகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைகளில் பலரும், பசி, பட்டினியோடு வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி தரமான வீடுகளைக் கட்டியும் அதற்கு மின் இணைப்புகள் பெற்றும் வசித்து வருகின்றனர். அத்தகைய குடியிருப்புகளுக்கு தமிழக அரசு தனியாக பல ஆயிரம் ரூபாயில் சாலைகள் அமைத்தும், குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் ஆதார வசதிகள் செய்து கொடுத்தும் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பல ஆண்டுகள் வயதுள்ள மா, தென்னை, புளி, வேம்பு, பூவரசு போன்ற மரங்களை வளர்த்து ஊராட்சிக்குளங்களின் குட்டைகளின் கரையை வலுப்படுத்தி நீர் நிலை ஆதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். அவர்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றுவதால், புதிய இடங்களுக்குச் செல்லும் ஏழைகள் புதிதாக வீடுகள் கட்டிக்கொள்ள அரசிடம் என்ன திட்டம் உள்ளது? உரிய அடிப்படை வசதிகள் உடனடியாக கிடைக்காமல் வெளியேற்றப்பட்ட மக்கள் அவதியுறுவதை எப்போது, எப்படி சீரமைக்கப்போகிறீர்கள்?இது தவிர பழைய குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை, குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்புகள், மின்சார இணைப்புகள், சாலைகள் ஆகியவற்றுக்கு செய்யப்பட்ட நிதி செலவினங்களை வீணாக்கி, புதிய குடியிருப்புகளில் புதிய செலவினங்கள் செய்யப்படுவதால், அரசின் நிதிச்சுமை அதிகரிப்பது பற்றி தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?

15. தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமான வழிகளில் உள்ள தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களின் நிலத்திற்குரிய இழப்பீடும், நிலத்தின் மீதுள்ள வீடுகள், கடைகள் இதர வகைப்பட்ட கட்டடங்களுக்கு எவ்வளவு எவ்வாறு இழப்பீட்டு நிவாரணத்தொகை அளிக்க வேண்டுமென உலக வங்கி அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, ஊராட்சி மற்றும் மேய்ச்சல்கால் புறம்போக்குகளிலிருந்து வெளியேற்றப்படும் ஏழைகளுக்கும் பொருந்துமாறு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட முன்வருமா? உயர் நீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசுக்கு வழிகாட்டி ஆணையிடுமா?

16. 31.5.2008 ஆம் நாளுக்குள் நீர்நிலை மற்றும் ஊராட்சி கோயில் புறம்போக்குகளில் குடியிருப்போரை அப்புறப்படுத்த வேண்டுமென்கிறது தமிழக அரசின் ஆணை. பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இத்தகைய ஆணைகள் நிறைவேற்றப்படுவதும், எதிர்ப்பு உள்ள சில இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யும் வரை அப்புறப்படுத்த மாட்டோம் என்ற வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களின் வாய்மொழி வாக்குறுதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்யத்தக்க அளவுக்குப் போதிய நிலம் கையகப்படுத்த முடியாத நிலைமை தொடருமெனில், 31.5.2008க்குள் அரசு ஆணை நிறைவேற்றப்படுமானால், ஊராட்சி நீர்நிலை புறம்போக்குகளில் வசிக்கும் ஏழைகளின் நிலை என்னவாகும்? வெளியேற்றப்படும் ஏழைகள் எங்கே போவார்கள் என்பது பற்றி எண்ணிப்பார்க்கும்போது, மனித நேயமுள்ளோர் நெஞ்சு பதைபதைப்பதை தமிழக அரசும் உயர் நீதி மன்றமும் அறியுமா?

17. ஏழைகள், தலித்துகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட தேவையான நிலங்களை நில உடைமையாளர்களின் இசைவைப்பெற்று விலைக்கு வாங்கிட தமிழக அரசால் இயலாத நிலைமைகளில், இயலாத இடங்களில், தொடர்புடைய வட்டாரங்களில் கிராமங்களில் உள்ள பெரும் நில உடைமையாளர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து 31.5.2008க்குள் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா அளிக்க தமிழக அரசு முன்வருமா?

18. நிலத்துக்கு கீழே கிடைக்கும் கனிமங்களுக்காகவும் உள்நாட்டு பன்னாட்டு முதலாளிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்காகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனி நபர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் அவர்களது இசைவின்றியே இழப்பீட்டுடன் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு, வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட நிலவுடைமையாளர்களின் இசைவை யாசித்து நிற்பது என்ன நியாயம்?

19. பொதுப்பணித்துறை, ஊராட்சி நீர்நிலை புறம்போக்குகள் ஆக்கிரமிப்பு குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உடனே நிறைவேற்றத் துடிப்பதற்குக் காரணம் தமிழக அரசு நீதிமன்றங்களின்பால் கொண்டுள்ள மரியாதையினாலா? ஏழைகளின் மீதுள்ள அக்கறையற்ற போக்கினாலா? முல்லைப் பெரியாரில் 142 அடி நீரை தேக்குவதற்காகவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும் முறையே கேரள, கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் கதி என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத கேரள, கர்நாடக அரசுகளை எதுவும் செய்யமுடியாத உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் – தமிழக அரசை மட்டும் என்ன செய்துவிட முடியும்? தமிழகம் மட்டுமே எப்போதும் உச்ச, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை என்ன?

20. சமூக வனக்காடுகள் என்ற பெயரில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் அரசின் வனத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது. குடியிருப்பு மனை இல்லாத லட்சக்கணக்கானவர்களின் குடியிருப்பு மனைக்கும், புதிரைவண்ணார்கள் போன்ற மிகச் சிறுபான்மையாக உள்ள சமூகங்களின் தனி கிராம அமைப்புக்கும், சமூகக் காடுகளிலிருந்து பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுத்து வழங்குவதன் மூலம், நிலப்பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். தமிழக அரசு, சமூகக் காடுகளுக்கும் சாதியமைப்புக்கும் உள்ள உறவை சரியாகப் பரிசீலனை செய்தால், சமூகக் காடுகளைக் கூட குடியிருப்பு மனைகளாகவும், நிலமற்ற ஏழைகளுக்குத் தேவையான பயிரிடும் நிலங்களாகவும் வழங்கிட முடியும். ஆனால், தமிழக அரசு இத்தகைய வழியில் சிந்திக்காதது ஏன்?

குடியிருப்பு மனையே இல்லாத பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில், வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கினால் போதுமா? எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும்.

நீர்நிலைப் புறம்போக்குகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி, நீர்நிலையைப் பாதுகாக்க தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமைவிடமும் ஒரு நீர் நிலை ஏரி என்பதை அறியுமா?

-அரங்க. குணசேகரன்
நன்றி: தலித்முரசு (பிப்ரவரி 2008)

திங்கள், மார்ச் 24, 2008

ஜீவன் வற்றிக் கொண்டிருக்கும் ஜீன் குளம்! by ராமன் ராஜா

சின்ன வயதில் எங்கள் வீட்டில் பெரிய கூட்டுக் குடும்பம். பந்தி பந்தியாக எப்போதும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பாட்டி ஒரு அன்னபூரணி. வெண்கலப் பானையில் அரிசி வேகும்போதே வாசனை வாசல் வரை தூக்கும். குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் வீட்டில் புழங்கி வந்தன. பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர்.8, சி.ஓ33 என்றெல்லாம் அரசாங்க இலாகாத்தனமாகப் பெயர் வைக்கப்பட்ட ஹைப்ரிட் அரிசிகள் வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரிச்சாரியா.

ஆனால் அந்தச் சுவையான பழைய அரிசிகள் எல்லாம் எங்கே காணாமல் போய்விட்டன? இப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் இயந்திரத்தில் பாக்கிங் செய்து பிராண்ட் முத்திரை பதித்த என்னவோ ஒரு அரிசிதான் கிடைக்கிறது; சோறு வடித்தால் சவக் சவக்கென்று இருக்கிறது. இந்த அவல நிலையைக் குறிப்பிட சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தை
BIO-DIVERSITY. ஒரு மண்ணுக்கே உரிய பயிர் வளமும் உயிர் வளமும் துடைத்து எறியப்படுவதுதான் பயோ டைவர்ஸிடி பிரச்னை எனப்படுகிறது. பூமியில் மனிதன் சாப்பிடத் தகுந்த தாவரங்கள் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவை உண்டு. இருந்தாலும் நாம் சுமார் 150 வகைகளை மட்டுமே உண்டு வாழ்கிறோம்.

நிலத்தில் எதைப் போட்டாலும் வேகமாக, நிறைய வளர வேண்டும் என்ற பச்சைப் புரட்சி அவசரத்தில் ஒரு சில ஒட்டு ரகங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பயிரிட்டதில், நம் பாரம்பரியமான அரிசி பருப்பு வகைகளெல்லாம் ஓரம் கட்டப்பட்டு, நல்ல தமிழ் போல மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றன. தடியங் காயும் தும்மிட்டிக் காயும் வழக்கொழிந்து போய் மார்க்கெட் பூரா இங்கிலீஷ் காய்கறிகள். கொல்லைப் பக்கத்தில் உயிரோட்டமான கண்களுடன் லட்சுமிகரமாக நின்றிருந்த காராம் பசுக்கள் எல்லாம் லாரியில் அடைத்துக் கேரளாவுக்குக் கடத்தப்பட்டு, கிழங்கு கிழங்காக ஜெர்ஸி பசுக்கள் வந்திருக்கின்றன; தொடர்ந்து ஹார்மோன் இஞ்செக்ஷன் போடாவிட்டால் அவை பால் கறக்க மறுக்கின்றன.

தாய் நாட்டுத் தாவரங்களை மறந்து வெள்ளைக்காரனிடமிருந்து விதைகளை வாங்கிப் பயிரிடுவதில் ஓர் ஆபத்து இருக்கிறது: இந்த விதைகளெல்லாம் மொன்சாந்தோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் பேடண்ட் உரிமம் பெற்றவை. விதை நெல்லை ஒரு வருடத்திலிருந்து அடுத்த வருடத்துக்கு எடுத்துப் பயன்படுத்த முடியாது. அவர்கள் சட்டப்படி அது குற்றம்; வம்பு வழக்குப் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கிவிட்டு டிராக்டரைக் கொண்டு வந்து, கதிர் பிடித்த பயிரையெல்லாம் மடித்து உழுதுவிட்டுப் போய் விடுவார்கள். நம் விவசாயம் அவர்களுக்கு முழுவதுமாக அடிமைப்பட்ட பிறகு இஷ்டத்துக்கு விதையின் விலையை ஏற்றிக் கொண்டே போனால் என்ன செய்வது? ஒரு தலைமுறைக்கு மேல் விதைகள் முளைக்காமலே செய்யக் கூடிய பயங்கர டெர்மினேட்டர் ஜீன் கூட அவர்களிடம் இருக்கிறது. மஞ்சள், வேம்பு ஆகியவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி மேலை நாடுகளில் ஏராளமான பேடண்ட் வாங்கித் தள்ளிவிட்டார்கள். அத்தனையும் நம்முடைய பாட்டி வைத்திய அறிவு! இனிமேல் வேப்பம்பூ பச்சடி சாப்பிட ஆசை எழுந்தால் ஏதாவது அமெரிக்கக் கம்பெனி டப்பாவில் அடைத்து விற்பதைத்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது.

இப்போது வரும் பல வகைப் பயிர்கள், மரபீனி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜீன்கள் மாற்றப்பட்டவை. அதில் என்னென்ன வல்லடிகள் வரும் என்பதைக் காலம்தான் சொல்ல முடியும். பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிடவே முடியாதபடி ஏதாவது வில்லங்கம் ஆகிவிட்டால் அப்போது கிச்சிலிச் சம்பாதான் காப்பாற்றும். அதற்காகவாவது நம் சம்பாக்களைப் பாதுகாப்பது அவசியம். லோக்கல் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப இயற்கை படைத்திருப்பது அவற்றைத்தான்.

காடுகள் அழிந்து ரியல் எஸ்டேட் ஆவதால், ஆறுகளில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்படுவதால், இன்னும் பற்பல சுயநலங்களால், உலகத்து உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. டோடோ பறவை முதல் தாடிப் புலி வரை, கடந்த முன்னூறு வருடங்களில் தொலைந்த பிராணிகளுக்கு யாரும் கணக்கே வைத்துக் கொள்ளவில்லை. ஓர் இனம் அழியும்போது அவற்றின் ஜீன் என்கிற மரபீனிகளில் சேகரிக்கப்பட்டிருந்த உயிரின் டிசைன் பற்றிய தகவலும் நிரந்தரமாக இழக்கப்படுகிறது. கடைசியாக ஒருநாள் குளோனிங் முறையில் ஆடு, மாடு, மனிதன் எல்லாம் தயாரிக்க ஆரம்பித்து விட்டால் நாம் அனைவருமே ஒரே அச்சில் வார்த்த பிள்ளையார் பொம்மைகள் மாதிரி பிறக்கப் போகிறோம்.

வள்ளுவன், இளங்கோ, பாரதியின் ஜீன்களுக்கெல்லாம் அன்றுடன் சமாதி.
.
ஒரு பிரதேசத்தின் மரபீனி வளத்தை ஜீன் குளம் (POOL OF GENE) என்று குறிப்பிடுவார்கள். நம்முடைய ஜீன் குளம் இப்போது வேகமாக வற்றிக் கொண்டிருக்கிறது! இதைக் கண்டு கவலை கொண்ட சில நல் இதயங்கள், ஆங்காங்கே ஜீன் வங்கிகளை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றன. பண்டைய கோயில் கோபுரங்களின் உச்சியில் வெள்ளத்துக்கு எட்டாமல் பெரிய கலசங்கள் அமைத்து அதற்குள் மரக்கால் கணக்கில் தானியங்களைச் சேகரித்து சீல் வைத்திருந்ததாகச் சொல்வார்கள். இது அவர்கள் டெக்னாலஜியால் முடிந்த வரை ஜீன் வங்கி ஏற்படுத்தும் உத்தியாக இருக்கலாம். லேசாகத் திறந்து பார்க்க அனுமதித்தால் ராஜராஜன் காலத்தில் சோழ நாட்டுக் கேழ்வரகு எப்படி இருந்ததென்று தெரிந்து கொள்ள ஆசை.

பைபிளில் ஒரு கதை உண்டே.. பிரளயம் வந்து உலகமே அழிய இருந்தபோது நோவா எல்லாப் பிராணிகளிலும் ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிப் போய்க் காப்பாற்றினாராம். (இந்தக் கொசுவை மட்டும் கப்பலில் இடமில்லை என்று சொல்லி இறக்கிவிட்டிருக்கலாம்!) நோவாவின் கப்பல்தான் உலகின் முதல் மிதக்கும் ஜீன் வங்கி. ஆனால் இப்போது உலகம் அழிவதற்கு, கடவுள் பொறுமையிழக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாமே சொந்த முயற்சியில் எல்லா வகைக் கொலை ஆயுதங்களையும் படைத்து விட்டோம். பறவைக் காய்ச்சல், எய்ட்ஸ் போன்ற கொள்ளை நோய்களால் நாமும், நாம் சாப்பிடும் பசு பட்சிகளும் பெரிய அளவில் அழிய நேரலாம். குளோபல் வார்மிங் என்று கார்பன் புகையால் உலகம் சூடாகி இட்லி மாதிரி வெந்து கொண்டிருப்பதால், கடல்கள் பொங்கி மலைகள் உருகி அது வேறு ஆபத்து காத்திருக்கிறது. எனவே நம் ஜீன்களைச் சேகரிப்பது அவசரமான தேவையாகிவிட்டது.

நார்வே நாட்டில் பிரளய காலத்துக்கு விதைகளைச் சேமித்து வைக்க ஒரு பெட்டகம் கட்டியிருக்கிறார்கள். வட துருவ வட்டத்தில் பனி மலைக்குள் குடைந்து கான்க்ரீட் குகை அமைத்து, உள்ளே ஹை டெக் அலமாரிகளில் இரண்டரை லட்சம் விதை ரகங்களைச் சேகரித்திருக்கிறார்கள். ஃபாயில் காகிதத்தில் சுற்றி மைனஸ் பதினெட்டு டிகிரியில் உறைய வைத்திருப்பதால் விதைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு வீணாகப் போகாது. அப்படியே ஏதாவது அணு குண்டு வெடித்து நிரந்தரமாக மின்சாரம் போய்விட்டாலும் ஆர்க்டிக்கின் ஐஸ் மலைக்குள் புதைந்திருப்பதால் நீண்ட காலம் விதைகள் உயிருடன் இருக்கும். வெளியே காவலுக்கு வெள்ளைக் கரடிகள் இருக்கின்றன.

இந்த விதைப் பெட்டகத்துக்கு எல்லா நாடுகளும் தத்தம் உள்ளூர் விதை ரகங்களை அனுப்பி வைத்திருக்கின்றன. பார்லியில் மட்டுமே கிட்டத்தட்ட நாலாயிரம் வகைகள் சேர்ந்திருக்கிறது. உலகமெல்லாம் அழிந்து புதிய மனிதர்கள் பிறந்தவுடன் முதல் வேலையாக பீர் காய்ச்சிக் குடிக்க பார்லி தேவையாக இருக்கும். பெரிய அளவில் யுத்தம், வைரஸ் தாக்குதல் என்று வந்து உலகத்து விளை நிலங்கள் எல்லாம் தரிசாகப் போய்விட்டால் இந்த விதைகள் அப்போது கை கொடுக்கும்.

போரில் சாகாமல் மிச்சமிருக்கும் ஜனங்கள் மணப்பாறை மாடு கட்டி மரக் கலப்பையால் உழுது கமலையில் தண்ணீர் இறைத்து, மறுபடி மொகஞ்சதாரோ மனித நாகரீகத்தை ஆரம்பிக்கலாம்.
.
-ராமன் ராஜா
.
நன்றி: தினமணிக்கதிர் (09-03-2008)

ஞாயிறு, மார்ச் 23, 2008

அணுசக்தி - பகல்கனவு ஒரு கொடுங்கனவு by குட்டி ரேவதி

அணுசக்தியை மானுடசக்தியினும் மிகுதியாக மதிப்பிடும் நூற்றாண்டாகிவிட்டது, இருபத்தியோராம் நூற்றாண்டு. எப்பொழுதெல்லாம் ஒரு பெரிய தத்துவம், ஆற்றல் அல்லது தந்திரம் மானுடசக்தியினைச் சிறிய பொறியாக்கி, தன்னை ஒரு பெரிய பிழம்பாக, எரிமலைக்குழம்பாகக் காட்டும் விவாதத்தைக் கிளப்புகிறதோ மானுடம் சமூகஅறமற்ற ஒருவனைத் தலைமையாகக்கொண்டு இயங்குவதாகத்தான் காலம் பொருள்கொள்கிறது. அவ்வாறான ஓர் ஆற்றல் வாய்ந்த தற்காலத் தந்திரம்தான் இந்த அணுஆற்றல். அணுஆற்றலின் மகிமைகள் அனைத்தையும் அமெரிக்காவின் பேராண்மைச் செயல்பாடுகள் வழியாகவும், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற அச்சுறுத்தல்களை நாம் விரட்டியடிக்க வேண்டும் என மொழியும் 'கன்னிஉரைகள்' வழியாகவும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியது அன்று. அதிகப்பதற்றமும் சிதறுத்தன்மைகளையும் உடைய கதிரியக்கஊக்கிகளைத் தன்னகத்தே ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், மனச்சிதைவுக்குள்ளானவரைக் கனத்த சங்கிலியால் கட்டிப்போட்டுக் குழந்தையை அச்சுறுத்தும் வதை போன்ற ஓர் அடக்குமுறையும், அதைப் பிளக்கும்போது வெளிப்படும் கட்டறுத்த அதிகச் சிதறல்களுடைய ஓர் ஆற்றல்தான். எலியைப்பிடிக்க வீட்டை எரித்த கதையாக மின்சார உற்பத்திக்கு மின்நிலையம்.


அமெரிக்காவின் அருகில் இட்டுச்செல்லும் அரசியல் ஆதாயத்திற்கு 123 ஒப்பந்தமானது மட்டுமே கடைசிக்கதவு என முழங்கும் அரசியல்வாதிகள் ஏற்கெனவே அனுபவித்த ஆதாயங்கள் போதுமானவையாக இல்லை. ஏனெனில் கண்மூடித்தனமான ஆண்மைத்தத்துவம் தனக்கான நிரூபணங்களையோ, உண்மைகளையோ தேடிப்பெறவேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பு பூமியில் பரீட்சித்துப்பார்க்கப்பட்ட ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மதஅடிப்படைவாதம், தீவிரவாதம் எல்லாமே எந்த அடிப்படைக்கொள்கை மற்றும் உண்மையின்பாற்படாமல் காலத்திற்கேற்றவாறு தமது வல்லாண்மையை வடிவமைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடுகளுடன்தாம் எழும்பியுள்ளன. எந்த நெருக்கடியான நிலையிலும் தமது அழிவிலிருந்து தாம் விரும்பிய புதுஉருவுடன் மூர்க்கமாய் எழுந்துவர இயலும். மேலும் இத்தகைய தத்துவங்கள் காலப்போக்கில் நலிந்தவரையும், எளியவரையும், பெண்கள், குழந்தைகளையும் தம்மை நோக்கி இழுத்துவரும் வல்லமையையும் பெறுகின்றன. ஏனெனில் ஏற்கெனவே அதிகாரத்தை அனுபவித்தவர்கள், எந்த உடல்உழைப்பிலும் ஈடுபடாது இன்னும் இன்னும் அதிகமாய் அதிகாரத்தைச் சுகிக்க மேற்சொன்ன தத்துவங்கள் உதவுகின்றன. உண்மைகளைக் கொள்கைகளாக்க இயலாதவர்கள்தாம் இத்தத்துவங்களிடம் சரணடைந்துவிடுகின்றனர். ஆகவே, இன்று மற்ற நாடுகளுக்கு எதிராகத் தனது ஆண்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது, 'அணுசக்தி' எனும் செயல்திட்டம் வழியாக.


காலனியாதிக்கத்தைப்போன்றதே, அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்த உறவும். இயற்கை வளங்களைச் சுரண்ட, மக்களைக் கொத்தடிமைகளாக்க, (இன்று வரை நீள்கிறது அடிமைகளின் வரலாறு!) வெள்ளைமனிதர்களின் வரலாறுகள் பொறிக்கப்பட ... என விளங்க சில நூற்றாண்டுகளை நமது முன்னோர்கள் இரத்தத்தாலும் வியர்வையாலும் மொழியாக்க இயலாத வரலாறுகளுடன் வாழ்ந்து தீர்த்தனர். வல்லரசு என்பது தன் இறையாண்மையை, அடகுவைத்துப் பெறவேண்டியது என்பதையே பிரதமர் மன்மோகன்சிங்கின் வாசகங்கள் மொழிபெயர்க்கின்றன. ஆக, இன்னொரு அடிமைத்துவக் காலகட்டத்திற்குள் நாம் எல்லோரும் நுழைய நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பதற்கான தருணமாகவே இதை உணரமுடிகிறது.


அணுசக்தி ஒப்பந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அணுசக்தி குறித்துக் கொண்டிருக்கும் அறிவுச் சேகரத்தினும் அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் ஆய்ந்து சேமித்திருக்கும் ஞானம் அதிகம். டாக்டர் ஹோமி பாபா அன்றிலிருந்து சொல்லிவரும் அதைக் காதுகளுக்குப் பூச்சூட்டும் வாசகமான, "அணுசக்தித்துறை என்பது நமது மின்சாரத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளவே உருவாக்கப்பட்டது,'' என்பதை மீண்டும்மீண்டும் அவர் வழியிலேயே அரசியல், அதிகாரஆதாயம் தேடுபவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இன்று நடுநிலை வகுப்பில் படிக்கும் ஒரு பிள்ளைக்குக்கூடத் தெரியும், 'அணுஉலைகளால் வெறுமனே மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பது மட்டுமல்லாமல்; அணுகுண்டுகளும் தயாரிக்கலாம்' என்பது. வெறும் மின்சாரம் தயாரிக்க அணுஉலைகள் எதற்கு?


மேலும் ஏற்கெனவே 'செர்னோபில்'லில் உருவாக்கப்பட்ட அணுஉலைகளில் சிலவற்றைத் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மூடவேண்டியதாகியுள்ளது. பழுதாகி முற்றிலும் ஓய்ந்துபோன உலையும் உண்டு. அணுஉலை சார்ந்த அவர்களின் தொழில்நுட்பஅறிவே பூரணமாய் இல்லாத பட்சத்தில், ஹோமி பாபா காலத்திலிருந்து நமது மின்சாரத் தேவையை, அணுமின் உலைகளால் பூர்த்தி செய்யமுடியும் என்ற ஓர் உத்தரவாதத்தைத்கூட காப்பாற்ற முடியவில்லை, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும். இந்தியர்களின் அணுசக்தித்துறைத் தொழில்நுட்பஅறிவு அத்தகையதாக இருக்கிறது! காலனியாதிக்கத்தால் பாரம்பரிய அறிவுத்தொகைமையை இழந்ததுபோல இன்று அமெரிக்கஏகாதிபத்தியத்தால் நமது பகுத்தறிவுச்சிந்தனையையும் தர்க்கஅறிவையும் ஒட்டுமொத்தமாக இழக்கத் தயாராகிறோம். எப்போதுமே இந்திய அணுசக்தித் துறை மிகப்பெரிய சத்தியப்பிரமாணங்களை எடுத்துக்கொண்டு மிகக் குறைந்த அளவிலான செயல்பாட்டையே காட்டுகிறது.



அப்படியே அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதென்று கொண்டாலும் 1962ன் அணுசக்திச் சட்டத்தின்படி, சில குறிப்பிட்ட நோக்கங்களுடையதாக இருக்க வேண்டும். இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புணர்வை ஊக்கப்படுத்துவதுடன் நாட்டின் வளர்ச்சிக்காக அதன் இயற்கைவளங்களையும் திறன்களையும் பாதுகாக்க வேண்டும். அணுசக்தியைப் பயன்படுத்துவதன் மற்றும் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்கள்நலம் மற்றும் அமைதி பேணப்படவேண்டும். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் எல்லாவகையிலும் தனது அணுகுமுறைகளால் தோற்றுப்போய் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்தாம் இறங்கியுள்ளது. இந்தியச் சமூகத்தின் மெலிந்துபோயிருக்கும் சனநாயக உணர்வைக்கூடக் கொன்றுவிட்டு, அணுசக்தி ஒப்பந்த விமர்சகர்களை அச்சுறுத்தும் இயந்திரமாகிவிட்டது. பொதுமக்களின் நன்மை, இந்தியா எனும் வல்லரசு, நாட்டு முன்னேற்றம் எனப் பொதுமக்களின் பாதுகாப்புணர்வைக் காயடித்து அதன் ஆதாயங்களை அறுவடை செய்யக்கூடியவர்களாய் அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.


இந்தியா கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்ட போர்களாலும் பஞ்சங்களாலும் காலனியாதிக்கத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் தனது நிறைய வளங்களைப் பறிகொடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட நசிவுகளாலும் பொருளாதாரஏற்றத்தாழ்வினாலும் இன்னும் நிறைய துறைகளில் தன்னிறைவு அடையாத நாடாகவே உள்ளது. மத்தியஅரசு அறிவியல்ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் நிதியில் 11 _ 12 % அணுசக்தித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவஆராய்ச்சிக்கழகம் 1 . 1 % மட்டுமே அந்நிதியில் எடுத்துக்கொள்கிறது. மருத்துவம் மற்றும் சுகாதாரநிலையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கிராமங்களுக்கு எந்தவிதமான மருத்துவநலனும் போய்ச்சேரவில்லை. குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் மருத்துவ நலனை நுகர்வதற்கு ஏற்ற விழிப்புணர்வையும், அவர்கள் அதைத் தேடியடையும் வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்க எந்தச் செயல்திட்டமும் இல்லை. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அரசின் அணுகுமுறையில் குடிகொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வினாலேயே ஏற்படுகின்றன என்பது நம்நாட்டு மருத்துவத்துறைக்குச் சாலப்பொருந்தும். மேலும் நில, நீர் வள ஆதாரங்களைப் பேணும், முறையாகப் பயன்படுத்தும் எந்த அடிப்படை ஆர்வமும் இல்லாத ஓர் அரசு, மனிதவள ஆதாரமான துறைகளில் தன்னிறைவு அடையாத ஓர் அரசு அணுசக்தித்துறைக்கு இவ்வளவு செலவிடுவதும், அதன் வாதங்களுக்கு ஆதரவாய் இவ்வளவு மெனக்கெடுவதும் அரசின் இறையாண்மையின் மீது சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது.



இவை எல்லாவற்றினும் இந்தியா அமெரிக்காவிடம் அடிமைஉறவு கொள்ளும் இடம் வெளிப்படையானது. டிசம்பரின் (2006) அமெரிக்கா நாட்டின் மக்களவையில் இயற்றப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கான சட்டத்தின்படி இந்தியா அமெரிக்காவிடமிருந்து அணுஉலைகளையும் அணுஎரிபொருளையும் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் ஆனால் மொத்தமாக வாங்கிச் சேமித்துவைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், கனிமவளம், எண்ணெய்வளம் மிக்க நாடுகளைப்போன்று அணுசக்திவளம் மிக்கதாக இந்தியா மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு முறை எரிபொருள் வாங்கியபின்னும் அது முழுமையும் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதா எனக் கங்காணி வேலை செய்ய அமெரிக்க அணுசக்திஅதிகாரிகளை அணுஉலைகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். அடுத்து, எரிபொருளில் இருந்து உண்டாகும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுத்திகரிப்பு செய்யக்கூடாது; மறுசுத்திகரிப்பினால் கிடைக்கும் புளூட்டோனியத்தை இந்தியா தனது ஃபாஸ்ட் பிரீடர் அணுஉலைகளில் உபயோகிக்கக்கூடாது. ஆக, இந்திய அறிவியல்விஞ்ஞானிகள் ஒருபொழுதும் அணுசக்தித்துறை சார்ந்த தமது அறிவையோ, ஆய்வையோ விருத்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு இன்னும் தொடர்கிறது அமெரிக்காவின் அடிமைச்சாசனம். இன்னொரு முறை, இந்திய அரசு அணுஆயுதங்களைப் பரிசோதனை செய்தாலோ, அணுகுண்டு வெடிப்புப்பரிசோதனையை நிகழ்த்தினாலோ, அமெரிக்கஅரசு எந்தவிதப் பேச்சுவார்த்தையுமின்றி தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிடும்.



1986 ஏப்ரல் 26ம்தேதி நிகழ்ந்த செர்னோபில் விபத்து, பணியாளர்கள் அணுஉலையின் பாதுகாப்பு அமைப்புகளின் மீதான பரிசோதனையை நிகழ்த்தியபோதுதான் ஏற்பட்டது. கணினி வழி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப்படும் பாதுகாப்புஅமைப்புகள் அதன் கட்டுப்பாட்டை இழந்து குளிரூட்டியைப்பெறாமல் அபரிமிதமான வெப்பத்தை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட விபத்தின்போது வெளியான கதிரியக்கத்தின் விளைவுகளுக்கும், நிவாரணங்களுக்கும் அந்நாடு அதிகச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. ஐரோப்பா முழுக்கவும் குழந்தைப்பருவ நோய்களுக்குக் கதிரியக்கக் கலப்படமிக்க பால்தான் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. மனிதசெல்கள் தமது இயல்பான கட்டமைப்பும் செயல்பாடும் இழந்து புற்றுநோய் செல்களாகின்றன. வெளியில் பரவி சுவாசிக்கப்பட்ட கதிரியக்கஅளவினும் உணவுப்பொருள் வழியாக உட்கொள்ளப்படும் கதிரியக்க அளவு அதிகமாக உள்ளது. இத்தகைய தருணங்களில் அறிவியலும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரணான நியாயங்களுடன்தாம் கைகோர்த்துக்கொள்கின்றன. செர்னோபில் விபத்து, 3 இலட்சம் மக்களை இடம்பெயரச்செய்தது. பிறப்புக் குறைபாடுகள், புற்றுநோய்அதிகரிப்பு என அன்றாடம் மக்கள், அறிவியலின் தீயவிளைவிலிருந்து என்றென்றும் தப்பிக்க இயலாதவாறு பாதிக்கப்பட்டிருக்கையில் அதையெல்லாம் பொருட்படுத்தாது அரசியல்வாதிகள் தமது சுயஆதாயங்களுக்காக, அதிகாரஅறுவடைகளுக்காக வேறுதுறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்; தமது அரசியல்கொள்கைகளை முழங்கிய வண்ணமே இருக்கின்றனர். செர்னோபில் விபத்துக்கெதிரான படைப்பிலக்கிய உலகமே அங்கு உருவாகியிருக்கிறது. மனிதன் நிகழ்த்திய கொடுங்கனவை வேறெப்படி வெல்வது?



மனிதப் பரிணாமவளர்ச்சியின் பாதையைப் பின்னோக்கிப் பார்க்கையில், மனிதன் தனது பதற்றங்களையெல்லாம் தணித்து சூழலோடு இயைந்த, ஒத்திசைவான ஒரு வாழ்வியலைக் கண்டடையும்போதெல்லாம் தனது பரிணாம ஏணியின் அடுத்த படியில் ஏறியிருக்கிறான். அபரிமிதமான பகுத்தறிவையும் உழைப்பையும் கோடானுகோடி மனிதர்கள் அதற்காகக் கொடுத்திருக்கின்றனர். பௌத்தம், இஸ்லாம், கிறித்துவம் என எல்லாத் தத்துவங்களும் கூட மனிதனின் மனப்பதற்றத்தைக் குறைக்கும் எத்தனத்தையே வாசகங்களாக்குகின்றன. யுரேனியம் எனும் தாதுப்பொருள் பதற்றம் மிக்கது. அதன் கதிரியக்கத்தன்மை நிலைகொள்ளாத் தன்மையை அதற்குக் கொடுக்கிறது. புளூட்டோனியமோ அதனினும் பதற்றம் மிக்கது; கதிரியக்க வெளிப்பாடு உடையது. இத்தகைய தாதுப்பொருட்களோடு ஊடாட மனிதச்சமூகம் தன்னை அனுமதிக்கும் போதும், அத்தாதுப்பொருட்கள் அடிப்படையிலான ஒரு பயன்பாடு தன்னை ஆக்கிரமிக்க அனுமதிக்கும்போதும் மரபணுப்பாரம்பரியம் சிதைவுற்று மனிதன் பரிணாமவளர்ச்சியின் எதிர்த்திசையில் நடக்கத்தொடங்குகிறான். கொடுங்கனவை, பகல்கனவாகக் கண்டுகொண்டிருக்கிறான்.

-குட்டி ரேவதி
நன்றி: குமுதம் தீராநதி

சனி, மார்ச் 22, 2008

அண்ணன் அறிவுமதிக்கு ஒரு திறந்த மடல் by அதிஅசுரன்

சென்னையில் ஆழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு (06.01.2008) விழாவில் நடந்த சம்பவங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் குஷ்பு அவர்கள் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதை சாக்காக வைத்து தன் மனதிலுள்ள நஞ்சைக் கக்கியுள்ள அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.
-
திரைத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பல இளைஞர்களை நல்ல இயக்குநர்களாக தமிழ் திரையுலகிற்குத் தந்துள்ளீர்கள். எண்ணற்ற திரைத்துறைக் கவிஞர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உங்களை அவர்களின் ஆண்தாயாக எண்ணிப் பெருமைப்படுவதையும் அறிந்திருக்கிறோம்.
-
நான் நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்ப்பவன். நீங்கள் பணியாற்றிய, பாடல்கள் எழுதிய படங்களையும் நிறைய பார்த்தவன். ஆனால் நீங்கள் ஒரு நல்ல கவிஞர், திரைப்பட இயக்குனர் என்ற அடையாளங்களிலல்லாமல் ஒரு பெரியார் தொண்டர் என்ற முறையில் தான் எம் போன்ற தோழர்களுக்கு முக்கியமான நபராக மாறினீர்கள்.
.
நீங்கள் எழுதிய நட்புக்காலத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி எமது நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறோம். சாதி மறுப்புத்திருமணங்களை வலியுறுத்தும் உங்களது பல கவிதைகளை - பெண்விடுதலை நோக்கிய உங்கள் கவிதைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு காதலர்தினங்களிலும், மகளிர் தினங்களிலும் தென்மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.
.
ஒட்டன்சத்திரத்தில் நாங்கள் நடத்திய காதலர் தின விழாவிலும் உங்களைப் பேசவைத்தோம்.
.
அந்த உரிமையில் எழுதுகிறேன்.
.
என்னதான் பெரியாரைப் பேசினாலும், பெரியார் தொண்டர்களோடு பழகினாலும் உங்களின் அடிமனத்திலுள்ள நச்சுக்கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறீர்கள். திராவிடர் கழக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களையும், அவ்வமைப்பின் தோழர்களையும் நெருங்கிய நண்பர்களாக, உறவுகள் எனவும் அழைத்துக்கொண்டாலும் முருகனடிப்பொடி போல எங்கு போனாலும் முருகக்கடவுள் பிரச்சாரத்தை விட மறுக்கிறீர்கள்.
அய்யப்பசாமிக்கு மாலை போட்டுவிட்டு டாஸ்மாக்கில் தனிக்கிளாசில் தண்ணியடிக்கும் அய்யப்ப பக்தனுக்கும், கறுப்புச் சட்டைபோட்டுக்கொண்டு முருக வழிபாட்டை பிரச்சாரம் செய்யும் உங்களுக்கும் வேறு பாடு என்ன? உங்கள் தனிப்பட்ட , சொந்த விசயமாக வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை. தலைவர் பிரபாகரனைப் பாடும் போதுகூட அந்த முருகனுக்கே நிகரானவன் எனப் பாடல் எழுதுவது தேவையா? பக்தி விசயத்தில் என்னத்தையோ சொல்லிவிட்டுப்போங்கள். ஆனால் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவை தொடர்பாகக் கருத்துச்சொல்லும் பொழுது கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள். ஏனென்றால் அந்த இரண்டிலும் சரியாக இருப்பீர்கள் என நம்பித்தான் எம் போன்ற பல இளைஞர்கள் உங்களை எங்கள் இயக்க நிகழ்வுகளுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.
.
தி.க, பெரியார் தி.க என நாங்கள் பிளவுபட்டிருந்தாலும் இரு அமைப்புத் தோழர்களுமே உங்களை மதிப்பதற்குக் காரணம் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை பேசுபவர் என்பதால்தான்.
.
ஆனால் அண்மையில் ஆழி பதிப்பக விழாவில் போராளி குஷ்பு அவர்களை நோக்கி நீங்கள் பேசிய பேச்சு எங்கள் உள்ளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உங்களைக் கோபப்படுத்தும் அளவுக்கு அவர் பேசியது...
.
''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.
அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''
.
என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...
.
''தோழர் திருமா.. வணக்கம்''
.
இதிலென்ன தவறு இருக்கிறது
.
இப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் மீது வழக்கு போட்டிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்படி மலிவான விசயங்களுக்கெல்லாம் வழக்குப் போட்டவன்தானே தமிழன்.
.
வல்லமைதாராயோ படவிழாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்பதற்காக - அது மிகப்பெரும் தவறு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக வழக்குப் போட்டவர்கள்தானே உங்கள் உறவுகள், இரத்தங்கள்? உங்கள் தம்பியின் மனைவி என்ற உரிமையில்... என்று பித்தலாட்ட வசனம் வேறு சொல்கிறீர்கள். அந்த உரிமையில் தம்பி வீட்டிற்கே சென்று சண்டைபோட்டிருக்கலாம். அந்த தவறை முறையாக புரியவைத்து குஷ்பு மூலம் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருக்கலாம். ஒரு பெரியார் தொண்டன் அவ்வாறுதான் செய்திருப்பான். ஆனால் திட்டமிட்டு ஒரு கலகத்தை உருவாக்கவேண்டும், எப்படியாவது குஷ்பு அவர்களைப் பணியவைக்கவேண்டும், தம்பி தங்கர்பச்சான் மனம் குளிரவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வந்துள்ளீர்கள். அதனால்தான் குஷ்புவின் பேச்சை திருமாவளவன் அவர்களே கண்டுகொள்ளாதபோது நீங்கள் அவசர அவசரமாக மேடையேறி, கிடைத்தவாய்ப்பை நழுவவிடக்கூடாது என்ற வேகத்தில் மைக்கைப் பிடுங்கி,
.
இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன் என முழங்கியுள்ளீர்கள்.
.
உங்கள் தம்பி சீமானின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஒரு காட்சிவரும்.
மக்காச்சோளக்காட்டில் வடிவேலு அவர்களுடன் வரும் அவரது நண்பர் சோளக்கதிர்களைத் திருடுவார். தோட்டஉரிமையாளர் பார்த்துவிடுவார். திருடியவன் காதுசவ்வு கிழியும்வகையில் ஒரு அடி விழும். அடி வாங்கியன் தோட்ட உரிமையாளரைப் பார்த்து, யோவ் என்னய அடிச்சுட்டீல்ல… முடிஞ்சா எங்க அண்ணன் சிங்கத்தைத் தொட்டுப்பாருய்யா தெரியும் என வடிவேலுவை நோக்கி கையை நீட்டுவார்.
.
அப்படித்தான் அண்ணன் திருமா அவர்களை வைத்து நீங்கள் விளையாடி யிருக்கிறீர்கள். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என சொன்னீர்கள்.
.
திருச்சி திண்ணியத்தில் மலம் தின்ன வைக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் அவர்கள் செய்ததென்ன? ஒரு பேரணி நடந்தது. அதன் பிறகு மலம் தின்ன வைத்தவன் வீட்டிலேயே விடுதலைச்சிறுத்தைகளுக்கு விருந்தும் நடந்தது. மறுக்கமுடியுமா? அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தோழர் இரத்தினம் பல செய்திகளைச் சொல்லியுள்ளார். உங்களுக்கும் தெரியும். வெளிப்படையாக அதை நீங்கள் கண்டிக்கத்தயாரா?
.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் சிறுநீர்குடிக்க வைக்கப்பட்ட கொடுமைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்வினை என்ன? சொல்ல முடியுமா?
.
சரி, அதெல்லாம் போகட்டும். கைநாட்டு மரபிலிருந்து கையெழுத்து மரபிற்கு எம்மை வளர்த்தது திராவிடஇயக்கம் என அடிக்கடி சொல்லிக்கொள்கிறீர்கள்.
.
அந்த இயக்கத்தின் தலைவர் பெரியார். அந்தப் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என திருமா அவர்கள் ஆசிரியராக இருக்கும் தாய்மண் இதழில் தற்போது உங்களின் பாசமிகு தம்பியாக மாறியிருக்கும் இரவிக்குமார் அவர்கள் தொடர்ந்து எழுதினாரே! அப்போது உங்கள் வெளிப்படையான எதிர்வினை என்ன?
.
மதுரையில் பெரியார் தாழ்த்தப்பட்டமக்களின் விரோதியா? என்ற தலைப்பில் தோழர் இரஜினி அவர்கள் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் எனக்கு முதலில் பெரியாரைத் தான் தெரியும். அவர் மூலம் தான் அம்பேத்கரைத் தெரியும் என்றும் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமே என முழங்குபவர் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான். உண்மையாகவே இந்து மத வர்ணாசிரமக் கொடுமையால், சாதிக்கொடுமைகளால் மிக அதிகமாகத் துன்பங்களை அனுபவிக்கும் அருந்ததியர் நிரம்பிய அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. சுமூகத்தில் எவனும் செய்யத்தயங்கும், யோசிக்கவே தயங்கும் மலமள்ளும் பணியை, சாக்கடை சுத்தப்படுத்தும் பணிகளை இன்றளவும் விடமுடியாமல் செய்து வரும் தோழர்களின் அமைப்பு.
.
இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை, தெருவில் நடக்க இயலாமை, செருப்புபோட்டு நடக்க இயலாமை, கல்வி வேலைவாய்ப்புகளில் பங்குபெற இயலாமை போன்ற பல கொடுமைகளைச் சகித்துக்கொண்டு மீள வழியில்லாமல் உழைப்பவர்களின் அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. அதன் தலைவர் அதியமான். அவரை அந்தக் கருத்தரங்க மேடையிலேயே கொலைவெறியில் தாக்கவந்தார்கள் சிறுத்தைகள். சோடா பாட்டில்களால் அவரைக் குத்தவும் முயன்றனர். அங்கிருந்த ஆதித்தமிழர் பேரவை மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மேடையைச் சுற்றி நின்று காவல்துறை துறை உதவியுடன் தோழர் அதியமான் காப்பாற்றப்பட்டார். இறுதிவரை அவரைப் பேச விடவில்லை. மிகுந்த கூச்சல்குழப்பங்களுடன் மிரட்டல்களுடன் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மட்டும் உரையாற்றினார்.
.
பேசிவிட்டு தோழர்கள் புடைசூழ காவல்துறை அதைச்சுற்றி வளையம் அமைத்து அதன் பின்தான் தோழர் அதியமான் அவர்களும், உங்களை உயிராக மதிக்கும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் மதுரையைவிட்டு வெளியேற முடிந்தது. அனைத்தும் வீடியோவில் பதிவாக உள்ளது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் வீடியோவை அனுப்பினோம்.
.
இச்சம்பவங்களுக்கு நீங்கள் செய்த வெளிப்படையான எதிர்வினை என்ன?
.
இச்சம்பவங்களுக்கு தோழர் திருமா காரணமில்லை என வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், முழுக்காரணமான சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்களையாவது கண்டித்தீர்களா? எங்காவது அவர் பேசும் போது போய் மைக்கை புடுங்கியிருக்கியிருக்கிறீர்களா?
.
இப்போதும் தமிழ்நாட்டில் கரடிச்சித்தூரில், கோவையில், திருச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் விடுதலைச்சிறுத்தைகளால் வெட்டப்பட்டுள்ளனர். சிறுத்தைகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். ஆதித் தமிழர் பேரவையின் கூட்டத்திற்கான சுவரொட்டியை விடுதலைச்சிறுத்தைகள் வசிக்கும் இடங்களில் ஒட்டியது மாபெரும் குற்றமாம். அதற்காக அருந்ததியர் சமுதாயத்தினர் வெட்டப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நீங்கள் தோழர் திருமா அவர்களை விமர்சனம் செய்ததுண்டா? எங்காவது ஒரு மேடையில் அவர் பேசும்போது மைக்கைப் பிடுங்கும் துணிச்சல் உண்டா?
.
(இப்போது திருமா அவர்களும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் ஒரே மேடையில் தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களில் ஒன்றாக முழங்குகிறார்கள். வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான்.)
.
உங்கள் தலைவர் திருமா அவர்கள் எந்தக்கூட்டத்திற்குப் போனாலும் தாமதமாகவும் முக்கியமானவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும் சுமார் நூறு தோழர்களுடன் நுழைந்து அந்த அரங்கங்களில் அதுவரை இருந்த இயல்பான சூழலை மாற்றி, யாரையும் பேசவிடாமல், யாரையும் கேட்கவும் விடாமல் திருமா அசைந்தாலும், மீசையை முறுக்கினாலும், தாடியைத் தடவினாலும் வாழ்க வாழ்க என முழக்கமிட்டு நிகழ்ச்சிகளைக் கெடுத்து வருகிறாரே உரிமையுடன் அதைத் திருத்தலாமே? எழவு வீட்டிற்குப் போனாலும் வாழ்க வாழ்க என முழங்கியதை வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பலநூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கு அவர் செல்லும் போது நடப்பது இதுதான். ஆதாரப்பூர்வமாக சொல்லஇயலும். உங்களை விமர்சனம் செய்யத் தொடங்கி அது தோழர் திருமா அவர்களை விமர்சிக்கும் மடலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பட்டியலை இங்கு கூற விருப்பமில்லை. எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் கூட்டம் தொடங்க குறித்த நேரத்தில் போகவேண்டும் என்ற நல்லபழக்கத்தை அவர் கடைபிடித்திருந்தால் ஆழிபதிப்பக விழாவில் இந்த சண்டையே வந்திருக்காது.
.
குஷ்பு அவர்களை வம்பிழுக்க உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்திருக்காது.
மேலும் நக்கீரன் இதழில்,ஆடை அவிழ்ப்பவர்கள் எல்லாம் கற்பு பற்றி பேசும் கேடான நிலை வந்துவிட்டது எனவும் மலேசியாவில் தமிழன் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு போய் குத்தாட்டம் போட்டு வந்துள்ளீர்கள் எனவும் குஷ்பு மீது குற்றஞ்சாட்டியுள்ளீர்கள்.
.
பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களிடம் ஆடை அவிழ்த்துக் காட்டியே ஆக வேண்டும் என்னும் வெறியுடன் குஷ்பு வந்ததைப் போலல்லவா கூறுகிறீர்கள்? திரைத்துறையில் இருக்கும் நீங்கள் அதைச் சொல்லலாமா? இது நேர்மையற்ற குற்றச்சாட்டு என உங்களுக்கே தெரியாதா? உங்கள் தம்பி சீமானின் தம்பி பட விழாவில் சிங்கள நடிகை பூஜா ஒரு திருக்குறளைச் சொன்னாரே, பூஜா அவிழ்க்காத ஆடையா? நீயெல்லாம் திருக்குறளைச் சொல்லலாமா என அந்த மேடையில் மைக்கைப் பிடுங்க வேண்டியதுதானே?
.
மேலும் திரைப்படங்களில் நடிகைகளின் ஆடைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்ற சாக்கில் அவிழ்ப்பவர்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தானே? குஷ்புவோ வேறு எந்த நடிகையுமோ இதற்கு எப்படிப் பொறுப்பாவர்கள்? சரி குஷ்பு ஆடை அவிழ்க்க சம்மதிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட பாடல் காட்சிகள் ஆடையுடன்தான் வந்திருக்குமா? அவர் திரைத்துறையில் முன்னேற அவரது ஆடையைத் தான் அவிழ்த்தார்.
.
உங்களைப் போன்ற பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் அடுத்தவர் ஆடையையல்லவா அவிழ்க்கிறீர்கள்.
.
நீங்கள் பணியாற்றிய சிறைச்சாலையில் நடிகை தபு வின் உடலுக்கு முத்தத்தாலே சேலை நெய்யவில்லையா? நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்ள வில்லையா? ஆற்றுநீரில் மோகன்லால் முழு ஆடையுடனும், தபு மட்டும் முக்கால் நிர்வாணத்துடனும் பாடும் காட்சி உங்கள் ஒத்துழைப்புடன்தானே படமாக்கப்பட்டது. அதற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தானே? ஊட்டி என்றால் குளிர்தான் உடனே மூளைக்கு எட்டும்.
.
உங்கள் பாடல் மூலம் தானே ஊட்டி சூடேற்றும் என்பதை உணர்ந்து கொண்டோம். இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். இப்படிப்பட்ட நீங்களெல்லாம் கற்பு பற்றி பேசலாம், குஷ்பு பேசக்கூடாதா?
உங்களைப் போன்ற பாடலாசிரியர்களை விட, இயக்குநர்களை விட பலமடங்கு தகுதி போராளி குஷ்புவுக்கே உண்டு.
.
மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படும் பொழுது குத்தாட்டம் ஆடினீர்கள் எனச் சொல்லியுள்ளீர்கள். குஷ்பு மட்டும் போய் தனியாக ஆடினாரா? உங்கள் இளைய திலகம் பிரபும் தான் ஆடினார் என செய்திகள் உள்ளனவே? வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு விழாவில் அவரையும் கண்டித்திருக்கலாமே. ஏன் கண்டிக்கவில்லை?
.
மலேசியாவில் தமிழர் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? இல்லையா என்பது விவாதத்திற்குரியது.
.
ஆனால் ஈழத்தில் - தமிழன் வாழவே முடியாத நிலை என்பதை நீங்களோ மனித உணர்வுள்ள எவனுமோ மறுக்க மாட்டான். அந்த ஈழப்பகுதிக்குச் சென்று வாழ்த்துக்கள் திரைப்படத்தின் பாடல் காட்சிகளை எடுத்துத்திரும்பினாரே சீமான், அவரைக் கேட்கவேண்டியது தானே. திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய உண்ணாநோன்பில் இருவரும் கலந்து கொண்டு பேசினீர்களே அப்போது சீமானிடம் இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று காதல் காட்சிகளை படம்பிடிக்கிறாயே? நீயெல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசலாமா? எனக் கேட்டு மைக்கை பிடுங்கியிருக்கவேண்டியது தானே?
.
அதே விழாவில், குஷ்புவைப் பார்த்து, தங்கர்பச்சானை இழிவு படுத்தினாய். அவர் என் இனம். என் இரத்தம் என இரத்தபாசத்தைக் காட்டியுள்ளீர்கள். ஜெயா டி.வி நேர்காணலில் தங்கர் பச்சானைப் பற்றிக் கேட்டபோது, யார் அவன்? என குஷ்பு பதில் தந்தாராம். அதற்காக உங்கள் இரத்தம் கொதித்திருக்கிறது. நக்கீரன் இதழின் இணையப் பதிப்பில் மாறவர்மன் என்பவர் அது இரத்தபாசம் மட்டுமல்ல சாதிப்பாசமும்கூட. இருவரும் ஒரு சாதி என எழுதியுள்ளார்.
.
அப்படியெல்லாம் உங்களை நாங்கள் நினைக்கவில்லை. அதே சமயம் உங்கள் தங்கர்பச்சான் ஒருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெரியாரை விட நான் அதிகம் சிந்திப்பவன் என திமிராகப் பேட்டி கொடுத்தானே மறந்துவிட்டீர்களா? பேட்டி கொடுத்து அடுத்த நாளே திருச்சியில் தமிழ்பாதுகாப்பு மாநாட்டில் நீங்களும் அவரும் இணைந்து பேசினீர்களே நினைவிருக்கிறதா? ஒரு பெரியார் தொண்டராக அந்த மேடையில் தம்பி என்ற உரிமையில் ஒரே அடியில் தங்கரின் காது சவ்வைக் கழித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
.
தங்கர் பச்சானை நோக்கி, யார் அவன்? எனக்கேட்ட ஒரே காரணத்திற்காகத் தான் குஷ்பு அவர்களை நாங்கள் போராளி குஷ்பு என்கிறோம்.
.
பெரியாரை எவன் வேண்டுமானாலும் கண்டபடி பேசலாம், பெரியார் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் வாய்க்குவந்தபடி விமர்சனம் செய்யலாம், யாருக்காகப் பெரியார் இறுதிவரை உழைத்தாரோ அந்த இனத்தையே பெரியாருக்கு எதிராகத் திசைதிருப்பி பார்ப்பான் காரியத்தை நிறைவேற்றலாம். பெரியார் கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களை மேடையிலேயே யார் வேண்டுமானாலும் தாக்கலாம், மோதிப்பார்ப்போம் என சவால் விடலாம், நேரடியாக மோத முடியாத பார்ப்பானெல்லாம் நம் தோழர்களைப் பயன்படுத்தி மோதிப்பார்க்கலாம்.
.
அப்போதெல்லாம் நீங்கள் வாயையும் கையையும் அடக்கிக்கொண்டு இருப்பீர்கள். பெரியார் கருத்தை ஆதரித்து குஷ்பு பேசினால் மட்டும் மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி வசனம் பேசுவீர்கள் என்றால் நீங்கள் பெரியாரைப் பேசுவதில், பெண்ணுரிமை பேசுவதில், சாதி ஒழிப்புப் பேசுவதில் ஏதோ உள்நோக்கம் - தவறான - இந்த இனத்திற்குக் கேடான உள்நோக்கம் இருப்பதாகத்தான் எமக்குத் தோன்றுகிறது.
.
பெண்ணுரிமை குறித்து உங்களைப் பேச அழைத்த தோழர்களெல்லாம், இயக்கம் கடந்த மகளிரெல்லாம் உங்களை நோக்கி இதைவிடக் கடுமையான விமர்சனங்களை வைக்கத் தயாராக உள்ளனர். இனிமேல் அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு அது யார் நடத்தும் விழாவாக இருந்தாலும் எங்களை அழைக்காதீர்கள் என எம் வீட்டுப் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். பதில் சொல்வதோ, இவனெல்லாம் யார் என்னைக் கேட்க என எம் கேள்விகளைப் புறந்தள்ளுவதோ உங்கள் விருப்பம்.
.
இப்படிக்கு,
.
வெளிப்படையாக பதிலை எதிர்நோக்கும் தோழர்களில் ஒருவன் அதி அசுரன்

சங்கரமடத்தில் ஞாநி - ஒரு கற்பனை by நந்தன்

(ஓயாமல் குமுதம் பத்திரிக்கையை விமர்சித்துவிட்டு இப்போது அதில் இணைந்திருக்கும் ஞாநி, பின்னாளில் காஞ்சி சங்கராச்சாரியாருடன் இணைந்தால் அதை எப்படி நியாயப்படுத்தி எழுதுவார் என்பதைக் கற்பனை செய்ததின் விளைவே இக்கட்டுரை.)

‘ஓ போடு’

காஞ்சிப்பாதையில் நான்: ஞாநி

முற்போக்கு எழுத்துப் பணியில் எனக்கு 33 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. அதை விட கூடுதலான வருட அனுபவம் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஆன்மீகப்பணியில் இருக்கிறது. 80களில் தண்டத்தைக் கீழே போட்டு விட்டு அவர் ஓடிப்போன காலத்தை கழிக்க வேண்டும் என்று சில அதிமேதாவிகள் கூறலாம். எப்போதெல்லாம் அவர் ஆன்மிகப் பணி இல்லாமல், வேறு பணிகளில் ஈடுபட்டார் என்பதைக் கணக்கிடுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை என்பதால், அதை இப்போது தவிர்த்துவிட்டு நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

இத்தனை ஆண்டுகள் அவர் பொதுவாழ்க்கையில் இருந்திருந்தாலும், ஒரு முறை கூட அவருக்காக நான் வேலைபார்த்ததில்லை. முன்பொருமுறை பேட்டிக்காக அவரைச் சந்தித்திருக்கிறேன். அதன்பின் அவரை விமர்சித்து சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

அவருக்கு எதிராக யாராவது மொட்டைக் கடிதாசி எழுதினால் கூட, அவரது பக்தர்கள் என்னமாதிரி நடந்துகொள்வார்கள் என்பதை அவரையும் அவரது பக்தர்களையும் அறிந்தவர்கள் அறிவார்கள். அறியாதவர்கள் சங்கரராமன் குடும்பத்தாரை அணுகி அறிந்து கொள்ளவும். ஆனால் அப்படிப்பட்டவர் இதுவரை நான் பக்கம் பக்கமாக எழுதியதை எல்லாம் மன்னித்து வந்தாரென்றால் அது அவரது தூய கருணை நெறியையே காட்டுகின்றது.

இன்று நான் சங்கரமடத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். இத்தனை நாள் அவரை விமர்சித்துவிட்டு, இப்போது அவரிடம் வேலைக்குச் சேரலாமா என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் நான் என்ன பண்ணுவது? நான் எங்குதான் வேலை பார்க்கவில்லை? யாரைத்தான் திட்டவில்லை? முன்பு முரசொலியில் இருந்தேன். சம்பளம் கொடுத்தார்கள், அவர்களுக்கு ஆதரவாக எழுதினேன். பின்னர் அங்கு பிரச்சினை ஏற்பட்டபோது அவர்களிடமிருந்து விலகி, இதுநாள்வரை அவர்களைத் திட்டி எழுதி வருகிறேன்.

ஆனந்தவிகடனில் எழுதினேன். அங்கிருந்து என்னை துரத்தியபோது, அவர்களை விமர்சித்தேன். அதற்கு முன்பு குமுதத்தையும் திட்டி வந்தேன் என்பதும், பின்பு அவர்களிடமே தஞ்சம் புகுந்தேன் என்பதும் என்னைத் தொடர்ச்சியாக வாசிக்கிறவர்களுக்குத் தெரியும். அதேபோலத்தான் முன்பு சங்கராச்சாரியாருக்கு எதிராக எழுதினேன், இப்போது அவருக்காக வேலை பார்க்கிறேன். எனவே ‘ஏதோ இப்போதுதான் நான் இப்படி இருக்கிறேன்’ என்று யாரும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படத் தேவையில்லை.

என்னை ஒரு முற்போக்கு எழுத்தாளன், நடுநிலைப் பத்திரிகையாளன் என்று அனைவரும் அங்கீகரித்திருந்தால் நான் ஏன் இத்தனை இடங்களுக்குத் தாவி இருக்கப்போகிறேன்? முரசொலியில் வேலை செய்தபோது, ‘பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் அந்தக் குணம் கிஞ்சித்தும் இல்லாமல் திராவிட இயக்கங்களோடு இணைந்து ஞாநி வேலை செய்கிறார்’ என்று கருணாநிதி எனக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தால் நான் ஏன் அவரை திட்டி எழுதப் போகிறேன்?

‘அய்யா’ தொலைக்காட்சித் தொடரை இயக்கிய என்னை, ‘பெரியார்’ படத்தையும் இயக்கித் தருமாறு கேட்டிருந்தால் அந்தப் படத்தை நான் ஏன் விமர்சித்திருக்கப் போகிறேன்? யார் யாருக்கோ இலட்ச ரூபாய் சம்பளம் தரும் சன் டிவி குழுமத்தார் என்னையும் கூப்பிட்டு ஏதாவது கொடுத்திருந்தால், அவர்களை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கப் போகிறேன்? ஜெயா டிவியில் போய், ஏன் புத்தகம் வாசிக்கப் போகிறேன்?

வாய் ஓயாமல் சங்கராச்சாரியாரை நான் திட்டிக் கொண்டிருந்தபோது, எத்தனை திராவிட அமைப்புகள் இருக்கின்றன, ஏதாவது ஒன்று ‘திராவிடப் பெருசு’ என்ற பட்டத்தை எனக்கு அளித்திருந்தால், நான் ஏன் இப்போது சங்கராச்சாரியாரிடமே வேலைக்கு சேர்ந்திருக்கப் போகிறேன்? இப்போது புரிகிறதா இவையெல்லாம் என் குற்றமில்லையென்று.

மேலும் எழுத்தாளர்களுக்கு பத்திரிக்கை என்பது வாடகை வீடு போலத்தானே! வேறொரு வீடு வசதியாக இருந்தால் அந்த வீட்டிற்குப் போவதில் என்ன தவறு? அதோடு, ‘மாற்றம் என்ற ஒன்றே மாறாதது’ என்று காரல் மார்க்ஸ் சொன்னதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது புரியாமல் பேசுகிறவர்களிடம் நான் என்ன பதில் சொல்வது?

சங்கரமடத்தில் இருந்து வரும் ‘தெய்வத்தின் கூப்பாடு’ பத்திரிக்கையில்தான் எழுதப்போகிறேன். அது என்ன ஆன்மீகத் தொடரா? எங்கு எழுதினாலும் எனது முற்போக்கு முகமூடி கிழியாமல் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியாதா?இப்போது எழுதப்போவதும் ஒரு முற்போக்கான தொடர்தான். தலித் மக்கள் எப்படி சுத்தபத்தமாக, ஆச்சாரமாக வாழ வேண்டும் என்பது குறித்து எழுதப்போகிறேன். சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்வது நல்ல விஷயம்தானே! தலித்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வது முற்போக்கானதுதானே!

இதுவும் நிரந்தரமல்ல என்பது எனக்குத் தெரியும். நாளையே நான் ஆர்.எஸ்.எஸ்.சிலோ, வி.எச்.பி.யிலோ சேர்ந்து, ‘சேது சமுத்திரத் திட்டம் எப்படி மீனவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும்’ என்று ஊர் ஊராகப் பேசப் போய்விடலாம். எனக்கு இடம் முக்கியமல்ல, மக்களுக்கு நல்லது சொல்லவேண்டும். அதுவும் நிறைய பேர் இருக்கிற அல்லது வாசிக்கிற இடத்தில் இருந்து சொல்ல வேண்டும். அது விஜயபாரதமாக இருந்தால் என்ன, சரோஜா தேவி புத்தகமாக இருந்தால் என்ன? இந்தியா டுடே, ஆனந்த விகடன், ஜெயா டிவி, குமுதம் ஆகியவற்றில் நான் எழுதியதில் இருந்தே என்னை நீங்கள் புரிந்து கொள்ளமுடியவில்லையா?

பார்ப்பன பத்திரிக்கைகளிலேயே தொடர்ந்து நான் எழுதுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘பூணூலைக் கழட்டி எறிந்தாலும், பெயரை ஞாநி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும், உள்ளே இருப்பது சங்கரன்தான்’ என்பதை நீங்கள் எப்படி கண்டுகொள்கிறீர்களோ, அதேபோலத்தான் அவர்களும் ‘எங்க எழுதினாலும், என்ன எழுதினாலும் அவன் நம்ம ஆத்துப் பையன்’ என்று கண்டுகொள்கிறார்கள், அணைத்துக் கொள்கிறார்கள்.

‘நம்மளைத் திட்டுறதா இருந்தாலும், நம்மவாதான் திட்டணும்’ என்ற பார்ப்பன உளவியல் அதில் இருப்பதாக சில திராவிட அறிவுஜீவிகள் கூறினால், அதற்குப் பதில் கூற வேண்டியது நானல்ல, அந்தப் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களே.

இதே அறிவுஜீவிகள் நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘திருவாசகத்திற்கு இசையமைத்ததற்காக இளையராஜாவை விமர்சிக்கும் ஞாநி, அத்தனை கடவுள்களுக்கும் தனித்தனியாக பாட்டு எழுதி, பின்னர் பிராமண சங்கத்திலும் பேசிய பாரதியை, திராவிட இயக்கத்தினரும், ம.க.இ.க.வினரும் அம்பலப்படுத்திய பின்பும், அது குறித்து வாயே திறக்காமல் இருப்பதன் பெயர்தான் சாதிப்பாசமா?

’‘கருணாநிதியை ஓய்வெடுக்கச் சொல்லும் ஞாநி, ஒருமுறை கூட சங்கர்தயாள் சர்மாவையோ, வாஜ்பாயையோ அவ்வாறு சொன்னதில்லையே, அது என்ன நடுநிலைமை?’

‘எவ்வளவு அபத்தமாக எழுதினாலும், எவ்வளவு மோசமாக உளறிக்கொட்டினாலும், தமிழின் சிறந்த படைப்பாளிகள் என சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வாஸந்தி ஆகியோரைப் பட்டியலிட்டுக் கூறுவதுதான் (பார்ப்பன) முற்போக்குத்தனமா?’

இப்படி சுற்றிச் சுற்றி அடித்தால் நான் என்ன செய்வது? ‘இவர்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதைவிட செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன’ என்ற எனது வழக்கமான பல்லவியைப் பாடுவதைத் தவிர எனக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஆனந்தவிகடனில் கருணாநிதியை நான் விமர்சித்தபோது ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தலைமையில் கண்டனக் கூட்டம் நடத்தினீர்கள். இப்போது சங்கராச்சாரியாரின் பத்திரிக்கையில் ‘தலித் மக்கள் சுத்தபத்தமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நாற்பது ஆண்டு கால கழக ஆட்சிகள்தான்’ என்று எழுதப்போகிறேன். இதற்கு நீங்கள் அருந்ததிராய் தலைமையில் கண்டனக் கூட்டம் நடத்தவும், இந்த வேலையில் இருந்து என்னை துரத்தவும் முயற்சிக்கலாம்.

அப்படி நேர்ந்தால் நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பி.ஜே.பி.யில் சேர்ந்து அவர்களது பத்திரிக்கையில் எழுத ஆரம்பிப்பேன். அப்போது என்ன நோம் சாம்ஸ்கியைக் கூப்பிடுவீர்களா? அது உங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் விஷயம். அதற்குப் பதிலாக உங்கள் பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் என்னை ஏன் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது? எனக்கு எந்த கூச்சநாச்சமும் கிடையாது, உடனே வருவேன் என்பது உங்களுக்குத் தெரியும். முடிவு சதா என்னைத் துரத்தும் உங்களது கையில்.

-நந்தன்
நன்றி: www.keetru.com

வெள்ளி, மார்ச் 21, 2008

அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே....! by திருச்சி வேலுசாமி

அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே..
06-03-08 குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.
முதலில் ஜெயலலிதாவும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொன்னபோது, நான்தான் உங்கள் இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்து அறிமுகப்படுத்தி வைத்தேன். அப்படிப்பட்ட எனக்கில்லாத அளவுக்கு ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நட்பு என்றால் அது எப்படி என்பது எனக்குப் புரிகிறது. 1991_ம் வருடம் மே மாதம் 21_ம்தேதி இரவு பத்து மணிக்கு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் புரோகிராம்களும் மாறின. ஆனால் அதற்கு முன்பே, தேர்தல் புரோகிராமை மாற்றியவர்கள் இரண்டே இரண்டு அரசியல் தலைவர்கள்தான். அதில் ஒருவர் நீங்கள். இன்னொருவர் ஜெயலலிதா. அந்த விதத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று எனக்குப் புரிகிறது.

அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் (ஜெ.), சென்னை ஐகோர்ட்டுக்கு நீங்கள் போனபோது உங்களுக்கு அளித்த வரவேற்பை எந்த நண்பருமே கொடுத்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே நண்பர் என்ற முறையில் நீங்களும் அவருக்குச் செய்தது போல எந்த நண்பரும் செய்திருக்க முடியாது. உங்கள் நண்பர், உயிர்த்தோழி இன்றைக்கும் மீள முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கில்தானே? அதற்குக் காரணமான புகாரை எழுதிக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்தவர் நீங்கள்தானே? அதுசரி, உங்களுடன் உட்கார்ந்து அதை அப்போது எழுதியவர் பொன்னையன். இன்றைக்கு அவர் அந்த அம்மாவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். வி.வி. சுவாமிநாதன், பி.ஹெச். பாண்டியன் எல்லோரும்கூட அப்போது வந்து ஆலோசனை தந்தார்களே? மறைந்த முன்னாள் சபாநாயகர் க. ராசாராம் வீட்டில் உட்கார்ந்துதானே அந்தப் புகாரைத் தயார் செய்தீர்கள்? அப்போது நானும் அங்கே இருந்தேனே. அதை மறந்து விட்டீர்களா? நாம் எப்படியெல்லாம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா? இந்த உண்மையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
.
நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன் எழுதிய "விடை தெரியாத வினாக்கள்" என்கிற புத்தகத்தில், பக்கம் முப்பதில் இலங்கையில் இருக்கக்கூடிய சிங்களர்கள் பீஹாரில் இருந்து குடிபெயர்ந்து போன ஆரிய வம்சாவளியினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த சிங்களர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய தமிழர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. அந்தச் சந்தேகம் உறுதியானதற்கு உங்கள் பேட்டியிலேயே காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிற, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற இளைஞரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும், கேவலமாகவும் நீங்கள் பேசும்போதுதான் உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஓர் ஆரிய _ திராவிட வர்க்கப் போர் உருவாகி விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்ட வேண்டும்.

திருமாவளவன் புலிகளிடம் காசு வாங்கினார் என்று சொல்கிறீர்களே... புலிகள் அவர்களுடைய வாழ்க்கைக்கும், போராட்டத்துக்குமே திண்டாடுகிற நிலையில், அவர்கள் எங்கே இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்? ஆனால் உங்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் இருந்து கோடி கோடியாக பணம் வருவதாகச் சொல்கிறார்களே? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் அப்பா தந்த சொத்து என்ன? நீங்கள் சம்பாதித்த சொத்து என்ன? என்று பட்டியல் போடுங்கள் பார்க்கலாம். அமெரிக்கா போகிறேன், ஜெர்மனி போகிறேன், லண்டன் போகிறேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பணம் எங்கே இருந்து வந்தது? இதைச் சொல்லிவிட்டு அதன் பிறகு அல்லவா நீங்கள் எங்கள் இளவல் திருமாவிடம் கேள்வி கேட்க வேண்டும்.

திருமாவளவன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஒரு தேச பக்தர், மனிதாபிமானி. ஆனால் நீங்கள் தேசபக்தர் இல்லை என்பது மற்றவர்களைவிட உங்களுக்கும் எனக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியுமே! நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவுக்கா விசுவாசமாக இருக்கிறீர்கள்? இல்லையே. ராஜிவ் காந்தியை நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால், ராஜிவ் காந்தி செத்ததால் லாபமடைந்த முதல் மனிதர் நீங்கள் தானே? நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரஸுக்குத் துளிகூட சம்பந்தமில்லாத உங்களை எப்படி டங்கல் காட் ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராகப் போட்டார்கள்? அதில் முன்னால் நின்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் நீங்கள்தானே? அதுவரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகுதானே இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்து விடப்பட்டது? உலகத்தில் எந்த ஒரு கொலை நடந்தாலும் என்ன மோடிவ்? அல்லது யார் பயனாளி என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் ராஜிவ் கொலையில் கண்ணை மூடிக்கொண்டு உங்களைக் கை காட்டலாம். ஆனால், இந்த நாட்டின் துரதிருஷ்டம், உங்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவில்லை. அதை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

பாமரர்கள் எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறபோது, உங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு பண்ணி பாதுகாப்புத் தருவதால் எங்களுக்கு அவர்கள் (மத்திய அரசு) மேலேயே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ்காரர்கள் எல்லாம் டூப்ளிகேட் என்று சொல்லியிருக்கிறீர்களே... எங்கள் கிராமத்தில் சொல்வார்கள் காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று. அதுபோல நீங்கள் டூப்ளிகேட் என்பதால்தானே பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களுக்கு டூப்ளிகேட்டாகத் தெரிகிறார்கள்.

நீங்கள் ராஜிவ் காந்தி கொலையில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். உங்களுடைய நண்பன் நான். ஜெயின் கமிஷனில் உங்கள் மேலேயே குற்றம் சொன்னேனே? உங்களைக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டேனே. நீங்கள் கைகால் வெலவெலத்துப் போய் வேர்த்து விறுவிறுத்து ஸ்தம்பித்து நின்றீர்களே... அந்த கமிஷனே அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதே. மறந்து விட்டீர்களா? அந்த கமிஷனிலேயே நீங்கள்தான் கொலைக்குற்றவாளி என்று சொல்லி யிருக்கிறேனே.

உங்களுக்கு நார்கோ அனாலிசிஸ் என்கிற உண்மை யைக் கண்டறியும் சோதனை நடத்தினால், ராஜிவ் கொலையின் உண்மைச் சதி என்ன? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது உலகத்துக்கே தெரிய வந்துவிடும். இதைச் சொல்கிற நேரத்தில் நீயும் இந்த டெஸ்ட்டுக்கு ரெடியா? என்று நீங்கள் கேட்கக் கூடும். முதலில் என்னை டெஸ்ட் செய்துவிட்டு, அப்புறம் உங்களை டெஸ்ட் செய்யட்டும். உங்களுடைய இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் இனிமேல் எடுபடாது.

இப்படிக்கு,
உங்களை உள்ளும் புறமும் புரிந்த ஒரே நண்பன் வேலுச்சாமி.

குமுதம் ரிப்போர்ட்டர் 06-03-2008 இதழில் சுப்பிரமணியன் சுவாமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் சு.சுவாமி கூறிய கருத்துக்களில் தான் முரண்பட்டு நிற்பதாகக் கூறி ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார் திருச்சி வேலுச்சாமி. வேலுச்சாமி மாணவர் காங்கிரஸிலிருந்து மாநில காங்கிரஸ் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
.
ராஜிவ் கொலையைத் தொடர்ந்து நடந்த ஜெயின் கமிஷன் விசாரணையில் ஆஜராகி அதில், சுப்பிரமணியன் சுவாமி குற்றவாளி, அவரையும் விசாரிக்க வேண்டும் என்று சத்திய பிரமாண வாக்குமூலம் (அஃபிடவிட்) கொடுத்தவர். ராஜிவ் கொலை நடந்தபோது வேலுச்சாமி அதே சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியில் அகில இந்திய செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்